"நீ உன் பிள்ளைகளின் பிள்ளைகளையும்,

இஸ்ரவேலுக்கு உண்டாகும்  சமாதானத்தையும் காண்பாய் .” 

                                                                                                         சங்கீதம்128:6

                                                                                                                                                                                                                                                          கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

                     கர்த்தராகிய  இயேசு  கிறிஸ்துவின்  இனிய  நாமத்தினாலே  உங்களை  வாழ்த்துகிறேன்.

                     சமாதானமானது  மனிதனுடைய  வாழ்க்கையிலே  மிகவும்  அவசியமான  காரியம், சமாதானம் இல்லாதபடி வாழ்க்கை வாழ்வது வேதனையானது. தனி மனிதனுடைய வாழ்க்கையிலும்  சரி, குடும்ப வாழ்க்கையிலும்  சரி , சமுதாய வாழ்க்கையிலும்  , சமாதானம்  மிகவும் அவசியமாய்  இருக்கிறது .

                     கர்த்தராகிய  இயேசு  கிறிஸ்து  இந்த  உலகத்திலே  சமாதானப்  பிரபுவாய்  வந்தார் . அவர் வந்ததோடு மாத்திரமல்ல, வேதத்தில் தெளிவாய்ச் சொல்லியிருக்கிறது   யோவான் 14:27-ல்  "சமாதானத்தை உங்களுக்கு  வைத்துப்போகிறேன் என்றார். சமாதானம் இல்லையானால் வாழ்க்கையிலே பலவிதமான போராட்டங்கள், கசப்புகள், கண்ணீர் நிறைந்த ஒரு வாழ்க்கையாகிறது. சமாதானம் இல்லாதபடியினாலே எதற்கு நான் வாழ வேண்டும் என்ற எண்ணத்தோடு கலங்குகிற மக்களும் உண்டு.ஆகவே இன்றைக்கு சமாதானமானது மனிதருடைய அனுதின வாழ்க்கையிலே அவசியமானதாய் இருக்கிறது.

                     என் வாலிப பருவத்திலே ஒரு சகோதரனை நன்கு அறிவேன். அவன் வாழ்க்கையிலே சமாதானம் இல்லாதபடியினாலே சில தீய பழக்கங்களுக்கு அடிமையானான். சமாதானம் இல்லை என்றவுடனே அவன் மற்றவர்கள் சொல்லுகிற  ஆலோசனைக்குக் கீழ்ப்படிந்து குடிக்கிற பழக்கத்திற்கு அடிமையானான். அதிலும் அவனுக்கு சமாதானம் இல்லை. ஆகவே அவன் கஞ்சா குடிக்க ஆரம்பித்தான். அவனுடைய வாழ்க்கையானது சிறு வயதிலேயே முடிந்து போனது.வலிமை உடையவன், எந்த இடத்திலும் எவ்வளவு உயரமான இடமாக இருந்தாலும் அதில் ஏறக்கூடிய தைரியம், திடநம்பிக்கை உடையவன்.ஆனால் அவனுடைய வாழ்க்கையிலே குடியும், கேடான கஞ்சாவும் பிரவேசித்தபோது, அவனுடைய வாழ்க்கையானது முடிந்துபோனது.

                     சமாதானத்தை ஏதாவது ஒரு விதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்று அலைந்து திரிகிற அநேக மனிதர்களை நாம் பார்க்க முடிகிறது. சமாதானமே இல்லை என்று ஏங்குகிற அருமையான தேவ ஜனமே, இன்றைக்கு சமாதானத்தின் வழியை நாம் அறிந்து கொள்வோமானால் அது மெய்யான மகிழ்ச்சியையும், மெய்யான ஆசீர்வாதத்தையும் நமக்குள் உண்டாக்கிவிடும்.

1. யாருக்கு சமாதானம் இல்லை?

    1. துன்மார்க்கனுக்கு சமாதானம் இல்லை.

      "துன்மார்க்கருக்குச் சமாதானம் இல்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்." ஏசாயா 48:22.

                     அநேகருடைய வாழ்க்கையிலே துன்மார்க்கச்  செயலை  உடையவர்களாய் இருக்கிறார்கள்.இந்த  துன்மார்க்கச் செயலினாலே, சமாதானத்தை  இழந்து, சமாதானத்திற்குப் பதிலாக போராட்டங்களும் கசந்த நிலைகளும் உண்டாகிறது."துன்மார்க்கன் தன் பெருமையினால் சிறுமைப்பட்டவனைக்  கடூரமாய்த் துன்பப்படுத்துகிறான்; அவர்கள் நினைத்த  சதி மோசங்களில் அவர்களே அகப்படுவார்கள்." சங்கீதம் 10:2-ன் படி துன்மார்க்கன் பெருமை  நிறைந்தவன் என்று பார்க்கிறோம்.மற்றவர்களுக்கு அவர்கள் நினைத்த  சதி  மோசங்களி ல் அவர்களே அகப்படுவார்கள்.இந்த  உலக வாழ்க்கையிலே நம்மை மோசப்படுத்துகிற பிசாசு எப்பொழுது மே  செயல்பட்டுக்  கொண்டிருக்கிறான். அதினிமித்தமாய் அநேகருடைய வாழ்க்கையிலே பாடுகளை அனுபவிக்கிறார்கள்.பலவிதமான பிரச்னைகளைச் சந்திக்கிறார்கள்.பிசாசானவன்  மனிதருடைய  வாழ்க்கையிலே, பெருமையோடு வாழ்கிறவர்களுக்கு  இந்த வேதனையான  நிலையைத்  தருகிறான். இன்னும் துன்மார்க்கன் தான் இச்சித்தத்தைப் பெற்றுக் கொண்டபடியினாலே  பெருமையோடு இருக்கிறான்.அவன் தன்னையே போற்றிக்  கொள்கிறான், தற்பெருமை உடையவனையிருக்கிறான்  என்று சங்கீதம் 10:3-ல் பார்க்கிறோம் . அவனுடைய வாழ்க்கையைப் பார்க்கும்போது,  தன்னுடைய  ஞானம், தன்னுடைய பெலன், தன்னுடைய  திறமை, தன்னுடைய  செல்வம் ,எல்லாவற்றையும் கொண்டு நினைத்ததைப் பெற்றுக்கொண்டேன் என்று பெருமையோடு காரியங்களைச் செய்கிறவனாயிருக்கிறான்.அவனுடைய உள்ளத்திலே கர்த்தரை அசட்டை செய்துக் கொண்டிருக்கிறான்.

                     இன்று அநேகருடைய வாழ்க்கை அப்படித்தான் இருக்கிறது. தங்களையே பெருமைப்படுத்திக் கொண்டு,கர்த்தரை அசட்டைச் செய்கிறார்கள்.அதினிமித்தமாய் அவர்களுடைய வாழ்க்கையிலே சமாதானத்தை இழந்து போகிறார்கள்.

                      நான் என்னுடைய அனுபவத்திலிருந்து ஒரு காரியத்தைப் பகிர்ந்துக்கொள்கிறேன்.நான் 72-ம் ஆண்டிலே Alagappa Collage of  Physical Education,karaikudi-ல் படித்தேன்.அவ்விதமாய் நான் படிக்கின்ற பொழுது,ஒவ்வொரு நாள் காலையிலும் நாங்கள் மைதானத்திற்குச் சென்று, விளையாடுவது,பயிற்சி செய்வது மற்றும் எங்களுடைய ஆசிரியர் எதைச் செய்யச் சொல்கிறாரோ, அதைச் செய்கிற மாணவர்களாய் இருந்தோம்.ஒருநாளிலே இவ்வாறு செய்து முடித்து விட்டு,நாங்கள் குளிப்பதற்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இடத்திலே,குளியல் தொட்டிக்கு இருபுறமாய் நின்றுக்கொண்டு ,குளிக்கின்ற சமயத்திலே ஒரு சகோதரன்,அண்ணே,என்னுடைய சரீரத்தைப் பாருங்கள், எவ்வளவு அழகாயிருக்கிறது, இந்த சரீரத்தைப் பார்க்கிற யாரும்,எந்தப் பெண்ணாக இருந்தாலும் என்னை நேசிப்பார்கள் என்றுச் சொன்னான்.அதோடு நிறுத்தவில்லை,அங்கிருந்த மற்றொரு மாணவனைப் பார்த்து,அவனைச் சுட்டிக்காட்டி,அவனுடைய சரீரத்தைப் பாருங்கள், ஏதாவது ஒரு பெண் பார்த்தால் ஓடிவிடுவார்கள் என்று பரிகாசமாய் பேசினான்.அந்த நாள் மாலையிலே அதிகமான மழை பெய்தபடியினால்,மைதானத்தில் இறங்கி நீங்கள் விளையாட வேண்டாம் என்று சாலை வழியாக ஓட வைத்தார்கள்.அவ்விதமாய் ஓட ஆரம்பித்தபொழுது,ஒரு சில மாணவர்களாக சேர்ந்து சற்று பின்தங்கியிருந்தோம்.எங்களுக்கு முன்னால் விரைவாக ஓடுகிற ஒரு கூட்டம் இருந்தது.வெகுதூரம் ஓட வேண்டிய நிலைமை பொறுமையாய் ஓடிக்கொண்டிருந்த பொழுது, திடீரென்று ஒரு குறிப்பிட்ட இடத்தில வந்த பொழுது மின்னல் தாக்கியது.ஒன்றாக நாங்கள் பேசிக்கொண்டு சென்ற சுமார் 10 அல்லது 12 பேர் அதே இடத்தில் விழுந்தோம்.ஆனால் எல்லோரும் விழுந்தவுடன் எழுந்து நின்று விட்டோம்.ஆனால் காலையிலே பெருமையாய்ப் பேசின அந்த வாலிபனோ எழுந்திருக்கவில்லை. அவனுடைய கால்களின் வழியாக சிறிய கருப்புத் துவாரம் தெரிந்தது. மின்னலானது அவனைத் தாக்கினதால் அவன் சரீரத்தில் அது ஊடுருவிச் சென்றதால்,அவன் அதே இடத்திலேயே மரித்துப் போனான். காலையிலே தன்னைப் போற்றிப் பேசின அந்த மனிதன் மலையிலே மண்ணுக்கு மண்ணாக மாறவேண்டிய நிலை வந்தது.

                     கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,பெருமையுள்ளவனுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்.அதை அறியாதபடி துன்மார்க்கத்தில் வாழ்கிறவர்கள் ஏராளமாய்ப் பெருமையோடு மற்றவர்களை அசட்டைச் செய்து தங்களைப் போற்றிக்கொண்டு தேவனை அசட்டைச் செய்கிறவர்களாயிருக்கிறார்கள்.இன்னுமாய் துன்மார்க்கருடைய செயலைப்  பார்க்கும் போது, சங்கீதம் 10:4-ல்  தேவன்  இல்லை  என்றுசொல்கிறவனா ய் இருக்கிறான்.தேவன் இல்லை என்று சொல்லுகிற அநேக மக்கள் உண்டு. ஏனென்றால் கர்த்தரை அவர்கள் ருசித்துப் பார்த்தது கிடையாது. துன்மார்க்கருடைய வாழ்க்கையிலே சமாதானம் இல்லாததால்,மெய்யான சந்தோஷத்தை ருசிக்க முடியவில்லை.    

2. சமாதான வழியை அறியாதவர்களுக்கு சமாதானம் இல்லை.

       "சமாதான வழியை அறியார்கள்; அவர்கள் நடைகளில் நியாயமில்லை;தங்கள் பாதைகளைத் தாங்களே கோணலாக்கிக்கொண்டார்கள்;அவைகளில் நடக்கிற ஒருவனும் சமாதானத்தை அறியான்." ஏசாயா 59:8.

                     கர்த்தராகிய  இயேசு கிறிஸ்து கோணலான பாதைகளைச் செவ்வையாக்குகிறவர். சமாதான வழியை அறியாதபடியினால், கோணலாக்கிக் கொண்டு வேதனையடைகிற மக்கள் ஏராளம்.இயேசு கிறிஸ்து தாம் அபிஷேகம் பண்ணின மக்களுக்கு முன்பாகச் சென்று கோணலானவைகளைச் செவ்வையாக்குகிறார் என்று  ஏசாயா 45:2-ல் பார்க்கிறோம்.ஏசாயா 42:16-ல் குருடரான மக்களை அவர் நடத்தி அவர்களுடைய வாழ்க்கையிலே இருளை வெளிச்சமாய் மாற்றி கோணலானவைகளைச்  செவ்வையாக்கி, அவர்களைக் கைவிடத்திருக்கிற தேவன் என்று பார்க்கிறோம். இந்த உலக வாழ்க்கையிலே கோணலான காரியங்களின் நிமித்தமாய் கலங்குகிற மக்கள் உண்டு. ஆனால் நம்முடைய இரட்சகராகிய  இயேசுகிறிஸ்துவோ கோணலைச் செவ்வையாக்கி சரிபடுத்துகிறவர் என்று அறியாதபடியினாலே,சமாதானத்தைப் பெற்றுக்கொள்ள முடியாதபடி கலங்குகிற மக்களாய் இருக்கிறார்கள்.இன்று நம்முடைய வாழ்க்கையிலே கர்த்தருடைய வழி இன்னதென்று அறிந்து,அவர் வழி நடக்கும்போது, சமாதானமானது நதியைப் போல புரண்டு வருகிறதாய் இருக்கிறது.சமாதான வழியை அறியாதவர்கள் சமாதான வழியைப் பெற்றுக்கொள்ள இயலாத நிலையில் இருக்கிறார்கள். 

3. திகில் அடைந்தவர்களுக்கு சமாதானம் இல்லை .

       "கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்:தத்தளிப்பின் சத்தத்தைக் கேட்கிறோம்; திகிலுண்டு,சமாதானமில்லை."எரேமியா 30:5

                                                                                                                                                                                                                                                                                   மனிதனுடைய வாழ்க்கையிலே திகில் ஏற்படுவதால், சமாதானமில்லாதபடி கசந்து போகிறார்கள். இந்த திகில் நிறைந்த வாழ்க்கையின்நிமித்தமாக பலவிதமானபாடுகளை அனுபவிக்கிறார்கள்.வெளியே  சொல்ல முடியாத பாடுகளினாலே துக்கமும் துயரமும் அடைந்து,சமாதானமில்லாத ஒரு வாழ்க்கை அடைகிறார்கள்.  யோபு 4:14, 15 வாக்கியங்களிலே 'திகிலும் நடுக்கமும் என்னைப்  பிடித்தது,என்  எலும்புகளெல்லாம் நடுங்கினது.அப்பொழுது ஒரு ஆவி என் முகத்துக்கு முன்பாகக் கடந்தது.என் உடலின் மயிர் சிலிர்த்தது.'என்று பார்க்கிறோம்.திகிலும் நடுக்கமும் வருகிறபோது,மனிதனுடைய வாழ்க்கையிலே தீய ஆவிகள் அவர்களை நோக்கி வருகிறதாய் இருக்கிறது.திகிலும் பயமும் பலவிதமான வேதனைகளை,பாடுகளைக் கொண்டு வரக்கூடியது.அநேக நேரங்களிலே 'நான் பயந்த காரியம் எனக்கு நேரிட்டது;நான் அஞ்சினது எனக்கு வந்தது.'யோபு 3:25ல் உள்ளதைப் போல நடப்பதைப் பார்க்கிறோம்.வாழ்க்கையிலே நாம் கவனமாய் இருக்க வேண்டும் சமாதான வழியை அறியாதபடி துன்மார்க்கமான ஜீவியத்தினால்,திகில் கொண்டவர்களாய் இருக்கிறபடியினாலே சமாதானம் இல்லாதபடி கலங்குகிற மக்களாய் இருக்கிறார்கள்.இவ்விதமான மக்களைப் பார்க்கும்போது,அவர்கள் சில சமயங்களிலே வேதனையான தவறான முடிவை எடுக்கிறார்கள்.                      ஒருமுறை ஒரு வாலிப சகோதரியைச் சந்தித்தேன்.அந்த மகளுக்கு ஜெபிக்கும்படியான ஒரு காரியத்தைக் கூறினேன்.உனக்கு எதிர்காலத்தைக் குறித்து ஒரு பயமும் திகிலும் வருகிறது.நீ பயப்படாதே,கர்த்தரைத் தேடிப்பார்.அவர் உன் பயத்தை நீக்குகிற தேவன்.உன்னுடைய வாழ்க்கையிலே எந்த பயமானாலும்,அது நீங்க வேண்டுமானால் கர்த்தரைத் தேட  வேண்டும்.சங்கீதம் 34:4-ல் நான் கர்த்தரைத் தேடினேன்,அவர் எனக்குச்  செவி  கொடுத்து,என்னுடைய எல்லாப்பயத்துக்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார் என்று தாவீது அழகாக கூறுகிறார்.திகிலும் நடுக்கமும் நம்மை விட்டுப் போகவேண்டும்.வாழ்க்கையிலே நாம் சமாதானத்தோடு வாழ வேண்டும் என்கிற எண்ணங்களை விட்டுவிட்டு,வீணான  உலகக் காரியங்களைப் பார்த்து பயப்படுகிறோம்,திகிலடைகிறவர்களாய் இருக்கிறோம்.

                    இந்த வார்த்தைகளை வாசிக்கிற அருமையான சகோதரனே, சகோதிரியே, உனக்குள் இந்தத்  திகில்  இருக்குமானால்  உன்  வாழ்க்கையிலே  நீ  பெற்றுக்கொள்ள வேண்டிய சமாதானத்தைப் பெறவே இயலாது. இந்த பயமானது வேதனையுள்ளது.ஒரு மனிதனுடைய  வாழ்க்கையிலே பயம்  வருமானால் அவனுடைய  விசுவாசம் ஒன்றுமில்லாததாய்  மாறிவிடும். இயேசு  கிறிஸ்து  இரவு வேளையிலே  கடலிலே  நடந்து வந்தார்.அதைப் பார்த்து ஆவேசம் என்று படகில் இருந்த சீஷர்கள் பயந்தார்கள்.இயேசு கிறிஸ்து  தம்முடைய  வார்த்தையாலே ‘ நான் தான்’ என்று தேற்றினார். உடனே  பேதுரு ஒரு கேள்வியைக் கேட்டான்,நீரேயானால் நானும் நடந்து வர கட்டளையிடும் என்று சொன்னதை மத்தேயு 4:29-ல் பார்க்க முடிகிறது. அதற்கு 'வா'என்று இயேசு கிறிஸ்து சொன்னவுடனே, பேதுரு கடலிலே நடந்து சென்றான்.இயேசு கிறிஸ்துவை  நோக்கி நடந்து செல்கிறபோது,அலைகளைப் பார்த்தவுடனே பயந்தான்.இயேசு கிறிஸ்துவை நோக்கினவன்,பிரச்சனைகளைப் பார்த்தவுடன் பயந்து விட்டான்.அவனுடைய விசுவாசம் எல்லாம் போய் விட்டது.ஆகவே அவன் கடலிலே முழுகுகிற மனிதனாய் மாறினான்.இயேசு கிறிஸ்துவே என்னை இரட்சியும் என்று கேட்டான்.இயேசு கிறிஸ்து தன் கையை நீட்டி தண்ணீரிலிருந்து எடுத்து,அற்ப விசுவாசியே,ஏன் சந்தேகப்பட்டாய் என்று சொன்னார்.பயமானது கேடுள்ளது,வேதனையுள்ளது,அது நம்முடைய விசுவாசத்தைப் பறித்து விடுகிறதாய் இருக்கிறது.

  4.பாவமும் அநீதியான காரியமும் இருக்கும்போது சமாதானம் இல்லை.

   "யோராம் யெகூவைக் கண்டவுடனே: யெகூவே, சமாதானமா என்றான்.அதற்கு யெகூ : உன் தாயாகிய யேசபேலின் வேசித்தனங்களும் அவளுடைய பில்லி சூனியங்களும் , இத்தனை ஏராளமாயிருக்கையில் சமாதானம் ஏது என்றான் . " 2 இராஜாக்கள் 9:22

                   இன்று அநேகருடைய வாழ்க்கையிலே சமாதானம் இல்லாத வாழ்க்கை வாழ்கிறதைப்  பார்க்கிறோம் காரணம்  என்னவென்றால்  அவர்கள் வாழ்கிற தேசத்திலே, வாழ்கிற இடத்திலே வேசித்தனங்களும்  பில்லிசூனியங்களும் நிறைந்திருப்பதினால் ,அநேக  நாடுகளிலே பில்லி  சூனியமானது மலிந்து போனதாக இருக்கிறது.இதைச் செய்கிற மக்கள் எப்படியாவது தாங்கள் நினைத்த காரியங்களைப் பெற வேண்டும் என்று தந்திரமான ஆலோசனைகளைச் செய்து அவர்கள் நினைத்த காரியம் நடைப்பெற வேண்டும்.  அவர்கள்  வேண்டின காரியங்களைத் தீய வழிகளிலாவது பெறவேண்டும் என்று செயல்படுவதினாலே சமாதானத்தை இழந்து போகிறார்கள்.

                     ஒருமுறை ஒரு தேவ ஊழியரைச் சந்தித்தேன் . அந்த ஊழியர் கூறியது: நான் என் பாவத்தினாலே  சமாதானத்தை இழந்து  போயிருக்கிறேனே, தப்பிக்கொள்ள வழி உண்டா என்று மிகுந்த கண்ணீரோடு கேட்டார் . அப்பொழுது நீங்கள் தேவ சமூகத்திலே  பாவங்களை  அறிக்கைச் செய்யுங்கள் யாராய் இருந்தாலும் மன்னிக்கிற தேவன் , உங்களை மன்னிக்கிறதற்கு உண்மையுமளவராய் இருக்கிறார் . எந்தப்  பாவியையும் புறம்பேத் தள்ளேன் என்று சொன்ன தேவன் , உங்களுடைய வாழ்க்கையிலே உங்களைத் தள்ளாது  காத்துக் கொள்ளுவார்  என்று  ஆலோசனைக் கூறினேன் .ஆனாலும் அவருடைய  உள்ளத்திலே சமாதானம் இல்லை, காரணம் அவருடைய வாழ்க்கையில் இருந்த வேசித்தனமானது வாழ்க்கையைப் பாதித்தது . பாடுகளுக்கு மேல் பாடுகளை உண்டாக்கியது.பாவத்தினிமித்தமாய் சமாதானத்தை இழந்து போகிறோம் . சூனியங்களைச்செய்கிறவர்கள் உலகமெங்கும் வியாபித்திருக்கிறார்கள் .மற்றவர்களை கெடுக்கவேண்டும் , மற்றவர்களின்  உரிமைகளைப்  பெற வேண்டும் என தந்திரமான விதங்களிலே சூனியங்களைச் செய்கிறவர்கள் பெருகியிருக்கிறார்கள் .

                   ஒருமுறை ஒரு பெரிய கடை வைத்திருந்தவரின் வாழ்க்கையிலே வேதனையான ஒரு காரியம் நடைப்பெற்றது . அதன் முடிவோ  சஞ்சலம் நிறைந்ததாய் மாறியது . அந்தக் கடையினர் இன்னொரு மனிதரோடு இணைந்து  வியாபாரத்தை அதிகரிப்பதற்காக  திட்டம்  தீட்டினார்கள். ஆனால் சேர்ந்த அந்த நபரோ யார் எல்லா cheque -குகளிலும் கையெழுத்திடுகிறாரோ அவருக்கு விரோதமாய்  தந்திரமாய்  சூனியங்களைச்  செய்தார் .அதினிமித்தமாய் அவர் சமாதானம் இழந்ததோடு மாத்திரமல்ல மூளை குழம்பினவராய் மாறி விட்டார் . ஆகவே  அவருடைய வாழ்க்கையிலே இணைந்த அந்த நபர் அந்தக் கடையை அப்படியே கைபற்றிக் கொண்டார் .

                                 தனக்கு உரிமை இல்லாத காரியத்தை,தனக்கு கிடைக்காது என்ற சூழ்நிலைகளிலே தன்னால் முடியாத அந்தக் காரியத்தை தந்திரமான விதங்களிலே பெற்றுக்கொள்வதற்கு செய்கிற சூனியங்களைப் பார்க்கிறோம் .ஆகவே இவ்விதமான மக்களின் எல்லைகளில் சமாதானமானது குறைந்து ஒன்றுமில்லாததாய்  மாறிவிடுகிறது . ஆனால் இயேசு கிறிஸ்துவோ சமாதானத்தைத் தருகிற தேவனையிருக்கிறார். இந்த சமாதானத்தினாலே நம்முடைய வாழ்க்கை சந்தோஷம் அடையும் . ஆசீர்வாதம் பெருகும் .  

ii. சமாதானத்தினால் வருகிற ஆசீர்வாதங்கள்

1. கர்த்தர் அருளும் சமாதானத்தினால் அதைக் காண்கிற மற்ற ஜனங்கள் பயந்து நடுங்குவார்கள்.

"நான் அவர்களுக்குச் செய்யும் நம்மையெல்லாம் கேட்கப்போகிற பூமியின் எல்லா ஜாதிகளுக்கு முன்பாக அது எனக்கு மகிழ்ச்சியுள்ள கீர்த்தியாயும் புகழ்ச்சியாயும், மகிமையாயும் இருக்கும்; நான் அவர்களுக்கு அருளிச் செய்யும் எல்லா நன்மையின் நிமித்தமும் ,எல்லாச் சமாதானத்தினிமித்தம் இவர்கள் பயந்து நடுங்குவார்கள் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்." எரேமியா 33:9

                     கர்த்தரைத் தேடுகிற, கர்த்தரை ஆராதிக்கிற நம்முடைய வாழ்க்கையிலே பலவிதமான இடுக்கண்களைச் செய்கிறவர்கள் பெருகியிருக்கிறார்கள். ஆனால் கர்த்தர் தம்முடைய வல்லமையான மகிமையான காரியங்களை செய்யும்போது, அதைக் காண்கிறவர்கள் பயந்து நடுங்குகிறவர்களாய் மாறுவார்கள். அவருடைய வல்லமையான செயலானது, மனிதர்களால் புரிந்து கொள்ள முடியாத, மனிதர்களால் எதிர்த்து நிற்கமுடியாத, மனிதர்களால் தப்பிக்கொள்ள முடியாததாய் இருக்கிறது. கர்த்தரைத் தேடுகிற நமக்கு சமாதானத்தையும் சந்தோஷத்தையும் பெருகச் செய்து, நமக்கு விரோதமான மக்களுக்கு அவர் பயத்தையும், நம்மைக்குறித்து நடுக்கத்தையும் உண்டாக்குவார். இன்றைக்கு அநேக சம்பவங்களைப் பார்க்கிறோம். இவ்விதமாய் வாழ்கிறவர்களின் வாழ்க்கையிலே கர்த்தர் செய்கிற அதிசயங்களைக் காணலாம்.

                    ஒருமுறை ஒரு சகோதரன் என்னை இந்த ஊரிலே இருக்கக் கூடாது என்று, நான் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டபடியினாலே எனக்கு விரோதமான பலவிதமான காரியங்களை செய்ய ஆரம்பித்தான். கர்த்தரோ வல்லவராய் இருந்து என்னை கண்ணின் மணிபோல காத்ததோடு, எல்லா இக்கட்டுகளிலும், என்னைக் காத்து நடத்தி நல் ஆசீர்வாதத்தைப் பெருகச் செய்தபடியினால், அவன் பயந்து அதன்பிறகு ஒன்றும் செய்யாதபடி விலகினான். கர்த்தர் நமக்கு நன்மையானத்தைச் செய்யும்போதும், சமாதானத்தைத் தரும்போதும் சத்துருக்கள் பயந்து நடுங்குகிறார்கள்.

2. கர்த்தர் சமாதானம் தரும்போது மனமகிழ்ச்சி பெருகும்.

" சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமானதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்." சங்கீதம் 37:11.

                    மனமகிழ்ச்சியானது மனிதருடைய வாழ்க்கையிலே மிகவும் முக்கியமான காரியம். மனதிலே மகிழ்ச்சி இல்லையென்றால் பலவிதமான பாடுகள், கவலைகள் மன நோய்கள் தோன்றிவிடுகிறது. ஆனால் மனமகிழ்ச்சியானது முகமலச்சியைத் தருகிறது. வாழ்க்கையிலே சந்தோஷத்தினால் நிறைந்தவர்களாக வாழ்வதோடு எல்லாவற்றிலும் தெளிந்த புத்தியோடு செய்கிற சிலாக்கியம் உடையவர்களாய் மாறி விடுகிறோம். இன்றைக்கு கர்த்தர் இந்த சாந்தகுணத்தை தம்முடைய ஜனகளுக்குத் தருகிறார். தமக்கு பயந்து தம்மை ஆராதிக்கிற மக்களுடைய வாழ்க்கையிலே, அவரைப் பின்பற்றுகிற மக்களுக்கு ஆவியின் கனிகளிலே ஒன்றான சாந்தகுணத்தைத் தந்து அவர்களை ஆசீர்வதிக்கிறார், மேன்மையாக்குகிறார்.

3. நலமாய் தூங்குகிற சிலாக்கியம்

"நான் அவர்களோடு சமாதான உடன்படிக்கைசெய்து, துஷ்ட மிருகங்களைத் தேசத்தில் இராதபடிக்கு ஒழியப்பண்ணுவேன்; அவர்கள் சுகமாய் வனாந்தரத்தில் தாபரித்து, காடுகளில் நித்திரைப்பண்ணுவார்கள்." எசேக்கியேல் 34:25

                   எந்த சூழ்நிலையாய் இருந்தாலும் நாம் மனரம்மியமாய்த் தூங்கி எழும்பத்  தக்கதான பெரிய சிலாக்கியத்தை அடைகிறோம். இன்றைக்கு நம்முடைய வாழ்க்கையிலே இவ்விதமான ஆசீர்வாதங்களை சமாதானத்தினால் பெறுகிறோம்.

iii. சமாதானம் யாருக்கு உண்டாகும்?

1. கர்த்தரை உறுதியாய்ப் பற்றிக்கொள்ளுகிறவர்களுக்கு

"உம்மை உறுதியாய்ப் பற்றிக் கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியினால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக் கொள்வீர்." ஏசாயா 26:3

                   வேதத்தைப் பார்க்கும்போது, கர்த்தரை நம்புகிற மனிதர்கள் பலவிதங்களில் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள். அதிலும் உறுதியாய்ப் பற்றிக்கொள்ளுகிற மனத்தையுடையவர்களாய் மாறும்போது மிகுந்த சமாதானத்தினாலே நம்மைக் காத்துக் கொள்ளுகிற அன்பு நிறைந்த தேவனாய் இருக்கிறார். ஆகவே இந்தச் சமாதானத்தைப் பெறுவதற்கு கர்த்தரை முழுமனதோடு நம்புகிற மக்களாய் மாற வேண்டும். தானியேல் 3ம் அதிகாரத்தில் மூன்று வாலிபர்களைக் குறித்துப் பார்க்கிரோம். அவர்கள் ராஜா நிறுத்தின சிலையை வணங்காதபடியினாலே அவர்களுக்கு விரோதமாய் ஒரு தண்டனையை கூறினார். ஏழு மடங்கு அதிகரிக்கப்பட்ட நெருப்புச் சூளையிலே போட்டுவிடுவேன் என்றுச் சொல்லி பலவிதங்களிலே பயத்தை, தண்டனையை  அறிவித்தபொழுது 3 வாலிபர்களும் அதைக் குறித்து கலங்கவில்லை. ராஜாவுக்கு ஒரு பதில் சொன்னார்கள்: எங்களுடைய வாழ்க்கையிலே நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க நல்லவராய் இருக்கிறார், அவர் வல்லவராயிருந்து எங்களை எல்லாவிதமான காரியங்களுக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார் என்று சொன்னதோடு, விடுவியாமற்போனாலும் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்வதில்லை, நீர் நிறுத்தின பொற்சிலையை பணிந்துகொள்வதில்லை என்கிறது ராஜாவாகிய உமக்குத் தெரிந்திருக்கக்கடவது என்று சொல்லி தானி. 3:17.18 வாக்கியங்களில் பார்க்கிறோம். அதினிமித்தமாய் தேவன் தம்முடைய தூதனை அனுப்பினார். தேவப்பிரசன்னம் நிறைந்த அந்தக் காரியத்தினால் சேதம் ஒன்றும் நடைபெறவில்லை. ராஜாவும் கர்த்தரை ஏற்றுக்கொள்ளத் தக்கதான காரியங்கள் நடைபெற்றது.

                    அருமையான சகோதரனே/சகோதரியே நீ உண்மையான நம்பிக்கையோடு, உறுதியான உள்ளத்தோடு கர்த்தரை நம்புவாயானால் உனக்குள் தேவ சமாதானம் பெருகும்.

2. வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு சமாதானம்.

"உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு; அவர்களுக்கு இடறலில்லை."

சங்கீதம் 119: 165.

                   வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுதியான ஆசீர்வாதம் உண்டு. சங்கீதம் 107:20ல் அழிவுக்குத் தப்புவிக்கிறார். குணமாக்குகிறார் என பார்க்கிறோம். தேவனுடைய வார்த்தைகளெல்லாம் தேவ ஆவியினாலே தேவ மனிதர்களால் எழுதப்பட்டது. சங்கீதம் 119:9ல் வாலிபன் தன வழியைச் சுத்தமாக்குவதற்கு வசனம் ஏற்றது என்றுப் பார்க்கிறோம். பாவம் செய்யாதபடி அந்த வசனத்தை இருதயத்திலே நாம் வைக்கும்போது, அது நம்மைக் காத்துக்கொள்ளுகிறதாய் இருக்கிறது. இன்றைக்கு இந்த சமாதானமானது வேதத்தை நேசிக்கும்போது வருகிறது.

 3. தேவ சமூகத்திலே ஸ்தோத்திரத்தோடு ஜெபிக்கும்போது

"நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடு கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து யேசுவுக்குள்ளாய்  காத்துக்கொள்ளும்." பிலிப்பியர் 4:6,7

                  தேவனுடைய சமூகத்திலே நாம் நம்முடைய காரியங்களைத் தெரிவித்து ஜெபிக்கிற மக்களாய் மாற வேண்டும் .அப்பொழுது எல்லாப் புத்திக்கும் மேலான தேவ சமாதானம் நம்முடைய உள்ளங்களிலே பதிந்துவிடும். இன்றைக்கு அநேகருடைய வாழ்க்கையிலே தேவ சமாதானம் இல்லாதபடியினால் கலங்கித் தவிக்கிறார்கள்.இன்று கர்த்தர் நமக்கு சமாதானத்தைப் பெருகச் செய்து நம்முடைய வாழ்க்கையிலே மகிழ்ச்சியை உண்டாக்க விரும்புகிறவராயிருக்கிறார் .

4. நன்மை செய்கிறவர்களுக்கு சமாதானம்

    "முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் எவன் நன்மைசெய்கிறானோ அவனுக்கு மகிமையும் கனமும் சமாதானமும் உண்டாகும் ." ரோமர் 2:10

                   நன்மை செய்கிற மக்களுக்கு சமாதானம் உண்டாகும். நன்மை என்று சொல்லும்போது, பலவிதங்களிலே நன்மையைப் பார்க்கிறோம்.கர்த்தருடைய பிள்ளைகள் உதவி செய்வதினாலே நன்மை செய்கிறார்கள்.ஜெபம் செய்வதிலே நன்மை செய்கிறவர்களாய்இருக்கிறார்கள்.வியாதியஸ்தர்களுக்கு,வேதனையோடு வாழ்கிற மக்களுக்கு உதவி செய்வதினாலே நன்மை செய்கிறவர்களாய்  இருக்கிறார்கள் . இயேசு கிறிஸ்து அப் 10:38-ல் நன்மை செய்கிறவராய்ச் சுற்றித்திரிந்தார் .ஆகவே நன்மை செய்கிற ஒரு மனிதனாய்,ஒரு மாதிரியாய் இயேசு கிறிஸ்து நமக்கு இருந்திருக்கிறார்.நம் தேவன் சமாதானம் தருகிற தேவன்,அவர் நேற்றும் ,இன்றும், என்றும் மாறாதவர். சமாதானத்தை இழந்திருக்கிற அருமையான தேவப்பிள்ளையே ,இயேசு  கிறிஸ்துவைப் போல நம்முடைய  வாழ்க்கையிலே நன்மை செய்கிறவர்களாய்மாறுவோம் என்றால்,மெய்யான சமாதானத்தினால் நிறைந்து விடுவோம் .

                                      கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.

                                                                                                                                                                                                                            கிறிஸ்து இயேசுவின் பணியில்,

                                                                                                                                                                                                                                       சகோ .சி. எபனேசர் பால்.