"சிறுமைப்பட்டவனுக்குக் கர்த்தர் அடைக்கலமானவர்; நெருக்கப்படுகிற காலங்களில் அவரே தஞ்சமானவர்." சங்கீதம் 9:9

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

 கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினால் உங்களை வாழ்த்துகிறேன்.

நான் சிறுவனாக இருந்தபோது என் தகப்பனார் சாலை ஓரங்களில் வெட்டப்பட்ட குழிகளைக் (TRENCH ) குறித்து பல காரியங்களைக் கூறினார்கள். இரண்டாவது உலக யுத்தம் நடைபெற்றபொழுது அபாய சத்தம் கேட்டவுடனே, ஆங்காங்கே உள்ள ஜனங்கள் அந்தக் குழிக்குள் ஓடி ஒளிந்து கொள்வார்களாம். அன்று பயன்படுத்தப்பட்ட குண்டுகள் வெடித்தாலும், குழியில் ஒளிந்து கொண்டுள்ள மக்களைப் பாதியாது என்று அந்தக் குழியின் காரியங்களைக் கூறினார்கள்.

அன்று ஜனங்கள் யுத்தத்தின் நெருக்கத்தினால் குழியைத் தேடி ஓடி ஒளிந்தார்கள். ஆனால் நமக்கு வேதம் சொல்லுகிறது, நம் நெருக்கத்தில் கர்த்தரே அடைக்கலமும் தஞ்சமுமாவார். இன்று நமக்கு பலவித நெருக்கங்கள் உண்டாகிறது. வேலை ஸ்தலத்திலே, குடும்பத்திலே, பொருளாதாரத்திலே, சத்துருக்களின் செயலினால் நெருக்கங்கள் தோன்றி நம்மை வேதனைப்படுத்துகின்றது. அண்மையில் லிபியாவில் ஒரு பெரிய கிறிஸ்தவ கூட்டத்தின் ஆராதனை நேரத்தில் கொள்ளையர்கள் தாக்கின போது, ஜனங்கள் வெளியே ஓடினார்கள். ஆனால் அந்த நெருக்கத்தில் ஜனங்கள் கீழே விழுந்து மிதிப்பட்டனர். 29 பேர் மரித்துப் போனார்கள் என்ற செய்தியை நாம் கேட்டோம். இன்று உங்கள்வாழ்க்கையில் உள்ள நெருக்கம் எப்படிப்பட்டதாய் இருந்தாலும், கர்த்தராகிய இயேசுவிடம் தஞ்சம் புகுந்தால் அற்புதமாய் காக்கப்பட்டு ஆசீர்வதிக்கப்படுவோம்.

I. நெருக்கத்தினால் உண்டாகும் வேதனைகள்

1.மாம்சத்தை பட்சிக்கும் சத்துருக்கள்

"என் சத்துருக்களும் என் பகைஞருமாகிய பொல்லாதவர்கள் என் மாம்சத்தைப்  பட்சிக்க, என்னை நெருக்குகையில் அவர்களே இடறிவிழுந்தார்கள்."சங்கீதம் 27:2

பலவிதமாக பகைஞர்கள் நம்மைச் சுற்றி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். எப்பொழுது இவர்களுக்கு வியாதி வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். காரணமின்றி தீங்கு வரவேண்டும் என்று விரும்புகிற, சொல்லுகிற மக்கள் ஏராளம் உண்டு. இவரது வீட்டை, வியாபாரத்தை நாம் எடுத்துக்கொள்ளலாம் என்று வாஞ்சித்து நமக்கு நெருக்கத்தைத் தருகிற மக்கள் உண்டு. கர்த்தர் எனக்கு இரட்சிப்புமானவர். என் ஜீவனின் பெலனானவர், என்ற நம்பிக்கையில் இருப்போமானால் ஒன்றும் நம்மை சேதப்படுத்தாது. அவர்கள் செய்த தந்திர மந்திரங்களே அவர்களை அழித்துவிடும். எதை விதைக்கிறார்களோ அதையே அவர்கள் அறுப்பார்கள்.

போதகர் ஒருவர் தன் சபையின் காரியதரிசி, தவறு செய்ததைக் கண்டித்தார்கள். அவரோ நீ யோக்கியனோ, உன்னை என்ன செய்கிறேன் என்று பார் என்று கூறி, கெடுதியுண்டாக்கும் தந்திரங்கள், மந்திரிக்கும் மக்களிடம் சென்று தீதானவை போதகருக்கு நேரிட வேண்டும் என்று செய்தார். ஆனால் எதைச் செய்தாரோ அது அவரையே பாதித்தது. அந்த ஊரிலேயே இருக்கமுடியாதபடி தன் சொந்த ஊருக்குச் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. 'உலகத்திலிருக்கிறவனினும் உங்களிலிருக்கிறவர் பெரியவர் 'என்பதை மறவாது தேவனைத் துதியுங்கள்.

2. நெருக்கம் துக்கத்தைத் தோன்றப்பண்ணும்

"எனக்கு இரங்கும் கர்த்தாவே, நான் நெருக்கப்படுகிறேன்; துக்கத்தினால் என் கண்ணும் என் ஆத்துமாவும் என் வயிறுங் கூடக்  கருகிப்போயிற்று." சங்கீதம் 31:9

இந்த நெருக்கமானது துக்கத்தைக் கொண்டு வருகிறது. நம் வாழ்வில் துக்கம் வரும்போது சோர்வு, கவலை வேதனையைப் பெருகச் செய்து விடுகிறது. நெருக்கத்தினால் துக்கத்தில் ஆழ்ந்திருக்கிற தனி மனிதர்களும், குடும்பங்களும் உண்டு. துக்கம் மனவேதனையையும், கண்ணீரையும் பெருகச் செய்துவிடும். சிலர் வாழ்வில் நெருக்கத்தால் ஏற்படும் துக்கம் இரவிலும் தூங்கமுடியாதபடி செய்கிறதை நாம் அதிகமாக கேள்விப் படுகிறோம். இந்தத் துக்கம் அனுதினமும் மன அழுத்தத்தை உண்டு பண்ணி எந்த வேலையையும் செய்ய முடியாதபடி நம் வாழ்வை கெடுத்துப்போடும். இயேசு கிறிஸ்து நம் துக்கத்தைச் சந்தோஷமாக மாற்றுகிறவர். நம் துக்கத்தை அவர் சிலுவையில் சுமந்து நமக்குப் பெரிய விடுதலையை உண்டு பண்ணி வைத்திருக்கிறார். நமக்கு அருமையானவர்களின் மறைவினால், நினையாது ஏற்படும் தோல்விகளினால் நமக்கு எளிதாக துக்கம் தோன்றி விடும். இன்று துக்கத்தினால் கலங்குகிற தேவப்பிள்ளையே, கர்த்தரிடம் வாருங்கள், அவரே உங்கள் நெருக்கத்தையும் துக்கத்தையும் மாற்றி மகிழ்ச்சியினால் உங்களை முடிசூட்டுவார்.

3.நெருக்கம் பெலனற்றுப் போகச் செய்கிறது

"...இந்த நாள் நெருக்கமும், கண்டிதமும் தூஷணமும் அனுபவிக்கிற நாள்; பிள்ளைப்பேறு நோக்கியிருக்கிறது; பெறவோ பெலன் இல்லை." ஏசாயா 37:3

நம் வாழ்வில் சரீரம், ஆவியில், ஆத்துமாவில் பெலன் மிகுதியாக தேவையாயிருக்கிறது. சரீர பெலன் இருந்தால்தான் நாம் எந்த வேலையையும் நலமாயும், சீராகவும் செய்ய முடியும். பெலனிருக்கும் போது இந்தச் சரீர பெலன் ஆரோக்கியமான சுக வாழ்வை வாழச் செய்யும். நம் குடும்பத்தின் பிள்ளைகளைத் தூக்கி விளையாடமுடியும். பெலனில்லாத படியால் நம் தொழிலை, நம் வேலையை அறைகுறையாக செய்கிறோம். பெலன் இருக்கும்போதுதான், வாலிபன் நன்றாக விளையாட முடியும். நாம் எந்த வேலை செய்ய நினைத்தாலும் செய்ய முடியும்.

ஒருமுறை என் தகப்பனார் எங்கள் வீட்டில் இருந்த ஒரு சிறிய கிணற்றை மூடிவிடவேண்டும் என்று சொன்னார்கள். சரி என்று நானும், என் சகோதரனுமாக இணைந்து அந்த இராத்திரியிலேயே அந்தக் கிணற்றை மூடிவிட்டோம். அங்கும் இங்கும் இருந்த மண்ணைச் சுமந்து வந்து கிணற்றை நிரப்பினோம். நாம் எதைச் செய்ய விரும்பினாலும் நமக்குப் பெலன் தேவை.

எலியா கலங்கி சோர்வடைந்து வனாந்தரத்தில் பிரயாணம் போய், ஒரு சூரைச்செடியின் கீழ் உட்கார்ந்து நான் சாகவேண்டும் என்று கோரி, போதும் கர்த்தாவே, என் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்; நான் என் பிதாக்களைப் பார்க்கிலும் நல்லவன் அல்ல என்று சொல்லி ஒரு சூரைச்செடியின் கீழ்ப் படுத்துக்கொண்டு நித்திரைப் பண்ணினான். அப்பொழுது ஒரு தூதன் அவனைத் தட்டியெழுப்பி எழுந்திருந்து போஜனம்பண்ணு என்றான். அவன் விழித்துப் பார்க்கிற போது, இதோ, தழலில் சுடப்பட்ட அடையும், ஒரு பாத்திரத்தில் தண்ணீரும் அவன் தலைமாட்டில் இருந்தது. அப்பொழுது அவன், புசித்துக் குடித்து திரும்பவும் படுத்துக் கொண்டான். மறுபடியும் தூதன் அவனைத் தட்டியெழுப்பி, எழுந்திருந்துபோஜனம்பண்ணு, நீ பிரயாணம் பண்ணவேண்டிய இடம் வெகுதூரம் என்றான். அப்பொழுது எலியா எழுந்து புசித்துக் குடித்து, அந்தப் போஜனத்தின் பலத்தினாலே நாற்பதுநாள் இரவும் பகலும் ஓரேப் என்னும் தேவனுடைய பர்வதம் மட்டும் நடந்து போனான். இன்று பட்டினியால் தங்களின் பெலத்தை இழந்து தவிக்கிறவர்கள் உண்டு. தேவ போஜனம் மெய்யாகவே சரீர பெலத்தை உண்டாக்குகிறது.

கர்த்தர் நம் ஜெபத்தைக் கேட்கிறவர், அவருடைய பதில் நமக்குக் கிடைக்கும்போது நம் ஆத்துமாவில் பெலனடைகிறேம். எப்பொழுது நம் ஆத்துமாவில் பெலன் வருகிறதோ, அப்பொழுது நாம் தைரியம் அடைந்துவிடுவோம். ''கூப்பிட்ட நாளிலே எனக்கு மறுஉத்தரவு அருளினீர்; என் ஆத்துமாவிலே பெலன்தந்து என்னைத் தைரியப்படுத்தினீர்' என்று சங்.138:3ல் பார்க்கமுடிகிறது. எல்லா சூழ்நிலையிலும் தைரியமடைய வேண்டுமானால் நம் ஆத்துமாவிலே பெலனடைய வேண்டும்.

   திருச்சியிலே ஒருமுறை இயேசுகிறிஸ்துவின் இரத்தம் எங்கே என்று கேலியாக,கிண்டலாக சுவர்களில் பல இடங்களில் எழுதிப் போட்டார்கள். அப்பொழுது ஒரு போதகர் இங்கே இந்தச் சபையில் இயேசு கிறிஸ்துவின் இரத்தம் கிடைக்கும் என்று எழுதிப்போட்டார். அந்த மக்கள் அவரிடம் வந்து கேட்டபோது, என் சரீரத்தைக் கிழித்தால் இயேசு கிறிஸ்துவின் இரத்தம் தான் என்று சொன்னபோது, அவர்கள் பேசாது போய் விட்டார்கள். அந்தச் சபையினர் போதகரிடம் இருந்த மன தைரியம் அவ்வாறு அவரை நடத்தியது.

அன்பு சகோதரனே, சகோதரியே, நான் என்ன செய்வேன் என்று கலங்காதே. ''இந்நாளில் உனக்கு உண்டாயிருக்கிறதுபோல ஐசுவரியத்தைச் சம்பாதிக்கிறதற்கான பெலனை உனக்குக் கொடுக்கிறவர்' (உபா. 8:18) என்ற தேவன் இன்றும் ஜீவிக்கிறார். ஆகவே இந்தப் பெலனை உன் ஆவியிலும் உன் ஆத்துமாவிலும் உனக்குள் பெருகச் செய்து,எல்லாவிதமான பணிகளையும் செய்ய பெலனையும் ,தைரியத்தையும் தந்து உன்னை ஆசீர்வதிப்பார் .

   கர்த்தர் தம்முடைய ஆவியினால் நமக்குள் நம் ஆவியில் பெலன் உண்டாக்குகிறவராக இருக்கிறார். இந்தப் பெலன் வரும்போது தான் எல்லா சூழ்நிலையிலும் நாம் தைரியத்துடன் இயேசு கிறிஸ்துவைச் சாட்சியிட முடியும்.'' என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற் றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு '' என்ற பிலி.4:13ன் படி எல்லா காரியங்களையும் செய்யமுடியும். இந்த உன்னதமான தேவ பெலத்தை நாம் நெருக்கப்படுகையில் இழந்து ''பிள்ளைப்பேறு நோக்கியிருக்கிறது, பெறவோ பெலன் இல்லை' 'என்று கலங்கி புலம்பிக் கொண்டிருக்கிறோம். இன்று எல்லார் வாழ்விலும் இந்தப் போராட்டமான நெருக்கம் உண்டாகிறது.நமக்கும் கர்த்தருக்கும் உள்ள உறவினால் நாம் பூரணமான பெலனடைந்துவிடுவோம். நான் உன்னைப் பெலப்படுத்தி உனக்கு சகாயம் செய்வேன் என்ற கர்த்தர் மாறாதவராக இருக்கிறார்.

4. நெருக்கம் ஆத்துமாவில் விசனத்தை உண்டுபண்ணும்

"...அவனைத் தினம்தினம் தன் வார்த்தைகளினாலே நெருக்கி அலட்டிக்கொண்டிருக்கிறதினால், சாகத்தக்கதாய் அவன் ஆத்துமா   விசனப்பட்டு" நியாயாதிபதிகள் 16:16

இன்று அநேகரின் வாழ்க்கையில் கேட்கிற வார்த்தைகளினால் நெருக்கம் உண்டாகிறது. வாயின் வார்த்தைகள் மிகவும் ஜாக்கிரதையாக சொல்லப்பட வேண்டும். இந்த வாயினால் தேவனை நாம் துதிக்கிறோம், ஸ்தோத்தரிக்கிறோம். இதே வாயினால் தான் தேவனுக்குச் சாட்சி சொல்லுகிறோம். இந்த வாயின் வார்த்தைகள் நமக்குள் எப்படிப்பட்ட தாயிருக்கிறது? உலகத்தாரைப் போல தவறான காரியங்களைச் சொல்லித் திரிகிறோமா? சொல்லின் மிகுதியால் பாவம் உண்டாகும். கர்த்தருடைய பரிசுத்த பர்வதத்தில் நிற்க வேண்டுமானால் அயலான் மீது சொல்லப்படும் நிந்தையான பேச்சை பேசாதிருக்கவேண்டும்.

சிம்சோன் முன் அறிவிக்கப்பட்டப்படி பிறந்தவன். அவன் வாழ்நாளில் நசரேய விரதத்தில் இருக்க வேண்டியவன். காசாவுக்குச் சென்று ஒரு வேசியிடம் சென்றான். பின்பு அவன் சோரேக் ஆற்றங்கரையில் வாழ்ந்து கொண்டிருந்த தெலீலாள் என்னும் பேருள்ள ஒரு ஸ்திரீயோடே ஸ்நேகமாக இருந்தான். இவள் உண்மையற்றவள். பெலிஸ்தரின் ஆலோசனைப்படி நடந்து கொண்டாள். பண ஆசையுடையவள். சிம்சோனிடம் நன்றாய் பழகினவள் போல் நடந்தாள். அவனுடைய பெலன் எதிலே இருக்கிறது என்று அவனைக் கேட்க ஆரம்பித்தாள். முதலில் சிம்சோனும் ஏழு அகணிநார்க் கயிறுகளாலே என்னைக் கட்டினால், நான் பலட்சயமாகி மற்ற மனுஷனைப்போல் ஆவேன் என்று கூறினான். அப்பொழுது பெலிஸ்தரின் அதிபதிகள் உலர்ந்த பச்சையான ஏழு அகணிநார்க் கயிறுகளை அவனிடத்திற்குக் கொண்டு வந்தார்கள். அவைகளில் அவனைக் கட்டினாள். பின்பு பதிவிருக்கிறவர்கள் அறைவீட்டிலே காத்திருக்கும்போது, சிம்சோனே, பெலிஸ்தர் உன் மேல் வந்து விட்டார்கள் என்றாள். அப்பொழுது, சணல் நூலானது நெருப்புப்பட்டவுடனே இற்றுப்போகிறதுபோல அவன் அந்தக் கயிறுகளை அறுத்துப்போட்டான். அவன் பலம் இன்னதினாலே உண்டாயிருக்கிறது என்று தெரியவில்லை. இந்தத் தெலீலாள் என்னைப் பரியாசம்பண்ணி எனக்குப் பொய் சொன்னாய் என்று சொன்னதுடன், உன்னை எதினாலே கட்டலாம் என்று அவனைக் கேட்க ஆரம்பித்தாள். அவன் மீண்டும் அவளிடம், இதுவரைக்கும் ஒரு வேலைக்கும் வழங்காதிருக்கிற புதுக் கயிறுகளால் என்னை இறுகக் கட்டினால், நான் மற்ற மனுஷனைப்போல் ஆவேன் என்றான். அவள் அவ்விதமான கயிறுகளை வாங்கி அவனைக் கட்டினாள். பின்பு தெலீலாள் பெலிஸ்தர் உன் மேல் வந்து விட்டார்கள் என்றாள். இம்முறையும் கயிறுகளை ஒரு நூலைப் போல அறுத்துப்போட்டான். மீண்டும் தெலீலாள் உன் பலம் எதில் இருக்கிறது சிம்சோனே எனக்குப் பொய் சொன்னாய் என்று தன்                               வார்த்தையினால் அலட்ட ஆரம்பித்தாள். நீ என் தலை மயிரின் ஏழு ஜடைகளை நெசவுநூல் பாவோடே பின்னிவிட்டால், என் பலம் போய்விடும் என்றான். அப்படியே அவள் செய்து அவைகளை ஆணியடித்து மாட்டி, சிம்சோனே, பெலிஸ்தர் உன் மீது வந்து விட்டார்கள் என்றாள். அவன் நித்திரை விட்டெழும்பி நெசவு ஆணியையும் நூல் பாவையும் கூடப் பிடுங்கிக் கொண்டு போனான். அவள் அவனை விடவில்லை. இந்த மூன்று விசையும் என்னைப் பரியாசம் பண்ணினாய் என்றாள். அவனை அவள் மீண்டும் கேட்க ஆரம்பித்தாள். தன்னுடைய நாவினால் அவனைத் தினம் தினம் நெருக்கி அலட்ட ஆரம்பித்தாள். இதினால் சாகத்தக்கதாய் அவனுக்குள் ஆத்துமா விசனப்பட்டது.

தங்கள் வாயின் வார்த்தைகளால் மற்றவர்கள் உள்ளங்களை நொறுக்கி, நெருக்கி ஏன் இந்த வாழ்க்கை என்ற கசப்பை, வேதனையை உண்டாக்கி விடுகிறது. சில அதிகாரிகளின் வார்த்தைகள் பணி செய்வோரின் உள்ளதை உடைத்து விடுகிறது. அவ்வார்த்தைகள் அவர்களின் எண்ணங்களில் நெருக்கத்தை உண்டாக்கி விடுகிறது. இதினால் வேலையை ராஜினாமா செய்கிறவர்களும் உண்டு. தற்கொலை செய்கிறவர்களும் உண்டு. நாவின் வார்த்தை கேட்கிறவர்கள் உள்ளத்தில் கசப்பையும், நெருக்கத்தையும் பெருகச் செய்து விடுகிறது. அன்று சிம்சோன் அந்த வார்த்தையினால் உண்டான நெருக்கத்தினால், தன் பலத்தின் ரகசியத்தைத் தெரிவித்தான். வேதனையையும், பாடுகளையும் அனுபவித்தான்.

5. நெருக்கம் பலன் கொடாதபடி தடை செய்யும்

"சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் வளர்ந்து, அது பலன் கொடாதபடி , அதை நெருக்கிப்போட்டது." மாற்கு  4:7

அநேகருக்குக் கர்த்தருக்காக வாழ வேண்டும், அவர் நாமத்தை உயர்த்த வேண்டும் என்ற வாஞ்சை மிகுதியாக இருக்கிறது. கர்த்தரின் வார்த்தைகள் அவர்களுக்குள்ளாக இருந்தாலும் அதின்படி செய்யவும், அதற்கேற்ற விதத்தில் நடக்கவும் முடியாது போய் விடுகிறது. அவர்களுக்குள் வளர்ந்து கொண்டிருக்கும் முள்ளானது தடையைக் கொண்டு வந்து அவர்கள் பலன் தரமுடியாதபடி தடை செய்து விடுகிறது.

இன்று முள் எதைக் குறிக்கிறது என்று நாம் அறிந்து கொள்ள வேண்டும். கீழ்ப்படியாமையினால் உலகத்தில் வந்த சாபத்தினால் இவ்வுலகில் முள்தோன்றினது. சிறிய காரியத்திலும் நம்முடைய கீழ்ப்படியாமையினால் நம் காரியங்கள் முள்ளாக மாறிவிடுகிறது. மேலும் சாத்தானுடைய தந்திரமான செயலினால் நமக்குள் முள் போன்ற வியாதிகள் தோன்றி விடுகிறது. பவுல் 2கொரி.12:7ல் தனக்கு ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது, அந்த முள் என்னை நான் உயர்த்தாதபடிக்கு அது என்னைக் குட்டும் சாத்தானுடைய தூதனாயிருக்கிறது என்று சொல்லியிருக்கிறார். பல கர்த்தருடைய பிள்ளைகளில் இவ்விதமான சாத்தானின் முள்ளாக வியாதிகள், வளர இயலாது தடை செய்கிறது. இன்னும் நம் வாழ்வில் நல்ல கனியற்ற வாழ்வினால் தேவனுடைய உன்னத பாதுகாவலை இழந்துவிடுகிறோம். ஏசாயா 5ம் அதிகாரத்தில் நல்ல கனி கொடாதபடியால் அந்தத் திராட்சத் தோட்டத்தைப் பாழாக்கி விடுவேன். அதின் கிளை நறுக்கப்படாமலும், களை கொத்தி எடுக்கப்படாமலும் போவதினால், முட்செடியும் நெறிஞ்சிலும் முளைக்கும் என்று முள் தோன்றுவதற்குரிய காரணம் சொல்லப் பட்டிருக்கிறது. இவ்விதமாய் தோன்றும் முட்கள் நாம் நன்கு வளர்ந்து கனி கொடுக்க முடியாதபடி தடை செய்கிறது. 

II  நமக்கு உண்டாகும் நெருக்கங்களை எப்படி மேற்கொள்வது?

1. நெருக்கங்களை மேற்கொள்ள கர்த்தரைத் துதிக்க வேண்டும்

"உற்சாகத்துடன் நான் உமக்குப் பலியிடுவேன்; கர்த்தாவே, உமது நாமத்தைத் துதிப்பேன், அது நலமானது. அவர் எல்லா நெருக்கத்தையும் நீக்கி, என்னை விடுவித்தார்." சங்கீதம் 54:6,7

நமக்கு உண்டாகும் நெருக்கங்கள் எப்படிப்பட்டதாய் இருந்தாலும் கலங்காது நாம் கர்த்தரைத் துதிக்க வேண்டும். துதியானது வல்லமையுள்ள ஒரு செயலாகும். துதியின் மத்தியில் வாசம் பண்ணும் தேவனைத் துதிக்க துதிக்க நாம் அதிகமான நன்மைகளைப் பெற்றுக் கொள்வோம். கர்த்தரைத் துதிப்பது இன்பமும் ஏற்றதுமாயிருக்கிறது. யோசபாத்தின் வாழ்வில் பெரிய சத்துருவின் கூட்டத்தை எதிர்க்க நேரிட்டது. அவன் தன் யுத்த வீரர்களுக்கு முன்பாக பாடகர் குழுவை நிறுத்தித் துதிக்க ஆரம்பித்தார்கள். அவர்கள் துதிக்க ஆரம்பித்தபோது, யூதாவுக்கு விரோதமாய் வந்த அந்த மூன்று விதமான மக்களுக்குள்ளாக போராட்டம் உண்டானது அவர்கள் ஒருவரையொருவர் சண்டையிட்டு அழிந்துபோனார்கள்.

அன்பு சகோதரனே, சகோதரியே, உன் வாழ்வில் உண்டான நெருக்கத் தினால் இனி கலங்காது, அந்த நெருக்கம் நீங்க துதியுங்கள். துதிக்கும்போதே உன் நெருக்கங்கள் நொறுங்கி உன்பக்கம் ஜெயமும் சமாதானமும் உண்டாகிவிடும்.

ஒருமுறை ஜெபிக்க ஒரு வாலிப சகோதரனை அழைத்து வந்தார்கள். வீட்டை விட்டு ஓடி விடுகிறான், என்ன செய்வது என்று எங்களுக்கு புரியவில்லை என்று கலங்கினார்கள். சில பாடல்களைப் பாடி அந்த வீட்டாருடன் துதிக்க ஆரம்பித்தோம். அந்த மகனில் செயல்பட்ட தீய ஆவி, ஏய் துதிக்காதே, பாட்டு பாடாதே என்று அதிகமாக சத்தமிட்டது.  நாங்களோ பாட்டை நிறுத்தாமல் மிகுதியான உற்சாகத்துடன் துதிக்க ஆரம்பித்தோம். அந்த வாலிபனில் இருந்த ஆவி அவனைக் கீழே தள்ளியது. அங்கும் இங்குமாக தரையில் புரண்டான். பின்னர் என்னால் இவனுக்குள் இருக்க முடிய வில்லையே என்று கத்திக்கொண்டே அவனை விட்டு வெளியேறியது.

நம் எல்லையில் எப்பொழுதும் துதியின் சத்தம் எழும்பும் என்றால் சத்துரு வெட்கப்பட்டு போவதுடன் தேவ பிரசன்னம் நிறைந்த ஸ்தலமாக மாறிவிடும். பவுலும் சீலாவும் நடு ராத்திரியில் தேவனைத் துதித்துப் பாடினார்கள். அந்தச் சிறைச்சாலையில் கர்த்தர் அற்புதமான காரியத்தைச் செய்தார். சிறைச் சாலையின் அஸ்திபாரங்கள் அசைந்தது. துதியின் சத்தத்தைக் கேட்டவர்களின் கட்டுகள் கழன்று போயிற்று. சிறைச்சாலையின் கதவுகள் திறவுண்டது. இன்று முதல் நாம் துதிக்கும் மக்களாக மாறுவோம், அவர் துதி எப்பொழுதும் என் வாயில் இருக்கும் என்ற தாவீதைப்போல் துதிப்போமாக. வாழ்க்கையில் விடுதலையும் ஜெயமும் அடைவோம். எல்லா நெருக்கமும் நொறுங்கிப்போம்.

2.நெருக்கம் நீங்க நம்மைத் தாழ்த்தி ஜெபிக்க வேண்டும்.

"... அவர்கள் மனாசேயை முட்செடிகளில் பிடித்து, இரண்டு வெண்கலச் சங்கிலியால் அவனைக் கட்டிப் பாபிலோனுக்குக் கொண்டுபோனார்கள். இப்படி அவன் நெருக்கப்படுகையில் தன் தேவனாகிய கர்த்தரை நோக்கிக் கெஞ்சி, தன் பிதாக்களின் தேவனுக்கு முன்பாக மிகவும் தன்னைத் தாழ்த்தினான். அவரை நோக்கி, அவன் விண்ணப்பம் பண்ணிக் கொண்டிருக்கிறபோது, அவர் அவன் கெஞ்சுதலுக்கு இரங்கி, அவன் ஜெபத்தைக் கேட்டு, அவனைத் திரும்ப எருசலேமிலுள்ள தன்னுடைய ராஜ்யத்திற்கு வரப்பண்ணினார்; கர்த்தரே தேவன் என்று அப்பொழுது மனாசே அறிந்தான்." 2 நாளாகமம் 33:11,12,13  

மனாசே கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான். கர்த்தர் மனாசேயோடும் அவனுடைய ஜனத்தொடும் பேசினபோதிலும் அவர்கள் கவனிக்காதே போனார்கள். அதினால் கர்த்தர் அசீரியா ராஜாவின் கையில் ஒப்புக்கொடுத்தார். அவன் பாடுகளை அனுபவித்தபோது, இந்த மனாசே கர்த்தரை நோக்கி கெஞ்சினான். அத்துடன் தன்னைத் தேவனுக்கு முன்பாக தாழ்த்தினான். தாழ்மையுள்ளவர்களுக்குக் கிருபையளிக்கிற தேவன், அவனில் உண்டான மாற்றத்தைக் கண்டார். அவனுக்கு இரங்கினார். அவன் நெருக்கமெல்லாம் நீங்கிப்போயிற்று. தாவீது கர்த்தரை நோக்கி கூப்பிட்டபோது, அவன் புலம்பலை ஆனந்தக் களிப்பாக மாறப்பண்ணினார் என்று சங்கீதம் 31:11 ல் பார்க்க முடிகிறது. தாவீது கெபியிலிருக்கும் போது கர்த்தரை நோக்கிச் சத்தமிட்டு கெஞ்சினான் என்று சங்கீதம் 142:1 ல் பார்க்கிறோம். கர்த்தரிடம் நாம் கெஞ்சி ஜெபிக்கும்போது ஜெபத்தைக் கேட்கிற தேவன் நமக்கு இரங்குவார். நமக்கு உண்டாகும் எல்லா நெருக்கத்திலிருந்தும் விடுவிக்கப்படுவோம்.

அன்பின் தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார் என்பதை நாம் அறிந்து எல்லாக் காரியங்களிலும் நம்மைத் தாழ்த்துவோமா! தானியம் வாங்க வந்த தன் சகோதரரை வேவுக்காரர் என்று யோசேப்பு குற்றப்படுத்தினான். அத்துடன் சகோதரர் யாவரையும் மூன்று நாள் காவலிலே வைத்தான். பின்பு ஒருவன் மட்டும் காவற்கூடத்தில் கண்டுண்டிருக்கட்டும், மற்றவர்கள் வருந்துகிற உங்கள் குடும்பத்தாருக்குத் தானியம் கொண்டுபோய்க் கொடுத்து, இளைய சகோதரனை என்னிடத்தில் அழைத்து வாருங்கள் என்றான். யோசேப்பின் சகோதரர்கள் அப்படியே செய்வதற்கு இசைந்தார்கள். நாம் நம்முடைய சகோதரன் கெஞ்சி வேண்டிக்கொண்டபோது, அவனுடைய மன வியாகுலத்தை நாம் கண்டும் செவிகொடாமற்போனோமே. ஆகையால் இந்த ஆபத்து நேரிட்டது என்று கலங்கினார்கள்.

நம் கெஞ்சுதலுக்கு இரங்கும் தேவனின் செயலை நாமும் நம் வாழ்வில் கைக்கொள்ளவேண்டும்.

3.நெருக்கத்திலிருந்து விலக்கிக் காக்கப்பட நீதிமானாக வேண்டும்

"...நீதிமானோ நெருக்கத்தினின்று நீங்குவான்." நீதிமொழிகள் 12:13

நமக்கு ஏற்படும் நெருக்கத்தினின்று விலக்கிக் காக்கப்பட நாம் நீதிமானாக மாற வேண்டும். இயேசு கிறிஸ்து தம்மைப் பற்றும் அறிவினால் அநேகரை நீதிமான்களாக்குவார். இயேசு கிறிஸ்துவை அறிகிற அறிவு இன்று நமக்கு தேவை. அவரை அறிவதே நித்திய ஜீவன் என்று நாம் நன்கு அறிவோம். அவரது நாமத்தை அறியும்போது உயர்ந்த அடைக்கலம் தருகிறார். சத்திய பரனாகிய இயேசுவின் சத்தியத்தை அறியும்போது, நம்முடைய பிரச்சனைகளில் இருந்து விடுதலை தருகிறார். ஆண்டவரின் சிலுவைப் பாடுகளை அறியும்போது நம் வாழ்வில் நெருக்கம் நீங்குவதற்கு ஏற்ற வழிகள் பிறக்கும்.

இன்னும் நாம் நீதிமானாக வாழ வேண்டுமானால் மீட்கப்பட வேண்டும். 'இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக் கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறீர்கள்' என்று ரோமர் 3:24ல் பார்க்க முடிகிறது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பாவத்திலிருந்து, சாபத்திலிருந்து, பிசாசின் பிடியிலிருந்து நம்மை மீட்க இவ்வுலகிற்கு அனுப்பப்பட்டவர், பயப்படாதே, உன்னை மீட்டுக் கொண்டேன், உன்னைப்பேர் சொல்லி அழைத்தேன், நீ என்னுடையவன் '' என்றுஏசாயா 43:1ல் சொன்னவர் இன்று நம்மை மீட்டு அவருடைய அளவற்ற கிருபையினால் நம்மை நீதிமான்களாக்குகிறார்.

            இன்னும் அவர்மேல் உள்ள விசுவாசத்தினாலே நாம் நீதிமான்களாக்கப்படுகிறோம் என ரோமர் 5:1ல் பார்க்கிறோம். இன்று நம்முடைய நம்பிக்கையின் நிச்சயம் கர்த்தர் பேரில் இருக்கிறதா?அல்லது இவ்வுலகத்தில் உண்டாக்கப்பட்டவைகளின்மேல் இருக்கிறதா? கர்த்தராகிய இயேசு கிறிஸ்து எனக்காக இவ்வுலகில் அனுப்பப்பட்டார். அவரே எனக்கு எல்லாம் என்று உள்ளத்தில் உருவாகும் விசுவாசத்தால் நாம் நீதிமான்களாகப்படுகிறோம்.

இத்துடன் அவரின் இரத்தத்தினாலே நாம் நீதிமான்களாக்கப் படுகிறோம். அவருடைய இரத்தம் நம் பாவங்களை நீக்கி நம்மைச் சுத்திகரிக்கிறது. அவருடைய இரத்தம் தைரியத்தை நமக்குள் பெருகச் செய்கிறது. அவருடைய மாசற்ற விலையேறப் பெற்ற இரத்தம் நம்முடைய செத்த மனச்சாட்சியை உயிர்ப்பித்து நாம் அவருக்காக உழைக்க உதவிச் செய்கிறது. நாம் இப்படியாக நீதிமான்களாக்கப்படுவதால் எல்லா நெருக்கங்களுக்கும் விலக்கிக் காக்கப்படுகிறோம்.

கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.

கிறிஸ்துவின் பணியில்,

சகோ.சி. எபனேசர் பால்.