செய்தி

"அப்பொழுது இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டார்." மத்தேயு 4:1

 கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே ,

             கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினாலே உங்களை வாழ்த்துகிறேன்.

                    இன்று அநேக திருச்சபைகளில் இயேசு கிறிஸ்துவினுடைய சோதனையின் காரியங்களைத் தியானித்து அதினால் உண்டான நன்மைகளை அடைந்து , கர்த்தரோடு இணைந்து, நெருங்கி வாழ்வதற்கு இந்த லெந்து காலமானது அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த லெந்து காலமானது ஒரு சடங்காச்சாரமான காலமல்ல. கிறிஸ்துவுடன் நெருங்கி ஜீவிக்கிற நல்ல வாழ்க்கையின் காலம்.நம்முடைய சரீரத்தின் விருப்பங்கள், ஆசைகள் எல்லாவற்றையும் ஒடுக்கி, கர்த்தருக்கு முன்பாக தாழ்மைப்படுகிற காலமாக இக்காலம் அனுசரிக்கப்படுகிறது. இந்த லெந்து காலத்தினுடைய ஆரம்பமே பிசாசினால் இயேசு கிறிஸ்து சோதிக்கப்பட்ட காரியத்தின் அடிப்படையிலேயே அமைந்திருக்கிறது. மத்தேயு 4:1-ல் தேவ ஆவியானவர் இயேசு கிறிஸ்துவை வழிநடத்திய முதலாவது ஒரு நிகழ்ச்சியைப் பார்க்கிறோம்.அவர் சோதனைக்காக வனாந்திரத்திற்கு கொண்டு போகப்பட்டார். வனாந்திர வாழ்க்கையிலே உண்டான சோதனையானது மிகவும் போராட்டமாக  இருக்கும்.வனாந்தரம் என்று சொன்னாலே திசை தெரியாத ஒரு சூழ்நிலை. உதவியற்ற ஒரு நிலைமை, வாழ்க்கையிலே என்ன செய்வது என்று அறிந்துக் கொள்ள முடியாத தனிமையான ஒரு நிலைமை. இவ்விதமான நிலையிலே இயேசு கிறிஸ்து நமக்கு ஒரு மாதிரியை வைத்திருக்கிறார். பிசாசினால் உண்டான சோதனையை எவ்விதமாய் சந்திக்க வேண்டும்? அதை எவ்விதமாய் ஜெயிக்க வேண்டும்? அது நம்முடைய வாழ்க்கைக்கு ஏற்ற ஆவிக்குரிய ஆசிர்வாதத்தை எவ்விதமாய்த் தரக்கூடியது என்று அதன் மூலமாய் அறியமுடியும். கிறிஸ்துவுக்காக வாழ்கிற வாழ்க்கையிலே பலப்பல சோதனைகள்\ தோன்றுவது உண்டு. எனக்கு எந்த சோதனையுமே இல்லை என்று ஒருவருமே சொல்ல இயலாது. பலவிதமான சோதனைகள், பலவிதமான பிரச்சனைகளின் மூலமாய் உண்டாகிறது. ஆனால் சோதனைகளின் மத்தியிலே நாம் கர்த்தருக்குள் எவ்விதமாய் இருக்க வேண்டும்? கர்த்தர் நமக்குப் போதிக்கிற காரியம் என்ன என்று அறிந்து செயல்படும் போது சோதனைகளினால் நமக்கு ஆசீர்வாதங்கள் உண்டாகிறது .

சோதனைகளை சகிக்க நாம் என்ன செய்ய வேண்டும்?

1. மரணபரிணயந்தம் உண்மையாயிருக்க வேண்டும்.

" நீ படப்போகிற பாடுகளைக்குறித்து எவ்வளவும் பயப்படாதே; இதோ, நீங்கள் சோதிக்கப்படும்பொருட்டாகப் பிசாசானவன் உங்களில் சிலரைக் காவலில் போடுவான்; பத்துநாள் உபத்திரப்படுவீர்கள். அகிலும் நீ மரணப்பரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகீரீடத்தை உனக்குத் தருவேன்." வெளி 2:10

                    சோதனைகளை சந்திக்கிற நாட்களில் மரணப்பரியந்தம் நாம் உண்மையாய் இருக்க வேண்டும். தேவன் உண்மையை நம்மிடத்திலே எதிர்பார்க்கிறார். உண்மையுள்ளவனை கர்த்தர் தர்க்காக்கிறார் என்று சங்கீதம் 31:23ல் பார்க்கிறோம். இந்த உலக வாழ்க்கையிலே உண்மையாக வாழ்கிற மக்கள் மனுபுத்திரரிலே குறைந்து இருக்கிறார்கள் என்று வேதத்தில் பார்க்க முடிகிறது. உண்மையான ஒரு வாழ்க்கை இல்லை. குடும்ப வாழ்க்கையிலே உண்மை இல்லை. பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் உள்ள உறவில் உண்மை இல்லை. இவ்விதமாய் அநேக காரியங்களில் உண்மையற்றவர்களாய் இருக்கிறோம். உண்மையுள்ளவர்களாய் இருக்க வேண்டிய நாம் உண்மையை பற்றி மெச்சிக்கொள்வதால் பெருமை ஏற்பட்டு, அந்த உண்மை நிலை நம்மிடத்தில் இல்லாமல் போகிறது. வேலையிலே உண்மை இல்லை. நம்முடைய ஜெப வாழ்க்கையிலே உண்மை இல்லை.நம்முடைய பரிசுத்த வாழ்க்கையிலே உண்மையாய் காணப்படவில்லை. தேவன் நம்மிடத்தில் எதிர்பார்க்கிற உண்மையானது மரண பரியந்தம் இருக்க வேண்டும். ஏனென்றால் நம் தேவன் உண்மையை விரும்புகிற தேவன். தாவீது அவனுடைய வாழ்க்கையிலே பாவ அறிக்கை செய்யும்போது தன் வாழ்க்கையிலே செய்த தவறுகளை உணர்ந்தவனாய் ' இதோ, உள்ளத்தில் உண்மையாய் இருக்க விரும்புகிறீர்..' என்று சங்கீதம் 51:6ல் சொல்லிருப்பதை பார்க்கிறோம். ஆகவே கர்த்தர் விரும்புகிற ஒரு செயல், பண்பு தான் உண்மை. இது மரணப்பரியந்தம் இருக்க வேண்டும். உண்மையுள்ளவர்களை கர்த்தர் தற்காத்து, உயர்த்துகிற மேன்மைப்படுத்துகிற தேவனாய் இருக்கிறார்.                                கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஒரு உவமையைச் சொன்னார். ஒரு மனிதன் தாலந்துகளைக் கொடுத்த ஒரு நிகழ்ச்சியை சொல்லிவிட்டு, அந்தத் தாலந்துகளைக் குறித்து ஒரு நாளிலே கணக்கு கேட்கிறதைப் பார்க்க முடிகிறது. கணக்கு கேட்ட பொழுது முதலாவது 5 தாலந்துகளை வாங்கினவன் அதை கொண்டு வியாபாரம் செய்து, வேறு 5 தாலந்துகளைச் சம்பாதித்தான். எப்படியாக 2 தாலந்துகளைப் பெற்றவன் வேறு 2 தாலந்துகளைச் சம்பாதித்தான். 1 தாலந்தை வாங்கியவன் மண்ணிலே புதைத்து வைத்தான். அவனுடைய எஜமான் திரும்பி வந்து கணக்குக் கேட்டப்பொழுது, 5 தாலந்துகளை வாங்கியவன் வேறே 5 தாலந்துகளை கொண்டு வந்து ஆண்டவரே 5 தாலந்துகளை என்னிடத்ததில் ஒப்புவித்தீர், அதைக் கொண்டு வேறு 5 தாலந்துகளை சம்பாதித்தேன் என்றான். அவனுடைய எஜமான் அவனை நோக்கி நல்லது உத்தமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, நீ கொஞ்சத்தில் உண்மையாய் இருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன், உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றார். இப்படியாக 2 தாலந்துகளை உடையவனையும் கொஞ்சத்தில் உண்மையாய் இருந்தாய். அநேகத்தின்மேல் அதிகாரியாய் வைப்பேன் என்று சொன்னதைப் பார்க்கிறோம். உண்மையை விரும்புகிற தேவன், உண்மையாய் தன்னுடைய காரியங்களைச் செய்கிறவர்களை மீட்கிற தேவனாய் இருக்கிறார். ஆகவே மரணப்பரியந்தம் உண்மையாய் இரு என்றுச் சொல்லியிருக்கிறார். அநேகருடைய வாழ்க்கையிலே அநேக காரியங்களில் தோல்வி அடைகிறார்கள். தடைகள் தோன்றுகிறது, சில காரியங்களில் தாமதங்கள், போராட்டங்கள் வருகிறது. அருமையான தேவ ஜனமே, இந்த வார்த்தைகளைத் தியானிக்கிற, வாசிக்கிற அருமையான சகோதர/ சகோதரிகளே, உண்மையுள்ளவர்களை நேசிக்கிற தேவன் இருக்கிறார். அதனால் பிசாசினால் வருகிற சோதனைகள், உபத்திரவத்தினால் வருகிற சோதனைகளிலே நாம் மரணபரியந்தம் உண்மையுள்ளவர்களாய் இருக்க வேண்டும். அநேக நேரங்களிலே இந்த உண்மையற்ற நிலை இருக்கிறபடியினாலே, ஏமாற்றங்கள்,தோல்விகள், தர்க்கங்கள் தோன்றுகிறது. ஒரு முறை ஒரு அருமையான சகோதரரை அவருடைய அலுவலகத்தின் பணியிலே தவறு கண்டுபிடிக்க திட்டமிட்டார்கள். ஆனால் அவருடைய வாழ்க்கையிலே அவர் உண்மையுள்ளவராய் இருந்தார். அதினிமித்தமாய் எவ்விதமான குற்றங்களையும் காண முடியாதப்படியினாலே அவருக்கு விரோதமாய் இருந்தவர்கள் அங்கிருந்து வேறொரு பகுதிக்கு மாற்றப்பட்டார்கள்.ஆனால் அவருக்கோ உத்தியோகத்தில் உயர்வு கிடைத்தது. இதைப்போல வேதத்திலே தானியேல் உண்மையுள்ளவனாக இருந்தான். ஆனால்\ அவன்மேல் குற்றம் சுமத்துவதற்கு அவனோடு பணிபுரிந்தவர்கள் முகாந்திரம் தேடினார்கள். அவனுடைய வாழ்க்கையிலே அவன் உண்மையாய் இருந்து உயர்வை அடையப் போகிறானே,ராஜாவுக்குப் பிரியமாய் இருக்கிறானே, அவனை எப்படியாவது குற்றப்படுத்த வேண்டும் என்று தந்திரமான ஒரு காரியத்தைச் செய்தார்கள். தானியேல் 6:4ல் '... அவன் உண்மையுள்ளவனாயிருந்தபடியால் அவன்மேல் சுமத்த யாதொரு குற்றமும் குறைவும் காணப்படவில்லை.' என்று பார்க்கிறோம். உண்மையாய் நாம் வாழும்போது ஒருவராலும் ஒரு குற்றமும் சாட்ட முடியாதபடி நல்ல வாழ்க்கை வாழமுடியும். ஆனால் குற்றம் சாட்டியவர்கள் நிலை என்னவாயிற்று? எந்த சிங்கக் கெபியிலே   போட்டு தானியேலை அழிக்க வேண்டும் என்று திட்டமிட்டார்களோ அந்த தந்திரமான வலையிலே அவர்களே சிக்கிக் கொண்டார்கள். அவர்கள் குடும்பமும் சந்ததியும் சிங்கக் கெபியிலே  போடப்பட்டதையும் அழிந்து போனதையும் பார்க்கிறோம். இந்த வார்த்தைகளை வாசிக்கிற அருமையான தேவபிள்ளையே, உண்மையுள்ளவனை கர்த்தர் விரும்புகிற தேவன், உயர்த்துகிற தேவன், உண்மையுள்ளவர்களை தற்காக்கிற தேவன். உண்மையுள்ளவர்களை ஆசீர்வதித்து அவருடைய சந்தோஷத்திற்குள் வரவழைக்கிறவராய் இருக்கிறார் நம்முடைய வாழ்க்கையிலே எல்லாவற்றிலும் உண்மையுள்ளவர்களாய் இருக்க வேண்டும். மோசே என்றுச் சொல்லப்பட்ட ஒரு மனிதனைக் குறித்து பார்க்கிறோம். மோசேயானவன், '....பணிவிடைக்காரனாய், அவருடைய வீட்டிலே எங்கும் உண்மையுள்ளவராயிருந்தான்.' என்று எபிரேயர் 3:5ல் பார்க்கிறோம். அவனுடைய ஊழியக் காலத்திலே அவன் உண்மையுள்ளவனாய் இருந்தான். ஆகவே எகிப்தின் மக்களுக்கு மத்தியிலே அவன் மிகவும் பெரியவனாக இருந்தான் என்று பார்க்கிறோம். அவன் ஒரு வேதனையான குடும்பத்திலே பிறந்தாலும், வேதனையான சூழ்நிலையிலே வளர்ந்தாலும், அவனுடைய வாழ்க்கையிலே அவன் உண்மையுள்ளவனாய் இருந்தப்படியினால், தேவன் அவனை எகிப்தியர் மத்தியிலே மிகவும் பெரியவனாக வைத்திருந்தார். '...மோசே என்பவன் எகிப்து தேசத்தில் பார்வோனுடைய ஊழியக்காரரின் பார்வைக்கும் ஜனங்களின் பார்வைக்கும் மிகவும் பெரியவனாயிருந்தான்.' என்று யாத் 11:3ல் பார்க்கிறோம்.இன்றைக்கு நம்முடைய வாழ்க்கையிலே கர்த்தருக்காக, கர்த்தருக்குள்ளாக, உண்மையுள்ளவர்களாய் காரியத்தைச் செய்யும்போது ஊழியங்களை செய்யும்போது, நம்மை நேசிக்கிற தேவன் நம்முடைய சத்துருக்களுக்கு மத்தியில் நமக்கு விரோதமாய் எழுப்புகிற மக்களுக்கு மத்தியிலே நம்மை மிகவும் பெரியவனாக மாற்றுகிறார். 

2. இருதயத்தை கடினப்படுத்தக் கூடாது.

   " இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில், வனாந்தரத்தில் கோபம் மூடினபோதும் சோதனை நாளில் நடந்ததுபோல, உங்கள் இருதயத்தைக் கடினப்படுத்தாதேயுங்கள்." சங்கீதம் 95:8

                                 நம்முடைய வாழ்க்கையிலே சோதனைகள் வரும் போது இருதயத்தை கடினப்படுத்தது வாழ வேண்டும். இதயமானது தேவனுக்கு ஏற்றதாய் இருக்கிறது. நொறுங்குண்ட இருதயத்தை நேசிக்கிற தேவனாயிருக்கிறார். நம்முடைய இருதயத்தின் வியாகுலங்களையும் , சகலவற்றையும் அறிந்திருக்கிற தேவன், அந்த இருதயத்தைக் குறித்து மிகவும் கரிசனையுடையவர். அநேகருடைய இதயமானது திருக்குள்ளதாக, கேடுள்ளதாக இருக்கிறது. ஆனால் தேவனுடைய சமுகத்திலே சோதனைகள் வரும்போது இருதயத்தைக் கடினப்படுத்தினவர்களாய் அல்ல, இருதயத்தை மிகவும் தாழ்த்தின மக்களாய் தேவ அன்பும், தேவபயமும் நிறைந்தவர்களாக மாற வேண்டும். கிறிஸ்துவின் மகிமையைக் குறித்து உணர்த்தவர்களாய், நாம் நம் இருதயத்தை மாற்றிக்  கொள்ள வேண்டும் .இருதயமானது தேவனுடைய சமுகத்திலே நலமானதை பெற்றுக்கொள்வதற்கு ஏற்றதாய் இருக்கிறது. ஆகவே இருதயத்தைத் திருக்கும் கேடும் எந்தவிதமான கடினத்தன்மையும் இல்லாதபடி, இருதயத்திலே சுத்தமுள்ளவர்களாய் நாம் மாறும்போது, தேவனை தரிசிக்க கூடிய மக்களாய் மாறுகிறோம். ஆகவே இன்றைக்கு நம்முடைய வாழ்க்கையிலே இந்த உலகத்தாரைப் போல ஒரு கடின இருதயம் உள்ளவர்களாய் அல்ல, நொறுங்குண்ட இருதயமாய் அவர் சமூகத்தில் வரும்போது, அவர் ஒருபொழுதும் நம்மை புறக்கணியாதபடி ஏற்றுக்கொள்கிறவராய் இருக்கிறார். சங்கீதம் 51ல் தாவீது தேவ சமுகத்திலே ' தேவனுக்குகேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே நொறுங்குண்டதும். நறுங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்' என்று தேவனுடைய அன்பின் பண்புகளைக் குறித்து, அவருடைய தன்மையைக் குறித்து தெளிவுபடுத்துகிறதை பார்க்கிறோம். ' நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருந்து, நறுங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார்.' என்று சங்கீதம் 34:18ல் இன்னும் அழகான விதத்திலே சொல்லுவதை பார்க்கிறோம்.   இன்றைக்கு பல பிரச்சனைகள், போராட்டங்கள் வருவதினால், நான் கர்த்தர், கர்த்தர் என்றுக் கேட்டு என்ன பிரயோஜனம் என்று சொல்லி இருதயத்தைக் கடினப்படுத்தாதபடி, உன்னுடைய இருதயம் காத்திருக்கக் கூடியதாய் மாற வேண்டும் . அவர் இருதயத்தை நேசிக்கிற, காண்கிற தேவன். மனிதன் முகத்தைப் பார்க்கிறான். கர்த்தரோ நம்முடைய இருதயத்தைப் பார்க்கிறபடியினாலே நம்முடைய இருதயம் கடினப்படாதபடி, சோதனைக் காலங்களிலே, நாம் கர்த்தருடைய சமுகத்திலே நம்மைத் தாழ்த்துகிற மக்களாய் மாற வேண்டும்.

3. தேவனுடைய வசனத்தைக் காத்துக் கொள்ள வேண்டும்.

                       "என் பொறுமையைக்குறித்துச் சொல்லிய வசனத்தை நீ காத்துக் கொண்டபடியினால், பூமியில் குடியிருக்கிறவர்களை சோதிக்கும்படியாகக் பூச்சக்கரத்தின்மேலெங்கும் வரப்போகிற சோதனைக்காலத்திற்குத் தப்பும்படி நானும் உன்னைக் காப்பேன்." வெளி 3:10

                         இந்தச் சோதனைக்காலத்தில்  நாம் சிக்கிக் கொள்ளாதபடி, பாதிக்கப்பட்டு விடாதபடி, தேவனுடைய வசனத்தைக் கவனமாய் காத்துக் கொள்ள வேண்டும். தேவனுடைய வசனமானது நமக்கு மிகவும் அவசியமானது. பிசாசிகளுடைய தந்திரங்களோடும். பிசாசினுடைய சேனையோடும் நமக்குப் போராட்டம் உண்டு. பிசாசு நம்மைச் சோதிக்க வரும்போது, நம்மை எதிர்க்க வரும்போது, அவனை மேற்கொள்வதற்கு தேவன் கொடுத்த ஒரு உண்மையான, வல்லமையான ஆயுதம் தேவ வசனமாகிய ஆவியின் பட்டயம். இதை எபே 6.17ல் பார்க்க முடிகிறது. இந்த ஆவியின் பட்டயமானது பிசாசினுடைய எல்லாவிதமான தந்திரங்களையும் அழிப்பதோடு, நம்மை தேவனுக்குள்ளாய் காக்கக் கூடியது. சங்கீதம் 119:105ல் ' உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.' பாதை தெரியாதபடி வேதனை நிறைந்த மக்களாய் இருக்கும்போது, பலவிதமான துன்பங்களினாலும், துயரங்களினாலும் ஏன் இந்த வாழ்க்கை என்று எண்ணுகிறபோது, இந்த வேத வசனமானது, ஜீவவார்த்தையானது நம்மை மாற்றுகிறதாய், தேற்றுகிறதாய் நமக்குள் புது பெலத்தை உண்டு பண்ணுகிறதாய் இருக்கிறது. ஆகவேதான் இந்த வேதத்தின் மகத்துவமான காரியத்தை நாம் ஆராய்ந்து அறிவதற்கு நேரத்தைக் கொடுக்க வேண்டும். யார் வேதத்தை நேசித்து, அதை இரவும்  பகலும் தியானிக்கிறார்களோ, அவர்களுடைய வாழ்க்கையானது கர்த்தருக்குள்ளாய் மேன்மையுள்ளதாய் மாறுகிறது. அவர்கள் செய்கிற காரியங்கள் எல்லாம் வாய்க்கக்கூடியதாய் கர்த்தர் மாற்றுவார். இந்த வேத வார்த்தைகளை முக்கியப்படுத்தி, அவைகளின் காரியங்களை நாம் ஏற்றுக்கொள்ளும்போது, தம்முடைய வசனத்தை அனுப்பி நம்மை குணமாக்கி நம்மை அழிவுக்கு விளக்கி காக்கிறவராய் இருக்கிறார். தேவனுடைய வார்த்தைகளுக்குள்ளாய் ஆவியும் ஜீவனும் உண்டு என்று யோவான் 6:63ல் பார்க்கிறோம்.ஆகவே இந்த ஜீவ வசனங்கள் நம்முடைய வாழ்க்கைக்கு மிகவும் பிரயோஜனமானது. ' நான் வீணாக ஓடினதும் வீணாக பிரயாசப்பட்டதுமில்லையென்கிற\ மகிழ்ச்சி கிறிஸ்துவின் நாளில் எனக்கு உண்டாயிருப்பதற்கு, ஜீவவசனத்தைப் பிடித்துக் கொண்டு, உலகத்திலே சுடர்களைப்போலப் பிரகாசிக்கிற நீங்கள்,' என்று பிலி 2:13ம் வசனத்தின்படி நடக்கும்போது, மனிதனுடைய வாழ்க்கையானது பிரகாசிக்கிறதாய் மாறுகிறது. சங்கீதம் 19:11ல் ' அன்றியும் அவர்களால் உமது அடியேன் எச்சரிக்கப்படுகிறேன்; அவைகளைக் கைக்கொள்ளுகிறதினால் மிகுந்த பலன் உண்டு.' என்ற வசனத்தின் படி நம்முடைய வாழ்க்கையிலே பலவிதமான நிலைகளிலே தவறு செய்யும்போது எச்சரிக்கப்படுகிறோம். தேவனுடைய வார்த்தையை நாம் அறிந்து, ஆராய்ந்து அவைகளின்படி செய்யும்போது நம்முடைய வாழ்க்கையிலே அநேக காரியங்களை தேவனுக்குள் நன்மையாய்ப் பெற்றுக் கொள்ள முடிகிறது. சங்கீதம் 119:9ல் ' வாலிபன் தன் வழியை எதினால்  சுத்தம் பண்ணுவான்? உமது வசனத்தின் படி தன்னைக் காத்துக்கொள்ளுகிறதினால்தானே.' என்று சொல்லியிருப்பதை பார்க்கமுடிகிறது. கர்த்தருக்கு விரோதமாய் பாவம் செய்யதபடியும், குணமாக்கப்பட்டவர்களாயும் சரியான பாதையிலே நடப்பதற்கு ஏற்றதாயும் இந்த ஜீவ வசனங்கள் நமக்கு உதவுகிறதாய் இருக்கிறது.ஆகவே இன்றைக்கு இந்த வார்த்தைகளைத் தியானிக்கிற, வாசிக்கிற அருமையான சகோதர/சகோதிரிகளே, தேவ வசனத்தை நாம் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல அதின்படி செய்கிறவர்களாய்  நாம் மாறும்போது, தேவன் நமக்கு ஆசீர்வாதத்தை வைப்பதோடு, சோதனையின் காலத்திலே உன்னை தப்புவிப்பேன் என்று தெளிவாக திட்டமாக வாக்கு கொடுத்திருக்கிறார். 

4. குற்றமில்லாத தூய வாழ்க்கை காணப்பட வேண்டும்.

   "... இந்த உலகத்தின் அதிபதி வருகிறான், அவனுக்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை. " யோவான் 14:30

                      சோதனையின் காலத்திலே நம்மைச் சோதிக்க வேண்டும் என்று சோதனைக்காரன்  வரும்போது அவன் மீது குற்றஞ்சாற்றுவதற்கு, நம்மிடம் குறை ஏதும் காணப்படாது இருக்க வேண்டும். நான் அடிக்கடி ஒரு உவமானத்தை சொல்வதுண்டு. அதென்னவென்றால் காலையிலோ, மத்திய நேரத்திலோ, இரவிலோ நாம் சாப்பிடுகிற பதார்த்தங்களில் சில துணிக்கைகள் மேசையில் விழுந்துவிடும் என்றால், உடனே சில மணி நிமிடத்திலே பலவிதமான பூச்சிகளும், எறும்புகளும் வந்துவிடுகிறது. இவற்றை நாம் அகற்ற வேண்டும், விரட்ட வேண்டும் என்று முயற்சிக்கும் போது, மேசையை சுத்தம் செய்து விட்டால் போதும், அதுவரை வந்து கொண்டிருந்த ஈக்களும் எறும்புகளும் தானாகவே மறைந்து போகும். இதைப்போல நம்முடைய வாழ்க்கையிலும் பலவிதமான பிரச்சனைகள். போராட்டங்கள் வரும்போது, அதிலிருந்து விடுபட மிக வல்லமையான ஒரு ஊழியரை நாம் அழைக்கிறோம். ஒருவரை அழைத்து அதன்மூலம் வெற்றி காணவில்லை என்றால், இன்னொரு ஊழியக்காரரை கூப்பிடுகிறோம். ஆனால் வேதம் நமக்கு தெளிவாய் சொல்லுகிறது, நம்மைச் சுத்திகரித்து கொள்ளும்போது நமக்கு எதிராய் வருகிறவன் நமக்குள் குற்றங்காண முடியாதபடி விலகிப் போகிறவனாய் இருக்கிறான். ஆகவே சோதனை வரும்போது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினாலே பரிசுத்தமாக்கப்பட்டவர்களாய், அவருடைய வசனத்தினாலே சுத்தமாக்கப்பட்டவர்களாய், அவருடைய பரிசுத்த ஆவியினாலே நாம் நிரப்பட்டவர்களாய் மாறும்போது நம்முடைய வாழ்க்கையிலே சோதனைக்காரன் ஒன்றும் செய்ய இயலாது.

5. அன்பு கூறுகிறவர்களாய் மாற வேண்டும்.

 

"சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; அவன் உத்தமனென்று விளங்கினபின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான்." யாக்கோபு 1:12

 

                             சோதனை வந்துவிட்டதே என்று உள்ளத்தில் வேதனை அடைந்து, வேதத்தை நேசியாதபடி, ஜெபிக்க மனதில்லாதபடி இருக்கிறதைக் காட்டிலும், அவருடைய சமூகத்திலே அன்பு கூறுகிறவர்களாய் மாறவேண்டும். கிறிஸ்துவின் அன்பிலே பெருகும்போது, நம்முடைய வாழ்க்கையிலே வருகிற அந்த சோதனைகளுக்காக நம்முடைய தேவனே நமக்காக யுத்தம் பண்ணுவார். இந்த சோதனைகளில் நாம் என்றைக்குமே  கலங்காதபடி கர்த்தரில் அன்பு கூறுகிறதிலே நிறைவாய்ப் பெறுக வேண்டும். "கிறிஸ்துவினுடைய அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது..." 2கொரி 5:14ன் படி தேவனுடைய ஊழியத்தைச் செய்வதற்கு, அது நம்மை நெருக்கி ஏவுகிறது. அப் 20:19ல் வெகு மனத்தாழ்மையோடும், மிகுந்த கண்ணீரோடும், யூதருடைய தீமையான யோசனைகளால் எனக்கு நேரிட்ட சோதனைகளோடும், நான் கர்த்தரைச் சேவித்தேன்.' என்று அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகிறார். அன்பு கூறுகிற செயல் என்றால், நம்முடைய குறைவுகளிலே, நெருக்கங்களிலே, கஷ்டங்களிலே கர்த்தரைச் சேவித்து, கர்த்தருக்காக உழைப்பதாகும். அநேக நேரங்களில் நாம் தவறி விடுகிறோம் . ஆனால் இன்றைக்கு கர்த்தருடைய சமூகத்திலே சேவை செய்வதற்கு, நம்முடைய உள்ளத்தின் எல்லாவித எண்ணங்களைத் திருப்புவோமானால், கர்த்தருடைய ஆலயத்திலே நாட்டப்பட்டவர்களாய், ஒருமித்து உயர்த்துவோம் என்றால் கர்த்தருடைய நாமம் இந்தப் பூமியிலே துரிதமாய் உயர்ந்துவிடும். தானியேல் 3ம் அதிகாரத்தில் மூன்று வாலிபர்களும் ஒருமித்து கர்த்தரை ஆராதித்ததினால், நாங்கள் உலகத்தின் காரியங்களுக்கு இடம் கொடுக்க மாட்டோம் என்று நிராகரித்தபோது, கர்த்தரே அவர்கள் மத்தியிலே பிரசன்னராய் இருந்து, அவர்களைப் பாதுகாத்தார். ஆகவே சோதனை நாளிலே நாம் கர்த்தருடைய சமூகத்திலே நம்மை இவ்விதமாய் சீர்படுத்தி, செயல்படுவோமானால் சோதனைகளினாலே நன்மைகளை அடைவோம்.

 

ii. சோதனைகள் மூலமாக நமக்கு வருகிற நன்மைகள்.

 

1. பொறுமையை உண்டாக்குகிறது

" என் சகோதரரே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது, உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள்." யாக்கோபு 1:2,3

 

                        முதலில் பொறுமையானது மிகவும் அவசியமாய் இருக்கிறது. நம்முடைய வாழ்க்கையிலே எப்பொழுதுமே பதறிப் பேசுகிற மக்களாய் இருக்கிறோம். ஆனால் வேதம் யாக் 1:19ல் '... யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயும் இருக்கக்கடவர்கள்.' என்று சொல்லுகிறபடி வாழ்க்கையிலே பொறுமையாய் இருக்க வேண்டும்.

                         இரண்டாவதாக நீடிய பொறுமை என்பது ஆவியின் கனியாய் இருக்கிறது. ஆவியின் கனியால் நிறைந்த மக்களாய்   மாறும் பொழுது, கர்த்தர் நம்முடைய வாழ்க்கையிலே பெரிதான காரியங்களை செய்கிறவராய் இருக்கிறார். 'மேலும் நம்முடைய கர்த்தரின் நீடிய பொறுமையை இரட்சிப்பென்று எண்ணுங்கள்...' என்று 2பேதுரு 3:15ல் பார்க்கிறோம். ஆகவே நம்முடைய வாழ்க்கையிலே கர்த்தரின் நீடிய பொறுமையை இரட்சிப்பாய் அருளுகிறவராய் இருக்கிறபடியினாலே, அவர் சமூகத்திலே பொறுமையாய் இருக்கக் கற்றுக் கொள்வோம்.

 

2. பிசாசானவன் விலகி ஓடுகிறான்.

" அப்பொழுது பிசாசானவன் அவரை விட்டு விலகிப்போனான். உடனே தேவதூதர்கள் வந்து அவருக்கு பணிவிடை செய்தார்கள். " மத்தேயு 4:11

 

                       நாம் சோதனைகளையெல்லாம் ஜெயிக்கும்போது தேவனுடைய அளவில்லாத நன்மைகளை, ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டு பாக்கியசாலிகளாய் மாறுகிறோம். 'ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார்; அவர் என்னைச் கொதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன்.' யோபு 23:10ல் தன்னுடைய அனுபவத்தின் மேலான காரியத்தை யோபு சொல்வதை பார்க்கிறோம். சோதனைகள் வரும்போது, அவைகளை மேற்கொண்டவர்களாய் மாறும்போது அவர்களின் வாழ்க்கையிலே மேன்மையான பங்குகளும், மேன்மையான  சுபாவங்களும் பெருகி இருப்பதைப் பார்க்க முடிகிறது. யோபு சொன்னதுப் போல கர்த்தருக்குள் பொன்னாக விளங்கத்தக்கதாக, மேலான, விலைமதிப்புக்குரிய ஒரு கருவியாக நாம் மாறுகிறோம். 

3. ஜீவ கிரீடத்தைப் பெறுகிறோம்.

         "சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; அவன் உத்தமனென்று விலகினபின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்பு கூறுகிறவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின ஜீவ கிரீடத்தைப் பெறுவான்." யாக்கோபு 1:12

                            இதோடு நாம் சோதனைகளை ஜெபிக்கும்போது, நித்தியத்திற்குரிய ஜீவ கிரீடத்தை பெறுகிற மக்களாய் இருக்கிறோம். ஆகவே உயிர்த்தெழுந்த ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சோதனைகளை அவர் தம்முடைய வாயின் வார்த்தைகளினாலும், தம்முடைய மிகுதியான வல்லமையான செயலினாலும், சொல்லினாலும் மேற்கொண்டதோடு நமக்கு ஒரு மாதிரியை வைத்திருக்கிறார். அதின்படி செய்யும்போது வேதத்தில் உள்ள ஆசீர்வாதங்களை சோதனையின் மத்தியிலே நாம் பெற்றுக்கொண்டு நாம் பாக்கியசாலிகளாய் மாறுவோம்.

                                     கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.

                                                                                                 கிறிஸ்து இயேசுவின் பணியில்,

                                                                                                           சகோ. C . எபனேசர் பால்