"இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன்..."

                                                                                                                                மத்தேயு 28:20

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினால் உங்களை வாழ்த்துகிறேன்.

கர்த்தர் பூமியிலே மனுஷனை உருவாக்கி ஜீவ சுவாசத்தை அவன் நாசியில் ஊதினார். மனுஷன் ஜீவாத்துமாவானான். இவ்வாறு உருவாக்கப்பட்ட மனிதன் தனிமையாய் இருப்பது நல்லதல்ல என்று  ஆதாமுக்கு அயர்ந்த நித்திரையை வரப்பண்ணி, அவனுடைய விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து, அந்த இடத்தைச் சதையினால் அடைத்தார். தேவனாகிய கர்த்தர், மனுஷனின் எலும்பை எடுத்து, மனுஷியை உருவாக்கினார். இப்படியாக,  உருவாக்கப்பட்ட ஆதாம் ஏவாளோடு தேவன் சஞ்சரித்து வந்தார். அவர்கள் பாவம் செய்யும்வரை இந்த மேலான ஆசீர்வாதத்தை பெற்று இருந்தார்கள். அவர்கள் தேவ வார்த்தையை மீறி புசிக்க வேண்டாமென்று கூறிய கனியைப் புசித்து, பாவம் செய்தபடியினால் தேவ உறவை இழந்து, அவர் சமுகத்தினின்று துரத்திவிடப்பட்டார்கள். தேவனாகிய கர்த்தர் மனுஷனை துரத்திவிட்டு, ஜீவ விருட்சத்திற்கு போகும் வழியைக்  காவல் செய்ய ஏதேன் தோட்டத்துக்கு கிழக்கே கேருபீன்களையும், வீசிக்கொண்டிருக்கிற சுடரொளி பட்டயத்தையும் வைத்தார். தேவனோடு சஞ்சரிக்க வேண்டிய மனுஷன், அவருடைய உறவையும், தான் பெற்றிருந்த தேவனுடைய அதிகாரத்தையும் இழந்து, சபிக்கப்பட்ட இந்த பூமியிலே வேதனையோடும், பாடுகளோடும் வாழ்கிறவனாய் மாறினான். ஆதாம்  ஏவாளோடு தேவன் சஞ்சரித்தது போல, தம் வார்த்தைக்கும், தம் சித்தத்திற்கும் ஏற்ற காரியங்களைச் செய்யக்கூடிய மக்களுடன் தங்கி வாழ விரும்பினார்.

பூமியில் வாழ்ந்த மனிதர்களும், கர்த்தரின் மகத்துவத்தை உணர்ந்து அவரின் வல்லமையைப் புரிந்து வாழ ஆரம்பித்தனர். இவ்விதமாய் வாழ்ந்த மக்கள், கர்த்தர் உன்னோடே இருப்பாராக, கர்த்தர் உங்களோடு இருப்பாராக என்று தனிமனிதனையும், அநேக மக்களையும் வாழ்த்துகிற முறைமைகளை பயன்படுத்தினார்கள்.

பெலிஸ்தர் யுத்தம் பண்ணுகிறதற்குக் கூடி வந்த சமயத்தில், அவர்களோடு யுத்தம் பண்ண சவுலும்,  இஸ்ரவேல் மனுஷரும், ஏலா பள்ளத்தாக்கிலே வெவ்வேறு இடங்களில் பாளயமிறங்கி இருந்தார்கள். பெலத்த பெரிதான உருவம் உடைய, காத் ஊரைச் சேர்ந்த கோலியாத்  என்னும் பேருள்ள ஒரு வீரன், பெலிஸ்தரின் பாளையத்திலிருந்து புறப்பட்டு வந்து நிற்பான். அவன் இஸ்ரவேல் சேனை வீரரைப் பார்த்து: என்னுடன் யுத்தம் பண்ண ஒரு வீரனை அனுப்புங்கள். அவன் என்னை மேற் கொண்டால், நாங்கள் உங்களுக்கு வேலைக்காரராய் இருப்போம். நான் ஜெயித்தேனேயானால் நீங்கள் எங்கள் வேலைக்காரராக  இருந்து எங்களைச் சேவிக்க வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் சொல்லிக்கொண்டிருந்தான். அத்துடன் இஸ்ரவேலின் தேவனுடைய சேனைகளை ஒவ்வொரு நாளும் நிந்தித்து கொண்டு வந்தான். இஸ்ரவேலர் அனைவரும் அந்த வார்தையைக் கேட்டு பயந்து கலங்கினார்கள். இஸ்ரவேலின் சேனையில் இருந்த தன்னுடைய மூத்த சகோதரர்களின் சுக செய்திகளை விசாரித்து, அவர்களிடம் அடையாளம் வாங்கிவரவும், 10 அப்பங்களையும் வறுத்த பயிற்றையும் கொடுக்கவும் தன் இளைய மகனாகிய தாவீதை ஈசாய்  அனுப்பினான். 

     ஆயிரம் பேருக்கு அதிபதியானவனிடத்தில்  10 பால் கட்டிகளையும் ஈசாய் கொடுத்து அனுப்பினான். யுத்தக் களத்திற்கு வந்த தாவீது தன்  சகோதரரைப் பார்த்து சுகமாயிருக்கிறீர்களா என்று கேட்டான். பேசிக்கொண்டிருக்கையில், கோலியாத், பெலிஸ்தரின் சேனைகளிலிருந்து வந்து முன் சொன்ன வார்த்தைகளையே சொன்னான். அந்த வார்த்தைகளைத் தாவீது கேட்டான். இஸ்ரவேல் வீரர்களோ அந்த வார்த்தைகளைக் கேட்டு விலகி ஓடினார்கள். கோலியாத்தின் வார்த்தைகளைக் கேட்ட தாவீது, அந்த வார்த்தைகளுக்குப் பயப்படவில்லை. அவனை எதிர்ப்பதற்கு உள்ளத்தில் வைராக்கியமுள்ளவனாய் மாறினான். ஜீவனுள்ள தேவனுடைய சேனைகளை நிந்திக்கிறதற்கு, இந்த பெலிஸ்தன் எம்மாத்திரம் என்று கூறினதோடு, வைராக்கியம் கொண்டு, தன் சகோதரர்களின் தடைகளைத் தாண்டி, வேறொருவனிடத்தில் கேட்டான். ஜனங்கள் சவுல் அறிவித்திருந்த மேன்மைகளையும், பரிசுகளையும் கூறினார்கள். தாவீது சவுலிடம்: நான் போய் இந்த பெலிஸ்தனோடு யுத்தம் பண்ணுவேன் என்று கூறினான். அதற்கு சவுல் நீ இளைஞன் என்றான். அதற்குத் தாவீது சிங்கமும், கரடியும்  மந்தையின் ஆட்டை  பிடித்துக் கொண்டபோது , அதனைத் தொடர்ந்து போய், அதை அடித்து அதன் வாய்க்குத் தப்புவித்தேன். என் மேல் பாய்ந்தபோதோ அதை அடித்துக் கொன்று போட்டேன். சிங்கத்தையும் கரடியையும் போல, இந்த பெலிஸ்தனும் அவைகளில் ஒன்றை போல இருப்பான் என்று கூறினான். தாவீதின் உள்ளத்தில் ஜீவனுள்ள தேவனுடைய சேனைகளை நிந்தித்தானே என்ற வேதனை இருந்தது. தாவீது, பெலிஸ்தனோடு யுத்தம் பண்ண போகிறேன், கர்த்தர் பெலஸ்தனுடைய கைக்கு தப்புவிப்பார் என்று  சொன்னபோது, சவுல் அவனைத் தேற்றும் படியாக, திடப்படுத்தும்படியாக, கர்த்தர் உன்னுடன்னே கூட இருப்பாராக  என்று வாழ்த்தினான்.

இதைப்போல் தாவீது தன் மரண காலத்திற்கு முன்பாக, தன் குமாரனாகிய சாலொமோனை அழைத்து, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஆலயத்தைக் கட்டுவதற்காக கட்டளைக் கொடுத்தான். உனக்குப் பிறக்கப்போகிற குமாரன் அமைதியுள்ள புருஷனாயிருப்பான். சத்துருக்களை எல்லாம் விலக்கி அவனை அமர்ந்திருக்கச் செய்வேன். அவன் பேர் சாலொமோன் எனப்படும். அவன் நாட்களில் இஸ்ரவேலின் மேல் சமாதானத்தையும் அமரிக்கையையும் அருளுவேன். அவன் என் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டுவான். அவன் எனக்கு குமாரனாயிருப்பான். நான் அவனுக்கு பிதாவாயிருப்பேன். அவனுடைய சிங்காசனத்தை என்றென்றைக்கும் நிலைப்படுத்துவேன் என்று  தனக்கு கூறிய  கர்த்தரின் வார்த்தைகளைக் கூறி, குமாரனை வாழ்த்தினான். கர்த்தர் உன்னைக் குறித்துச்  சொன்னபடியே, உன் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்தைக் கட்டும்படி அவர் உன்னுடனே கூட இருப்பாராக என்று ஆசீர்வதித்து சொன்ன காரியத்தைப் பார்க்கிறோம்.

போவாஸ் பெத்லேகேமிலிருந்து வந்து அறுக்கிறவர்களைப்   பார்த்து, கர்த்தர் உங்களோடு இருப்பாராக என்றான். அதற்கு அவர்கள் கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக என்றார்கள். வாழ்த்துகிறவர்கள், கர்த்தர் உங்களோடு இருப்பாராக என்று சொன்ன வார்த்தைகளை நாம் அறியவும் காணவும் முடிகிறது.

இன்றைக்கு உறவின் முறையில் மனைவி, பிள்ளைகள், பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள் யாவரும் சிலகாலம் மாத்திரமே நம்மோடு இருக்கிறார்கள். ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்மை நேசித்து, தாய் தகப்பன் கைவிட்டாலும். உற்றார் உறவினர்கள் கைவிட்டாலும், நண்பர்கள்  பகைவராய் மாறினாலும், சகோதர சகோதரிகள் இவ்வுலக செல்வத்திற்காக நம்மை வெறுத்து வழக்குகளை நடப்பித்தாலும், நேற்றும் இன்றும் மாறாத கர்த்தர், எப்போதும் என்றும் நமது தாழ்விலும் உயர்விலும், வெற்றி /தோல்வி நிறைந்த வேலைகளிலும், கண்ணீர் /கவலை நிறைந்த நேரங்களிலும், மேன்மை மகிழ்ச்சி நிறைந்த நேரங்களிலும் நம்முடன் எப்போதும் இருக்கிறார். சகல நாட்களிலும் நம்முடன் இருக்கிற கர்த்தராகிய தேவனும், குமாரனும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவும், கர்த்தரின் ஆவியானவரும் நம்முடன் இருக்கிறார்.

எதற்காக கர்த்தர் நம்முடன் இருக்கிறார்?

1. கர்த்தர் பயத்தை நீக்குவார்

"நீ உன் சத்துருக்களுக்கு எதிராக யுத்தஞ்செய்யப் புறப்பட்டு போகையில், குதிரைகளையும் இரதங்களையும், உன்னிலும் பெரிய கூட்டமாகிய ஜனங்களையும் கண்டால், அவர்களுக்குப் பயப்படாயாக; உன்னை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார்." உபாகமம் 20:1

பயம் நீங்கின வாழ்க்கை மிகவும் அவசியமாக இருக்கிறது. யோபுவின் வாழ்க்கையில் நான் அஞ்சினது எனக்கு நேரிட்டது என்று வேதனையுடன் கூறியுள்ளதைப் பார்க்கிறோம் (யோபு 3:25). அந்தப் பயத்தின் காரணமாக செல்வத்தை, பிள்ளைகளை, சரீர சுகத்தை, மனைவியின் நல் உறவை இழந்து தவித்த வேதனை அடைந்த நிலையைப் பார்க்கிறோம். வேதனை நீங்கி சுகமான வாழ்வு பெறுவதற்கு பதிலாக பயத்தினால் போராட்டங்கள் நிறைந்த வாழ்க்கையைப் பெறுகிறோம்.

ஒருமுறை ஜெபிக்க அழைத்து வந்த ஒரு வாலிபனின் வாழ்க்கையில் உண்டான பயத்தினால் திடீர் திடீரென மனதில் வித்தியாசமான எண்ணங்கள் அவனுக்குள் தோன்றுவதைப் பார்த்தேன். மேலான படிப்பு படித்த அவனது வாழ்க்கையில், சாலையில் நடைபெற்ற ஒரு விபத்தைக் கண்டபடியால், நிலைவரமான ஒரு ஆவியை இழந்து கலங்கினான். வீட்டிலுள்ள விலை உயர்ந்த பொருட்களை உடைத்து நொறுக்கினான். 1 யோவான்4:18 ல் பயமானது வேதனையுள்ளது என்று பார்க்கிறோம். பயமானது இரண்டாம்  மரணத்திற்கு நம்மைப் பங்கடையச் செய்கிறது, கர்த்தர் நம்மோடு இருக்கும்போது நம் பயம் நீங்கி, பூரண சமாதானமும் சந்தோஷமும் நிறைந்தவர்களாய் மாறுகிறோம்.

2. கர்த்தர் நம்முடன் இருக்கும்போது பெலப்படுத்துவார்

"நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம் பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத்தாங்குவேன்." ஏசாயா 41:10

ஒருமுறை ஒரு கூட்டத்தில் செய்தி கொடுக்க அடியேன் அழைக்கப் பட்டிருந்தேன். என்னுடன் என் மகனும் வந்திருந்தான். செய்தியைத் துவங்கி 10 நிமிடத்திலேயே என் பல்லில் ஏற்பட்ட வேதனையான வலி, என்னை செய்தி கொடுக்க இயலாதபடி தடையாக்கியது. அச்செய்தியின் தொடர்ச்சியை அந்நாளிலே என் மகன் தான் பேச வேண்டியதாயிற்று. ஆனால் செய்தி நேரத்தில் கர்த்தருடைய பிரசன்னத்தை உணர்ந்து, அவரின் பிரசன்னத்தால் நிறைந்த போது, என்னை பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே  எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பெலனுண்டு என்று பிலி.4:13 ல் உள்ளபடி என்னைப் பெலப்படுத்தினபடியால், அந்நாளில் ஆராதனைக்கு வந்த அத்தனை மக்களுக்கும் தனித்தனியே ஜெபிக்க கர்த்தர் பெலன் தந்தார்.

அன்பு சகோதரனே,  சகோதரியே, என் வீட்டில், என் அலுவலகத்தில் நான் செய்ய வேண்டிய காரியங்களைச் செய்ய முடியாதபடி பெலவீனமாய் இருக்கிறேனே என்று கலங்குகிற உன்னைப் பெலப்படுத்துவதற்கு விரும்புகிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நீ ஏற்றுக்கொண்டு, அவருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிவாயானால், உன்னோடே இருந்து அற்புதமான பெலத்தைக் கொடுத்து அதிசயமாய் உன்னை வழிநடத்துவார்.

3. உன்னை இரட்சிப்பதற்காகவும், தப்புவிப்பதற்காகவும் உன்னோடே இருக்கிறார்

"உன்னை இந்த ஜனத்துக்கு எதிரே அரணான வெண்கல அலங்கமாக்குவேன்; அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தம்பண்ணுவார்கள், ஆனாலும் உன்னை மேற்கொள்ளமாட்டார்கள்; உன்னை இரட்சிப்பதற்காகவும், உன்னைத் தப்புவிப்பதற்காகவும், நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்." எரேமியா 15:20

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சகல நாட்களிலும் உன்னுடனே இருக்கிறேன் என்று சொன்னவர், சத்துருவால் மேற்கொள்ள முடியாதபடி உன்னை மேன்மையான பெலமுள்ளவனாய் மாற்றி உன்னை இரட்சிப்பார். உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் ஆயுதங்கள், போட்டி பொறாமையின் நிமித்தம், உன் தொழில், உன் கையின் பிரயாசங்களுக்கு விரோதமாக மந்திரம் தந்திரங்களைச் செய்கிற மக்களின் துர்க்கிரியைகள், உன்னை மேற்கொள்ளாதிருக்க, உன்னை பெலசாலியாக மாற்றுகிறார். இன்று எதிரிகள் இல்லை என்று எண்ணுகிற நமக்கும், யாவருடனும் சமாதானமாய் இருக்கிறேனே என்று சொல்லுகிற மக்களுக்கும் விரோதமாக பொறாமையினாலும் பெருமையினாலும் செய்யக்கூடிய எந்தத் தீய காரியங்களுக்கும் நம்மை வீழ்த்திவிடாதிருக்க கர்த்தர் நம்முடன்  இருந்து, நம்மைத் தப்புவித்து இரட்சிக்கிறவராய் இருக்கிறார். அநீதி நிறைந்த உலக வாழ்க்கையில் ஒன்றும் இல்லாத நம்மேல் கண்வைத்து, கொல்ல வகை தேடுகிற மக்கள் ஏராளம் உண்டு. கர்த்தரோ அவனை இவன் கையில் விடுவதில்லை அவன் நியாயம் விசாரிக்கப்படுகையில் அவனை ஆக்கினைக்குள்ளாகத் தீர்ப்பதுமில்லை என்று சங்கீதம் 37:33ல்  சொன்ன வாக்கின்படி உன்னைக் கண்மணிபோல் காப்பதற்காக உன்னுடன் இருக்கிறார்.

என் வேலை ஸ்தலத்தில் என் மீது பொறாமை கொண்டு, மேலதிகாரிகளிடத்தில் பொய்யான காரியங்களைப்  பேசித்திரிகிற மக்கள், என் உள்ளம் உடையும்படியாக சஞ்சலப்படுத்துகிறார்களே என்று  கலங்குகிற, வெட்கப்படுகிற, தேவப்பிள்ளையே, கர்த்தர் உன்னுடன் இருந்து உன்னைத் தப்புவிக்கவும், உன்னை இரட்சிக்கவும் வல்லவராய் இருக்கிற படியினால் கர்த்தரை ஸ்தோத்தரி. என் இனத்தார் சொல்கிற, செய்கிற காரியங்களினால் நான் தடுமாறி விழ ஏதுவாய் இருக்கிறேன். என் துக்கம் எப்பொழுதும் என் முன்பாக இருக்கிறதே என்று கண்ணீர் சிந்தி கவலையுடன் கலங்குகிற தேவப்பிள்ளையே, நான் என்ன செய்வது என்று உள்ளத்தில் எண்ணி, போராட்டத்தோடு வாழ்கிற தேவப்பிள்ளையே, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உன்னுடன் இருந்து உனக்காக யுத்தம் பண்ணி, உன்னை இரட்சித்து, உன்னை எல்லாவிதமான நிந்தைக்கும், அநீதியின் குற்றச்சாட்டுகளுக்கும் தப்புவித்து காக்கிற உன்னத வல்லமையுடைய தேவனாக இருக்கிறார். அவர் தமது சொல்லிலும் செயலிலும் மாறுகிற தேவன் அல்ல.

4.உன்னை மிகவும் பெரியவனாக மாற்ற உன்னுடன் இருக்கிறார்

"தாவீதின் குமாரனாகிய சாலொமோன் தன் ராஜ்யத்திலே பலப்பட்டான்; அவனுடைய தேவனாகிய கர்த்தர் அவனுடனே இருந்து அவனை மிகவும் பெரியவனாக்கினார்." 2 நாளா. 1:1

உலகத்தின் முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் உன்னோடே கூட இருக்கிறேன் என்று சொன்ன இயேசு கிறிஸ்து, பயந்து கலங்கி இருந்த சீஷர்களைத் திடப்படுத்தினார். தான் செய்த ஊழியத்தின் காரியங்களை அவர்கள் மிகுந்த வல்லமையோடும், அற்புதங்களோடும் அடையாளங்களோடும், தான் உபதேசித்த வார்த்தைகளைத் தொடர்ந்து செய்யும்படியாக அவர்களை தேற்றினபோது உங்களோடு இருப்பேன்  என்று வாக்குக் கொடுத்து அவர்களைத் தேற்றினார். பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்பாக மகிமையின் ஆவியானவரால் அவர்கள் நிரப்பப்பட வேண்டும் என்று சீஷர்களை எருசலேமிலே காத்திருக்கச் சொன்னார். சீஷர்கள் அவ்வாறே காத்திருந்தார்கள். ஏறக்குறைய 120 பேர் பெந்தெகொஸ்தே நாளிலே ஒருமனப்பட்டு கூடினபோது, கர்த்தர் அக்கினியினாலே அவர்களை அபிஷேகித்தார். அதினிமித்தமாய் அவர்களுடைய வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டது. பரியாசம் பண்ணின மக்களை நோக்கி, பேதுரு பன்னொருவருங்கூட நின்று, தேவன் இயேசு கிறிஸ்துவை எழுப்பினார் என்பதற்கு நாங்கள் சாட்சிகளாய் இருக்கிறோம் என்று தைரியமாய் அறிவித்தார்கள். மேலும் ஆலயத்தின் வாசலில் இருந்து பிச்சைகேட்டுக் கொண்டிருந்த பிறவிச் சப்பாணியை, கர்த்தர் அருளிய ஆவியின் வல்லமையினால் பேதுருவும், யோவானும் எழும்பச் செய்தார்கள். ஆசாரியர்களும், தேவாலயத்து சேனைத் தலைவனும்,  சதுசேயரும், இயேசுவைப் பிரசங்கிக்கிறபடியினால் சினங்கொண்டு அவர்களைப் பிடித்து காவலில் வைத்தார்கள்.

மறுநாளிலே விடுதலையான சீஷர்களோ தைரியமாக கர்த்தரைக் குறித்துப் பேசினார்கள். எந்த வல்லமையினாலே, எந்த நாமத்தினாலே இதைச் செய்தீர்கள் என்று கூட்டம் கூடின ஐயாயிரம் பேர்கள் மத்தியில் படிப்பறிவு இல்லாத பேதுரு தைரியம் அடைந்தவனாக கர்த்தரின் வார்த்தைகளைக் கூறினான். பலவிதமான எதிர்ப்புகளின் மத்தியிலும், ஆவியானவர் அருளின பெலத்தினாலும் தைரியத்தினாலும் எங்கும் இயேசு கிறிஸ்துவைப் போதித்தார்கள். அநேக விதமான அற்புதங்களைச் செய்தார்கள். அநேகரில் இருந்த அசுத்த ஆவி மிகுந்த சத்தத்தோடு கூப்பிட்டு அவர்களைவிட்டுப் புறப்பட்டது. அநேக சப்பாணிகளும் திமிர்வாதக்காரரும் குணமாக்கப்பட்டார்கள். மாய வித்தைகளினாலே பெரிதான சக்தி இவன்தான் என்று தங்களை எண்ணச் செய்த மாயவித்தைக்காரரும் பேதுருவிடம் வந்தார்கள். உன் துர்க்குணத்தை விட்டு மனந்திரும்ப தேவனை நோக்கி வேண்டிக்கொள் என்று தைரியமாய் கூறினார்கள்.

ஜனங்கள் கர்த்தர்மேல் விசுவாசமுள்ளவரானார்கள். "பிணியாளிகளைப் படுக்கைகளின் மேலும் கட்டில்களின் மேலும் கிடத்தி, பேதுரு கடந்துபோகையில் அவனுடைய நிழலாகிலும் அவர்களில் சிலர்மேல் படும்படிக்கு, அவர்களை வெளியே வீதிகளில் கொண்டுவந்து வைத்தார்கள். அவர்கள் எல்லாரும் குணமாக்கப்பட்டார்கள்."(அப் 5:15) சிறைச்சாலையில் அடைக்கப்பட்டவர்கள் கர்த்தருடைய தூதனால் வெளியே கொண்டு வரப்பட்டு ஜீவ வார்த்தைகள் எல்லாவற்றையும் ஜனங்களுக்குச் சொல்லுங்கள் என்று சொன்ன விஷயத்தில், ஆசாரியனும் தேவாலயத்தைக் காக்கிற சேனைத் தலைவனும், பிரதான ஆசாரியரும் அவர்களைக் குறித்து கலக்கமடைந்தார்கள். இவ்விதமாய் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே சீஷர்கள் மிகவும் கனத்துக்குரிய பாத்திரங்களாய் மாறினார்கள்.

அன்று மோசே என்பவன் எகிப்து தேசத்து பார்வோனுடைய ஊழியக்காரரின் பார்வைக்கும், ஜனங்களின் பார்வைக்கும்  மிகவும் பெரியவனாய் இருந்ததுபோல (யாத் .11:3), சீஷர்களும் மிகவும் பெரியவர்களாக மாறினார்கள். ஆடுகளுக்குப் பின்னால் சென்ற தாவீதை கர்த்தர் பூமியிலிருக்கிற நாமத்திற்கு ஒத்த பெரிய நாமத்தை உனக்கு உண்டாக்கினேன் என்று 2 சாமு.7:9 ல் சொன்னதுபோல கர்த்தர் நம்முடன் இருந்து நம்மைப் பெரியவனாக மாற்றுகிறார்.

5. கர்த்தரின் வேலையை நடத்துவதற்காக அவர் நம்மோடு இருக்கிறார்

"...யோசுவா என்னும் பிரதான ஆசாரியனே, நீ திடன்கொள்; தேசத்தின் எல்லா ஜனங்களே, நீங்கள் திடன்கொள்ளுங்கள், வேலையை நடத்துங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் உங்களுடனே இருக்கிறேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்." ஆகாய் 2:4

கர்த்தர் நம்முடன் இருக்கும்போது, அவருடைய ஆவியானவர் தங்குகிற ஆலயமாய் நம்மை மாற்றுகிறார். பின்னிட்டுப் போன வாழ்க்கையின் நிமித்தமாய் கர்த்தரின் பிரசன்னத்தை இழந்து, விழுந்து போன மக்களாய் மாறி விடுகிறோம். ஆமோஸ் 9:12 ல் விழுந்து போன தாவீதின் கூடாரத்தை நான் திரும்ப எடுப்பித்து, அதின் திறப்புகளை அடைத்து, அதில் பழுதாய்ப் போனதைச் சீர்படுத்தி பூர்வ நாட்களில் இருந்தது போல் அதை ஸ்தாபிப்பேன் என்று சொன்ன கர்த்தர், தேவனுடைய ஆலயமாகிய உன்னையும் என்னையும் புதுப்பிக்கிறவராய் இருக்கிறார். எலியா இடிந்து போன பலிபீடத்தைச்  செப்பனிட்டு கர்த்தரிடம் வேண்டியபோது, கர்த்தரே தேவன் என்று ஜனங்கள் ஏற்றுக்கொள்ள வல்லமையாய்  செயல்பட்டதை நாம் அறிவோம், நீங்களே ஆலயம் என்று சொன்ன வார்த்தையின்படி நாம் தேவனுடைய ஆவியானவர் தங்குகிற பரிசுத்தமான பாத்திரமாக மாற, அநேக தேவ ஊழியர்களைக் கர்த்தர் ஏற்படுத்தி இருக்கிறார். இந்த ஊழியத்தின் பணியை நடத்துங்கள். நான் உங்களோடு இருக்கிறேன் என்று தேவ ஊழியர்களை ஊக்குவிக்கிற தேவனாக இருக்கிறார். 

II. கர்த்தர் நம்முடன் இருப்பதால் உண்டாகும் நன்மைகள்

1. குறைவுபடாத வாழ்க்கை

"... இந்தப் பெரிய வனாந்திர வழியாய் நீ நடந்து வருகிறதை அறிவார்; இந்த நாற்பது வருஷமும் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருந்தார்; உனக்கு ஒன்றும் குறைவுபடவில்லை..." உபாகமம்  2:7

மனிதன் பலவிதமான குறைவுடையவனாய் வாழ்ந்து கொண்டிருக்கிறான். ஞானத்தில், சுகத்தில், பெலத்தில், சமாதானத்தில், சந்தோஷத்தில், செல்வத்தில் குறைவுப்பட்டவனாகவும், குடும்ப வாழ்க்கையில் பிள்ளையில்லை என்ற குறைவினாலும், தனக்கென்று ஒரு வீடு வாசல் விடுதலையோடு ஆராதிக்க இடமில்லையே என்று குறைவோடு வாழ்ந்து கொண்டிருக்கிற மக்கள் ஏராளம். திருமண வீடுகளிலே ஆகாரத்தில் குறைவுகள் ஏற்படும்போது, அருகில் உள்ள உணவு விடுதிகளிலே ஆகாரத்தை வாங்கி சரிக்கட்ட முயற்சிப்பதை நாம் அறிவோம். கர்த்தர் அவரைத் தேடுகிற மக்களுக்கு குறைவில்லாத வாழ் வைத் தருகிறவராக இருக்கிறார். அவருக்குப் பயந்தவர்களுக்கோ குறைவில்லை என்பதை அறிவோம். குறைவில்லாத வாழ்க்கை வாழ முடியவில்லை என்று தவிக்கிற மக்கள் உண்டு. அவர்களின் வாழ்வில் சகல குறைகளையும், தம்முடைய ஐசுவரியத்தின் மகிமையினாலே அவர்களோடு இருந்து நிறைவாக்குகிறவராய் இருக்கிறார்.

2. அமைதல் உண்டாகும்

"...அவர் எழுந்து காற்றை அதட்டி, கடலைப்பார்த்து; இரையாதே  அமைதலாயிரு என்றார்:  அப்பொழுது காற்று நின்றுபோய், மிகுந்த அமைதல் உண்டாயிற்று." மாற்கு 4:39

அமைதலற்ற குடும்ப வாழ்க்கையிலும், சமுதாய வாழ்க்கையிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் வேதனையுடன் வாழ்கிற மக்கள் ஏராளம். நான் தோல்வி அடைந்து துக்கத்துடன் இருக்கிறேன் என்று கூறுகிற மக்கள் உண்டு. நான் ஏமாற்ற பட்டுவிட்டேன். என் வாழ்வில் என்ன இருக்கிறது. தற்கொலை தான் என்று ஏங்கி தவிக்கிற மக்கள் உண்டு. பிள்ளையின் திருமண காரியத்தினாலும், குடும்ப காரியத்தினாலும் அமைதலற்று இருக்கிற பெற்றோரின் கண்ணீரைப் பார்க்கிறோம். சர்வ வல்லமையும், சகல அதிகாரமும் உடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உன் வாழ்க்கையின் படகில் ஏறும்போது, அவர் எழுந்து காற்றையும், கடலையும் அதட்டி அமர்த்துகிறார், அமைதலாக்குகிறார். இந்த வல்லவர் இருக்கும்போது நம் வாழ்வில் என்றும் இல்லாத அமைதியும் சமாதானமும் உண்டாகும்.

ஆப்ரிக்கா  நாடுகளிலே அங்குள்ள ஜனங்களைப் பிடித்து, அமெரிக்க நாட்டிலே அடிமைகளாக விற்று அடிமைத்தன வியாபாரத்தை நடத்தின ஜான் நியூட்டன் என்பவர் இருந்தார். ஒருமுறை கடலிலே அடிமைகளைப் பிடித்து வரும்போது, அவனுடைய கப்பல் மூழ்கிவிடும் என்ற நிலையில் எனக்கு இரங்கும் கர்த்தாவே என்று கெஞ்சி மன்றாடினபோது, பெரிதான ஒரு அமைதியைக் கர்த்தர் ஏற்படுத்தினார். கர்த்தர் அவனோடு இருந்து, அவனோடு பேசி கொந்தளிப்பை அமர்த்தி, கிருபையை அருளி, அவன் வாழ்க்கையில் அமைதியைக் கொடுத்தார். கர்த்தருடைய நாமத்தை மகிமைப்படுத்துகிற ஊழியராகவும் மாற்றினார்.

3. உன் தோல்வியை ஜெயமாய் மாற்றுவார்.

"அந்தப்படியே, அவர்கள் செய்து, தங்கள் வலை கிழிந்து போக்கத்தக்க தாக மிகுதியான மீன்களைப் பிடித்தார்கள்." லூக்கா 5:6

பேதுருவின் படகில் ஏறினார் என்பதை லூக்கா 5:3 ல் பார்க்கிறோம். அந்தப் படகில் உட்கார்ந்து ஜனங்களுக்குப் போதகம் பண்ணினார். போதகம் பண்ணி முடிந்த பின்பு, சீமோனை நோக்கி, ஆழமாய் தள்ளி உன் வலையை போடு என்றார். இராமுழுவதும் முயற்சித்தும் ஒன்றும் அகப்படாத பேதுரு, தன்னுடன் தன படகில் இருந்த இயேசு கிறிஸ்துவின் வார்த்தையின்படி செய்தான். அவனின் தோல்வியானது வெற்றியாக மாறியது.

அன்பு சகோதரனே, சகோதரியே, உன் வாழ்க்கையானது தோல்வி மிகுந்து, துக்க நிலையில் நீ காணப்படுவாயானால், அன்பு நிறைந்த இயேசு கிறிஸ்துவை உன் வாழ்க்கைப் படகில் ஏற்றுக்கொள். உன் தோல்வி ஜெயமாய் மாற கர்த்தரின் ஆலோசனைகளின்படி செய். அற்புதம் நடைபெறுவதை காண்பாய்.

4. கர்த்தர் உன்னோடு இருக்கும்போது ஆசீர்வதிப்பார்.

"...நான் உன்னோடே கூட இருந்து, உன்னை ஆசீர்வதிப்பேன்." ஆதியாகமம் 26:3

கர்த்தர் சொன்ன இடத்திலே வாசம் பண்ணுவதற்கு ஈசாக்கு தன்னை ஒப்புக்கொடுத்த போது, அவன் அந்த தேசத்தில் விதை விதைத்தபோது, கர்த்தர் அவனை ஆசீர்வதித்ததினால் நூறு மடங்கு பலன் அடைந்தான். இந்த வார்த்தைகளை வாசிக்கும், தேவ பிள்ளைகளே, நீ ஆசீர்வாதமாய் இருப்பாய் என்று சொன்னவர் உன்னுடன் இருக்கும்போது, சகல காரியங்களிலும் சகல நாட்களிலும் நீயும் உன் சந்நிதியும், உன் சந்தா னமும் ஆசீர்வதிக்கப்படுவீர்கள்.

III. கர்த்தர் நம்மோடு இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்?

1. இயேசு கிறிஸ்துவை அழைக்க வேண்டும்.

"இயேசுவும் அவருடைய சீஷரும் அந்தக் கல்யாணத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள்." யோவான் 2:3

கானாவூர் திருமண வீட்டிலே இயேசு கிறிஸ்து அழைக்கப்பட்ட படியினால், அங்கு திராட்சரசம் குறைவுபட்டபோது இயேசு கிறிஸ்து ஆறு கற்சாடிகளில் தண்ணீர் நிரப்பச் செய்து அற்புதம் செய்தார். குறைகள் நீங்கியது. எல்லா சூழ்நிலைகளிலும் எப்போதும் இயேசு கிறிஸ்துவின் ஆலோசனைகளைப் பெற்று செயல்படுவோம்.

2. அவரை உண்மையாகத் தேடும்போது தங்க வருகிறார்.

"இயேசு அந்த இடத்தில் வந்தபோது, அண்ணாந்துபார்த்து, அவனைக் கண்டு: சகேயுவே, நீ சீக்கிரமாய் இறங்கிவா, இன்றைக்கு நான் உன் வீட்டிலே தங்கவேண்டும் என்றார்." லூக்கா 19:5

சகேயு, இயேசு எப்படிப்பட்டவரோ என்று பார்க்க ஆசையோடு வகை தேடினான். அவன் குள்ளனானபடியினால் ஜனக்கூட்டத்தில் அவரைக் காண முடியாமல் ஒரு காட்டத்தி மரத்தில் ஏறினான். அந்த இடத்தில் வந்தபோது, இயேசு அவனைக் கண்டு, அவனின் வாஞ்சையை அறிந்து, அவனை அழைத்து அவனோடு தங்கும்படி சென்றார்.

3. சத்தத்தைக் கேட்டு கதவைத் திறக்கும்போது

"இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம் பண்ணுவான். வெளி. 3:20

கர்த்தருடைய சத்தம் வல்லமையுடையது. அவருடைய மெல்லிய சத்தத்தைக் கேட்டு இதயக்கதவை திறப்போமானால் என்றும் நம்முடன் தங்கி நம்மை ஆசீர்வதிப்பார்.

கர்த்தர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக.

கிறிஸ்து இயேசுவின் பணியில்,

சகோ.சி.எபனேசர் பால்.