'…வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு.'

                                                                                                                                            எபேசியர்  6:12

  கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

                கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினால் உங்களை வாழ்த்துகிறேன்

இன்று அநேகரில் இந்த ஆவிக்குரிய போராட்டத்தினால் பாடுபடுகிறார்கள். சிலருடைய வாழ்வில் பின் மாற்றம் அடைகிறார்கள். சிலர் விழுந்து போகிறார்கள்,சிலர் ஆவியில் பெலனடைந்து அதிக உற்சாகம் அடைந்து அதிகமாககர்த்தருக்காக எழுந்து  பிரகாசிக்கிறார்கள். இவ்விதமான ஆவிக்குரிய போராட்டத்தினால் கர்த்தருடன் நெருங்கி வாழ வேண்டும் என்ற விருப்பம் மக்களில் பெருகுகிறது. இன்னும் சிலருடைய வாழ்வில் சாதாரண கிறிஸ்தவ வாழ்கை வாழ்ந்தால் போதும் என்று தவறான தீர்மானம் செய்கிறார்கள். ஒன்றை நாம் நன்கு அறிந்து கொள்ள வேண்டும்,'சுவிசேஷத்தை நான் பிரசங்கித்துவந்தும்,மேன்மைபாராட்ட எனக்கு இடமில்லை;அது என்மேல் விழுந்த கடமையாயிருக்கிறது; சுவிசேஷத்தை நான் பிரசங்கியதிருந்தால்,எனக்கு ஐயோ.' என்று 1கொரி.9:16ல் சொல்லியிருப்பதை மறவாமல் செயல்படுத்த வேண்டும். மனிதனுடைய வாழ்க்கையிலே வருகிற போராட்டத்தைமேற்கொள்ள வேண்டியவைகளைக் குறித்துஆராய்வோம்.

பிசாசின் போராட்டங்களை மேற்கொள்ள என்ன செய்ய வேண்டும்?

1. தேவனுக்குக் கீழ்ப்படிந்து பிசாசுக்கு எதிர்த்து நிற்க வேண்டும் 

'தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்.' யாக்கோபு 4:7

      தேவனுக்குக் கீழ்ப்படிதல் என்றால், அவருடைய வார்த்தையின்படி,ஆலோசையின்படி,வழி நடத்துதலின்படி நாம் முழுமையாய் செயல் பட வேண்டும்.

அ)கர்த்தரின் வார்த்தைக்குக் கீழ்ப்படிய வேண்டும்.

      கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதோடு மனந்திரும்பி வாழ்வதற்கு ஒப்புக் கொடுப்பதாகும். இயேசு கிறிஸ்து பூமியில் தம்முடைய பிரசங்கத்தைத் தொடங்கின போது,மனந்திரும்புங்கள் என்று பிரசங்கித்தார். மனந்திரும்புதல் ஒரு முக்கியமான நிகழ்ச்சியாக இருக்கிறது.கர்த்தருடைய பெலன் நமக்குள் பெருக வேண்டுமானால், பாவத்தைவிட்டு திரும்ப மன்னிக்கப்பட்ட வாழ்க்கையைப் பெற வேண்டும்.அநேகர் தங்கள் பாவங்களை அறியாதபடி,உணராதபடி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.இந்த பாவத்தோடு பிசாசை எதிர்த்து போராடமுடியாது.உன்னிலுள்ள பாவத்தைக் கொண்டு பிசானவன் பிரவேசித்து தன்னுடைய திட்டத்தை நிறைவேற்ற முயற்சிக்கிறான்.

இன்று அநேகர் என்னால் ஜெபிக்க முடியவில்லை,வேதம் வாசிக்க முடியவில்லை என்று கலங்குகிறார்கள். இது ஏன் என்று புரியாதபடி வாழ்கிறார்கள். நமக்குள் உள்ள பாவத்தினால் வருகிற கன நித்திரை ஆவியும், வழி தப்பி நடத்துகிற வேசித்தன ஆவியும் நமது வாழ்க்கையை கெடுக்க முற்படுகிறது. ஆனால் இயேசு கிறிஸ்து சிலுவையிலே நம் பாவங்களுக்காக, தம் சரீரத்தை பாடுபடுவதற்கு ஒப்புக்கொடுத்தார்.1பேதுரு 2:24ல் 'நாம்  பாவங்களுக்குச் செத்து,நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின் மேல் சுமந்தார்...' என பார்க்கிறோம். அந்த மேன்மையான மனந்திரும்புதல் வாழ்க்கையை அடையும்போது,நம் பாவங்களைச் சுமந்தவர், சத்துரு வெட்கப்படும்படியான ஒரு நலமான வாழ்க்கையை, மேலான வாழ்க்கையை உருவாக்கி விடுகிறார். இன்று அநேகர் ஏவாளைப் போல வஞ்சிக்கிற பிசாசின் சத்தத்துக்குச் செவிகொடுத்து தாறுமாறான வாழ்கை வாழ்கிறார்கள்.நாம் கீழ்ப்படியும் போது,பிசாசை எதிர்த்து நிற்பதற்கு தகுதி அடைந்து விடுகிறோம்.

             'அப்பொழுது தேசாந்திரிகளாய்த்திரிகிற மந்திரவாதிகளாகிய யூதரில் சிலர் பொல்லாத ஆவிகள் பிடித்திருந்தவர்கள்மேல் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தைச் சொல்லத் துணிந்து; பவுல் பிரசங்கிக்கிற இயேசுவின் பேரில் ஆணையிட்டு உங்களுக்குக் கட்டளையிடுகிறோம் என்றார்கள்.'அப்.19:13ன் படி சிலர் தங்களுடைய வாழ்க்கையிலேதங்கள் பாவங்கள் மன்னிக்கப்படாத நிலையில் இயேசுவின் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்த துணிந்து செயல்படுகிறார்கள். ஆனால் அவர்கள் பிசாசினாலே காயப்பட்டார்கள். தேவனுக்குக்  கீழ்ப்படிவது என்பது முற்றிலும் மனந்திரும்பின வாழ்க்கை ஆகும்.

ஆ) கர்த்தரின் ஆலோசனைக்கு செவிகொடுக்க வேண்டும்.

      இன்று அநேகர் ஆலோசனையில்லாதபடி தங்கள் வாழ்க்கையில் பிசாசு எதிர்ப்பதால் பாதிக்கப்படுகிறார்கள். நமக்கு ஆலோசனைக் கர்த்தராக இவ்வுலகில் வந்த இயேசு கிறிஸ்துவினுடைய ஆலோசனைகளை ஏற்று  கீழ்ப்படிகிறமக்களாய் மாற வேண்டும் .

என்னுடைய வாழ்க்கையிலே இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு பாவங்கள் மன்னிக்கப்பட்ட நிச்சயத்தைப் பெற்ற வாழ்க்கையில் இயேசு கிறிஸ்து எனக்குள் செய்தவைகளைச்சாட்சியாக அறிவித்தேன். அவ்வாறு ஒருநாளின் கூட்டத்தில் சாட்சி சொல்வதற்காக வேத புத்தகத்தோடு பஸ்சில் நின்று கொண்டு பிரயாணம் செய்தேன். நான் நின்ற இடத்திற்கு முன்னதாக ஒரு சீட்டில் இருந்த ஒரு சகோதரி நான்  பயப்படும்படியாக முறைத்துப் பார்த்தார்கள். அத்துடன் என்னைக் கெடுக்கவா வந்தீர் என்று சத்தமிட்டது.பஸ்சில் பிரயாணம் செய்த எல்லாரும் என்னைப் பார்த்தார்கள். அப்பொழுது கர்த்தருடைய ஆலோசனையின் வார்த்தைகள் எனக்குள் தொனித்தது என் நாமத்தினால் கடிந்து கொள் என்று. இந்த ஆலோசனையின் சத்தம் எனக்குள் கேட்டவுடனே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உன்னைக் கடிந்து கொள்கிறேன் என்று சொன்னேன். அந்தப் பெண் அதே இடத்தில் பிரயாணம் செய்த பஸ்சுக்குள் விழுந்தாள். அன்று தான் எனக்குள்ளாக பிசாசை எதிர்த்து நிற்பதற்கு தேவன் ஆலோசனை வார்த்தைகளை அருளுவதை அறிந்தேன்.

இதைப்போல வேறொரு நாளிலே ஜெபதொனியில் வெளி வந்த ஜெபத்தை வாசித்த ஒரு புறமதஸ்திரீ மிகுதியாக சத்தமிடவும் அலக்கழிக்கவும் ஆரம்பித்தார். அன்றும்ஒருவேத பகுதியை எடுத்து சத்தமாய் வாசிக்க ஆரம்பித்தவுடனே, அந்த மகளில் இருந்த தீய ஆவி அந்த மகளைத் தரையில் தள்ளி,உருள பிரளச் செய்து விலகி ஓடியது.ஆலோசனையை ஏற்று அதின்படி செய்யும் போது  நமக்கு விரோதமாய் எழுப்புகிற பிசாசானவன் ஓடிப் போவான்.

இ) கர்த்தர் நம்மை வழிநடத்தும்போது,பிசாசானவன் ஓடிப் போவான்.

ஒருமுறை ஒரு பகுதி ஊழியத்தின் போது, அந்த வீட்டார் தங்களுக்கு பலமுறை ஏற்பட்ட கார் விபத்துகளைக் கூறினார்கள்.அந்த வீட்டின் தலைவரோ அந்தப் பட்டணத்தின் முன்னாள் மேயராகவும் பனியாற்றி வந்தார். சமுதாய வாழ்வில் அநேக சீர்திருத்தங்களையும் நேர்மையான காரியங்களையும் செய்திருந்தார். அவர் வீட்டிலே வந்து ஜெபிக்க அழைத்தார்கள். எங்களுக்கு விரோதமாய் உள்ள சூனியங்களும் பொறாமையின் செயல்களும் அகன்று போக வேண்டும் என்று சொன்னார்கள். மூன்று வாலிபபிள்ளைகளுடன் வாழ்ந்து கொண்டிருந்த அவர் நான் இந்தச் திருச்சபையைச் சார்ந்தவன் என்றும் சொன்னார். தேவ ஆவியானவர் சங்.32:8ல் சொன்னது போல நீ நடக்க வேண்டிய வழியை  உனக்குக் காட்டுவேன் என்று சொன்னவர்,அந்த பெரிய வீட்டின் ஒரு குறிப்பிட்ட அறையில் என்னை ஜெபிக்க வேண்டும் என்று வழி  நடத்தினார். அந்தக் குடும்பத்தார் என்னை அழைத்துச் சென்றனர்.கர்த்தர் சொன்ன அறையில் இருந்து ஜெபிக்க ஆரம்பித்தேன். மேயராய் பணியாற்றியவர்,ஆலயத்தில் நாட்டப்பட்டவர், அந்த அறையிலே குறிப்பிட்ட இடத்திலே தரையை விட்டு ஒரு அடி உயரத்திலே குதித்துக் கொண்டே இருந்தார். என்னுடன் வந்த போதகர் ஆச்சரியத்தோடு பார்த்தார்கள். ஏறத்தாழ ஒரு மணி நேரம் சென்ற பின்,அவருக்குள் இருந்த ஆவி அவரைக் கீழே தள்ளி வெளியேறியது. கர்த்தருடைய ஆவியானவர் தெளிந்த புத்தியடைந்த  அவரைப் பார்த்து, அந்த இடத்திலே என்ன புதைத்தீர்கள் என்று கேட்க வழி நடத்தினார். அவர் உடனே இந்த இடத்தில் தான் ஒரு அடி  ஆழத்தில் ஒரு மண்சட்டியில் தனக்கு உதவி செய்கிறவர்கள் மந்திரித்து வந்து கொடுத்த பொருட்களை புதைத்திருக்கிறேன் என்று சொன்னார். அன்று கர்த்தருடைய ஆவியினால் வழி நடத்தப்பட்டபடியினால் பிசாசு அந்த வீட்டாரை விட்டு விலகி நீங்கிற்று.

இன்று நாம் முழுமையாய் தேவனுக்குக் கீழ்ப்படிவோமாக. அப்பொழுது பிசாசை எதிர்த்து நிற்க திராணியுள்ளவர்களாய் மாறுவதையும் அவன் ஓடிப்போவதையும் காண முடியும்.

2 .தேவனுடைய சித்தத்தை நிறைவேற்ற வேண்டும்

"எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரம் செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக் குறித்துத் தேவனுடைய சித்தமாயிருக்கிறது."1 தெசலோனிக்கேயர் 5:18.

        நாம் எல்லாவற்றிலும் ஸ்தோத்திரம் செய்வது தேவ சித்தமாயிருக்கிறது. ஸ்தோத்திரமானது தேவன் விரும்புகிற எதிர்பார்க்கிற ஒரு காரியம்.உலகத்தார் உதவி செய்யும்போது இன்முகத்தோடு பரிசு பொருட்களோடு நன்றி என்று உற்சாகமாய் சொல்லுகிறோம். ஆனால்  தேவன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலமாய் நம் வாழ்வில் ஒவ்வொரு நாளும் நமக்குச் செய்து கொண்டிருக்கிற நன்மைகளை, ஆசீர்வாதங்களை நினையாதிருக்கிறோம்.ஸ்தோத்திரங்களைச் செலுத்தும்போது தாவீது மிக ஆசீர்வாதம் அடைந்த சாட்சியை சங்கீதம் 103ல் எழுதியிருப்பதைப் பார்க்கிறோம். " என் ஆத்துமாவே,கர்த்தரை ஸ்தோத்தரி;என் முழு உள்ளமே,அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்தரி;என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்தரி; அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதேஎன்று கூறிவிட்டு,சங்கீதம்103:3-ல் 'அவர் உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து,என்று குறிப்பிடுகிறார். அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்திருந்த நம் வாழ்க்கையிலே ஸ்தோத்திரங்கள் நம்மை உயிர்ப்பிக்கிறது.அத்துடன் நமக்குள் ஏற்பட்டிருந்த நோய்களை குணமாக்குகிறார் என்று தெளிவுபடுத்தியிருக்கிறார். பாவங்களினாலும் அக்கிரமங்களினாலும் நமக்குள் பலநோய்கள்,பல வேதனைகள், பிசாசின் போராட்டங்கள் பெருகி விடுகிறது.தேவன் விரும்புகிற ஸ்தோத்திரத்தை ஏறெடுக்கும்போது, நம் அக்கிரமங்களை சிலுவையிலே சுமந்து தீர்த்த இயேசு கிறிஸ்து அவைகளை மன்னிக்கிறார். நம் பாவங்களை நீக்குவதற்காக சிலுவையில் சிந்தின இரத்தத்தினால் நம்மைச் சுத்திகரித்து புதிய வாழ்க்கையை உருவாக்குகிறார். நம் நோய்களைச் சுமந்தவர், சிலுவையிலே நம் பெலவீனங்களை ஏற்றவர், அவருடைய தழும்புகளினால் குணமாக்கி மிகுதியாய் நம்மை ஆசீர்வதிக்கிறார்.

ஒருமுறை சென்னையில் இருந்து நான் வசித்து வந்த திருச்சிக்கு பஸ்சில் பிரயாணம் செய்ய ஆரம்பித்தேன். அந்நாட்களில் சொந்தமான கார் இல்லாத நாட்கள். பஸ்சில் பயணம் ஆரம்பித்த நேரத்தில் என் வயிற்றில் இனம் தெரியாத வலியும் வேதனையும் பெருகி விட்டது. உள்ளத்தின் ஆழத்தில் பஸ்சை நிறுத்தி என் உடைமைகளை எடுத்துக் கொண்டு இறங்கி விடலாம். இந்த வேதனையோடு பயணம் செய்ய இயலாது என்ற எண்ணம் தோன்றியது. எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரம் செலுத்த வேண்டும் என்ற வசனத்தை நினைவுகொண்டு ஸ்தோத்திரிக்க ஆரம்பித்தேன். கொஞ்சம் கொஞ்சமாக  என்வயிற்றின் வேதனைகள் குறைந்து நீங்கியது. எஞ்சிய பயண நேரத்தில் நன்றாய் திருச்சி வந்தடைய  முடிந்தது. ஸ்தோத்திரத்தினால் அக்கிரமம் மன்னிக்கப்படுவதோடு,நோய்கள் குணமாகிறது. இந்த ஸ்தோத்திரத்தினாலே உன் பிராணனை அழிவுக்கு மீட்கிறார். பிசாசின் தந்திரங்களில் ஓன்றுநம்மை ஆழிக்கவேண்டும்.அந்த தந்திரங்கள் அழிந்து போராட்டத்திலிருந்து காக்கப்பட தேவனுடைய சித்தமாகிய ஸ்தோத்திரத்தை ஏறெடுக்க வேண்டும்.

           ஒருமுறை மாத்திரம் ஸ்தோத்திரம் சொன்னால் போதாதோ என்றுநினைத்த என் வாழ்க்கையிலே அழிந்து போகவேண்டிய வாழ்வை மீட்ட அன்பின் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை அதிகமாய் ஸ்தோத்திரிக்க ஆரம்பித்தேன்.எனக்குள் தோன்றின தீய ஆவியினால் ஏற்பட்ட பயம் மரண பயமாக மாறி மிகுந்த வேதனையோடு வாழ்ந்த காலக்கட்டத்தில் நமக்காக தம் ஜீவனைக் கல்வாரியில் கொடுத்த இயேசுகிறிஸ்துவை  நினைக்கவும் ஸ்தோத்திரிக்கவும் ஆரம்பித்த போது,அவரது கிருபை வெளிப்பட ஆரம்பித்தது. அதனால் நிர்முலமாகாது காக்கப்பட்டேன், மீட்கப்பட்டேன். அத்துடன்அவருடைய நன்மையினால் வாயைத் திருப்தியாக்குகிறார்.அவருடைய நன்மையானது அளவற்றது. ''நசரேயனாகிய இயேசுவைத் தேவன் பரிசுத்த ஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம் பண்ணினார்; தேவன் அவருடனேகூட இருந்தபடியினாலே அவர் நன்மைசெய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார்.'' அப்.10:38ன்  படி பிசாசின் பிடியில் சிக்கி வேதனை அடைந்த மக்களை குணமாக்கி நன்மை செய்கிறவராய்ச் சுற்றித் திரிந்த இயேசு கிறிஸ்து, அவரை நம்புகிற மக்களுக்கு விரோதமாய் செய்யப்படுகிற சூனியங்களிருந்து, ''உமக்குப் பயந்தவர்களுக்கும்,மனுபுத்திரருக்கு முன்பாக உம்மை நம்புகிறவர்களுக்கும் நீர் உண்டு பண்ணி வைத்திருக்கிற  உம்முடைய நன்மை எவ்வளவு பெரிதாயிருக்கிறது ! மனுஷருடைய அகங்காரத்துக்கு அவர்களை உமது சமூகத்தின் மறைவிலே மறைத்து,நாவுகளின் சண்டைக்கு அவர்களை விலக்கி, உமது கூடாரத்திலே ஒளித்து வைத்துக் காப்பாற்றுகிறீர். ''சங்கீதம்31:19,20ன் படி சூனியங்களிருந்து தம்முடைய ஆலயக் கூடாரத்திலே ஒளித்து வைத்துக் காப்பாற்றி ஆசீர்வதிக்கிறார். அவரிடம் வந்த நமக்கு ''அவர்கள் வந்து சீயோனின் உச்சியிலே கெம்பீரித்து, கர்த்தர்அருளும் கோதுமை, திராட்சைரசம், எண்ணெய், ஆட்டுக்குட்டிகள், கன்றுக்குட்டிகள் என்பவைகளாகிய இந்த நன்மைகளுக்காக ஓடிவருவார்கள்; அவர்களுடைய ஆத்துமா நீர்ப்பாய்ச்சலான தோட்டம் போலிருக்கும்; அவர்கள் இனித் தொய்ந்து போவதில்லை.'' எரேமியா31:12ன் படி ஆவிக்குரிய ஆசீர்வாதங்களையும்,இம்மைக்குரிய நன்மைகளையும் அருளிச் செய்து வழி நடத்துகிற அன்பின்  தேவனாயிருக்கிறார். சங்கீதம் 65:4ன் படி உம்முடைய பரிசுத்த ஆலயமாகிய உமது வீட்டின் நன்மையால் திருப்தியாக்குகிறார். அத்துடன் கழுகுக்கு சமானமாய் உன் வயது திரும்ப வாலவயதுபோலாகிறது.நாம்  ஸ்தோத்திரங்களை ஏறெடுக்கும் போது இதைப் போல பலவிதமான நன்மைகளினால் நிறைப்பதோடு  நமக்கு விரோதமாய் வருகிற சத்துரு நம்மைத் தொடாதபடி நம்மைக் காக்கிற தேவனாயிருக்கிறார்.

3. கர்த்தர் ஏற்படுத்தின நோக்கத்தை நிறைவேற்ற வேண்டும்.

''இந்த ஜனத்தை எனக்கென்று ஏற்படுத்தினேன்;  இவர்கள் என் துதியைச் சொல்லிவருவார்கள்.'' ஏசாயா 43:21.

தேவன் விரும்புகிற துதிகளை நாம் மிகுதியாய்ச் செலுத்த வேண்டும். நம் தேவனைத் துதிக்கும் போதெல்லாம் அவருடைய பிரசன்னம் நம் மத்தியில் கடந்து வருகிறது.சங்கீதம் 22:3 ல் 'இஸ்ரவேலின் துதிகளுக்குள் வாசமாயிருக்கிற தேவரீர் பரிசுத்தர்' என்று சொல்லப் பட்டிருக்கிறது. இஸ்ரவேல் என்று சொன்னாலே வாழ்க்கையிலே கர்த்தருக்கென்று மீட்கப்பட்ட மனிதன். 'இப்போதும் யாக்கோபே, உன்னை சிருஷ்டித்தவரும், இஸ்ரவேலே, உன்னை உருவாக்கினவருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவதுபயப்படாதே; உன்னை மீட்டுக்கொண்டேன்; உன்னைப் பேர்சொல்லி அழைத்தேன். நீ என்னுடையவன்' ஏசாயா 43:1 ன் படி யாக்கோபாக சிருஷ்டிக்கப்பட்டவன் ஜென்ம சுபாவங்களை உடையவனாக இருந்தான். அவனிடத்தில் சகோதர அன்பில்லை. தன் சகோதரன் பசியாய், வேதனையாய் இருந்தபோது, அவனுக்கு ஆகாரம் கொடுக்க மனதில்லாதிருந்த இந்த யாக்கோபு அவனுடைய சேஷ்டபுத்திரபாகத்தை வாங்கிக்கொண்டுதான் அந்த கூழைக் கொடுத்தான். அத்துடன் கண் பார்வையிழந்த ஈசாக்கிடம் சென்றுமூத்த மகனை ஆசீர்வதிக்க விரும்பிய ஈசாக்கிடம் சென்று ஏசா என்று பொய் சொல்லி ஏமாற்றியவன். ஆனால் அவனுடைய வாழ்க்கையிலே 20 ஆண்டுகள் கழித்து தன் தகப்பனுடைய ஊருக்கு திரும்பினபோது, தன் வாழ்க்கையிலே சகோதரனை ஏமாற்றின செயலை நினைத்துப் பயந்தான். அந்நாளிலே தனித்து விடப்பட்டபோது, தேவ தூதனோடு போராடினான். 'அப்பொழுது அவர்;உன் பேர் இனி யாக்கோபு என்னப்படாமல் இஸ்ரவேல் எனப்படும்; தேவனோடும், மனிதரோடும் போராடி மேற்கொண்டாயே என்றார்.' ஆதியாகமம்32:28 ன் படி தேவனோடு போராடிதன் வாழ்க்கையில் வெற்றி பெற்ற ஒரு மனிதன்.ஆகவே தேவன் அவனுக்கு இஸ்ரவேல் என்று பெயரிட்டு அவனை அழைத்தார். நாமும் கூட யாக்கோபைப்போல, தேவ சமூகத்தில் போராடி ஜெபிக்கிற மக்களாய் மாற வேண்டும். இந்த மாற்றத்தைப் பெற்ற இஸ்ரவேல் தேவனுக்குப் பிரியமானவனாய் மாறினான். தேவன் அவனைத் தம்முடைய ஜனமாக தெரிந்து கொண்டார். 'இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே கர்த்தருக்குப் பிரியம்' என்று ஆவியானவரைக் கொண்டு தீர்க்கதரிசனம் தீர்க்கதரிசி மூலமாக உரைத்தார். எந்த மனிதன் இந்த யாக்கோபைப் போல போராடி ஜெபித்து இஸ்ரவேலாய் மாறுகிறானோ, அவனது துதியில் தேவ பிரசன்னம் இறங்கி வருகிறது. இன்றைக்கு தேவனுடைய நாமத்தைத் துதிக்கிற துதி எப்போதும் என் வாயிலிருக்கும் என்ற தாவீதைப்போல துதிக்கிற மக்ககளாய் மாறும்போது தேவபிரசன்னம் இறங்குகிறபடியால், சத்துருவாகிய பிசாசானவன் விலகி ஓடி விடுகிறான்.

இன்றைக்கு துதியினால் நிறைந்த மக்களாய் மாறுவோமாக. தேவனுக்குப் பிரியமான துதியை ஏறெடுக்கும்போது நமக்கு விரோதமாய் எழுப்புகிற சத்துரு நிர்மூலமாக்கப்படுவான். 'அவர்கள் பாடித் துதிசெய்யத் தொடங்கினபோது, யூதாவுக்கு விரோதமாய் வந்து பதிவிருந்த அம்மோன் புத்திரரையும், மோவாபியரையும், சேயீர் மலைத் தேசத்தாரையும், ஒருவருக்கு விரோதமாய் ஒருவரைக் கர்த்தர் எழும்பப் பண்ணினதினால் அவர்கள் வெட்டுண்டு விழுந்தார்கள்.' 2 நாளா.20:22 ன்படி பாடி துதி செய்ய தொடங்கினதுபோல, துதியானது சத்துருக்களின் தாக்குதலை முறிக்கக் கூடியது. பவுலும் சீலாவும் நடுராத்திரிலே, தேவனைத் துதித்தபோது, தேவனுடைய வல்லமை இறங்கி, சிறைச்சாலையின் அஸ்திபாரங்களை அதமாக்கி கட்டுகளை அவிழ்த்து வாசல்களைத் திறக்கச் செய்து, இன்றைக்கு துதியினால் உண்டான அதே வல்லமை இன்னம் பெருகி சத்ருவினுடைய கட்டுகளை எல்லாம் அவிழ்த்து நம்முடைய ஆசீர்வாதமான வாழ்விக்குரிய வழியை, கதவுகளைத் திறக்க செய்கிறது.

 

 

இன்று அநேகரின் வாழ்க்கையிலே பலவிதமான தடைகள், குறைகள், மனப்போரட்டங்கள் நிறைந்திருக்கிறது.துதியினால் உண்டாகிற  தேவப் பிரசன்னம் தடைசெய்கிற பல காரியங்களை முறித்து, திருமணம்/வேலை இல்லாத பல காரியங்களில் வாசலைத் திறந்தும், விரும்பிய வீடு வாசல்களை ஏற்படுத்தியும் நம்மை ஆசீர்வதிக்கிறது. ஆகவே துதியினால் நிறைந்த உள்ளதோடு நாம் வாழும்போது பிசாசானவன் விலகி ஓடிப் போவான். அவன் கிரியைகள் அழியும்.

4. சாட்சியுள்ள வாழ்க்கை வாழ வேண்டும்

"கர்த்தர் உன் ஆக்கினைகளை அகற்றி, உன் சத்ருக்களை விளக்கினார்..." செப்பனியா 3:15

கிறிஸ்துவுக்குள்ளாக நாம் சாட்சியுள்ள வாழ்க்கை வாழ வேண்டும். 'இஸ்ரவேலில் மீதியானவர்கள் அநியாயஞ்செய்வதில்லை; அவர்கள் பொய் பேசுவதுமில்லை; வஞ்சக நாவு அவர்கள் வாயில் கண்டுபிடிக்கப்படுவது மில்லை; அவர்கள் தங்களைப் பயப்படுத்துவாரில்லாமல் புசித்துப் படுத்துக்கொள்வார்கள்.' (செப்3:13). இவ்விதமான சாட்சியாக பிரியமாய் வாழ்கிற மக்களுடைய வாழ்க்கையில் கர்த்தர் அவர்களின் ஆக்கினைகளை அகற்றி, சத்துருக்களை விலக்கி விடுவார்.

இன்று அநேகரின் வாழ்க்கையில் உண்மையில்லாது பொய்யும், பொய்க்கு பிதாவுமாயிருக்கிற பிசாசின் பிள்ளையாய் வாழ்கிறார்கள். எப்படி பிறர் சொத்துக்களை உடைமைகளை வஞ்சகமாக தங்களுக்கு உரிமையாக்கிக் கொள்ளலாம் என்கிற உள்ளதோடு வாழ்வதை நாம் அனுதினமும் பலவித செய்திகளிலே அறிகிறோம். இதனால் அநேகர் தந்திரமாய் சுதந்தரித்த சொத்துக்களை, செல்வங்களை அனுபவிக்க முடியாது வேதனை அடைகிறார்கள், பெலவீனமடைகிறார்கள்.மரித்தும் போகிறார்கள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மேல் நம்பிக்கைக் கொண்டிருக்கிற நாம் பொய்யை வெறுத்து வஞ்சகமான வார்த்தைகளுக்கு நம்மைக் காத்துக்கொள்ளும்போது, கர்த்தர் நம் வாழ்வில் நமக்கு விரோதமாய்ச் செயல்படுகிற சத்துருக்களையும், அவன் செயல்களையும் சங்கரித்து சமாதானத்தோடு, சுகத்தோடு தீங்கைக் காணாத வாழ்வைப் பெற்றுக்கொள்கிறோம். அக்கினி மதிலாய் இருப்பேன் என்று சொன்ன தேவன் நம் நடுவில் அக்கினி மதிலாயிருந்து மகிமைப்படுவார். சமாதானமும் சந்தோஷமும் நம் எல்லையில் பெருகிவிடும்.

5. ஊழியத்தைச் செய்ய வேண்டும்

"இதோ, சமாதானத்தைக் கூறுகிற சுவிசேஷகனுடைய கால்கள் மலைகளின் மேல் வருகிறது; யூதாவே, உன் பண்டிகைகளை ஆசரி; உன் பொருத்தனைகளைச் செலுத்து; துஷ்டன் இனி உன் வழியாய்க் கடந்து வருவதில்லை, அவன் முழுவதும் சங்கரிக்கப்பட்டான்." நாகூம் 1:15

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷகராக நாம் வாழும்போது, உழைக்கும்போது துஷ்டன் நம் எல்லைகளில் கடந்து வருவதில்லை. அவன் முற்றிலும் இயேசு கிறிஸ்துவின் வல்லமையினாலும், சிலுவைப் பாடுகளினாலும் சங்கரிக்கப்பட்டு விட்டான். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஞானஸ்தானம் பெற்று  பரிசுத்த ஆவியினால் நிறைந்து தேவ திட்டத்தின்படி ராஜ்யத்தின் சுவிசேஷத்தைத் தொடங்கும் முன் பிசாசானவன் அவரை மூன்று விதமான சோதனைகளினாலே சோதித்தான். முதலாவது சரீரத்தினுடைய ஆசாபாசங்களை நிறைவேற்றுகிற சோதனை. மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும் ஜீவனத்தின் பெருமையும் உலகத்திலுண்டான வைகள். உலகத்தின் அதிபதியாகிய பிசாசானவன் ஏவாளை வஞ்சித்து பழத்தைப் புசிக்க தூண்டினது போல தன்  தந்திரமான ஆலோசனையை கொடுக்க இயேசுவிடம் வந்தான்.ஆனால் இயேசுவோ தேவனுடைய வார்த்தையின் படி அதை மேற்கொண்டார்.

  2-வது சோதனையாக தேவனுடைய ஆலயத்தின்மேல் நிறுத்தி, இயேசுவே தேவனுடைய குமாரன் என்பதை மறுதலிக்கும்படியாக. தேவனுடைய வசனத்தை கொண்டே பெருமையைத் தூண்டினான்.இயேசு கிறிஸ்துவோ ஆவியின் பட்டயமாகிய தேவனுடைய வசனத்தைக் கொண்டு சோதனையை ஜெயித்தார்.

       3-வது சோதனையாக பூமியின் சகல காரியங்களையும் காண்பித்து அது தனக்குரியது என்றும்,தன்னை சாஷ்டாங்கமாய் விழுந்து பணிந்து கொண்டால், அதைத் தருவேன் என்று பொய்யாக சொந்தம் கொண்டாடின பிசாசின் வார்த்தைகளை, பூமியும் அதின் நிறைவும் கார்தருடையது என்று சொல்லி,அப்பாலே போ சாத்தானே, உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்து கொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயா என்று எழுதியிருக்கிறதே என்று அவனின் தந்திரமான சோதனையை ஜெயித்தார்.சில காலம் இயேசுவை விட்டு சென்ற சாத்தான் மீண்டுமாய் இயேசு கிறிஸ்துவிடம் வந்ததை யோவான் 14ம் அதிகாரத்தில் பார்க்க முடிகிறது. ''இந்த உலகத்தின் அதிபதி வருகிறான், அவனுக்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை'' என்று அவன் ஒன்றும் செய்ய இயலாதபடி அவருடைய வாழ்க்கை அமைந்திருந்தது

அத்துடன் அவன் நமக்குள்ளாக ஒன்றும் செய்ய இயலாதபடி அவனது 'நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்து, அதை நடுவிலிராதபடிக்கு எடுத்து, சிலுவையின்மேல் ஆணியடித்து; துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான  கோலமாக்கி,அவைகளின்மேல் சிலுவையிலே  வெற்றி சிறந்தார். கொலோ.2:14,15.

          ஆகவே மனந்திரும்பி ஸ்தோத்திரங்களையும் துதிகளையும் ஏறெடுத்து சாட்சியுள்ள வாழ்க்கையுடன் அவருக்காக உழைக்கும் போது  சத்துரு உங்களை விட்டு ஓடிப்போவான், பிசாசின் போராட்டங்களை மேற்கொள்ளலாம்.

கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.

கிறிஸ்து இயேசுவின் பணியில்,

சகோ. சி. எபனேசர் பால் .