'…இனி பாவஞ்செய்யாதே''

                                                                                                          யோவான்8:1

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

         கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் உங்களை வாழ்த்துகிறேன்.

                 இன்று மனிதன் சுயநீதியை நம்பி தேவனை அசட்டை செய்து துணிகரமாக பாவங்களைச் செய்து வருகிறான். எல்லாரும் செய்ததை நானும் செய்கிறேன்,இது பாவமா என்று வேத வார்த்தைகளை உணராத உள்ளம் உடையவர்கள் கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். சிலருடைய பாவங்கள் அறியாமல் செய்யப்படுகிறது. சிலர் சத்தியத்தை அறியாதபடியால்,பாரம்பரிய வழிபாடுகளுக்கு அடிமையாயிருக்கிறார்கள். அன்று வேதத்தில் சொல்லப்பட்ட,செய்யப்பட்ட காரியங்களை,சத்தியத்தை அறியாது தொடர்ந்து விக்கிரகாராதனை செய்வதுண்டு.

         அருமையான சகோதரனே,சகோதரியே, இன்று பாவத்தை உணர்ந்து உண்மையாய் மனஸ்தாபப்பட்டு மனந்திரும்பும்போது, பாவ  ஆக்கினைக்கு வைக்கப்பட்டிருக்கிற தண்டனைக்கு நாம் தப்பித்துகொள்ள முடியும்.இதைஅறியாதபடியால் பாவங்களைச் செய்து வருகிறோம். உளையான பாவ சேற்றிலே உழன்று கொண்டிருக்கிற மக்களை எப்படியாவது,அதிலிருந்து இரட்சிக்க வேண்டும், மீட்டெடுக்க வேண்டும், என்று இயேசு கிறிஸ்து இந்த உலகத்திற்கு வந்தார். உலகத்தில் நம்மைப்போல் பிறந்து வளர்ந்தவர்,வாழ்ந்தவர், பாவம் செய்யாத ஒரு மாதிரியின் வாழ்வை ஏற்படுத்தியிருக்கிறார். இந்த உலக இரட்சகராகிய இயேசு கிறிஸ்து பாவ ஆக்கினையின் தண்டனைக்கு நம்மைத் தப்புவிக்க அவரே ஜீவபலியானார். இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவ மன்னிப்பு இல்லை என்ற மோசேயின் பிரமாணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் படியாக அவர்தாமே நமக்காக பாவமில்லாத தம்முடைய சரீரத்தை பலியாக அர்ப்பணித்து, இனி எந்த பலியும் பாவத்திற்காக செய்ய தேவை இல்லை என்று முடிவு கட்டினதை நாம்அறிவோம்.

           பாவஞ்செய்கிறவன் எவனும் பாவத்துக்கு அடிமையா யிருக்கிறான். (யோவான் 8:34) பலவிதமான பாவங்களைச் செய்து இன்று நாம் பாவத்திற்கு அடிமையாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம். பாவம் என்றால் என்ன என்று முதலாவது நன்கு அறிந்து கொள்ளவேண்டும்.

பாவம் என்றால் என்ன ?

1.மீறுதலினால் வரும் பாவம்

  ''பாவஞ்செய்கிற எவனும் நியாயப்பிரமாணத்தை மீறுகிறான்; நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம்.''1யோவான் 3:4    

        தேவனுடையகற்பனைகளை, நியமனங்களை, வார்த்தைகளை, ஆலோசனைகளை அசட்டை செய்து நம் சுய விருப்பத்தின்படிசெய்கிறது மீறுதலின் பாவமாகும். நம்முடைய தேவன் ஆதாமையும் ஏவாளையும் தோட்டத்தின் நடுவில் இருக்கிற மரத்தின் கனியைத் தொடவேண்டாம் புசிக்க வேண்டாம் என்று கூறியிருந்தார். பழம் பார்ப்பதற்கு நலமானது, அதைச் சாப்பிட்டால் நீங்கள் சாவதில்லை என்ற பிசாசின் வார்த்தைக்கு முக்கியம் கொடுத்து கண்களுக்கு இன்பமான அந்தப் பழத்தைப்பறித்து  புசித்தார்கள். இதினால் அவர்கள் தேவனுடைய வார்த்தையை மீறின காரியத்தால் பாவம் செய்தார்கள். இன்று அநேகர் பொய்யனும் பொய்க்கு பிதாவாகிய பிசாசின் வார்த்தைகளுக்கு,சத்தத்திற்குச் செவிகொடுத்து பாவங்களைச் செய்கிறார்கள். ஆகவே முதலாவது தேவனுடைய வார்த்தைகளை நியமனங்களை, கட்டளைகளை மீறுவதினால் பாவம் செய்கிறோம்.

2.இச்சையினால் பாவம்

  ''பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப்பிறப்பிக்கும்.'' யாக்கோபு 1:15

        இன்று மாம்சத்தின் இச்சைகளுக்கும்,பெருமைக்கும் இடம் கொடுத்து துணிகரமான பாவத்தை செய்கிறதைப் பார்க்கிறோம். யுத்தத்திற்குச் செல்லாத தாவீது ஸ்நானம் பண்ணுகிற பெண்ணைப் பார்த்து இச்சித்து தன் அதிகாரத்தினாலும், தனக்குப் பணிபுரிந்த மக்களின் துணையாலும் அந்தப் பெண்ணை அழைத்துவரச் செய்து தன் மாம்சத்தின் இச்சையை நிறைவேற்றினான். மாற்றானின் மனைவி என்பதை உணராது, துணிகரமான பாவத்தைச் செய்தான்.

       இன்று அநேகர் கண்களுக்குஇச்சையானபாவங்களை பார்ப்பதிலே ஆர்வம் கொண்டு பலமணிநேரம் போனில் பார்த்துக் கொண்டிருப்பதை அறிவோம். மனிதனுடைய கண்களில் காண்கிற காட்சிகள் மனதில் பதிவதை அறியாது இதினால் அநேகர் இளவயதிலேயே தவறான பாவ பழக்கத்திற்கு, இச்சைகளுக்கு அடிமையாகிவிடுகிறார்கள்.

        ஒருமுறை ஒரு குடும்பத்தார் என்னை ஜெபிக்க அழைத்தார்கள். தங்களின் 13 வயது இளைய மகள் ஒரு குழந்தையைப் பெற்று விட்டாள். அந்தக் குடும்பத்தில் கணவனுக்கும் மனைவிக்கும் மிகுந்த சண்டையும் வருத்தமும் ஏற்பட்டது. ஏன் இந்தவேதனையான நிலை வந்தது என்று ஆராய்ந்த போது, அந்த மகள் பல தவறான காரியங்களை போனில்  கண்டதினால், தன் பள்ளியில் படிக்கும் மாணவனுடன் உறவு கொண்டு பிள்ளைப் பெற்றுக் கொண்டதை அறிந்து கொள்ள முடிந்ததாம். இன்று பல காரணங்களினால் போன் லேப்டாப், கம்ப்யூட்டர்-ஐ  பயன்படுத்த வேண்டிய நிலைமை உருவாகி உள்ளது. இதை முறையான காரியங்களுக்கு மட்டும் பயன்படுத்தாதபடி, தவறான, தீதான இச்சையான காரியங்களைப் பார்ப்பதற்கு பயன்படுத்தி இடம்கொடுத்து பாவ வாழ்க்கையில் சிக்கிக் கொள்கிறார்கள்.

     அருமையான சகோதரனே,சகோதரியே, தாவீதின் இச்சை பாவத்தைப்  பிறப்பித்து,அவன் பிள்ளையினுடைய மரணத்தை விளைவித்தது. இதைப் போல யோசுவா 7ம் அதிகாரத்தில் ஆகான் மெய்யாகவே நான்  இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாய் பாவம் செய்தேன். கொள்ளையில் நேர்த்தியான ஒருபாபிலோன் சால்வையும் இருநூறு வெள்ளிச் சேக்கலையும் ஐம்பது சேக்கல் நிறையான ஒரு பொன்பாளத்தையும் இச்சித்து எடுத்துக் கொண்டேன். இதோ, அவைகள் என் கூடாரத்தின் மத்தியில் பூமிக்குள் புதைத்திருக்கிறது. வெள்ளி அதின் அடியிலிருக்கிறது என்றான். இந்த ஆகானின் செயல் அவனுடைய குடும்பம் முழுவதும்  அழிவதற்கு காரணமாயிற்று.இச்சையானது நம் வாழ்வில் அழிவைக் கொண்டு வருகிறது.

3) நன்மை செய்ய அறிந்தும் செய்யாதிருப்பதினால் பாவம்.

  ''---ஒருவன் நன்மைசெய்ய அறிந்தவனாயிருந்தும்,அதைச் செய்யாமற்போனால்,அது அவனுக்குப் பாவமாயிருக்கும்.''யாக்கோபு 4:17

         இன்று நம்முடைய வாழ்க்கையில் நமக்கு செல்வம்,சிறப்பு ,ஞானம் இருந்தபோதிலும் மற்றவர்களுக்கு உதவிசெய்ய மனம் இல்லாத படியால் உதவி செய்யாதிருக்கிறோம்.இந்த அன்பற்ற செயலை,வேதம் தெளிவாக பாவம் என்று சொல்லுவதைப் பார்க்கிறோம். அநேகர் உதவியைத் தேடி வருவதுண்டு.இயேசு கிறிஸ்துவின் வல்லமையை, அவரின் செயல்களை அறிந்தும் புரிந்தும் இயேசுவை சொல்லாதிருப்போ மானால் அது பாவமாகும். வாழ்வதற்கு என்ன வழி என்று ஆலேசனைக் கேட்கிற மக்களுக்கு 'நானே வழி' என்ற இயேசுகிறிஸ்துவை சொல்லா திருப்போமானால்,அது பாவமாகும்.தேவனுடைய சமூகத்தில் எச்சரிப்பைப் பெறும்போது,அந்த எச்சரிப்பை துன்மார்க்கனுக்கு சொல்ல வேண்டும். அவனுக்கு சொல்லாத பட்சத்தில், அவன் அந்தக் காரியத்தில் மரித்துப் போனால், அவனுடைய இரத்தப்பழியை உன்னிடத்தில் கேட்பேன் என்று கர்த்தர் சொல்லியிருக்கிறார்.

4) ஜெபிக்காதிருந்தால் பாவம்

 " நானும் உங்களுக்காக விண்ணப்பம் செய்யாதிருப்பேனாகில் கர்த்தருக்கு விரோதமாக பாவஞ்செய்கிறவனாயிருப்பேன்---''1சாமுவேல் 12:23

         இன்று நாம்  ஜெபிக்கிற மக்களாய் மாற வேண்டும். மற்றவர்களுக்காக ஜெபிக்க வேண்டும் என்பது முக்கியமான  செயல் என்று வேதம் சொல்கிறது. எஸ்தரிடம் மொர்தெகாய் தன்  ஜனங்களுக்காக விண்ணப்பம்பண்ணவும், மன்றாடவும் வேண்டும் என்று சொல்லச் சொன்னான். அவ்வாறு எஸ்தர், மொர்தெகாய்க்கு 3 நாள்  சூசானில் யூதரையெல்லாம் கூடி வரச்செய்து அல்லும் பகலும் புசியாமலும் குடியாமலுமிருந்து  எனக்காக உபவாசம் பண்ணுங்கள்; நானும் என் தாதிமாரும் உபவாசம்பண்ணுவோம்(எஸ்தர்4:16) என்று சொல்லச் சொன்னாள். அவ்வாறு ஜெபித்தபடியினால் யூதர்கள் அழிக்கப்படாதபடி கர்த்தர் காரியங்களை வல்லமையாகச் செய்தார். யோபு தன்  சிநேகிதருக்காக வேண்டுதல் செய்தபோது,கர்த்தர் அவன் சிறையிருப்பை மாற்றினார்.

       கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, நம் தேசத்திற்க்காக, தேசத்தின் எழுப்புதலுக்காக, நம்முடையநண்பர்களுக்காக நாம் ஜெபிக்கும் போது, நமக்குள் கர்த்தர் விடுதலையையும்,மாற்றங்களையும் தருவார்.பேதுரு சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்தபோது, சபையார் அவனுக்காக ஊக்கத்தோடு ஜெபித்தார்கள், அதனால் கர்த்தருடைய தூதன் சிறைச்சாலையிலே வந்து பேதுருவினுடைய கட்டுகள் நீங்கச் செய்து ஒருவரும் அறியாதபடி சிறைச்சாலையினுடைய கதவுகளை திறக்கச் செய்து வெளியே கொண்டு வந்து விட்டதை நாம் நன்கு அறிவோம்.இன்று நாம் ஜெபிக்க கற்றுக் கொள்ளும்போது,நாம் ஜெபிக்கிற எல்லாக் காரியத்திற்கும் கர்த்தர் ஏற்ற பதில் தந்து ஆசீர்வதிபார்.இன்று  மற்றவர்களுக்க்காய் ஜெபிப்போம். கர்த்தருடைய நன்மைகளை நாம் அடைவோம்.பாவம் செய்யாத வாழ்வைப் பெற்றுக்கொள்வோம்.

பாவத்தினால் வரும் தீமைகள்

1) பிரிவினையை உண்டாக்குகிறது

 '' உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினை உண்டாக்குகிறது;உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது.''ஏசாயா 59:2.

      இன்று நம்முடைய வாழ்க்கையில் நாம்  செய்த, செய்து கொண்டிருக்கிற பாவங்கள் நமக்கும் தேவனுக்கும் உள்ள நல்ல ஐக்கியத்தை முறித்து பிரிவினையை உண்டாக்கி விடுகிறது. சர்வ வல்லமையும் சர்வ அதிகாரமும் உடைய அன்பின் தேவனுடைய  ஐக்கியத்தை இழந்து வேதனை அடைகிற பாழான வாழ்க்கையைப் பெற்று விடுகிறோம். ஜெபத்தைக் கேட்கிற தேவனுக்கு, நம்முடைய பாவத்தினிமித்தமாய் ஜெபம் கேளாதபடி அவருக்கும் நமக்கும் பிரிவினையை உண்டாக்கி விடுகிறது.

        அன்பின் தேவப்பிள்ளையே,பாவமானது நம் ஜெபத்திற்கு தடையாகவும்,நம் வாழ்க்கையிலே துயரப்படுத்துகிறதாயும் இருக்கிறது. அவர் கரத்திலிருந்து நாம் எந்த விடுதலையையும் நன்மையும்  பெற முடியாதபடி தடைகளைக் கொண்டு வருகிறதாய் இருக்கிறது.

        ஒருமுறை ஒரு வாலிப சகோதரிக்காக ஜெபிக்க ஆரம்பித்தேன். அந்த மகளிலோ  பலவிதமான பிசாசின் போராட்டங்கள் நிறைந்து  இருந்தது. நீங்கள் தேவனுக்குப் பிரியமில்லாத காரியங்களை உங்கள் வாழ்க்கையில் செய்திருந்தால் மன்னிப்புக்காக  மன்றாடுங்கள். அவர் உங்கள் பாவங்களை மன்னிக்கும் போது அதிசயம் நடைபெறும் என்று  ஆலோசனை கூறினேன். அவளுடைய உள்ளத்தில் உணர்வடைந்து தனக்கு வெளிப்படுத்தப்பட்டிருந்த பாவச் செயலை அறிக்கை செய்து உண்மையாய் ஜெபித்தாள். உடனே அந்த மகளின் வாழ்க்கையிலே ஒரு அதிசயம் நடைபெற்றது. கட்டுகள் அறுந்தது.பிள்ளையில்லாதிருந்த அவளுடைய வாழ்க்கையில் பிள்ளைப் பெற கர்த்தர் தயவு செய்தார். இன்று நம்முடைய வாழ்க்கையில் நம்முடைய அக்கிரமங்கள், மீறுதல்கள் மன்னிக்கப்பட்டு ஆசீர்வதிக்கப்படுவோம். உறவைக் காத்துக் கொள்ள,பாவ சாபங்கள் நீங்க இன்று முதல் நம்மைக் காத்துக் கொள்வோமாக.

2) பாவத்தினால்நோய் உண்டாகிறது

''---என் பாவத்தினால் என் எலும்புகளில் சவுக்கியமில்லை.''சங்கீதம் 38:3

       இன்று பாவத்தினாலே  பலவிதமான வியாதிகள் நமக்குள் வருகிறது. மத்தேயு 9:2ல் தம்மிடம் கொண்டு வரப்பட்ட  திமிர்வாதக்காரனைப் பார்த்து, திடன்கொள், உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார். அதினிமித்தம் அவன் எழுந்து தன் வீட்டிற்கு போனான்.நாம்  நம்முடைய பாவங்களை மறையாதபடி தேவனிடத்தில் அதை அறிக்கை செய்யும் போது, அவர் நம்முடைய பாவங்களை மன்னித்து நமக்கு புதுவாழ்வைத் தருகிறார்.1யோவான் 1:9ன் படி உண்மையாய் நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால் பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராய் இருக்கிறார்.

       ஒருமுறை வாலிப சகோதரர் ஒருவனுடைய விடுதலைக்காக ஜெபிக்க  ஆரம்பித்தோம்.பாவத்தினாலே தாங்க முடியாத  தலைவலியினால் பாதிக்கப்பட்டிருந்த சகோதரன், தன்பாவங்களை அறிக்கை செய்தபோது,தேவன் அவன் பாவங்களை மன்னித்து அவன் தலையின் பாரங்களை நீக்கி விட்டார்.தேவனிடத்தில் நம்முடைய பாவங்களை மறையாதபடி அறிக்கை செய்யும்போது,அவருடைய கிருபையினாலும், இரக்கத்தினாலும் நாம்  நிறைந்து விடுவோம். பூரணமான சுகத்தைப் பெறுவோம்.

        ஒரு வாலிப மகளின் பெற்றோர்கள்,அந்த மகள் படுகிற வேதனையான தலைவலி நீங்க ஜெபிக்க வேண்டும் என்று கேட்டுக்  கொண்டார்கள். கர்த்தர் அந்த மகளின் பாவச் செயலை வெளிப்படுத்தினார். பாம்பின் புற்றில் சென்று முட்டையும் பாலையும் வைத்தஅந்தமகளின் தவறான செயலை வெளிப்படுத்தினார்.அந்த மகள்அந்த செயலை தவறாய் செய்து விட்டேன் என்று உணர்ந்து அழுது ஜெபித்த போது, அந்த மகளின் வேதனை முற்றுலும் நீங்கியது.

இன்று நாம் நம் பாவங்களை அறிக்கையிட்டு ஜெபிக்கிற ஜெபவீரராய் மாறும்போது, இயேசுகிறிஸ்து தம்முடைய காயப்பட்ட கைகளால் தொட்டு குணமாக்குவார்.

3) ஆத்துமா சாகும்

 '---பாவஞ் செய்கிற ஆத்துமாவே சாகும்,''எசேக்கியேல்18:4.

ரோமர் 6:23ல் பாவத்தின் சம்பளம் மரணம் என்று சொல்லியிருக்கிறது. ஆத்துமாவின் மரணத்தினாலே நாம் எதையும் சரியாக செய்ய முடியாததாய் மாறி விடுகிறோம்.நம்சரீரத்திலே ஆத்துமா தலைமை ஸ்தானத்தை ஏற்றிருக்கிறது.இந்த ஆத்துமாவின் செயலினால் ஆவியும் சரீரமும் செம்மையானவைகளைச் செய்ய, பேச நம்மை நடத்துகிறது. ஆத்தும நேசராகிய இயேசு கிறிஸ்து இயேசுகிறிஸ்து ஆத்துமாவிலே பெலன் தந்து நம்மை நடத்துகிறார்.நாம் அவரால் நடத்தப்படும்போது, சகலவற்றிலும் திருப்தியடைந்த நல்வாழ்வைப் பெறுகிறோம்.ஆத்துமா உயிர்பிக்கப்படும் போது தான் பாவ உணர்வடைந்து பாவத்திற்கு விலகி வாழ நடத்தப்படுகிறோம். இச்சையானது ஆத்துமாவுக்கு விரோதமாய் போர் செய்கிறது.ஆகவே இன்று நாம் உலகத்தின் பிள்ளைகளாய் அல்லஆவியினால் நடத்தப்படுவோமாக.உன் ஆத்துமாவை ஜாக்கிரதையாய் காத்துக்கொள் என்று உபாகமம்4:10ல் பார்க்கிறோம்.முழு ஆத்துமாவோடு கர்த்தரைத் தேடும் போது,கண்டடைவோம்.கர்த்தருடைய வேதம் ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறது என பார்க்கிறோம்.ஆகவே இந்த வேத வாக்கியங்களை நாம் நேசித்து பாவத்தினால் உண்டாகிற ஆத்தும மரணத்திற்கு நம்மை தப்பித்துக் கொள்ள வேண்டும்.இன்று நாம் முழு ஆத்துமாவோடு அவரைத் தேட,அவரில் அதற்கேற்ற இடம் கொடுக்கும்போது, நம்முடைய எல்லா நிலைகளிலும் நம்மை ஆசீர்வதிப்பார்.

4) பாவம் செய்கிறவனுடைய பேர் ஜீவபுஸ்தகத்திலுருந்து கிறுக்கிப் போடப்படும்.

''எனக்கு விரோதமாய்ப் பாவம் செய்தவன் எவனோ,அவன் பேரை என் புஸ்தகத்திலிருந்து கிறுக்கிப்போடுவேன்.'' யாத்திராகமம் 32:33

      இன்று நாம்  கர்த்தருக்காக வாழவும் உழைக்கவும் நம்மை ஒப்புக்கொடுக்கும் போது நம்முடைய பேர் ஜீவ புஸ்தகத்தில் எழுதப்படும்.' 'என் உடன் வேலையாட்களோடுங்கூடச் சுவிசேஷ விஷயத்தில் என்னோடே கூட மிகவும் பிரயாசப்பட்டார்கள், அவர்களுடைய நாமங்கள் ஜீவபுஸ்தகத்தில் இருக்கிறது.' என பிலி.4:3ல் எழுதப்பட்டிருக்கிறது.இன்று நம்முடைய ஊழியங்களைச் செய்ய வேண்டிய கடமை நம் ஒவ்வொருவர் மேலும்விழுந்திருக்கிறது.அதைப் போல ஜெயம் கொள்ளுகிறவன் எவனோ அவனுடைய பேரானது ஜீவ புஸ்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.இவ்வாறு நம்முடைய பேர்கள் எழுதப்படவில்லை என்றால்,நம்முடைய நித்திய வாழ்க்கை நரகஆக்கினைக்குள்ளாய் சென்றுவிடும்.ஜீவ புஸ்தகம் திறக்கப்பட்டது. அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளுக்குத் தக்கதாக நீயாயத் தீர்ப்படைவார்கள். ஜீவ புஸ்தகத்தில் எழுதப்பட்டவனாக காணப்படாதவன் எவனோ அவன் அக்கினி கடலிலே தள்ளப்படுவான்.இந்த தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவ புஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும்,இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார். அக்கினிக்கடல் என்பது நாம்நினையாத வேதனை நிறைந்த வாழ்க்கைக்குள்ளாக தள்ளப்படுகிற வேதனைக்குரிய காரியம்.வாழ்க்கையின் சந்தோஷத்தை,சமாதானத்தைக் கெடுத்து, வேதனை நிறைந்த அக்கினியில் வேக வேண்டிய நிர்ப்பந்த நிலைமை உண்டாகும். பாவத்தின் கொடூரசெயல்,நம்முடைய பேரை ஜீவ புஸ்தகத்திலிருந்து கிறுக்கிப் போடுற செயலாயிருக்கிறது.

         அருமையான சகோதரனே,சகோதரியே நம் பாவங்கள் மன்னிக்கப்பட்டு,பரிசுத்தமான வாழ்க்கை வாழ்வதற்கு நம்மை ஒப்புக் கொடுக்கும்போது, நித்திய சுகவாழ்வை அடைவோம்.

பாவம் நீங்கி தூய வாழ்வு வாழ என்ன செய்ய வேண்டும்?

1) இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தினால் பாவம் நிவிர்த்தியாகும்

 '---அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி,நம்மைச் சுத்திகரிக்கும்' 1யோவான் 1:7

          இன்று இயேசுகிறிஸ்து நமக்காக சிந்தின அந்த விலையேறப் பெற்றஇரத்தத்தினாலே நாம் கழுவப்பட நம்முடைய நம்முடைய பாவ காரியங்கள் நீக்கப்பட,நம்மை அர்ப்பணிக்க வேண்டும்.அவருடைய பரிசுத்தவல்லமையான இரத்தம் நம்முடைய எல்லா பாவங்களையும் நீக்கக் கூடியது. இது ஒரு விசேஷித்த முழுமையான  மாற்றத்தை வாழ்க்கையிலே பெற்றுக் கொள்கிற சிலாக்கியம்.உளையான சேற்றிலிருந்து தூக்கியெடுத்த தேவன், விழுந்து விடாதபடி கன்மலையின் மேல் நிறுத்தின தேவன், தம்முடைய வல்லமையான செயலினாலே உன்னைச் சுத்திகரித்து நீ சுதந்தரிக்க வேண்டிய ஆசீர்வாதத்தை பூமியிலே சுதந்தரித்துக் கொள்ளவும் உதவிச் செய்வார். பாவத்திற்குச் செத்து நீதிக்குப் பிழைத்து பரிபூரணமான ஜீவனை அடைகிற ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் இந்த அனுபவம் அவசியமாய் இருக்கிறது. இந்த உன்னதமான தேவனுடைய இரத்தத்தினாலே பலி செலுத்தப்பட வேண்டிய சகல காரியங்களும் பரிகரிக்கப்பட்டு விட்டது. இன்றைக்கு இலவசமாய் அவருடைய பிள்ளையாய் மாறவும்,நம்முடைய பேர்கள் ஜீவ புஸ்தகத்தில் எழுதப்படவும் சிலாக்கியம் அடைகிறோம். இந்த இரத்தத்தாலேகழுவப்பட இன்று நம்மை ஒப்புக்கொடுப்போமா!

            ஒருமுறை ஒரு கூட்டத்தார் திருச்சி பட்டணம் முழுவதும் பல இடங்களில் இயேசுவின் இரத்தம் எங்கே என எழுதினார்கள். ஆனால் ஒரு போதகரோ நானும் தன் சபையாரும் தங்கள் சரீரத்திலே உள்ள இரத்தமும் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் தன்மை உடையது என்று  அவர்கள் இயேசுவின் இரத்தம் எங்கே கிடைக்கும் என்ற வாசகத்தின் அடியில்  எங்கள் சபையில் கிடைக்கும் என்று பதிலாக எழுதினார்கள். அவரை அணுகி அந்த அரசியல் கட்சித் தலைவர்கள் கேட்ட போது என் சரீரத்திலே அந்த இரத்தத்தால் தூய்மை அடைந்த இரத்தமே இருக்கிறது  என்றார்.நம் இயேசு கிறிஸ்துவின் இரத்தம் நம்மை தூய்மைப் படுத்துவதோடு தைரியப்படுத்துகிறது.

2) உபதேச சட்டத்தைஏற்றுக்கொள்ளும்போது

''முன்னே நீங்கள் பாவத்திற்கு அடிமைகளாயிருந்து,இப்பொழுது உங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட உபதேச சட்டத்திற்கு நீங்கள் மனபூர்வமாய் கீழ்ப்படிந்ததினாலே தேவனுக்கு ஸ்தோத்திரம். பாவத்தினின்றுநீங்கள் விடுதலையாக்கப்பட்டு, நீதிக்கு அடிமையானீர்கள்'' ரோமர் 6:17:18

        உபதேச சட்ட வாக்கியங்கள் என்பது வேதபுத்தகத்திலுள்ள வார்த்தைகளாகும்.இந்த வார்த்தைகளை மனப்பூர்வமாய் ஏற்று, அவைகளின்படி செய்ய நம் வாழ்க்கையை சரி செய்யும் போது, பழைய வாழ்வு நீங்கி பாவங்கள் மன்னிக்கப்பட்டு,அகற்றப்பட்டு போய்விடும். அவருடைய வார்த்தைகள் சத்தியமானவைகள்.அந்த சத்தியத்தினாலே அவர் நம்மை தூய்மையாக்குகிறார்.

       இந்த ஜீவ வசனங்களை நான் ஏற்றுக் கொண்டு அதை தியானிக்கவும்,அதன்படி செய்யவும் என்னை ஒப்புக் கொடுத்தபோது,என் பாவங்கள் மன்னிக்கப்பட்ட நிச்சயத்தை அடைந்தேன். என்னில் இருந்த பயமும் பெலவீனமும் நீங்கினது.இரட்சிப்பின் வாழ்வினால் உண்டான சந்தோஷம் என் உள்ளத்தை நிரப்பியது.

3) ஸ்தோத்தரிக்கும்போது நம்அக்கிரமங்கள் நீங்கும்

    ''அவர் உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து, உன் நோய்களையெல்லாம் குணமாக்கி'' சங்கீதம் 103:3

      என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி என்று அவரை முழு மனதோடு ஸ்தோத்தரிக்கும் போது, அவர் உன் அக்கிரமத்தை எல்லாம் மன்னித்து நோய்களை குணமாக்குகிறார்.

          அன்பின் தேவப்பிள்ளையே,ஸ்தோத்திரம் செலுத்துவதற்கு, துதிப்பதற்கு கவனமாய் இருக்கவேண்டும். நாம் தேவனுக்கு ஸ்தோத்திரங்களை செலுத்தும் போதெல்லாம் நம் அக்கிரமங்கள் மன்னிக்ககப்படுகிறது. ஸ்தோத்திரம் செலுத்தும் போது  நாம்  தேவனை மகிமைப்படுத்துகிறோம். ஸ்தோத்திரம் செலுத்துவது தேவாதி தேவனுக்கு  நன்றி செலுத்துவதாகும்.தாவீது தேவனை துதிக்கவும் ஸ்தோத்தரிக்கவும், தன்னை அர்ப்பணித்திருந்தபடியால் கர்த்தருக்கு பிரியமானவனாக, ஏற்றவனாக வாழ  முடிந்தது. நாமும் நம் எல்லா காரியங்களிலும் தேவனை ஸ்தோத்திரிப்போம். அறிந்தோ, அறியாமலோ, செய்த எல்லா அக்கிரமங்களும் மன்னிக்கப்பட்டு,அகற்றப்பட்டுபோகும்.

4) தேவனுடைய அக்கினி நம்மை பாவங்களற  சுத்திகரிக்கும்

 '' அப்பொழுது சேராபீன்களில் ஒருவன் பலிபீடத்திலுருந்து,தன் கையிலே பிடித்த குறட்டால் ஒரு நெருப்பு தழலைஎடுத்து என்னிடத்தில் பறந்து வந்து,''

அதினால்என் வாயைத்தொட்டு: இதோ,இது உன் உதடுகளைத் தொட்டதினால் உன் அக்கிரமம் நீங்கி உன் பாவம் நிவர்தியானது என்றான்.ஏசாயா6:6,7

பலிபீடத்தின் அக்கினி ஏசாயாவின் உதடுகளைத் தொட்டபோது என் பாவங்கள் நிவிர்த்தியான வார்த்தைகளைக் கேட்டேன் என்று எழுதப்பட்டதைப் பார்க்கிறோம். இன்று நம் தேவனால் பரலோகத்தில்  உண்டாக்கப்பட்ட அந்த அக்கினி நமக்குள் பற்றியெறிவதற்கு இடம் கொடுப்போம்.''பூமியின் மேல்அக்கினியை போடவந்தேன், அது இப்பொழுதே பற்றி எரிய வேண்டுமென்று விரும்புகிறேன்'' லூக்கா12:49 வார்த்தையின்படி அக்கினியினால் நிரப்பப்பட சுத்திகரிக்கப்பட இடம் கொடுத்தால், நம் பாவங்களை நிவிர்த்தியாகி தூய வாழ்வை அடைவோம்.

        இன்றைக்கே நம்மைச் சுத்திகரிக்க, அக்கினியினால் நிரப்பப்பட ஒப்புக்கொடுத்தால் கிறிஸ்துவின் தயவினால் பாவம் நீங்கிய நல்வாழ்வு பிறந்துவிடும். அவருடன் உள்ள உறவைக் உருவாக்கிக் கொள்ளும் போது இனி பாவஞ்செய்யாதே என்று சொன்ன வார்த்தையை நிறைவேற்றுவதோடு நல் வாழ்வை பெற்றுக்கொள்வோம் 

           கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.

கிறிஸ்து இயேசுவின் பணியில், 

சகோ. சி. எபனேசர் பால்.