கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே வாழ்த்துகிறேன்.
ஒருமுறை ஒரு வாலிப பெண்ணை ஜெபிப்பதற்கு அழைத்துக் கொண்டு வந்தார்கள். அந்தப் பெண்ணோ தன் பட்டப்படிப்பை முடித்து வேலை செய்வதற்காக காத்திருந்தாள். சமாதானத்தை இழந்து, சந்தோஷத்தை இழந்து, மிகுந்த போராட்டத்தோடு இருந்த மகளை பெற்றோர் கூட்டிக் கொண்டு வந்தார்கள். அந்த மகளுக்காக ஜெபிக்க ஆரம்பித்தபோது, ஏதோ தண்ணீர் நிற்கும் இடத்தில் போய் அமருகிற வழக்கம் உண்டா என்று கேட்க ஆரம்பித்தேன். ஆமாம், நான் படித்த இடத்திலே தண்ணீர் உள்ள ஓர் இடம் இருந்தது. சிலர் அதில் காசுகளைத் தூக்கிப் போடுவார்கள். நான் ஏன் இதைச் செய்கிறீர்கள் என்று கேட்ட போது உள்ளத்தில் விரும்புகிற காரியம் நடைபெறும் என்று பதில் கூறியவுடன் நானும் ஒரு காசை அதில் விழும்படி வீசினேன். அதற்குப்பின் என் உள்ளத்தில் போராட்டம் பெருகிற்று. சரியாகத் தூங்க முடியாத நிலை ஏற்பட்டது. என் அறையிலே தனியாக உட்கார்ந்து வேண்டாத காரியங்களைச் சிந்தித்துக் கொண்டிருந்தேன். கொஞ்சம் கொஞ்சமாக தலைவலியும் என்னைப் பிடித்துக் கொண்டது. தேர்வுகள் எல்லாம் எழுதி முடித்து வீடு சென்றபோது, எனக்குள் ஏதோ பிரச்சனை இருக்கிறது என்று என் பெற்றோர் அறிந்து ஜெபிக்க அழைத்து வந்தார்கள் என்று கூறினாள்.
இன்று அநேகர் கர்த்தர்மேல் உள்ள நம்பிக்கையை விட்டுவிட்டு, உலகத்தார் சொல்கிற, செய்கிற காரியங்களைச் செய்து, தீங்கின் ஆவிகளைத் தங்கள் வாழ்க்கையில் வரவழைத்துக் கொள்கிறார்கள். கர்த்தர் மேல் நம்பிக்கை வைத்து, கர்த்தரையே தன் நம்பிக்கையாக கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான். இதற்கு மாறாக சிருஷ்டிக்கப் பட்ட பொருள்களின் மேல் நம்பிக்கை வைத்து, அதை நாடி, தங்களின் தவறான செய்கையினால் தங்களைக் கெடுத்துக் கொள்கிற மக்கள் ஏராளமாய் இருக்கிறார்கள். சில கால்பந்தாட்ட விளையாட்டு வீரர்கள் மைதானத்தில் இறங்கும்போது தரையைத் தொட்டு, தங்கள் கண்களில் ஒத்திக் கொள்வார்கள். மிதிக்க வேண்டிய மண்ணை மதிப்பதால் நினையாத பாடுகள், தோல்விகள் அடைகிறார்கள். அந்தச் சகோதரியும் தவறான நம்பிக்கை கொண்ட செயலைப் புரியாது செய்த படியால் பாடுபட்டாள். கிருபை நிறைந்த கர்த்தர் இரக்கம் செய்தார். ஜெபத்தைக் கேட்டார். விடுதலைத் தந்தார். நீ எனக்கு வேண்டும் என்று சொன்ன ஆவிகள் அந்த மகளைவிட்டு விலகினபடியால் சந்தோஷம், சமாதானம் அடைந்து தெளிந்த புத்தியோடு செயல்பட ஆரம்பித்தாள்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, இதை நாம் மனதில் வைத்து கர்த்தரையே நம்பி ஜீவிப்போம். சமாதானமும், சந்தோஷமும், சுகமும், ஜெயமும் அடைவோம்.
கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.
சகோ. C. எபனேசர் பால்.