பலவிதமான குறைகளினால் கஷ்டப்படுகிற மக்களின் குறைதீர ஒரு ஜெபம்

அன்பின் தேவனே. இந்த நல்ல ஜெபநேரத்திற்காக நன்றி கூறுகிறேன். கர்த்தாவே, நீர் ஜெபத்தைக் கேட்கிற தேவன் என்று அறிவேன். என் முந்தின பிரச்சனைகள் எல்லாவற்றிற்கும் என் ஜெபத்தைக் கேட்டு, பிரச்சனைகளை நீங்கச் செய்தீர். இன்றும் கர்த்தாவே, என் தேவைகளை யெல்லாம் நீர் அறிவீர் உம்மை நான் முழுமனதுடன் தேடுகிறேன். உம்மைத் தேடுகிற மக்களுக்கு ஒரு நன்மையுங்குறைவுபடாது என்ற வார்த்தையின்படி என் குறைகளைத் தீர்ப்பீர் என்று ஆவலோடு காத்திருக்கிறேன். தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி மகிமையிலே உங்கள் குறைவையெல்லாம் நிறைவாக்குவார் என்ற வார்த்தை என் வாழ்க்கையில் நிறைவேற காத்திருக்கிறேன். சில சமயங்களில் குறைவின் மிகுதியால் சமாதானம் இழந்து, இரவில் தூங்க முடியாது கஷ்டப்படுகிறேன். ஜெபத்தைக் கேட்கிறவரே, என் ஜெபத்தைக் கேட்டு எனக்கு இரக்கம் செய்யும். முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும், அவருடைய நீதியையும் தேடுங்கள் என்று சொன்னீரே, நான் உம்மை முதலாவது காலையிலே தேட ஆரம்பித்துக் கொண்டிருக்கிறேன். ஒரு குறை தீர்ந்தது என்று சந்தோஷப்படும்போது, அடுத்த குறை துவங்கிவிடுகிறது. என் குறை நீங்கும் போது என் வீட்டில் உள்ள மற்றவர்களின் குறை பெரிதாகி விடுகிறது. இதற்காக நாங்கள் முழுமனதோடு. ஒரு மனதோடு உம்முடைய சமுகத்தை நோக்கி கெஞ்சிக் கொண்டிருக்கிறோம். நீர் எனக்கு நல்ல மேய்ப்பராக இருக்கும் போது, எனக்கு ஒரு நன்மையுங் குறைவுபடாது என்று அறிவேன். என் குறைகளும், தோல்விகளும் ஜெயமாய்  மாறுவதற்கு, உம்முடைய ஆலோசனையின் வார்த்தையின் படியே, என் காரியங்களைச் செய்து கொண்டிருக்கிறேன். 'சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும்; கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது' என்ற வாக்கை விசுவாசித்து அனுதினமும் உமது சமுகத்தை தேடிக் கொண்டிருக்கிறேன். கேட்கிற எவனும் பெற்றுக் கொள்கிறான் என்ற வார்த்தையின்படி என் குறைகள் நீங்கி, எல்லாவற்றையும் பெற்றுக்கொள்ள எனக்கு உதவிசெய்யும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வேண்டுகிறேன் பிதாவே, ஆமென்.