"அவர் தமக்குப் பயந்தவர்களுடைய விருப்பத்தின்படி செய்து,

                                                  அவர்கள் கூப்பிடுதலைக் கேட்டு, அவர்களை இரட்சிக்கிறார்."

                                                                                                                     சங்கீதம் 145:19

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினாலே உங்களை வாழ்த்துகிறேன்.

ஒருமுறை வெளிநாடு ஒன்றில் நான் தங்கியிருந்த வீட்டிலுள்ள சகோதரி கருவுற்றிருந்தார்கள். அவர்களுக்கு திடீரென தயிர்வடை சாப்பிட வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. அச்சமயம் கணவரும், மாமனாரும் அந்த ஊரிலிருந்த எல்லா ஹோட்டல்களிலும் கேட்டு விசாரித்தார்கள். தயிர்வடை விற்பனை இல்லை என்று தெரிய வந்தது. இந்த நிலையில் ஒரு சகோதரர் தான் துவக்கியுள்ள உணவகத்திலே வந்து ஜெபிக்க வேண்டும் என்று என்னைக் கேட்டார்கள். அவருடைய ஹோட்டலுக்குச் சென்ற நேரத்தில் இந்திய உணவகமாக இருந்ததால், அவரிடம் உங்களது ஹோட்டலில் தயிர்வடை இருக்கிறதா? என்று கேட்டேன். ஆம் இருக்கிறது என்று சொன்னார்கள். அத்துடன் எத்தனை வேண்டும் என்று கேட்டார். அப்பொழுது நான் தங்கியிருக்கிற வீட்டிலுள்ள சகோதரி மாசமாக இருக்கிறபடியால் அவர்களின் ஆசைக்காக வேண்டும் என்று கூறினேன். நான் தங்கியிருந்தவரின் குடும்பத்தினருக்கு நானே தயிர்வடையைக் கொண்டு வந்து தருகிறேன் என்று கூறினார். அந்த நாளின் மாலை நேரத்தில் ஒரு டிபன் பாக்ஸ் முழுவதுமாக தயிர்வடை கொண்டு வந்து கொடுத்தார்கள். அந்த சகோதரிக்கும், வீட்டாருக்கும் மிகுந்த மகிழ்ச்சி உண்டானது.

அன்பு சகோதரனே, சகோதரியே, நாம் நம் வாழ்க்கையில் கர்த்தருக்குப் பயந்து நடப்போமானால், அவர் நம் இருதயத்தின் விருப்பத்தின்படி செய்து ஆசீர்வதிக்கிறார். 'கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சி யாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்.' சங்கீதம் 37:4ன் படி இன்று முதல் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருந்து அவர் வார்த்தையின்படி செய்து, அவரில் அன்பு கூரும்போது, நம் விருப்பம் என்ன என்று கேட்டு அதை அருள் செய்வார். ஆகவே இன்று நாம் இதை நம் மனதில் வைத்து, நமக்கு நன்மையானதைத் தரும் இயேசுவிடம், அவருக்குப் பயந்து, மகிழ்ச்சியோடு அவரில் அன்புகூரும்போது நம் விருப்பத்தை நிறைவேற்றுவார்.

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

சகோ. C. எபனேசர் பால்,