"முதலாவது தேவனுடைய இராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்,

                                                         அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்."

                                                                                                                                                                                          மத்தேயு 6:33

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினால் வாழ்த்துகிறேன்.

ஒரு முறை சகோதரி ஒருவர் ஜெபிக்க வந்தார்கள். என் கணவர் அரசாங்கத்தில் உயர் அதிகாரியாக இருக்கிறார்கள். என் குடும்பம் இப்பொழுது மிகுதியான கடன் தொல்லையினால் கஷ்டப்படுகிறது. ஒவ்வொரு நாளும் கடன்காரர்கள் அவர்கள் கடன் கொடுத்த பணத்தையும், அதற்குரிய வட்டியையும் கேட்டுத் தொல்லைக் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். நான் எவ்வுளவு சிக்கனமாக இருக்க முடியுமோ அப்படியே என் குடும்பக் காரியங்களைச் சிக்கனமாக செய்து வருகிறேன். என் கணவருக்கு எந்தத் தவறான பழக்கமும் கிடையாது. அடிக்கடி இடமாற்றம் வந்தபடியால் குடும்பத்தின் செலவு இரண்டு மடங்காகி விட்டது. அவர்கள் உள்ள இடத்திலும் வீட்டு வாடகை, இங்கும் வீட்டு வாடகை, பிள்ளைகளின் படிப்பினால் ஒன்றாக சேர்ந்து வாழ முடியாத சூழ்நிலை என்று கூறினார்.

நான் அவர்களைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டேன். நீங்கள் தோட்டத்தில் செடி வளர்ப்பதில் மிகுதியாக ஆர்வம் உள்ளவர்களா என்று கேட்டேன். ஆமாம் தோட்டத்தில் செடி வளர்ப்பது எனக்கு ரொம்ப பிரியமானது. வீட்டைச் சுற்றி பலவிதமான பூச்செடிகளையும் அழகான இலைகளையும் உடைய செடிகளையும் வைத்திருக்கிறேன் என்றார்கள். நான் அவர்கள் வீட்டில் உள்ளேயும் ஏதாவது செடி வைத்திருக்கிறார்களா என்று கேட்டேன். ஆம் என்று கூறியதுடன் அது நன்றாக வளர வேண்டும் என்று கவனமாக அவைகளைப் பராமரித்து வருகிறேன் என்றார்கள். அப்பொழுது அவர்களிடம் நீங்கள் வீட்டிற்குள் வைத்திருக்கும் செடி மணி பிளான்ட் ஆகும். இந்தச் செடி நன்றாய் வளர்ந்தால், பணக்கஷ்டம் நீங்கிவிடும், கடன் தொல்லை முடிந்து விடும் என்று நம்பி அதற்குக் காலையிலே தண்ணீர் ஊற்றிக்கொண்டு இருக்கிறீர்களே என்றேன். அதற்கு ஆம் என்றார்கள். நீங்கள் தவறான நம்பிக்கை கொண்டு இருப்பதால் செழிப்படைய முடியவில்லை. இன்று இந்த மணிபிளாண்ட் மீது அல்ல, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மேல் நம்பிக்கையை வைத்து, முதலாவது அவரைத் தேடுங்கள். 'சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும்; கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது.' என்ற சங்கீதம் 34:10 ன் படி சகல குறைவுகளும் நீங்கிவிடும். 'உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொன்னபடி உன்னை ஆசீர்வதிப்பதினால், நீ அநேகம் ஜாதிகளுக்குக் கடன் கொடுப்பாய், நீயோ கடன் வாங்குவதில்லை...' என்ற உபாகமம் 15:6 ன் படி கடன் நீங்கின நிலைமை மாறி, அநேகருக்குக் கடன் கொடுக்கிறவர்களாய் மாறிவிடுவீர்கள் என்றேன். அந்தச் சகோதரி நான் தவறான நம்பிக்கை வைத்துவிட்டேன். இனி கர்த்தரையும் அவரின் வசனத்தையும் நம்பி வாழ்வேன் என்றார்கள்.

 

அன்பு சகோதரனே, சகோதரியே, இன்று உன் நம்பிக்கை எதன் மீது இருக்கிறது?யார் மீது உன் நம்பிக்கையை வைத்து இருக்கிறாய்?உன் படிப்பு, உன் ஞானம், உன் திறமை, உன் பெலன், வீடுவாசல், சொத்து, தொழில், வியாபாரமா? இதை விட்டு விட்டு, நம்பிக்கையைக் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மேல் வையுங்கள். இன்னும் சிலர் பலவித தவறான நம்பிக்கையைக் கொண்டு வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். இன்று என் இடது உள்ளங்கையில் ஊரல், ஆகவே பணம் கிடைக்கும் என்றும், என் வலது கையில் ஊரல் எடுக்கிறது, ஐயோ, செலவு வருமே என்று கலங்கிக் கொண்டும் இருக்கிறார்கள். இவ்வாறான நம்பிக்கைக்கு இடங் கொடாது இனி வாழ தீர்மானிப்போமாக. "கர்த்தர் மேல் நம்பிக்கை வைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான்” என்ற எரேமியா 17:7 ன் படி வாழ இடங் கொடுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார். உங்கள் கூடாரம் செழிப்பும் சிறப்புமடையும்.

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

                                                                                                         சகோ. C. எபனேசர் பால்.