கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.
ஒரு முறை ஒரு குடும்பத்தாரோடு தங்கியிருந்த போது, அவர்களின் இரண்டு ஆண் பிள்ளைகளுக்காக ஜெபிக்கக் கூறினார்கள். இளைய மகன் 9ம் வகுப்பு அந்நாட்களிலே படித்துக் கொண்டு இருந்தான். அவனுக்கு ஜெபிக்கும்போது, மருத்துவப் படிப்பைப் படிப்பாய் என்று கர்த்தரின் வார்த்தைகளைக் கூறி ஜெபித்தேன். கர்த்தருக்குள்ளாக வளர்ந்தான். அவன் தாயார் ஒரு பெரிய பள்ளியின் தலைமை ஆசிரியர். தகப்பனார் ஒரு கம்பெனியிலே மேனேஜராக இருந்தார். மூத்த மகன் நன்கு படிக்கிறவனாக இருந்தான். அந்நாட்களிலே நீட் தேர்வு கிடையாது. இளைய மகன் 12 ம் வகுப்பு முடிக்கும்போது நல்ல மதிப்பெண் எடுத்து வெற்றி பெற்றிருந்தான். மருத்துவ கல்லுாரிக்கு மனு செய்தபோது, எந்தக் கல்லுாரியிலும் அவனுக்கு இடம் கிடைக்கவில்லை. ஆகவே அவன் ஒரு Arts Collegeல் English Literature எடுத்து BA படிப்பதற்குச் சேர்ந்தான். வீட்டை விட்டு எல்லோரும் காலையிலே சென்று விடுவார்கள். கடைசியாக தகப்பனார் செல்வார். தகப்பனார் காரில் ஏறி அலுவலகம் செல்லும்போது, தன் வீட்டிலிருந்த தொலைபேசி அடிக்கும் சத்தம் கேட்டது. ஒவ்வொரு நாளும் இது நடைபெற்றுக் கொண்டே இருந்தது. ஒரு நாள் யார் இந்த நேரத்தில் தொலைபேசியில் கூப்பிடுகிறார்கள் என்று தெரிந்து கொள்வதற்குத் தன் காரைவிட்டு இறங்கி வீட்டைத் திறந்து, போனை எடுத்த போது, ஒரு மருத்துவ கல்லுாரியின் தலைவர் தொலைபேசி மூலம் பேச ஆரம்பித்தார். அக்கல்லுாரியின் முதல்வர் உங்கள் மகனுக்கு நாங்கள் ஒரு இடத்தைத் தருவதற்குத் திட்டமிட்டோம். அதைத் தெரிவிக்க சில தினங்களாக உங்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சித்தோம். இன்று மாத்திரம் முயற்சித்து விட்டு, மருத்துவ படிப்பிற்கான இடத்தை மற்றொருவருக்குக் கொடுத்துவிடலாம் என்று கூறினபோது, கர்த்தர் எவ்வளவு நல்லவராக இருந்து அவர் வார்த்தையின் படி தன் மகனுக்கு மருத்துவப் படிப்பைப் படிக்க வழி திறந்தார் என்று தேவனைத் துதித்தார்கள். அந்தப் படிப்பு முடித்து, CMC -லே Post Gradua tion படிப்பையும் படித்து, இன்று இங்கிலாந்திலே அவன் திருமணம் பண்ணின மருத்துவ மனைவியோடு பணி செய்ய கர்த்தர் உதவி செய்தார்.
அருமையான சகோதரனே/சகோதரியே, கர்த்தர் நமக்கு கொடுக்கும் வாக்கின்படி செய்து என்றும் நம்மை ஆசீர்வதிப்பார். அவரின் வார்த்தையைப் பெற்ற பின்பு வீணான கவலைக்கோ, முயற்சிக்கோ இடம் கொடாது அவரைத் துதிப்போம்,ஸ்தோத்தரிப்போம். அவரின் பாதத்தில் காத்திருப்போம். அவரின் வல்ல செயலை நாம் கண்டு மகிழவும் களிகூரவும் செய்வார்.
கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
சகோ. c. எபனேசர் பால்.