"..கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு."

                                                                                                                                                                           2 கொரிந்தியர் 3:17

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.v

ஒரு முறை திருநெல்வேலியில் உள்ள ஒரு ஆசிரியர் சகோதரிக்கு ஜெபிக்க தேவ ஆவியானவர் வழி நடத்தினார். இரண்டு பிள்ளைகளுள்ள அக்குடும்பத்தில் சில பிசாசின் தந்திர செயலினால் கணவன், மனைவி பிரிந்து வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அந்த ஆசிரியர், என் சகோதரியின் கணவர் பணி செய்கிற பள்ளியில் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள். ஆகவே கர்த்தரின் ஆவியானவர் என்னை நடத்தியபடி, அந்த சகோதரிக்காக ஜெபிக்க நெல்லைக்குச் சென்றேன் .என் சகோதரியின் கணவருக்கு, அந்தச் சகோதரி, பிள்ளைகளுடன் வசித்து வரும் இடம் தெரிந்தபடியால், அந்த இடத்திற்கு என் சகோதரியின் கணவரோடு ஜெபிக்கச் சென்றேன். என்னைப் பார்த்தவுடன் வீட்டிற்குள் செல்ல அழைத்தார்கள். அத்துடன் அவர்களில் இருந்த ஆவி அவர்களை அதிகமாக அலைக்கழிக்க ஆரம்பித்தது. அந்தச் சகோதரியில் இருந்த ஆவி, ஏய், நீ ஜெபிக்க வந்து விட்டாயா என்று மூர்க்கத்தோடு, தலையை விரித்துப்போட ஆரம்பித்தது. ஆவிக்குரிய வாழ்விலே இவ்விதமான அனுபவம் இல்லாத நான், கர்த்தரை நோக்கி என்ன செய்வது என்று உள்ளத்தின் ஆழத்தில் கேட்டுக்கொண்டு ஜெபிக்க ஆரம்பித்தேன். சுமார் 1 மணி நேரம் அந்த மகளுக்குள் இருந்த தீங்கின் ஆவி வேதனைப்படுத்திப் போராடியது. கர்த்தரோ நல்லவர். இவ்வாறு போராடின மகள் மீது அன்பு வைத்து, அச்சகோதரியின்மேல் கர்த்தர் தம்முடைய ஆவியை ஊற்றினார். அதுவரை போராடின ஆவிகள் வெளியே ஓடி மறைந்தன. அந்தச் சகோதரி மிகுந்த கண்ணீரோடு கர்த்தரை நோக்கி ஜெபிக்கவும், துதிக்கவும் ஆரம்பித்தார்கள். அவர்களில் காணப்பட்ட இருண்ட முகம் பிரகாச முள்ளதாக மாறியது. இரட்சிப்பின் சந்தோஷத்தோடு எங்களோடு பேச ஆரம்பித்தார்கள். கர்த்தருக்காக வாழவும், உழைக்கவும் அர்ப்பணித்தார்கள்.

அச்சகோதரி சுகமடைவதற்கு அநேக ஆலோசனைகளை நண்பர்கள், உற்றார், உறவினர் மூலமாக பெற்றிருந்தாலும், பதில் செய்யாது, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துதான் எனக்கு விடுதலைத் தருவார் என்று அவரையே நாடினபடியால், கர்த்தர் அவர்களில் அற்புதம் செய்தார்.

அருமையான சகோதரனே /சகோதரியே, உன் வாழ்க்கையிலோ, உன் இனத்தாரின் வாழ்க்கையிலோ, இவ்விதமான பிசாசின் போராட்டங்களினால் உலகத்தாருடைய ஆலோசனையைப் பெற்று கர்த்தரை விட்டுவிடாதிருங்கள். கர்த்தர் எனக்குச் சகாயம் செய்யும் அன்பு நிறைந்த தேவன் என்று நம்பி அவரைத் துதியுங்கள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் மாறாதவர். அவர்களைத் தேடுகிறவர்களைக் கைவிடாத மகத்துவம் நிறைந்தவர்.

      கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

                                                                                                                                  சகோ. c. எபனேசர் பால்