கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினால் வாழ்த்துகிறேன்.
மனிதன் தான் செய்யும் எல்லாக் காரியத்திலும் நிறைவான வெற்றியைப் பெற்று மிகுந்த மகிழ்ச்சியுடன் வாழ விரும்புகிறான். நாம் செய்ய நினைத்த காரியங்கள் தடைபடும் போதும், தோல்வியடையும் போதும் மிகுதியாக சோர்வடைந்து விடுகிறோம். கர்த்தரின் ஆலயத்துக்குச் செல்ல, வேதத்தை வாசித்து ஜெபிக்க மனதில்லாதவர்களாகி விடுகிறோம். நமது எல்லாக் காரியங்களையும் வாய்க்கச் செய்கிறவர் கர்த்தரே. அவர் சொல்ல ஆகும் என்று வேதம் நமக்குத் திட்டமாய்த் தெரிவிக்கிறது. வேலையைத் தேடி என் மனம் சோர்ந்து விட்டது என்று வாலிபர்களும், படித்தவர்களும் கூறுவதைக் கேட்கிறோம். அவர்கள் படும் பாடுகளையும் பார்க்கிறோம். தொழில் ஆரம்பித்து பிழைப்பை நடத்தலாம் என்றால் இடம், லைசென்ஸ், தொழிலாளிகள் போன்ற பிரச்சனைகள் பெருகி, முயற்சியில் முழுமையான வெற்றி காணாது கலங்குகிறவர்களின் கூட்டம் மிகுதி. ஏதாவது வெளி நாட்டில் எனக்கு வேலை கிடைக்காதா? என்று எதிர்ப்பார்த்து பல மாதங்களும், ஆண்டுகளும் கடந்து சென்றதால், உள்ளம் உடைந்திருக்கிறவர்களின் கூட்டம் மிகுதி. எனக்கு வேலை கிடைக்குமா? திருமண வாழ்வு என்று ஒன்று உண்டா? என்று வெளிச்சொல்ல முடியாத போராட்டத்துடனும், கண்ணீரோடும் நாட்களைச் செலவிடும் மக்கள் இன்று அதிகரித்து வருகின்றனர். என் முயற்சியினால் எனக்கு நிச்சயம் வேலை கிடைத்து விடும், என் வீட்டாருக்கு நான் உதவியாக இருப்பேன் என்று மனக்கோட்டைக் கட்டி, தோல்வியினால் கலங்குகிற மக்கள் இன்று ஏராளம். என் தொழிலும், என் எல்லா முயற்சிகளும் வாய்க்காதே போகிறதே என்று மனச்சாட்சியில் குத்துண்டு வாடுகிற மக்களும் உண்டு. அன்பு சகோரேனே, சகோதரியே, ஏன் என் காரியங்கள் இந்நாள்வரை வாய்க்காதே போய்விட்டது ? என் வாழ்வில் உள்ள குறைகள் என்ன? எதினால் தடைகள் தோன்றி உள்ளது ? என் போராட்ட வாழ்க்கை மாறாதா? அதற்கு என்ன வழி உண்டு என்று உன்னை ஆராய்ந்து, இன்று கர்த்தர் அருளும் ஆலோசனைக்குச் செவிகொடுத்தால், நாம் நினைப்பதற்கும் வேண்டுவதற்கும் மேலாக வல்லமையாய்க் கிரியைச் செய்கிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உன் வாழ்வில் அற்புதம் செய்வார். நீ விரும்பின காரியத்தைக் கர்த்தர் வாய்க்கச் செய்வார். நீ ஆசீர்வாதமாய் மாறுவாய்.
ஏன் காரியங்கள் வாய்க்காது போகிறது?
1. பாவம் செய்வதாலும் சாபத்தீடானதை வைத்திருப்பதாலும் காரியங்கள் வாய்க்காது போகிறது.
"...ஜனங்களில் ஏறக்குறைய மூவாயிரம்பேர் அவ்விடத்திற்குப் போனார்கள்; ஆனாலும் அவர்கள் ஆயியின் மனுஷருக்கு முன்பாக முறிந்தோடினார்கள்." யோசுவா 7:4
யோசுவா என்ற தேவமனிதன், கர்த்தரின் ஜனங்களை நடத்திக் கொண்டு வந்தான். பல தடைகள், எதிர்ப்புகளைக் கர்த்தரின் பெலத்தால் தகர்த்து எறிந்தவன். ஆனால் ஒரு சிறிய பட்டினமாகிய 'ஆயி' என்ற இடத்தைப் பிடிக்க முடியாது போய் விட்டது. எதினால் இந்த வேதனையான தோல்வி என்ற உள்ளத் துடன் கர்த்தரின் சமுகம் வந்து கலங்கினான். “நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை; நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவது மில்லை." (யோசுவா 1:5) என்று கர்த்தரின் வாக்கைப் பெற்றவன். காரியம் வாய்க்காது போனபடியால் தேவ சமுகத்தில் கதறினான். கர்த்தர் எனக்கு வாக்குக் கொடுத்திருந்தார், ஏன் இந்தக் காரியங்கள் நல்லபடியாக வாய்க்கவில்லை, வெற்றியாக எனக்கு முடியவில்லை என்று ஏங்கும் தேவப் பிள்ளையே, உன்னை ஆராய்ந்து பார். அன்று யோசுவாவின் எல்லையில் இருந்த மக்கள் கர்த்தரின் வார்த்தையை மீறி, பாவஞ்செய்திருந்தார்கள். சாபத்தீடான பொருட்களைத் தங்கள் எல்லையில் வைத்திருந்தார்கள். இதினிமித்தம் தங்கள் முயற்சிகளில் மிகுதியான தோல்வியைச் சந்தித்தார்கள். எளிதாய் முடியும் என்ற காரியத்தில் படுதோல்வியைச் சந்தித்தனர்.
ஒருமுறை ஒரு குருவானவர் ஞாயிறு ஆராதனை முடிந்த பின்னர், சபையிலுள்ள ஒரு குடும்பத்தாருக்காக ஜெபிக்கக் கூறினார். அவர்கள் அந்த ஊரில் கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார்கள். ஆலயத்திற்கு அதிக உதவியாக இருப்பவர். ஆராதனையில் உற்சாகமாய் குடும்பமாய் பங்கு பெறுகிற குடும்பம் என்று சபை குருவானவர் அறிமுகம் செய்தார்கள். அத்துடன் இன்னும் ஒரு காரியத்தையும் சொன்னார்கள். இவர்கள் வியாபாரத்தில் இப்பொழுது தோல்வி, நஷ்டம் என்று கூறி அதற்காக ஜெபிக்கக் கூறினார்கள். அந்தச் சகோதரருக்காக ஜெபித்து விட்டு, உங்கள் சட்டைப் பையில் என்ன வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு ஒன்றும் இல்லை, படம் உள்ள பாக்கெட் காலண்டர் என்று கூறினார். அதற்குள் என்ன இருக்கிறது என்று கேட்டபொழுது, எழுத்துக்கள் எழுதியிருந்த ஒரு சிறிய செப்புத் தகட்டை எடுத்துக் காண்பித்தார். இது எதற்கு என்றும், எப்படிக் கிடைத்தது என்றும் கேட்டேன். இது என் வாழ்க்கையின் வெற்றிக்காக ஒரு மனிதரிடம் பணம் கொடுத்து பல நாட்களுக்கு முன் வாங்கி வைத்திருக்கிறேன் என்றார். இந்தச் சாபத்தீடான தகடு உங்களோடு இருக்கும்வரை உங்கள் காரியத்தைக் கர்த்தர் வாய்க்கச் செய்ய மாட்டார். இதை அகற்றி விடுங்கள் என்று ஆலோசனைக் கூறினேன். மனிதர்கள் சாபத்தீடானவைகளைத் தங்களிடம் வைத்துக் கொள்வதால் தோல்வியைச் சந்திக்கிறார்கள். காரியங்கள் வாய்க்காதே போகிறது.
2. பெருமையினால் காரியங்கள் வாய்க்காது போகிறது
"...நாம் பூமியின்மீதெங்கும் சிதறிப்போகாதபடிக்கு, நமக்கு ஒரு நகரத்தையும், வானத்தை அளாவும் சிகரமுள்ள ஒரு கோபுரத்தையும் கட்டி, நமக்குப் பேர் உண்டாகப்பண்ணுவோம் வாருங்கள் என்று சொல்லிக் கொண்டார்கள்." ஆதியாகமம் 11:4
"...அவர்கள் இதைச் செய்யத்தொடங்கினார்கள்; இப்பொழுதும் தாங்கள் செய்ய நினைத்தது ஒன்றும் தடைபடமாட்டாது என்று இருக்கிறார்கள்." ஆதியாகமம் 11:6
"...கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியின்மீதெங்கும் சிதறிப் போகப்பண்ணினார்; அப்பொழுது நகரம் கட்டுகிறதை விட்டு விட்டார்கள்." ஆதியாகமம் 11:8
அநேகர் தங்களின் பேர் புகழுக்காக அநேக காரியங்களைச் செய்கிறார்கள். தங்களின் பெருமைக்காக செய்கிற எந்தக் காரியமும் வாய்க்காது போகும். அத்துடன் வேதனையான காரியங்களும் தோன்றும். கர்த்தர் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார் (யாக்.4:6). நேபுகாத்நேச்சார் என்ற பாபிலோன் ராஜா அரமனை மேல் உலாவிக் கொண்டிருந்தார். இது என் வல்லமையின் பராக்கிரமத்தினால், என் மகிமைப்பிரதாபத்துக் கென்று, ராஜ்யத்துக்கு அரமனையாக நான் கட்டின மகா பாபிலோன் அல்லவா என்று சொன்னான் (தானி. 4:30). உடனே அவன் மனுஷரினின்று தள்ளப்பட்டுப் போனான். கர்த்தாதி கர்த்தர் விரும்பாத காரியம் பெருமையாகும். பெருமையுடன் வாழும் மக்கள் இன்று ஏராளமாய் இருக்கிறார்கள். தங்கள் சரீர நிறத்தினாலும், அழகினாலும் பெருமைப்படுகிறர்கள் உண்டு. பணத்தினால், பொருளினால், தாங்கள் வாழும் இடத்தினால் பெருமைப்படுகிற வர்கள் உண்டு. சிலர் தங்கள் உடையைக் குறித்து பெருமைப் பாராட்டுவார்கள். சிலர் தங்கள் சரீர பெலத்தைக் குறித்து பெருமை பாராட்டுவார்கள். 'கோலியாத்' என்ற பெலிஸ்தன் இஸ்ரவேல் இராணுவத்திற்குத் தன் தோற்றத்தினாலும், பெலத்தினாலும் சவால் விட்டான். இஸ்ரவேல் வீரர்கள் பயந்தனர். ஆனால் தாவீது அவனுக்குப் பயப்படாது சென்றான். ஒரு சிறிய கவண் கல்லினால் அவனைக் கீழே வீழ்த்தினான். அவன் பட்டயத்தைக் கொண்டே அவனைக் கொன்று போட்டான். "சிலர் இரதங்களைக் குறித்தும், சிலர் குதிரைகளைக் குறித்தும் மேன்மைபாராட்டுகிறார்கள் அவர்கள் முறிந்து விழுந்தார்கள்” என்ற சங். 20:7,8ன் வார்த்தைகளை மறவாது, வீண் பெருமைக்கு இடம் கொடாது நம் காரியங்களைச் செய்வோம். கர்த்தர் கொடுத்த எல்லா நல்ல ஈவுகளுக்காக, படிப்பு, வேலை, குடும்பம், செழிப்பு, சிறப்புக்காக நாம் உள்ளத்தின் ஆழத்திலிருந்து நன்றி கூறுவோம். பெருமைக்கு இனி ஒருபோதும் இடம் தராதிருப்போமாக.
3. சாத்தானால் நம் காரியங்கள் தடையாகிறது
"...நாங்கள் உங்களிடத்தில் வர இரண்டொருதரம் மனதாயிருந்தோம், பவுலாகிய நானே வர மனதாயிருந்தேன்; சாத்தானோ எங்களைத் தடைபண்ணினான்." 1 தெசலோனிக்கேயர் 2:18
நம்முடைய காரியங்கள் பூரண வெற்றியடையாதிருப்பதற்கு ஒரு காரணம் சாத்தானின் செயலாகும். பிசாசானவன் கெடுப்பதற்கும், சேதங்களை விளைவிப்பதற்கும் மிகுந்த தந்திரமாய் நம்மைச் சுற்றி வருகிறவனாய் இருக்கிறான். ஒரு சகோதரன் தன் பயிர் நிலத்தில் எதைப் பயிரிட்டாலும் அது சிலநாள் வளர்வது போல் காணப்பட்டு, பின்பு கருகிவிடும். எதினால் இந்தப் போராட்டம் என்று புரிந்து கொள்ளவே முடியவில்லை. ஒருநாள் அதிகமாய் உபவாசத்துடன் ஜெபித்துக் கொண்டு இருந்த சமயம் அந்த சகோதரருக்கு ஒரு தரிசனத்தின் மூலம் அங்கு செயல்படுகிற தீய ஆவிகளின் காரியங்களைக் கர்த்தர் காண்பித்தார். அடுத்த தினமே தான் பயிரிடும் நிலத்திற்குச் சென்று ஜெபித்து, அங்கு செயல்படும். தீய ஆவிகளின் செயல்களைக் கடிந்து கொண்டார். அதன்பிறகு அந்தப் போராட்டமான செயல் நின்று விட்டது. இன்று தந்திரமாய் சாத்தான் நம் முயற்சிகளைத் தோல்வியடையச் செய்கிறான். சிலர் இந்த வேலை எனக்கு ஏற்றது என்று மனு செய்வார்கள். அவர்கள் படித்த படிப்புக்கு ஏற்றதாயும் இருக்கும். அதின் நேர்முக அழைப்பைப் பெறுவார்கள். ஆனால் அது தாமதமாகவும் தடையாகவும் இருக்கிறது. பிசாசானவன் நம் சந்தோஷ வாழ்வை, வெற்றியான வாழ்வைக் கெடுக்கும்படி தந்திரமாய் செயல்படுவதைப் பார்க்க முடிகிறது. தந்திரமான பிசாசின் செயலினால் நம் காரியங்கள் வாய்க்காது போகிறது. ஒரு முறை ஒரு குடும்பத்தார் தங்களின் ஜெபவிண்ணப்பத்தைத் தந்தார்கள். இவர்கள் தாங்கள் சமைத்த உணவுப்பொருட்களை அழகான பெட்டிகளில் 'பாக்' செய்து சில கம்பெனிகளில் உள்ள சிற்றுண்டிச் சாலைகளுக்குக் கொடுத்தனர். ஒவ்வொரு நாளும் புதிதாக சமைத்த ஆகாரத்தை இப்படியாக அனுப்பினார்கள். ஆனால் ஒவ்வொரு நாளும் இவர்கள் தொழில் மிகுந்த போராட்டத்தையே சந்தித்தது. அதிகாரிகள் சாப்பாட்டு பாக்கெட்டுகளைச் சோதிக்கும்போது பூச்சிகள் கிடக்கும். ஏன் இது? எப்படி இப்படியாயிற்று என்று புரியவில்லை. அவர்கள் செய்து வந்த தொழில் அப்படியே நின்று போய் விட்டது. அவர்களின் காரியம் இப்படி ஆயிற்றே என்று கலங்கிய நேரத்தில், அவர்களிடம் இருந்து பிரிந்து சென்ற வேலைக்காரனின் தீய செயலினால் இது வந்துள்ளது என்று அவர்கள் அறிந்தனர். பலருடைய வாழ்வில் இந்தத் தீய ஆவிகளின் செயலினால் காரியங்கள் கெட்டு, தோல்வியும், பெரிய நஷ்டமும், வேதனையும் உண்டாகிறது. திருமண காரியங்கள் கூடாமல் போவது, வீடு கட்ட முடியாது போவது போன்ற காரியங்கள் இதின் செயல்களாய் இருக்கிறது.
4.கர்த்தரின் ஊழியருக்கு விரோதமாய் செய்யும் காரியம் வாய்க்காது போகிறது
"உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதே போம்; உனக்கு விரோதமாய் நியாயத்தில் எழும்பும் எந்த நாவையும் நீ குற்றப்படுத்துவாய்; இது கர்த்தருடைய ஊழியக்காரரின் சுதந்தரமும், என்னாலுண்டான அவர்களுடைய நீதியுமாயிருக்கிறதென்று கர்த்தர் சொல்லுகிறார்." ஏசாயா 54:17
இன்று கர்த்தரின் ஊழியர்களுக்கு விரோதமாய்ச் செய்யும் காரியங்கள் மிகுதி. இந்த உலகத்தில் அரசாங்கத்திற்கென்று வேலை செய்கிற மக்கள் உண்டு. சிலர் தனியார் கம்பெனிகளில் வேலை செய்கிறார்கள். இவர்கள் வேலை செய்யும் இடங்களில் அவர்களுக்கு உரிய சலுகைகள் உண்டு. சிலர் இராணுவத்தில் பணி செய்வார்கள். அவர்களுக்கு விரோதமாய் எழும்பும் காரியங்களை அரசாங்கமே அவர்களுக்காக விசாரித்து செயல்படுகிறது. கர்த்தரின் வேலைக்காரராகிய தேவ ஊழியர்களுக்கு விரோதமாய் காரியங்களைச் செய்யும்போது, கர்த்தரே காரியங்களை வாய்க்காது போகும்படி செய்கிறார். அத்துடன் கேடான, பயங்கரமான காரியங்களும் விரோதமாய் செயல்படுகிறவர்களுக்கு நேரிடும். தேவ ஊழியர்களுக்கு விரோதமாய் செய்யும் எந்தக் காரியமும் வாய்க்காதே போய்விடும்.
தானியேலை தந்திரமாய்க் குற்றப்படுத்தி அவனைக் கொல்லவும், அழிக்கவும் முற்பட்டனர். வேறு தேசம், வேறு ஊரைச் சார்ந்தவன். இவன் எப்படி நமக்கு மேலாக இருக்கலாம் என்று விரோதமாய்க் கூட்டங்கூடி தந்திரமாய்க் காரியங்களைச் செய்தார்கள். ஆனால் எந்த அளவின்படி அளக்கிறாயோ, அந்த அளவின்படியே உனக்கு அளக்கப்படும் என்ற தேவ நியமனத்தை மறந்து செயல்பட்டார்கள். சிங்கத்தின் கெபியில் தள்ளப்பட்டு வேதனையான முடிவைச் சந்தித்தனர். சகோதரனே, சகோதரியே, எந்த தேவ ஊழியருக்கும் விரோதமாய் எழும்பாதே. அவர்களைக் குற்றப்படுத்தாதே, அவர்கள்மீது வழக்கும் தொடராதே, தேவனுடைய நீதியினால் உன் காரியம் வாய்க்காதே போகும்.
நம்முடைய காரியங்கள் வாய்க்க என்ன செய்ய வேண்டும்?
1. கர்த்தரை நம்பி நம் வாழ்வை ஒப்புக் கொடுக்க வேண்டும்
"உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்." சங்கீதம் 37:5
மனிதன் பலவிதமான நம்பிக்கை நிறைந்தவனாக இருக்கிறான். நாம் கர்த்தர் மீது பூரண நம்பிக்கையை வைக்கும் போது நம்மை விடுவிக்கிறார் (எரே.39:18), சங். 32:10ல் 'கர்த்தரை நம்பியிருக்கிறவனையோ கிருபை சூழ்ந்து கொள்ளும்' என்று சொல்லியிருக்கிறது. மறைந்து போகும் பெலத்தின் மீதும், நம்மை விட்டு ஒடிப்போகும் செல்வத்தின் மீதும் நம்பிக்கை வைத்து வேதனையையும், பாடுகளையும் அடைகிற மக்கள் ஏராளமாய் இருக்கிறார்கள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நாம் நம் வாழ்வின் நம்பிக்கையாகக் கொண்டு, நம்மை அவரின் வழிநடக்கும்படி ஒப்புக் கொடுக்கும்போது, நம் காரியம் அனைத்தையும் கர்த்தர் வாய்க்கச் செய்வார். உறுதியான உள்ளத்துடன் கர்த்தரை நம்பி, அவர் வழி நடந்து, காரியங்களைச் செய்யும்போது, கர்த்தர் நமது காரியங்களை வெற்றியாக வாய்க்கச் செய்வார். 'நான் விசுவாசிக்கிறவர் இன்னார் என்று அறிவேன், நான் அவரிடத்தில் ஒப்புக்கொடுத்ததை அவர் அந்நாள்வரைக்கும் காத்துக்கொள்ள வல்லவர்' (2 தீமோ. 1:12) என்ற வார்த்தையின்படி நாம் காக்கப்பட்டு, நம் காரியங்கள் பூரணமான வெற்றியினால் நிறைந்து நாமும் மிகுந்த ஆசீர்வாதம் அடைவோம்.
2. காரியங்கள் வாய்க்க கர்த்தரைத் தேட வேண்டும்
"தேவனுடைய தரிசனங்களில் புத்திமானாயிருந்த சகரியாவின் நாட்களிலே தேவனைத் தேட மனதிணங்கியிருந்தான்; அவன் கர்த்தரைத் தேடின நாட்களில் தேவன் அவன் காரியங்களை வாய்க்கச்செய்தார்."
2 நாளாகமம் 26:5
மனிதன் தன் காரியங்கள் ஜெயமாய் இருக்க வேண்டும் என்று பல புண்ணியஸ்தலங்களைத் தேடிச் செல்லுகிறான். தான் நினைத்த காரியங்களும், முயற்சிக்கிற காரியங்களும் முழுமையாக வாய்க்க வேண்டும் என்று பணத்தைச் செலவிட்டு அவ்விடங்களுக்குச் செல்லுகிறான். ஆனால் மெய்யான ஜீவனுள்ள கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைத் தேட இணங்குவதில்லை. இந்தப் பகுதியில் உசியா என்ற ராஜா கர்த்தரை உண்மையாய்த் தேடினதால் அவன் காரியங்கள் வெற்றியாக வாய்த்தது என்று பார்க்கிறோம். ஒருமுறை ஊழியத்திற்காக ஹாங்காங் சென்றிருந்தோம். கர்த்தரின் ஆவியானவர் நடத்தினபடியால் நானும் இரண்டு சகோதரர்களும் சென்றோம். அங்கு தங்கின நாட்களில் ஒருவரையும் எங்களுக்குத் தெரியாதபடியால் சனிக்கிழமை மாலை வரை அங்கிருந்த ஒவ்வொரு ஆலயத்திற்கும் சென்று போதகர்களைச் சந்தித்தோம். ஏன் இந்த ஊருக்கு வந்தோம் என்று சொல்லத்தக்கதான நிலை உருவானது. கடைசியில் நம் முயற்சியை விடுவோம், கர்த்தரைத் தேடுவோம் என்று இரவு ஜெபத்தினாலும், வேண்டுதலினாலும் கர்த்தரைத் தேடி படுக்கைக்குச் சென்றோம். ஊழியத்தைச் செய்ய எந்த வழியும் காணப்படவில்லை. அடுத்த தினம் ஞாயிற்றுக் கிழமையாக இருந்த படியால் ஆங்கில ஆராதனைக்குச் சென்றால் நலம் என்று, ஆங்கில ஆராதனை நடைபெறும் சபைக்குச் சென்றோம். போதகரிடம் சென்று நாங்கள் இந்த ஆராதனையில் செய்தி கொடுக்கலாமா? நாங்கள் இந்தியாவிலிருந்து வந்திருக்கிறோம் என்றோம். அதற்குப் போதகர் முடியாது என்று கூறிவிட்டார். எங்கள் உடை நன்றாக இருந்திருந்தால் வாய்ப்பு கிடைத்திருக்குமோ ? என்று உள்ளத்தில் கூறிக் கொண்டு ஆலயத்தின் கடைசி வரிசையில் இருந்த ஆசனத்தில் அமர்ந்தோம். ஆராதனை நேரத்தில் போதகர் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அமெரிக்கா என்று பல நாடுகளிலிருந்து வந்திருந்த தேவ ஊழியர்களை வரவேற்றார். பிரசங்கத்திற்கு முன்பு ஒரு பாடல் பாடப்பட்டது. போதகர் பிரசங்கத்துக்காக தன்னை ஆயத்தப்படுத்தும் வண்ணம் முழங்கால்படியிட்டு ஜெபம் செய்து கொண்டிருந்தார். திடீரென எழுந்திருந்து, பின்னால் அமர்ந்திருந்த என்னிடம் வந்து நீங்கள் இந்த ஆராதனையில் செய்தி கொடுங்கள். நான் அதை மொழி பெயர்க்கிறேன் என்றார். அந்த ஆராதனை மிகுந்த ஆசீர்வாதமாக இருந்தது. அதினால் சீன தேசத்திற்கும் சென்று சிறிய ஊழியத்தைச் செய்ய கர்த்தர் கிருபை புரிந்தார். உன் காரியங்கள் முழுமையாக வாய்க்கப்பட வேண்டுமானால் இன்றே கர்த்தரைத் தேட தீர்மானித்து செயல்படு.
3. காரியங்கள் வாய்க்க வேத வார்த்தைகளைத் தியானிக்க வேண்டும்
"கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப் போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்." சங்கீதம் 1:2,3
நமக்கு எது பிரியமாய் இருக்கிறதோ அதை அதிக உற்சாகத்துடன், ஆர்வத்துடன் நாம் செய்கிறோம். எந்தக் காரியத்தில் நாம் பிரியமாய் இருக்கிறோமோ அதிலே நம் மனம் பதிந்து விடுகிறது. நான் சிறுவனாக இருந்த போது மீன் பிடிக்கச் செல்ல வேண்டும் என்ற ஆர்வம் என்னில் அதிகமாய் இருந்தது. ஆகவே என் தாய் தண்ணீருள்ள இடத்திற்குப் போகாதே என்று என்னை எவ்வளவு தான் கண்டித்தபோதும், மீன் தூண்டிலுக்குத் தேவையான நரம்பு, ஈய குண்டுகளையும், அதற்குத் தேவையான காரியத்தையும் குறித்தே எண்ணுவதுண்டு. அதை வாங்கி பத்திரமாய் ஒளித்து வைத்துக் கொள்ளுவேன். சிறிய பெரிய மீன்களுக்குரிய தூண்டில் முட்களை நூற்றுக்கணக்காக வாங்கி வைத்தேன். எனக்குத் தின்பண்டம் சாப்பிடக் கொடுக்கும் அத்தனை காசையும் அதில் செலவிட்டேன். காரணம் மீன்பிடிப்பது எனக்குப் பிரியம். இன்று நாம் எதனைச் செய்ய பிரியப்படுகிறோமோ அதையே செய்ய நம் மனம் நம்மை ஏவுகிறது. இதைப் போல நாம் கர்த்தரின் வேதத்தைத் தியானிக்க மனதாய் இருந்தால் நாம் முற்றிலும் உலக மக்களுக்கு முன்பாக வேறுபட்டவர்களாயும், நற்பண்புகளாகிய கனி நிறைந்தவர்களாயும் மாறி விடுவோம். அத்துடன் நாம் எந்தக் காரியத்தைச் செய்தாலும் அது வாய்க்கும். நான் ஒரு சகோதரனை அறிவேன். அவர் எந்த நேரமும் வேதத்தை அதிகமாக தியானித்துக் கொண்டே இருப்பார். அரசாங்க அலுவலகத்தில் உள்ள வேலையானாலும், ஊழிய காரியமானாலும், அதில் முழுமையாக வெற்றியாகச் செய்கிறதைப் பார்க்கிறேன். இன்று முதல் கடமைக்காக, ஏனோ தானோ என்று வேதத்தை வாசியாமல், முழு மனதுடன் பிரியமாய் தியானிக்க இடம் கொடுப்போம், நம் காரியங்கள் வாய்க்கும்.
4.கர்த்தரை நம்முடன் வைத்துக்கொண்டால் காரியங்கள் வாய்க்கும்
"கர்த்தர் அவனோடே இருந்தபடியினாலும், அவன் எதைச் செய்தானோ அதைக் கர்த்தர் வாய்க்கப்பண்ணினபடியினாலும், அவன் வசமாயிருந்த யாதொன்றையும் குறித்துச் சிறைச்சாலைத் தலைவன் விசாரிக்க வில்லை." ஆதியாகமம் 39:23
யோசேப்பு தன் சகோதரர்களால் வெறுக்கப்பட்டு, குழியில் போடப்பட்டு, அடிமையாக விற்கப்பட்டவன். அவனை நேசிப்பதற்கும், அவனை விசாரிப்பதற்கும் யாருமில்லை. அடிமையாக வேறு ஒரு நாட்டிற்குச் சென்றவன். தனிமை, வெறுமை, வேதனை நிறைந்த வாழ்வு. உலகத்தில் ஒரு அனாதையைப் போல் அவன் வாழ்க்கை இருந்தது. தன் உள்ளத்தின் காரியங்களைப் பகிர்ந்து கொள்ள ஒருவருமில்லாதிருந்தவன். ஆனால் இந்த யோசேப்புடன் கர்த்தர் இருந்தார். இதை வாசிக்கும் சகோதரனே, சகோதரியே, உன் வாழ்க்கை பல தோல்விகள், துக்கம், நிறைந்திருக்கலாம். உன்னை நேசிக்கும் இயேசு கிறிஸ்து உன்னோடே இருந்து உன் காரியங்களை வாய்க்கச் செய்ய விரும்புகிறார். உன்னைக் காண்கிறவர்கள் உன்னுடன் கர்த்தர் இருக்கிறார் என்று சொல்லத்தக்க வாழ்வு வாழ இன்று உன் உள்ளத்தைத் திறந்து கொடு. அன்று யோசேப்போடே கர்த்தர் இருக்கிறார் என்றும், அவன் செய்கிற யாவையும் கர்த்தர் வாய்க்கப் பண்ணுகிறார் என்றும் அவன் எஜமான் கண்டு, யோசேப்பினிடத்தில் தயவு வைத்து, அவனைத் தனக்கு ஊழியக்காரனும், தன் வீட்டுக்கு விசாரணைக்காரனுமாக்கி, தனக்கு உண்டான யாவற்றையும் அவன் கையில் ஒப்புவித்தான். அவ்வாறே உன் வாழ்விலும் கர்த்தர் அற்புதம் செய்வார்.
இன்று உன்னோடு கர்த்தர் தங்கி இருக்க, நீ தேவனுடைய ஆலயமாய் மாற உன்னை ஒப்புக்கொடுப்பாயா ? 'இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்' (மத்.28:20) என்ற இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டு அவர் வழி நடக்க உன்னை ஒப்புக்கெ ாடு. அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
கிறிஸ்து இயேசுவின் பணியில்,
சகோ. C. எபனேசர் பால்