கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினால் வாழ்த்துகிறேன்.
ஒருவரை நாம் அறிந்து புரிந்து கொள்வதற்கு நீங்கள் யார், என்ன செய்கிறீர்கள் என்று கேட்டு விசாரித்து, பின்பு நம் காரியங்களைப் பகிர்ந்து கொள்ளுகிறோம். முன்பின் தெரியாதவரிடம் நாம் எளிதாய் எதையும் அறிவிக்க, பேச மாட்டோம்.
இன்று நாம் இயேசு கிறிஸ்துவை யார் என்று அறியாமல், தெரியாமல், அவரைத் தொழுது சேவிக்க, பின்பற்ற, துதிக்க, மகிமைப்படுத்த இயலாது. இருளில் உள்ளவர்களுக்கு வெளிச்சத்தைத் தர, பாவங்களைச் சுமந்து தீர்க்க, பிசாசின் கிரியைகளை அழிக்க, நல்ல மேய்ப்பனாக இருந்து நம்மை வழி நடத்த, நமக்கு நித்திய ஜீவனைத்தர இயேசு கிறிஸ்து இவ்வுலகிற்கு வந்தார். இயேசு கிறிஸ்து இவ்வுலகத்திற்கு வந்த நோக்கத்தையும், அவருடைய திட்டத்தையும் நாம் அறிந்து, அவரை மகிமைப்படுத்த வேண்டும்.. ஆனால் இன்று உன்னுடைய தனிப்பட்ட வாழ்வில் இயேசு கிறிஸ்து யாராகயிருக்கிறார்? எப்படிப்பட்டவராக செயல்படுகிறார் என்று ஆராய்ந்து பார்.
ஒருமுறை ஒரு குடை வியாபாரி தன் கடைக்கு வந்த ஒரு மனிதனைக் குறித்துக் கூறினார் - 'வெயில், மழை' படாது காக்கக்கூடிய குடை என்ற வியாபாரத்தின் விளம்பரத்தைக் கண்டு குடை ஒன்றை வாங்க ஒரு மனிதர் வந்தாராம். குடை வாங்குவதற்கு முன்னர், ஐயா, இந்தக் குடை வாங்கிவிட்டால், இனி எங்கு சென்றாலும், மழை, வெயில் படாதா என்று கேட்டவுடன் அந்தக் குடைக்காரர் ஆமாம் என்று கூறி அனுப்பிவிட்டாராம்.சில மணி நேரத்தில் குடை வாங்கியவர் கடைக்கு மீண்டும் வந்து, உங்கள் குடை சரியில்லை, நீங்கள் சொல்வது தவறு என்று வாதாட ஆரம்பித்தாராம். உங்கள் குடையை வாங்கி எனது பையில் வைத்துள்ளேன், என்றாலும் என்மீது வெயில், மழைநீர் படுகிறதே என்றாராம். அந்தக்குடை வியாபாரி ஐயா, தாங்கள் வாங்கிய குடையைக் கையில் பிடித்தால்தான், வெயிலோ மழைநீரோ படாது என்று அறிவுரைக் கூறி அனுப்பினாராம்.
மீண்டும் குடை வாங்கிய மனிதர் திரும்பி வந்து, ஏன் என்னைட் போன்றவர்களை ஏமாற்றுகிறீர்கள் ? குடையைக் கையில் தாங்கள் சொன்னபடிதான் வைத்திருந்தேன். ஆனாலும் வெயிலும் மழைநீரும் என்மீது விழுகிறதே என்று கூறி கோபம் அடைந்தாராம். அச்சமயம் குடைவியாபாரி தங்களின் குடையை கையில் மாத்திரம் அல்ல. தலைக்கு மேல் நேரடியாக வைத்து பிடித்துக் கொள்ள வேண்டும் என்று கூறி அனுப்பினாராம்.
மீண்டும் குடை வாங்கிய மனிதர் அந்த வியாபாரியிடம் வந்து ஐயா, நீங்கள் சொன்னபடிதான் செய்தேன். வித்தியாசம் ஒன்றும் தெரியவில்லை, எனக்கு குடை வேண்டாம் என்று கூறி தர்க்கம் செய்ய ஆரம்பித்தாராம்.
இன்று அருமை சகோதரனே, சகோதரியே, அறியாமையின் நிலையில் இருக்கிற மனிதனைப்போல், உன் வாழ்வின் கஷ்டத்தினால், துன்பத்தினால், துயரத்தினால், இயேசுவை ஏற்றுக் கொண்ட பின்பும், அவரைக் குறை கூறிக்கொண்டு இருக்கலாம். இயேசு கிறிஸ்துவை முழுமையாக அறியாத, புரியாத காரணத்தால் ஏற்பட்ட வேதனை தொடருகிறதா என்று உன் உள்ளத்தை ஆராய்ந்து.. இயேசு கிறிஸ்து உனக்கு யாராக இருந்தார், இருக்கிறார் என்று புரிந்து செயல்படு.
கடைக்காரர் குடையை வாங்கிய மனிதனிடம் குடையை எப்படி விரித்துப் பிடிக்க வேண்டும் என்று கூறி அனுப்பினார். அதன்பின் தான் குடை வாங்கிய நபர் அக்குடையின் நன்மைகளை அனுபவிக்க அறிந்தார்.
ஆம், இன்று உனது வாழ்வில் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொள்வதுடன், இயேசு கிறிஸ்துவை உன் வாழ்வில் எவ்விதமான நிலைகளில் வைக்கிறாயோ அதன்படி தான் உனது வாழ்வில் கர்த்தர் செயல்படுவார்.
இயேசு கிறிஸ்து நம் வாழ்வில் எப்படிப்பட்டவராக இருக்கிறார்?
1. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நம்பும்போது அவர் எல்லா இக்கட்டு, பிரச்சனைகளிலிருந்தும் தப்புவிக்கிறவராக இருக்கிறார்.
''உம்மை நம்புகிறவர்களை அவர்களுக்கு விரோதமாய் எழும்புகிறவர் களினின்று உமது வலதுகரத்தினால் தப்புவித்து இரட்சிக்கிறவரே. உம்முடைய அதிசயமான கிருபையை விளங்கப்பண்ணும்.” சங்கீதம் 17:7
இன்று மனிதனுடைய வாழ்வின் பிரச்சனையிலிருந்து தப்பித்துக் கொள்ள பலவிதமான உபாய தந்திரங்களை மனிதன் கையாளுகிறான். ஆனால் அவைகள் பூரணமாய்த் தப்புவியாது போராட்டத்தைக் கொடுத்துக் கலங்க வைக்கிறது.
இன்று எனது வாழ்வில் பல பிரச்சனைகள் என்னைச் சூழ்ந்து கொண்டதே என்று கலங்கும் சகோதரனே, சகோதரியே உன் வாழ்வில் பிரச்சனைகளிலிருந்து தப்புவிக்கவே கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, சிலுவை மரத்தில் அடிக்கப்பட, பலியாக்கப்பட தம்மை ஒப்புக் கொடுத்தார். நிந்தனையான வார்த்தைகளைக் கேட்டு கலங்கு கிறாயே, உன் நிந்தனையை நீக்கும்படி இயேசு கிறிஸ்து நிந்திக்கப்பட்டார். "சிறுமைப்படுகிறேன்” என்று வேதனையடையும் தேவப்பிள்ளையே, உன் சிறுமையையும், வேதனையையும் மாற்றும்படி கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கல்வாரி சிலுவையில் சிறுமைப்படவும், வேதனைப்படவும், தம்மை ஒப்புக் கொடுத்தார்.
இன்று இந்த இயேசு கிறிஸ்து எனக்காக தன் ஜீவனைக் கல்வாரி சிலுவையில் ஒப்புக் கொடுத்தார் என்று நீ நம்புவாயானால் உன் வாழ்வில் கர்த்தர் அதிசயமானவைகளைச் செய்வார்.
“உன்னை வேடனுடைய கண்ணிக்கும், பாழாக்கும் கொள்ளை நோய்க்கும் தப்புவிப்பார்” என்ற அருள்வாக்கின்படி நம்மை எல்லா இக்கட்டுகளுக்கும் தப்புவித்து காப்பார்.
உங்களை என் கைக்குத் தப்புவிக்கப்போகிற தேவன் யார்? என்று நேபுகாத்நேச்சார் என்ற ராஜா, தனக்குக்கீழ் பணிபுரிந்த, கர்த்தரின் நாமத்தின் மீது நம்பிக்கை வைத்து, அவர் வழி நடந்த மூன்று வாலிபர்களைக் கேட்டான். தவறான, கர்த்தரை விட்டு விலகும் காரியத்திற்கு உட்படுத்த திட்டமிட்டு செயல்புரிந்த ராஜாவின் வார்த்தையை, கட்டளையைக் கர்த்தரின் நாமத்தில் நம்பிக்கை வைத்த அந்த மூன்று மனிதர்களையும் புறக்கணித் தார்கள். ராஜா தண்டனைக்குக் கட்டளையிட்டான். எரிகிற நெருப்புச் சூளையில் போடப்பட்டனர். நம்பிக்கையின் தேவனின் பிரசன்னம் நெருப்பின் ஊடாய் கடந்து வந்தது. நெருப்பு சேதப்படுத்தாததைக் கண்ட ராஜாவும், அவன் அதிகாரிகளும் ஆச்சரியப்பட்டனர். நெருப்பில் இருந்து வெளியே வர ராஜா அழைப்பைக் கொடுத்தான். ராஜாவின் தண்டனை அவர்களைச் சேதப்படுத்தவில்லை. கர்த்தரின் மீது இருந்த நம்பிக்கை அவர்களைத் தப்புவித்தது.
இன்று அருமை சகோதரனே, சகோதரியே, கர்த்தரின் வழியை விட்டு விலக்க இவ்வுலகத்தின் அதிபதி பலவிதமான தந்திரமான காரியங்களை உனக்கு எதிராக செய்து கொண்டு இருக்கிறான் என்று பயப்படாதே. பயந்து அவனது வலையில் விழுந்து விடாதே. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இன்றும் ஜீவிக்கிறார். உன் நம்பிக்கைக்கு ஏற்ற விதமாய், இயேசுவின் காயப்பட்ட கரங்கள் உன் நெருக்கத்திலிருந்து, உன் பிரச்சனையிலிருந்து உன்னைத் தப்புவித்து அரவணைத்துக் கொள்ளும்.
ஒரு முறை ஒரு குடும்பத்தார் தங்கள் மகளை நன்றாய்ப் படிக்கக் கூடாது என்றும், பைத்தியமாயும் அலைந்து திரிய வேண்டும் என்ற சூனியத்தின் கட்டுகள் இருக்கிறது என்று அழைத்து வந்தார்கள். பன்னிரெண்டாம் வகுப்பு வரை வகுப்பில் முதல் மாணவியாக இருந்த மகளுக்கு திடீரென பாதிப்பு ஏற்பட்டு விட்டது என்றனர். தகப்பனார் ஒரு இன்ஜினியர், தாயார் அரசு ஆஸ்பத்திரியில் தலைமை நர்ஸ்சாக பணி யாற்றிக் கொண்டிருந்தார். தங்கள் ஊரில் உள்ள இடப்பிரச்சனையால் செய்த சூனியத்தின் தாக்குதலாக இருந்தது. திடீரென இந்த மகள் வீட்டை விட்டு எங்காவது போய் விடுவாள். பெற்றோரும், உற்றாரும், நண்பர்களும் ஊரில் உள்ள எல்லாப் பகுதிகளிலும் தேடி, கண்ணீர் சிந்தி கொண்டிருந்தார்கள். அந்தநாளில் மூன்று நாள் கழித்து மகளை கண்டுபிடித்தவுடன் என் வீட்டிற்கு ஜெபிக்க அழைத்து வந்தார்கள். ஒவ்வொரு நாளும் ஜெபித்துக் கொண்டே இருந்தோம். பல நாட்களும், மாதங்களும் ஆகியும் விடுதலை வந்த பாடில்லை. இரவு நேரத்தில் கெட்ட வார்த்தை சொல்லி சத்தமிடுவாள். அவள் இருந்த அறையில் எரிந்து கொண்டிருந்த குண்டு பல்பை கை தட்டுவது போல் தட்டி உடைத்தும் போட்டாள். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், என்ன பைத்தியக்காரப் பிள்ளையை வைத்து ஜெபம், ஜெபம் என்று செய்கிறார்களே என்று பேச ஆரம்பித்து விட்டார்கள். சிலர் பெற்றோரைப் பார்த்து ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போங்கள் என்று ஆலோசனை கூற ஆரம்பித்து விட்டார்கள்.
இன்னும் சில தேவ ஊழியர்களும் கூட ஜெபிக்க ஆரம்பித்தார்கள். அந்த வாலிப மகளின் போராட்டம் குறையவில்லை. ஒரு நாள் கத்தியை எடுத்து தன் தகப்பனார் கழுத்தில் குத்தப் பார்த்தாள். இந்த நிலையில் தப்புவிக்கும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கிருபை புரிந்தார். அந்த மகளில் இருந்த சூனியக் கட்டுகள் எரிந்தது. தெளிந்த புத்தியுள்ளவளாக மாறினாள். அதன்பின் அந்த மகள் தன் படிப்பைத் தொடர்ந்து படித்தாள். தனது பட்டப்படிப்பைப் படித்து முடித்த பின்பு சில ஆண்டுகள் ஜெபதொனி அலுவலகத்தில் பணிபுரிய ஆரம்பித்தாள். அவள் ஆபிசுக்கு வரும்போதே அக்கம் பக்கத்து வீட்டார், தங்கள் வீட்டின் வெளிப்பகுதியில் இருந்து பார்த்தனர். சிலர் தங்கள் குடும்பங்களில், தெரிந்தவர்களில் உள்ள போராட்டம் நீங்க ஜெபிக்க அழைத்துவர ஆரம்பித்தனர். கர்த்தருடைய நாமம் மகிமைப்பட்டது. இயேசு கிறிஸ்து நம்மைத் தப்புவிக்கிறவர் என்று அநேகர் சொல்லத்தக்கதாக காரியம் நடைபெற்றது.
உன் நம்பிக்கை யார் மீது, எதன் மீது உள்ளது ? உனக்காகத் தன் ஜீவனைக் கொடுத்து, உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்துவின் மீதா? அல்லது அழிந்து போகும் செல்வம், மாறும் மனித வார்த்தையின் மீது நம்பிக்கை வைத்துள்ளாயா? இன்று உன்னை தம் வல்லமையால் மீட்க இப்பூமியில் வந்த அன்பின் தெய்வமாகிய இயேசு கிறிஸ்துவை நீ நம்புவாயானால் எல்லா இன்னல்களிலுமிருந்து உன்னைத் தப்புவித்து காப்பார்.
2. இயேசு கிறிஸ்துவிடம் வந்து, அவரைப் பணிந்து கொள்பவருக்குச் சுகமும் சுத்தமான வாழ்வும் தருகிறார்.
"அப்பொழுது குஷ்டரோகி ஒருவன் வந்து அவரைப் பணிந்து: ஆண்டவரே! உமக்குச் சித்தமானால், என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்றான்."
“இயேசு தமது கையை நீட்டி அவனைத் தொட்டு : எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார். உடனே குஷ்டரோகம் நீங்கி அவன் சுத்தமானான்." மத்தேயு 8:2,3
இன்று பலவிதமான வியாதியினால் பாதிக்கப்பட்டு கண்ணீருடன் உள்ள சகோதரனே, சகோதரியே, நேற்றும் இன்றும் என்றும் மாறாத இயேசு கிறிஸ்துவிடம், 'மரித்தேன், சதாகாலமும் ஜீவிக்கிறேன்' என்ற அன்பின் தேவனின் சமுகத்தில் வருவதற்கு இன்று உன்னை ஒப்புக் கொடுத்தால், இன்று நீ தீர்மானித்தால் உனக்குச் சுகமும், சுத்தமான வாழ்வும் இலவசமாகக் கொடுப்பார்.
ஒருமுறை இந்தியாவிலுள்ள கேரளாவில் ஒரு நற்செய்திக் கூட்டத்தில் கர்த்தர் தம் வல்லமையை மிகுதியாக அனுப்பினார். கூட்டத்தில் வாழ்க்கையில் எல்லாவற்றையும் இழந்து, நாற்றமெடுத்து சரீரப்புண்களுடன் மிகுந்த துக்கத்துடன், கண்ணீரோடு ஒரு சகோதரர் வந்திருந்தார்.
வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்களெல்லாரும் என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் என்ற அருள்நாதர் இயேசு கிறிஸ்துவின் வார்த்தைப்படி கூட்டத்திற்கு வந்தார். ஜெபவேளையில் கர்த்தரிடத்தில் வந்த அவரில் தேவ வல்லமை வெளிப்பட்டது. அவரது வியாதியை கர்த்தரின் ஆவியானவர் சுட்டிக் காட்டி உடைந்துபோன அவரது மனதின் நிலையை அப்படியே கர்த்தர் அறிவித்து சுகப்படுத்தினார். அம்மனிதர் மறுநாளில் நடைபெற்ற முழு இரவு கூட்டத்தில் தான் இயேசுவிடம் வந்தபடியால் சரீரத்தில் இருந்த புண்கள் அற்புதமாக சுகமான சாட்சியைப் பகிர்ந்து கொண்டார்.
ஒருமுறை சீப்புரு தீவிலே ஊழியம் செய்யச் சென்றபோது, லிமோசலில் உள்ள ஆங்கிலிக்கன் சபையில் செய்தி கொடுத்தேன். ஆராதனை முடிந்தபின் வெளியே வந்தபோது, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மிஷினெரி அவர்கள் தன் வீட்டிற்கு இரவுநேர சாப்பாட்டுக்கு அழைத்தார்கள். சரி என்று கூறினேன். அந்த நாளில் தன் வீட்டுக்கு குறித்த நேரத்தில் அழைத்துச் செல்ல வந்தார்கள். ஆனால் நானும் என்னுடன் இணைந்த அப்பகுதி ஊழியங்களைச் செய்து கொண்டு இருந்த சகோதரியும் செல்ல சற்று தாமதமாயிற்று. தாமதமானபடியால் மன்னிப்பைக் கோரி கூறினேன். தாமதமானபடியால் உடனடியாக சாப்பிடுவோம் என்று கூறியதால், சாப்பாட்டு மேஜைக்கே சென்று அமர்ந்தோம். அந்த மிஷினெரி சாப்பாட்டுக்காக ஜெபிக்கக் கூறினார்கள். அந்த ஜெபநேரத்தில் கர்த்தர் அருளிய தரிசனத்தைக் கூறினேன். ஒரு மாட்டின் கொம்பு அவரது தண்டுவடத்தில், 4வது 5வது கார்ட்டிலேஜில் நடுவில் பதிந்திருப்பதைக் கூறினேன். அதைக் கடிந்து கொண்டு ஜெபித்தேன். அச்சமயத்தில் அந்த மிஷினெரியும் அவரது மனைவியும் அதிகமாகத் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தார்கள். பின்பு அவர்கள் நீங்கள் சொல்லி ஜெபித்தபடியே என் தண்டுவடத்திலுள்ள 4வது 5வது கார்ட்டிலேஜில் கடுமையான வலி இருந்து கொண்டிருந்தது. மருத்துவர் பார்த்து விட்டு பல சிகிச்சை செய்த பின்னும் வலி இருந்தபடியால், இனி அறுவை சிகிச்சைதான் செய்ய வேண்டும் என்று சொல்லி விட்டார் என்று கூறினார்கள். அத்துடன் இந்த அறுவைச் சிகிச்சையில் பாதிப்பு ஏற்படும் என்றும் கூறியிருந்தார் களாம். யாருக்குமே தெரியாத வலியைக் கர்த்தர் அறிவித்து குணப்படுத்தினபடியால் அவருக்கு ஸ்தோத்திரம் செலுத்தினார்கள். இரவு 9 மணிக்கே படுக்கைக்குச் செல்ல வேண்டும் என்றவர், இரவிலே இது எப்படி உங்களுக்கு கர்த்தர் அறிவித்தார் என்று என்னைப் பார்த்து கேள்வி கேட்க ஆரம்பித்தார். ஆவியின் வரங்களைக் குறித்துக் கூறினேன். எவ்விதமாக தரிசனம் தருகிறார் என்று விவரித்துக் கூறினேன். அந்த மிஷினெரியோ வேதாகமத்தில் அநேக டாக்டர் பட்டம் பெற்றவர். இது அவசியம் அல்ல, உங்களைப் போல நாங்களும் ஊழியம் செய்ய வேண்டும் என்று கூறினார்.
வியாதியோடும், வேதனைகளோடும் பாடுபடுகிற நீ, கர்த்தராகிய இயேசுவிடம் வருவாயானால், உனக்குச் சுகம், பெலன் தருவார். அது மாத்திரமல்ல உன் உள்ளான மனதும் சுத்தமாகும். இதைப் பெற்றுக்கொள்ள இயேசுவிடம் வா. பணிந்து மன்றாடு. வியாதி நீங்கி புது வாழ்வும், சுகமும், சுத்தமாக்கப்பட்ட வாழ்வும் பெறுவாய்.
3. இயேசு கிறிஸ்துவை வாழ்வில் முன்னணியில் வைத்துக் கொள்ளும் போது, அவர் உன் வாழ்விலுள்ள தடைகளை நீக்குவார்.
"தடைகளை நீக்கிப்போடுகிறவர் அவர்களுக்கு முன்பாக நடந்து போகிறார்; அவர்கள் தடைகளை நீக்கி, வாசலால் உட்பிரவேசித்துக் கடந்துபோவார்கள்; அவர்கள் ராஜா அவர்களுக்கு முன்பாகப்போவார், கர்த்தர் அவர்கள் முன்னணியில் நடந்துபோவார்." மீகா 2:13
அன்பு சகோதரனே, சகோதரியே, இன்று இயேசு கிறிஸ்துவை உன் வாழ்வில் முன்னாக வைத்துக்கொள். அப்பொழுது சகல தடைகளும் நீங்கி சுக வாழ்வை அடையலாம்.
என் பெலத்தால், என் ஞானத்தால் என்றும், என்னுடைய முயற்சி என்றும் நீ நினைத்து செயல்பட்டால் உண்மையான முழு ஆசீர்வாதத்தையும் அடைய முடியாதபடி கலங்குவாய்.
இன்று நீ வீடு கட்டுகிறதற்குத் தடைகள் உள்ளதா ? உன் வியாபாரம் துவங்குவதிலும் அதற்கு ஏற்ற இடம், பொருள் பெறுவதிலும் தடையா ? உன் தேர்வு எழுதுவதில் தடையா? உன் திருமணம் தடையாகிக்கொண்டேயிருக்கிறதா? உன் வேலை நிரந்தரம் ஆக்கும் உத்தரவு தடையாக்கப்பட்டுள்ளதா? திருமணமாகி குழந்தைப் பெறுவதில் தடையா ? உனது தடை எதுவானாலும் சரி. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை உன் வாழ்வில் முன்னாக வைத்துபார். உனது முயற்சியில், உனது உரிமையில், உனது நியாயத்தை அடைவதில் உள்ள தடைகள் நொறுக்கப்படுவதை, நீக்கப்படுவதைக் காண்பாய்.
ஒருமுறை ஒரு கட்டிடம் கட்டும் காண்டிராக்டருக்கு வந்துச் சேர வேண்டிய பல இலட்சக்கணக்கான பணம் வந்து சேராமல் தடையாக இருந்தது. சில மாதங்கள் ஆனபடியால் கலங்கினவராய் இருந்தார். சில ஆயிர ரூபாய் லஞ்சமாகக் கொடுத்தாவது தன் பணத்தைப் பெற்றுவிட முயற்சித்தும், தாமதம் நீடித்துக்கொண்டிருந்தது. கலங்கியவர் ஜெபிக்க வந்த சமயம், இன்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை முன் வைத்து ஜெபியுங்கள். கர்த்தர் தங்களின் தடைகளை நீக்கி, பணம் கிடைக்கச்செய்வார் என்று கூறினேன். ஆலோசனைக்குச் செவிகொடுத்த அவர் வாழ்வில் சில தினங்களில் அவரது முழுத்தொகையும் காசோலையாக வீடுவந்து சேர்ந்தது. இன்றே கர்த்தரை உங்களுக்கு முன்னாக வைத்துக் கொள்ளுங்கள். அதிசயங்களைக் காண்பீர்கள். இயேசுவும், சீஷர்களும் சென்ற படகில் கொந்தளிக்கும் அலை தோன்றியது. தங்கள் பலத்தை முன்வைத்து முயற்சித்தார்கள். தோல்வி, துக்கம், பயம் நீடித்தது, பெருகியது. படகு முன்னேற வில்லை. அடித்தளத்தில் துாங்கிக் கொண்டிருந்த இயேசுவை முன்னணியில் வைத்தார்கள். தங்களின் பெலன், ஞானம் ஒன்றுமில்லை என்று தாழ்த்தினார்கள். இரையாதே என்றதும் காற்றும், கடலின் அலையும் அடக்கப்பட்டு படகு முன்னேறியது.
உன் வாழ்க்கையில் கொந்தளிப்பு போராட்டம் மாறி, ஆசீர்வாதமான, சமாதானமான வாழ்வில் முன்னேற இன்றைக்குக் கர்த்தராகிய இயேசுவை முதன்மையாக வைத்துக்கொள். கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார். உன் தடைகளை நீக்குவார்.
இயேசு கிறிஸ்துவை உன் வாழ்வில் முன்னணியில் வைத்துக் கொள். அவர் உன் தடைகளை நீக்குவார். உன்னை மகிழ்ச்சி அடையச் செய்வார்.
4.இயேசுவின் பாதத்தில் தாழ்த்துவோருக்கு வேதனை நீங்கிய சமாதான வாழ்வு
“தன்னிடத்திலே சம்பவித்ததை அறிந்த அந்த ஸ்திரீயானவள் பயந்து, நடுங்கி, அவர் முன்பாக வந்து விழுந்து, உண்மையையெல்லாம் அவருக்குச் சொன்னாள். அவர் அவளைப் பார்த்து: மகளே, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, நீ சமாதானத்தோடேபோய், உன் வேதனை நீங்கி, சுகமாயிரு என்றார்." மாற்கு 5:33, 34
இன்று பலவிதமான வேதனைகள் சரீரத்தில், ஆவியில், ஆத்துமாவில் அனுபவித்துக் கொண்டுள்ள சகோதரனே, சகோதரியே, இன்று அன்பர் இயேசுவின் பாதத்தில் உன்னை தாழ்த்துவாயானால், அவருடைய காயப்பட்ட கரம் உன் வேதனையை நீக்கும். உன் பாடுகள் நிறைந்த வாழ்வில் சமாதானத்தை ஈந்து உன்னைக் கரம்பிடித்து வழி நடத்துவார்.
என்னால் இனி என் வேதனையைத் தாங்கமுடியாது. நான் எவ்வளவு நாள் இவ்வாறு வாழ்வது, எனக்கு உதவிச் செய்ய யாரும் இல்லை, இந்நிலையிலிருந்து தப்பிக்கொள்ள முடியாது என்று சமாதானத்தை இழந்து புலம்பிக் கொண்டு இருக்கும் சகோதரனே, சகோதரியே, உன் வேதனைகளை நீக்க வேண்டுமென்று தான் இயேசு கிறிஸ்து தன் சரீரத்தில் அத்தனை பாடுகளையும் சுமந்தார். சுமந்ததுடன் மாத்திரமல்ல அதை தீர்த்தும் விட்டார். உன்னையும், என்னையும் இயேசு நேசித்தபடியால் இப்பாடுகளைக் கல்வாரிச் சிலுவையில் சுமந்து தீர்த்தார்.
உன் வேதனை எப்படிப்பட்டதாயினும் கலங்காதே. இன்று இயேசுவின் பாதத்தில் உன்னைத் தஞ்சம் என்று அர்ப்பணி. அருள் பெறுவாய். ஆசிபெற்று பெருவாழ்வு வாழ்வாய்.
5. நம் வாழ்வில் சமாதானம் தருவார்
"...கர்த்தர் தமது ஜனத்திற்குச் சமாதானம் அருளி, அவர்களை ஆசீர்வதிப்பார்.” சங்கீதம் 29:11
வேதனையை நீக்கிய இயேசு கிறிஸ்து நம் வாழ்வில் சமாதானம் தருகிறவராக இருக்கிறார். தனி நபர் வாழ்விலும், குடும்பத்திலும், சபையிலும், ஊரிலும், நாட்டிலும் மெய்யான சமாதானம் தந்து நம்மை ஆசீர்வதிக்கிறவர். 'அவர் உன் எல்லை களைச் சமாதானமுள்ளவைகளாக்கி, உசிதமான கோதுமையினால் உன்னைத் திருப்தியாக்குகிறார்.' கைவிடப்பட்டு கலங்கும் தேவப்பிள்ளையே, 'சமாதானத்தின் உடன்படிக்கை பெயராமலும் இருக்கும்' என்றவர் ஜீவிக்கிறார். என்னுடைய சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன் என்ற இந்த அன்பின் இயேசு கிறிஸ்து வாக்கு மாறாதவர். இந்த இயேசு கிறிஸ்துவை நாம் நம்பி வாழ இடம் கொடுக்கும் போது, சமாதானம் நிறைந்த வாழ்வு உண்டாகி விடும்.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
கிறிஸ்து இயேசுவின் பணியில்,
சகோ. C. எபனேசர் பால்