பற்பல போராட்டத்தால் உண்டான துக்கம் நீங்க ஒரு ஜெபம்

அன்பின் தேவனே, இந்த ஜெப வேளைக்காக உம்மைத் துதிக்கிறேன். கடந்த காலத்தில் என்னை சமாதானத்துடன் சந்தோஷமாய் வழி நடத்தினீர், அதற்காக உமக்கு ஸ்தோத்திரம் செலுத்துகிறேன். கர்த்தாவே,  இந்த நாட்களில் பல போராட்டங்கள்  என்னைச் சூழ்ந்து கொண்டு என்னை  மிகுந்த  துக்கத்தில் அமிழ்த்துகிறது. துக்கம் நீங்கின நல்வாழ்வு எனக்கு மலர இந்த ஜெபத்தை ஏறெடுக்கிறேன். கர்த்தாவே, நான் வீட்டைக் கட்டி சீக்கிரமாய்ச்  சொந்த வீட்டில்  வாழ விரும்பினேன். ஆனால் வீடு கட்டி முடியவில்லை. பக்கத்து வீட்டுக்காரர் பிரச்சனையை உண்டாக்கியதால் வேலை  செய்ய முடியவில்லை.  கட்டிடம் முடியாதிருப்பது துக்கத்தை எனக்குள் பெருகச் செய்கிறது. இன்னும் கர்த்தாவே, என் மகனுக்கு/மகளுக்கு  நன்றாய்ப் படிக்கத்தக்கதான கல்லூரியிலே இடம் கிடைக்கவில்லை. இது என் உள்ளத்தை அதிகமாக பாதித்துக் கொண்டே இருக்கிறது. இடம் கிடைத்தக் கல்லூரியானது சற்று துாரமான இடத்தில் உள்ளது. தினமும் போய் வருவது பெரிய  பிரச்சனையாக இருக்குமே  என்று  கலங்குகிறேன். கர்த்தாவே, இதுவரை என் கணவர்/மனைவி நல்ல சுகத்துடன் இருந்தார்கள். ஆனால் இப்பொழுது ஏற்பட்ட பெலவீனமும், நோயும் என் உள்ளத்தை அதிகமாக துக்கப்படுத்துகிறது. எப்பொழுது பூரண சுகம் கிடைக்கும் என்று கலங்குகிறேன். நான் சேர்த்து வைத்தப்  பணம் முழுவதும் செலவழிந்துவிட்டது. இப்பொழுது கடன் வாங்கித்தான் வைத்தியம் பார்க்க வேண்டியிருக்கிறது. இயேசு கிறிஸ்துவே, அலை அலையாய் ஒன்றன் பின் ஒன்றாக பிரச்சனைகள் எழுந்து விட்டதே என்று மிகுதியாக துக்கப்படுகிறோம். எங்கள் துக்கத்தைச்  சிலுவையில் சுமந்து தீர்த்தவரே, எனக்கு இரங்கும். ஆனாலும் உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும் என்று சொன்னவரே, எனக்கு இரங்கும். என் துக்கத்தை நீக்கி சமாதானமும், சந்தோஷமும் அடையச் செய்யும். கர்த்தாவே, துக்கங்களினால் நான் நன்றாய் தூங்க முடியவில்லை. ஏதாவது செய்தி வந்தால் என்னவாக இருக்குமோ என்று பயமும் என்னை ஆட்கொண்டு மிகுதியாக கலங்கடிக்கிறது. நீரே என் கன்மலையும் என் அடைக்கலமுமாயிருக்கிறபடியால் நான் சோர்ந்து போகா திருக்கிறேன். பிசாசானவன் உன்னால் ஒன்றும்  செய்ய முடியாது என்று கேள்வி கேட்பது  போல் என் பிரச்சனையும் போராட்டமும் இருக்கிறது. கர்த்தாவே, எனக்கு இரங்கும். இன்றே என் துக்கம் நீங்கிய  நல் வாழ்வு எனக்குள்  மலரச் செய்யும். இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வேண்டுகிறேன் நல்ல பிதாவே. ஆமென்.