"ஜெபத்தைக் கேட்கிறவரேமாம்சமான யாவரும் உம்மிடத்தில் வருவார்கள்."

                                                                                                                             சங்கீதம் 65:2

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினால் வாழ்த்துகிறேன்.

பல ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியை நினைத்தேன். ஒவ்வொரு புதன்கிழமையிலும் ஜெபதொனி  அலுவலகத்தில்  பணி  செய்வோருடன், உபவாசித்து ஜெபித்து வந்தேன். புதன்கிழமை உபவாச ஜெபம் காலை முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். ஒரு புதன்கிழமை  மாலையில் மதுரையில் 6.30 மணிக்கு கூட்டம் இருந்தது. அத்துடன் அலுவலகப் பணிக்காக என் வீட்டின் மேல்மாடி கட்டப்பட்டு வந்தது. அன்றைய  தினம்  roof-ல் இருந்த பலகைகளை அகற்றி இருந்தார்கள். ஆகவே அன்று உபவாச ஜெபத்தைச் சற்று முன்னதாக 2.30 மணிக்கே முடித்துவிட்டு, வீட்டின்மேல் கட்டப்பட்டு வந்த மாடிப் பகுதியைக் காணச் சென்றேன். பலகை எல்லாம் நீக்கப்பட்டு இருந்ததால்  அதன் மேல் பகுதியைப் பார்த்துக்  கொண்டிருந்தேன். கழற்றிய பலகைகள் எங்கும் பரவி கிடந்தது. ஒரு சிறு பலகை துண்டைப் பார்த்தேன். என் கண்களில் எந்த ஆணியும் காணப்பட  வில்லை. ஆகவே அந்தத் துண்டு பலகையின்மீது காலை வைத்தேன். ஆனால் அதில் ஒன்றரை அங்குலத்திற்கு  நீட்டிக் கொண்டிருந்த  துருப்பிடித்த  ஆணி ஒன்று அதில் இருந்திருக்கிறது. அது என் காலின் பாதத்தில் குத்திவிட்டது. ஆழமாக சென்றதினால்  என் கைகளைக் கொண்டு  என் காலில்  குத்தியிருந்த ஆணியின் பலகையை எடுக்க முடியவில்லை. என்னுடைய மூத்த மகனை அழைத்து, என் காலில் இருந்து அதை  எடுத்துவிடக்  கூறினேன். அவன் அதை விரைவாக எடுத்தவுடன் இரத்தம் பீறிட்டு வந்தது. பிறகு பஞ்சை வைத்து அழுத்திப் பிடித்து, மேலாக ஒரு பேண்டேஜ்  துணியைச் சுற்றினார்கள். வலி ஒருபுறம், அத்துடன் துரு பிடித்த ஆணி என்பதால் என்ன செய்வது என்று தெரியவில்லை. இனி மருத்துவரிடம்  செல்ல  நேரம் இல்லை, கூட்டத்திற்குச் செல்வோம் என்று முடிவு செய்தேன். ஜெபநேரத்தைக் குறைத்தபடியால்  உண்டான போராட்டம்  என்று  உணர்ந்து, கர்த்தரிடம் மன்னிப்பு கேட்டு ஜெபம் செய்தேன். அந்நாட்களில் சொந்த வாகன வசதி கிடையாது, பஸ்சில் தான் செல்ல வேண்டும். அன்று பஸ்சுக்குச் சென்றபோது மிகுதியான கூட்டம். வேறு வழியின்றி நின்று கொண்டே பயணம் செய்ய வேண்டியதாயிற்று. மாலையில்  கூட்டம்  நடைபெற்றது. கூட்ட முடிவில் வந்த மக்களுக்கு ஜெபித்த பின், மீண்டும் திருச்சி வருவதற்கும் பஸ்சில் சிறிது தூரம் நின்றே பயணம் செய்ய  வேண்டியதாயிற்று.  கர்த்தரின் கிருபையால் அந்த வலி மாறியதுடன் கேடு ஒன்றும் வராது காத்தார்.

அன்பின் தேவப்பிள்ளையே, உன் வழக்கத்தின்படி ஜெபிக்கிற ஜெப நேரத்தை எக்காரணத்தினாலும் குறைத்து விடாதே. அவ்வாறு குறைக்கும் போது பாடும், வேதனையும் தோன்றி விடும். சிலர் இன்று ஜெபிக்க நேரமில்லை என்று கூறி அந்நாளில் ஜெபியாதிருப்பார்கள். அவ்வாறு  செய்யாதிருக்க  நாம் இடம் கொடாது, அதிக அதிகமாக ஜெபிப்போமாக. அப்பொழுது கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார். கொர்நேலியுவைப் போல்  எப்பொழுதும் ஜெபிக்கக்கூடிய கிருபையைத் தருவார். கர்த்தரிடம் ஜெபிக்க ஜெபிக்க, நாம் விண்ணப்பத்தின் ஆவியால் நிறைந்து விடுவோம். பொல்லாப்பும், வாதையும் அணுகாது, அவர் நம்மைக் காத்து நடத்துவார். ஜெபக் குறைவினால் உண்டாகும் தோல்விகள், துக்கங்கள் நம்மை  மேற்கொள்ளாது.

கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.

சகோ. C. எபனேசர் பால்.