"... உன் பாளையம் சுத்தமாயிருக்கக்கடவது"

                                                                                                                                                  உபாகமம் 23:14

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

நம்முடைய மீட்பரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் வாழ்த்துகிறேன்.

ஒரு முறை ஒரு குடும்பத்தார் ஜெபிக்க வந்தார்கள். அந்தக் குடும்பத்தில் ஒன்றன் பின் ஒன்றாக வேதனையான காரியங்கள் தோன்றிக் கொண்டே இருந்தது. நஷ்டத்தின் மேல் நஷ்டமும் ஏற்பட்டுக் கொண்டே இருந்தது. கர்த்தரின் கிருபையினால் விடுதலையையும், இரட்சிப்பையும், பெற்ற அவர்கள் இனி சமாதானத்தோடு, சந்தோஷத்தோடு இருக்கலாம் என்று எண்ணினார்கள். ஆனால் அவர்களது வாழ்க்கையிலே தடைகள், தாமதங்கள், போராட்டங்கள், நிந்தைகள் தோன்றிக் கொண்டே இருந்தது. அவர்களது உள்ளத்திலோ சோர்வை, கண்ணீரை பிசாசானவன் தனது தந்திர செயலினால் பெருகச் செய்து கொண்டே இருந்தான். அந்தக் குடும்பத்திற்காக ஜெபித்தும், ஏன் கஷ்டங்கள், தடைகள் மாறவில்லை என்ற கேள்வி என் உள்ளத்தில் தோன்றிக் கொண்டே இருந்தது. ஒரு நாளிலே ஜெப நேரத்தில் அவர்கள் வீட்டில் விக்கிரகம் உள்ள ஒரு நாணயம் இருக்கிறது என்று கர்த்தர் வெளிப்படுத்தினார். இதை அகற்றி விடுங்கள் என்று கூறினேன். அவர்களோ இவ்விதமான நாணயம் கிடையாது, எல்லாவற்றையும் பார்த்து விட்டேன் என்று சொன்னார்கள். சில நாட்கள் சென்றது. திடீரென்று அவர்கள் pen standயைப் பார்த்தபோது, ஒரு நாணயம் அதில் கிடந்தது. அதை என்ன என்று பார்த்தபோது, நான் கூறின விக்கிரகப் படம் அதில் இருந்தது. அதை எடுத்துக்கொண்டு என்னிடத்தில் காண்பித்து விட்டு அகற்றிவிட்டார்கள்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, இன்று உங்கள் வீட்டிலே, எல்லைகளிலே, தேவன் விரும்பாத காரியங்கள் இருக்கும்போது, சத்துருவாகிய பிசாசானவன் கெடுதியைக் கொண்டு வருகிறவனாய் இருக்கிறான். ஒரு சாப்பாட்டு மேஜையில் உணவருந்திய பொருட்கள் சிதறியிருந்தால், உடனே ஈ, எறும்புகள் வர ஆரம்பித்து விடுகிறது. எவ்வளவு தான் அதை விரட்டினாலும் அது வந்து விடும். மேஜையில் சிந்தின பொருட்களை அகற்றி, இடத்தைச் சுத்தம் செய்யாவிட்டால் ஒன்றும் வராதிருக்கும். இதைப்போல நம் எல்லைகளிலே தேவன் விரும்பாத காரியங்களை இன்றே அகற்றி விடுவோம். கர்த்தரின் அதிசயங்களையும், ஆசீர்வாதங்களையும் அடைவோமாக.

கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.

                                                                                                          சகோ. C. எபனேசர் பால்