கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,
கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தினால் உங்களை வாழ்த்துகிறேன்.
கர்த்தரின் பெரிதான கிருபையினாலும், அவரது அன்பின் செயலினாலும் இந்த ஆண்டினுடைய இறுதி மாதத்தைக் காணச் செய்திருக்கிறார். இதற்காக நாம் தேவனைத் துதிக்க, ஸ்தோத்திரிக்க மிகுந்த கடமைப்பட்டிருக்கிறோம். இம்மட்டும் நம் தேவன் பலவிதமான நன்மைகளை நமக்குத் தந்து, நம்மைக் காத்து ஆசீர்வதித்தபடியினால், அவரை அதிகமாக துதிப்போம், ஸ்தோத்திரிப்போம். 'என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; என் முழு உள்ளமே, அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்திரி. என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே.' என்று சங்கீதம் 103:1,2ல் தாவீது சொன்னது போல, நாம் அனுதினமும் கிறிஸ்துவைத் துதிக்க வேண்டும். அநேக நேரங்களிலே அவர் செய்த உபகாரங்களை மறந்து, அவர் செய்த நன்மைகளை நினையாது, உலகத்தாரைப் போல தேவனுக்குப் பிரியமில்லாதக் காரியங்களைச் செய்தும், பங்கு பெற்றும் விடுகிறோம். நம்மை நேசிக்கிற அன்பு நிறைந்த இயேசு கிறிஸ்துவோ நமக்காக தேவசமுகத்திலே பரிந்து பேசி இம்மட்டும் நாம் ஜீவனோடு, சமாதானத்தோடு, மெய்யான சந்தோஷத்தோடு வாழ்வதற்கு வழி செய்திருக்கிறார்.
இன்று கர்த்தரைத் தங்கள் தெய்வமாகக் கொண்டிருக்கிறவர்கள் உலகத்தாரைப் போல பாரம்பரிய பழக்க வழக்கங்களுக்கு இடம் கொடுத்து, இணங்காதவர்களைக் குற்றப்படுத்தி, குறைபேசி பகைக்கிற மக்களாய் மாறிவிடுகிறார்கள். 'புறஜாதிகளுடைய மார்க்கத்தைக் கற்றுக்கொள்ளாதிருங்கள்' என்ற எரேமியா 10:2ன் வார்த்தைக்கு இடம்கொடாது, தங்களின் சுய நீதியின் பாதையில் வாழ்ந்து வருகிறார்கள். ஆனாலும் கர்த்தருடைய கிருபை அவர்களையும் தாங்கி வருகிறபடியினால் கர்த்தரை ஸ்தோத்திரிக்க கடமைப்பட்டிருக்கிறோம்.
இன்று தேவன் நமக்கு சொல்லிமுடியாத அளவு ஈவுகளை அருளியிருக்கிறபடியினால், அவர் நமக்கு அருளிய ஈவுகளை நினைவு கூர்ந்து, கர்த்தாதி கர்த்தருக்கு அதிகமாக மிகுந்த உற்சாகத்தோடு துதி ஸ்தோத்திரங்களை ஏறெடுக்க வேண்டும்.
தேவன் அருளியிருக்கிற ஈவுகள்
1. நன்மையானவைகளை அருளும் ஈவு
பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மை யானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?” மத்தேயு 7:11
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொன்ன ஈவுகளைப் பார்க்கும் போது, நன்மையானவைகளைத் தருவது அதிக நிச்சயம் என்று சொல்லியிருக்கிறார். 'நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கி வருகிறது யாக். 1:17ல் பார்க்கிறோம். நன்மையினால் முடி சூட்டுகிற தேவன் என்றும் மாறாதவராயிருக்கிறார். தம்மிடத்தில் வேண்டிக் கொள்கிற மக்களுக்கு நன்மைகளை நிறைவாய்த் தந்து போஷித்து. பராமரித்து பாதுகாத்து வருகிறார்.
ஒருமுறை ஒரு சகோதரி கர்த்தர் அவர்களுக்குச் செய்த நன்மையைப் பகிர்ந்து கொண்டார்கள். கணவரால் கைவிடப்பட்டு பிள்ளைகளுடன் வாழ்ந்து கொண்டிருந்த சகோதரி, மிகுந்த துக்கமும், துயரமும், வறுமையும் நிறைந்தவராய் தனித்துவிடப் பட்டவராய் வாழ்ந்து கொண்டிருந்தார். கர்த்தரைத் தேடுவதிலும், அவருடைய வசனங்களைத் தியானிப்பதிலும் மிகுந்த ஆர்வத்தோடு இருந்த அந்தச் சகோதரிக்கு இனத்தார் மூலம் கிடைக்கப்பெற்ற ஆதரவில் வாழ்ந்து கொண்டிருந் தார்கள். ஒருநாளில் பிள்ளைகளுக்கு இரவுவேளை ஆகாரத்திற்கு ஒன்றுமில்லாத போராட்டமான ஒரு நேரமாக இருந்தது. கர்த்தரை நோக்கி வேண்டிக் கொண்டிருந்த அந்த மகளை, அந்த ஊரின் ரெயில்வே ஜங்ஷனுக்குச் செல்ல கர்த்தரே வழி நடத்தினார். அவ்வாறு பஸ்சில் சென்ற அவர்கள் கீழே இறங்கிய சமயம் காலில் ஏதோ ஒன்று மிதிபடும் காரியத்தை உணர்ந்தார். அந்த இரவுநேரத்தில் அது என்ன என்று குனிந்து பார்த்தபோது, பலமடிப்பாக மடங்கிய 100ரூபாய் நோட்டாக இருந்தது. அதைக்கொண்டு அந்நாளிலே பிள்ளைகளின் தேவைக்குத் தக்கதாக ஆகாரம் வாங்கிக் கொடுத்தேன் என்று சாட்சியாகக் கூறினார்கள். இவ்வாறு நமது இன்னல்களில், இக்கட்டுகளில் கர்த்தரின் நன்மையான கரம் கூடவே இருந்து போஷித்து வருகிறபடியால் அவருக்கு மிகுதியான ஸ்தோத்திரங்களை ஏறெடுக்க வேண்டும்.
இன்னும் கர்த்தருடைய நன்மையானது அவர் அருளுகிற சுகமாகும். இன்று சிலர் பலவிதமான நோய்களினாலே பாதிக்கப்பட்டு, பாடுகளை மிகுதியாய் அனுபவித்து வருகிறார்கள். சிலருடைய வாழ்க்கையிலே நோயின் தன்மை அதிகரித்து, பாடுகளைப் பெருகச் செய்து, மரணம் அடைந்ததை நாம் பார்க்கிறோம். வேதத்தில் எசேக்கியா என்ற ராஜாவைப் பார்க்கிறோம். தேவனுடைய வார்த்தை ஏசாயா தீர்க்கதரிசியின் மூலமாய் வியாதியாய் இருந்த எசேக்கியாவுக்கு, நீர் உமது வீட்டுக்காரியத்தை ஒழுங்குப்படுத்தும், நீர் பிழைக்கமாட்டீர், நீர் மரித்துப்போவீர் என்று சொல்லப்பட்டது. இந்த வார்த்தைகளைக் கேட்ட எசேக்கியா மிகவும் அழுது, தன்னை நினைவுகூரும்படி கண்ணீரோடு விண்ணப்பம் செய்தான். கர்த்தர் அவன் விண்ணப்பத்தைக் கேட்டார். ஏசாயா தீர்க்கதரிசியிடம் 'உன் விண்ணப்பத்தைக் கேட்டேன்; உன் கண்ணீரைக் கண்டேன்; இதோ, உன் நாட்களோடே பதினைந்து வருஷம் கூட்டுவேன்' என்று கூறி வாக்கருளினார். ஏசாயா 38:15ல் அவர் எனக்கு வாக்கு அருளினார்; அந்தப் பிரகாரமே செய்தார்' என்று எசேக்கியா சாட்சி கூறுவதைப் பார்க்கிறோம். அப். 10:38ன்படி நன்மை செய்கிறவராக சுற்றித்திரிந்த இயேசு கிறிஸ்து இன்றும் நன்மை செய்கிறவராகவே இருக்கிறார். பல நன்மைகளினால் நம் வாயைத் திருப்தியாக்குகிறார்.
இன்னும் கர்த்தர் அருளும் நன்மையானது இவ்வுலக செல்வத்தினாலும், ஆவிக்குரிய ஆசீர்வாதங்களினாலும் செழிப்படையச் செய்வதாகும். 'கர்த்தருடைய ஆலயத்திலே நாட்டப்பட்டவர்கள் எங்கள் தேவனுடைய பிரகாரங்களில் செழித்திருப்பார்கள்'சங்.92:13ன் வாக்கின்படி நாம் கர்த்தரின் ஆலயத்திற்குச் சென்று ஆராதிப் போமானால், மிகுந்த நன்மையும் மேன்மையும் அடைவோம்.
கர்த்தரின் நன்மையினால் திருப்தியடையச் செய்கிற மேன்மையான ஒன்று நம் அக்கிரமங்களை மன்னிக்கிறார். அக்கிரமமானது நமக்கும் தேவனுக்கும் பிரிவினையை உண்டாக்குகிறது. அதனால் நம் ஜெபங்கள் கேட்கப்பட்டு, அவர் சமுகத்திலிருந்து ஏற்ற நன்மைகளை, ஆசீர்வாதங் களை, அற்புதங்களைப் பெற முடியாதிருக்கிறது. சங். 66:18ல் 'என் இருதயத்தில் அக்கிரமசிந்தை கொண்டிருந்தேனானால், ஆண்டவர் எனக்குச் செவிகொடார்' என்று பார்க்கிறோம். ஆனால் கர்த்தரோ நம்முடைய அக்கிரமங்களை எல்லாம் மன்னித்து மறந்து விடுகிற தேவனாய் இருக்கிறார்.
அத்துடன் அவர் அருளும் நன்மை குணமாக்குவதாகும். இன்று பலவிதமான நோய்கள் உண்டு. சரீரத்தில் உண்டான நோயினால் பாதிக்கப்பட்டு பாடுகளை அனுபவிக்கிறவர்கள் உண்டு. இதைப் போலவே பிசாசினாலும், பில்லிசூனியத்தினாலும் பாதிக்கப் பட்டு மனநோயினால் வேதனையோடு வாழ்ந்து கொண்டிருக்கிற மக்கள் ஏராளம். ஏசாயா 65:14ல் 'நீங்களோ மனநோவினாலே அலறி, ஆவியின் முறிவினாலே புலம்புவீர்கள்' எனப் பார்க்கிறோம். மனநோயின் ஒரு தன்மை புத்தி தெளிவில்லாதிருப்பதாகும். தாங்கள் செய்கிறது இன்னது என்று உணரமுடியாதவர்கள். முறிந்த ஆவியின் நிமித்தமாய் சம்பந்தமில்லாத காரியங்களைச் சொல்லிக் கொண்டும், தாங்களாகவே பேசிக்கொண்டும் இருப்பதை இன்று பார்க்க முடிகிறது. திடீரென கோபம், போராட்டம், மற்றவர்களை அடிக்கிற சுபாவம் - இவைகள் அவர்களில் அதிகமாக இருக்கும். இவைகள் செயல்படுவதற்குக் காரணமான தீங்கின் ஆவிகள், இவ்விதமான பாடுகளைப் பெருகச்செய்து விடுகிறது. சிலருடைய வாழ்க்கையிலே அதிகமான கிரயம் கொடுத்து வாகனங்களை வாங்குவார்கள். வாங்கின சில நாட்களிலேயே அதைக் குறைந்த விலைக்கு விற்றுவிடுவார்கள். நிதானித்து ஆராய்ந்து செயல்படுவதற்கு மாறாக அவர்களது செயல்கள் இருக்கும்.
மத்தேயு 17:15ல் சிறுவனைப் பிடித்திருந்த ஆவி தீயிலும் ஜலத்திலும் தள்ளின காரியத்தைத் தகப்பனார் சொல்வதைப் பார்க்கிறோம். இயேசு கிறிஸ்து இப்படிப்பட்ட நிலையில் வாழ்கிற மக்களை விடுவித்து குணமாக்குகிறவராயிருக்கிறார். லூக்கா 8:26-35ல் இயேசு கிறிஸ்து கதரேனருடைய நாட்டிற்கு வந்து கரையிறங்கின போது, நெடுநாளாய்ப் பிசாசு பிடித்தவனும், வஸ்திரம் தரியாதவனும், வீட்டில் தங்காமல் பிரேதக்கல்லறைகளில் தங்கினவனுமாயிருந்த மனுஷன் அவருக்கு எதிராக வந்தான். மரித்தோரை அடக்கம் செய்கிற இடத்திலே உயிரோடு இருக்கிற இயேசு கிறிஸ்துவை தேடுகிறதென்ன என்று சொன்ன துாதனின் வார்த்தையின்படி, அவர் பிரசன்னம் இல்லாத ஒரு இடம் கல்லறைத் தோட்டம். இப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்த அவனில் போராட்டத்தை உண்டுபண்ணின தீங்கின் ஆவிகள் வெறியேறியவுடன், லூக்கா 8:35ன்படி தெளிந்த புத்தியுள்ளவனாய், வஸ்திரம் உடுத்தின வனாய் கிறிஸ்துவின் பாதத்தில் அமர்ந்திருந்த காரியத்தைப் பார்க்க முடிகிறது.
புதுக்கோட்டையில் முன்பு நடத்தின விடுதலை ஜெபமுகாமிலே ஒரு வாலிபனை அவனது சகோதரர்,தாயார் கூட்டிக்கொண்டு வந்திருந்தார்கள். B.E. படித்து 1.T. கம்பெனியில் பணியாற்றி வந்த அவன், வீட்டில் உள்ள விலையுயர்ந்த எலெக்ட்ரானிக் பொருட்களை எல்லாம் உடைத்து, கட்டுக்கடங்காத முறையில் செயல்பட ஆரம்பித்தானாம். அவனை முகாமிற்கு அழைத்து வந்தனர். அந்த மகனோ ஒரே இடத்தில் நின்று கொண்டேயிருந்தான். எந்தத் தண்ணீரும் பானமும் குடிக்க வில்லை. 2-வது நாளும் அப்படியே நின்று கொண்டிருந்தான். 3-வது நாள் அவனுக்காக ஜெபிக்க ஆரம்பித்தோம். ஆரம்பித்தவுடனே அவனில் இருந்த தீய ஆவி அலைக்கழிக்க ஆரம்பித்தது. இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஜெபித்தபோது, அற்புத விடுதலையைப் பெற்றுக் கொண்டான், தெளிந்த புத்தியுள்ளவனாய் மாறினான். மீண்டும் தன் பணியிலே சேர்ந்து நலமாய்ப் பணிசெய்ய ஆரம்பித்தான். இதைப்போல இன்று மனதில் தாக்கப்பட்டு தெளிந்த புத்தியில்லாது வாழ்ந்து கொண்டிருக்கிற அநேக மக்களை தேவனுடைய குணமாக்கும் வல்லமை வெளிப்பட்டு குணப்படுத்தப்படுவதைப் பார்க்கிறோம்.
2.புத்தியுள்ள மனைவி கர்த்தர் அருளும் ஈவு
"..புத்தியுள்ள மனைவியோ கர்த்தர் அருளும் ஈவு." நீதிமொழிகள் 19:14
புத்தியுள்ள மனைவி கணவருக்கு நன்மையைக் கொண்டு வருகிற மகளாக இருப்பாள். புத்தியில்லாத மனைவி கணவருக்கு மிகுந்த பாரச்சுமையாக மாறிவிடுவாள். ஒருமுறை ஒரு வாலிபனுக்கு திருமணம் செய்ய ஒரு பெண்ணைப் பார்க்கச் சென்றபோது, தனக்குத் திருமணம் வேண்டாம் என்று கூறினான். அந்தப்பெண் மோசமான பெண்ணாக இருப்பாளோ என்று பயந்து வேண்டாம் என்று சொல்லிவிட்டான். புத்தியில்லாத ஸ்திரீ வீட்டை நஷ்டப்படுத்துகிற, கணவருக்கு நஷ்டம் உண்டாக்குகிற மகளாக, வீட்டையே இடிக்கிற மகளாக இருப்பாள்.
என் வீட்டின் அருகே ஒரு குடும்பத்தார் வசித்து வந்தார்கள். கணவர் ரெயில்வேயில் நல்ல வேலைப் பார்த்து வந்தார். மனைவியோ வீட்டின் வேலைகளைப் பார்த்து வந்தாள். 2 பிள்ளைகள் இருந்தார்கள். அந்த வீட்டார் நெற்குதிர் வைத்திருந்தார்கள். ஒரு வருடத்திற்குரிய நெல்லை வாங்கி சேர்த்து வைத்திருந்தார்கள். வீட்டில் இருந்த மனைவி வீணான கதைப்புஸ்தகங்களை வாசிப்பதும், அத்துடன் பிள்ளைகள் பள்ளியில் இருந்து வருவதற்கு முன்பாக நண்பகல் காட்சி சினிமாவுக்குச் சென்று வருகிறவளுமாய் இருந்தாள். இவைகளைக் கணவரோ, பிள்ளைகளோ தெரிந்து விடாதபடி செய்து வந்தாள். சினிமாவுக்குப் போவதற்கு வீட்டில் வைத்திருந்த நெல்லை விற்றுப் பயன்படுத்தினாள். கணவர் இரவு வேலைக்குச் செல்லும் நாளில் நெற்குதிரிலிருந்து நெல்லை எடுத்து அக்கம் பக்கத்தில் உள்ள மக்களுக்கு கிரயத்திற்குக் கொடுத்து விடுவாள். கடைசியில் ஒருகாலக்கட்டத்தில் வீட்டிற்குச் சமைக்கவே அரிசி இல்லை என்ற நிலை வந்தபோதுதான், கணவர் நெல் என்ன ஆயிற்று என்று கேட்க ஆரம்பித்தார். அக்குடும்பத்தில் சமாதானம், சந்தோஷத்தை இழந்து, அன்பின் ஐக்கியத்தை இழந்து, சண்டையும் சச்சரவுமாய் மாறியது. அந்தப் பெண்ணின் புத்தியில்லாத செயலினால் சேர்த்து வைத்தவைகளை இழந்து போனார்கள்.
ஆனால் குணசாலியான ஸ்திரீயோ கணவருடைய நம்பிக்கைக்கும் நன்மைக்கும் ஏற்ற வண்ணமாய் தன் வேலைகளைச் செய்து குடும்பம் மேன்மை அடைய ஓயாது வேலை செய்வாள். அதிகாலையிலே எழுந்து பிள்ளைகளுக்கும் கணவருக்கும் வேண்டிய ஆகாரத்தைக் கொடுக்கிற வழக்கம் உடையவளாய் இருப்பாள். அத்துடன் அவர்களுக்கு வேண்டிய உடுப்புகளைத் தானே செய்கிற மகளாய் இருப்பாள். இன்று அநேகர் வீட்டில் ஆகாரம் செய்வது கிடையாது. உடுப்புகளாகவே வாங்கி விடுகிறார்கள். மேலும் தோட்டங்களையும், துரவுகளையும் வாங்குகிற செயலைப் புத்தியுள்ள குணசாலியான ஸ்திரீயில் பார்க்க முடியும். அவள் காலையிலே முன் எழுந்து வீட்டின் பணிகளைச் செய்வதோடு இரவிலும் அவள் விளக்கு அணையாது தன் பணிகளைச் செய்கிற காரியங்களைப் பார்க்க முடிகிறது. புத்தியுள்ள ஸ்திரியினுடைய சொத்துக்கள் பெருகிக் கொண்டே வரும்.
எனக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தை நான் அறிவேன். அந்த சகோதரியோ புத்தியுள்ள ஒரு மகளாக இருந்தாள். அவர்களும் ஒரு அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார்கள். அவர்களுடைய கணவரின் துணிகள் எல்லாவற்றையும் அவர்களே தைத்துக்கொடுப்பார்கள். அவர்கள் தைக்கும் பேன்ட், சர்ட் எல்லாம் மிக அருமையாக இருக்கும். அவர்களின் பிள்ளைகளுக்கும் அவர்களே துணிகளைத் தைத்துக் கொடுப்பார்கள். வேறு யாருடைய உடுப்பு நன்றாயிருக்குமானால், அதை மாதிரியாக வைத்து தன் பிள்ளைகளுக்குத் தைத்துக் கொடுக்கிற வழக்கம் உடையவர்களாய் இருந்தார்கள். அதனால் அந்தக் குடும்பத்தில் எளிதாக இடத்தை வாங்கி, வீடுகட்டி அதில் வசித்து வந்தார்கள். பின்பு ஒன்றன்பின் ஒன்றாக அவர்கள் வசித்து வந்த ஊரிலேயே வீட்டுமனை வாங்கி மற்றொரு வீட்டையும் கட்டினார்கள். இவை அனைத்தும் கடன் இல்லாது செய்தார்கள். சகல இடங்களிலும் அந்தக் குடும்பம் செழித்திருந்தது. அத்துடன் அவர்கள் ஆலயத்திற்கென்று இடத்தை வாங்க, ஆலயத்தில் உள்ளவர்களோடு பேசி பணத்தைச் சேகரித்து. ஆலயத்திற்கு இடம் வாங்கி, ஆலயம் கட்டி, ஆலய ஆராதனை நடப்பதற்கு உதவினார்கள்.
இன்று நம்முடைய வாழ்க்கையிலும் புத்தி தெளிந்தவர்களாக, வேத வார்த்தைகளுக்கு செவிகொடுத்து வாழும் போது, கர்த்தருடைய ஆசீர்வாதம் இன்றும் என்றும் உங்கள் எல்லைகளில் பெருகி விடும்.
3. இரட்சிப்பு - கர்த்தர் அருளும் ஈவு
'கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு." எபேசியர் 2:8
இன்று கிறிஸ்துவுக்குள்ளான வாழ்க்கையிலே இரட்சிப்பு மிக அவசியமான ஒரு காரியம். இன்று நீ இரட்சிக்கப்பட்டிருக்கிறாயா? என்ற கேள்வியை ஊழியர்கள் பல நேரங்களில் கேட்டதைப் பார்க்கிறோம். இந்த இரட்சிப்பானது தேவனோடு ஒப்புரவாவதற்கு ஏற்ற ஒரு செயலாக இருக்கிறது. 'விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்' என்று மாற்கு 16:16ல் பார்க்கிறோம். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிற ஒவ்வொருவரும் ஞானஸ்நானம் பெறுவதற்குத் தங்களை அர்ப்பணிக்க வேண்டும். ஞானஸ்நானம் என்பது கர்த்தருக்குள்ளாக நல்மனச்சாட்சியின் உடன்படிக்கையாயிருக்கிறது (1பேதுரு 3:21). அத்துடன் மத். 3:15ன்படி நீதியை நிறைவேற்றுகிற ஒரு செயலாயிருக்கிறது. அத்துடன் ஞானஸ்நானமானது 'உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேரோ, அத்தனை பேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே.' கலாத். 3:27ன் படி இயேசு கிறிஸ்துவைத் தரித்துக்கொள்கிற ஒரு காரியமாகும். 'இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியா யிருக்கிறான், பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின' 2கொரி. 5:17ன் படி ஞானஸ்நானத்தினாலே புதிதாக்கப்படுகிறீர்கள். நாம் இப்படியாக ஞானஸ்நானம் பெற்று விசுவாசமுள்ளவர்களாயிருக்கும் போது தேவக்கிருபையினாலே இரட்சிக்கப்படுகிறோம்.
லூக்கா 19:2ல் சகேயு என்பவனைக் குறித்துப் பார்க்கிறோம். இவன் உருவத்திலே குள்ளனாக இருந்தான். அவனுக்கு இயேசுவைக் காணவேண்டும் என்ற விருப்பம் அவனது உள்ளத்தில் தோன்றியதால் எப்படியாவது அவரைக் காணவேண்டும் என்று தீர்மானித்தான். இயேசு கிறிஸ்துவைச் சுற்றி மிகுந்த ஜனக்கூட்டம் இருந்தபடியால், இயேசு கிறிஸ்து வந்துகொண்டிருந்த சாலை ஓரத்தில் இருந்த காட்டத்திமரத்தில் சகேயு எறி ஆவலோடு காத்திருந்தான். இயேசு கிறிஸ்து அந்தக் காட்டத்தி மரத்தின் அடியில் வந்தபோது, அண்ணாந்து பார்த்து, அவன் பெயரைச் சொல்லி, சகேயுவே, சீக்கிரமாய் இறங்கி வா, இன்றைக்கு உன் வீட்டில் தங்க வேண்டும் என்றார். இந்த வார்த்தைகளைக் கேட்ட சகேயு சீக்கிரமாய் மரத்திலிருந்து இறங்கி அவரைத் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றான். அவ்வாறு அவன் செல்கையில், இவன் பாவியான மனுஷன் என்று சொல்லி இதைப் பார்த்தவர்கள் வியந்தார்கள். பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகில் வந்தார் என்ற வார்த்தையின்படி எல்லாராலும் பாவி என்று நிதானிக்கப்பட்டிருந்த சகேயுவுடன் சென்றார். சகேயுவின் வீட்டிற்குச் சென்ற பிறகு இயேசு கிறிஸ்துவின் பிரசன்னத்திலே அவன் மனம் மாறுதலடைந்தது. சகேயு பணஆசை நிறைந்தவனாய்ப் பன்மடங்கு அதிகமாய் வரிகள் வாங்கி, லஞ்சத்தை வாங்கி தன் செல்வத்தைப் பெருக்கின ஒரு மனிதன். இன்று நம்முடைய வாழ்க்யிைலும் நாம் செய்த, செய்துகொண்டிருக்கிற பாவங்கள் எப்போதும் நம் மனக்கண் முன்பாகவே இருக்கிறது. இயேசு கிறிஸ்துவின் அன்பின் பிரசன்னம் சகேயுவின் உள்ளத்தில் பெருகினபோது, தன் பாதி சொத்தை ஏழைகளுக்குக் கொடுப்பேன் என்று இயேசு கிறிஸ்துவின் சமுகத்தில் தான் செய்த பாவத்திற்குப் பரிகாரமாக அறிக்கையிட ஆரம்பித்தான். அத்துடன் அவன் யாரிடமாது அநியாயமாய் வாங்கி இருந்தால், அதை நாலத்தனையாகத் திரும்ப கொடுத்து விடுகிறேன் என்ற தீர்மானத்துடன் சொன்னான். அதனால் இயேசு கிறிஸ்து அவனைப் பார்த்து, இந்த - வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது என்றார். ஏனெனில் அவனுக்குள் விசுவாசம் இருந்தபடியினால், அவனும் ஆபிரகாமுக்கு குமாரனாயிருந்தான் என்று இயேசு கிறிஸ்து சொன்னதைப் பார்க்கிறோம். ஆகவே சகேயுவின் விசுவாசத்தினாலும், பாவ அறிக்கையினாலும், இயேசுவின் சமுகத்தில் பெரிதான இரட்சிப்பைப் பெற்றுக் கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. கிருபையினாலே இரட்சிக்கப்படுகிறோம். இது தேவனுடைய ஈவு.
இரட்சிக்கப்படவில்லை என்றால் நாம் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவோம். பெற்ற இரட்சிப்பை இழக்கும்போது, இரட்சிப்பினால் உண்டாகிற சந்தோஷத்தை, சமாதானத்தை இழந்து போகிறோம். தாவீது சங்கீதம் 51:12ல் 'உமது இரட்சணியத்தின் சந்தோஷத்தைத் திரும்பவும் எனக்குத் தந்து, உற்சாகமான ஆவி என்னைத் தாங்கும்படி செய்யும்.' என்று தனது மன்றாட்டில் பாவ அறிக்கையையும், கெஞ்சுதலையும் பார்க்கமுடிகிறது. நாம் பெற்றுக் கொண்ட விலையேறப்பெற்ற இரட்சிப்பை முடிவுபரியந்தம் காத்துக் கொள்ள வேண்டும்.
4. பரிசுத்த ஆவியைக் கொடுப்பது தேவனுடைய ஈவு
"பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரமபிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா என்றார்." லூக்கா 11:13
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடேன் என்று சொன்னவர், என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்கு சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளியிருக்கிறார். உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக் கொள்ள மாட்டாது. அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள் இருப்பதால் நீங்கள் அவரை அறிவீர்கள். இந்த ஆவியின் அபிஷேகம் நமக்குள் வரும்போது, நமது வாழ்க்கையானது முற்றிலும் மாறிவிடும். ஜென்ம சுபாவங்கள் நீங்கி, கிறிஸ்துவின் சிந்தையோடு அவரது சிலுவையின் பாடுகள், மரணம், உயிர்த்தெழுதல் -இவைகளை நம்மில் நினைப்பூட்டுகிறதாய் இருக்கிறது. இந்தப் பரிசுத்த ஆவி, இயேசு கிறிஸ்துவுக்கு முன் சில பரிசுத்தவான்களின் வாழ்க்கையில் அருளப்பட்டிருந்தது. இப்பொழுதோ அந்தப் பரிசுத்த ஆவியை இயேசு கிறிஸ்து மூலம் எல்லாரும் பெற்றுக் கொள்கிற சிலாக்கியம் நமக்கு உண்டாயிற்று.
இந்தப் பரிசுத்த ஆவியானவர் நமக்குள் இருக்கும்போது, 'கர்த்தரே ஆவியானவர்; கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையு முண்டு. 2 கொரி.3:17ன்படி விடுதலை உண்டாகிறது. 'ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக் கொள்ளவேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவி யானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார்.' ரோமர் 8:26ன்படி இந்தப் பரிசுத்த ஆவியானவர் நம்முடைய ஜெபங்களில் நமக்குள் இருந்து உதவிசெய்கிறார். மீகா 3:8ன் படி ஆவியானவர் பலத்தை அருளுகிறார். கர்த்தருடைய ஆவியானவர் சிம்சோனில் இறங்கினபோது, அவன் மிகுந்த பலசாலியானான்.
மேலும் கர்த்தருடைய ஆவியானவர் பரிசுத்தமாக்குகிறவராக இருக்கிறார். மேலும் இந்த ஆவியானவர் நமக்குள் தேவ அன்பைப் பெருகச்செய்வதோடு ஆவியின் கிருபை வரங்களையும் பெற்றுக்கொள்ள தகுதிப்படுத்தி, எந்த நற்கிரியைகளுக்கும் ஆயத்தமாக்கப்பட்ட பாத்திரமாக வனைந்து கொள்கிறார்.
இப்படிப்பட்ட கர்த்தரின் ஈவுகளைப் பெற்றுக்கொண்டதோடு மாத்திரமல்ல அதற்காக தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்துகிறவர்களாய் நாம் மாற வேண்டும். ஸ்தோத்திர பலியிடுகிறவன் என்னை மகிமைப் படுத்துகிறான் என்ற வார்த்தையின்படி கர்த்தராகிய தேவனை நாம் மகிமைப்படுத்துகிற, கனப்படுத்துகிற மக்களாக மாறி விடுகிறோம்
கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.
கிறிஸ்து இயேசுவின் பணியில்,
சகோ. C. எபனேசர் பால்