ஜெபம்

                                                                                       பாவத்தை மேற்கொள்ள ஒரு ஜெபம்
 

            அன்பின் தேவனே, இந்த நல்ல ஜெப வேளைக்காக நன்றி கூறுகிறேன். கர்த்தாவே, என் வாழ்க்கையிலே நான் பரிசுத்தமாய் வாழ, உமக்கேற்ற காரியங்களைச் செய்ய உள்ளத்தில் வாஞ்சிக்கிறேன். ஆனால் சோதனை நிறைந்த இந்த உலகத்திலே எதை நான் செய்யக்கூடாது, பார்க்கக் கூடாது என்று எண்ணுகிறேனோ அதையே காண வேண்டும், அதையே செய்ய வேண்டும் என்ற எண்ணங்கள், செயல்கள் பெருகிவிடுகிறது. இவ்வாறான காரியத்தில் தோற்றுப் போய் கலங்குகிறேன். இதனால் என் துக்கம் அதிகரிக்கிறது. சாத்தானும் நீ பாவி தான் என்று என்னைத் துக்கப்படுத்தி கலங்கடிக்கிறான். உம்மிடத்தில் திரளான மீட்பு உண்டு என்று உணருகிறேன். பாவத்திற்காக மனஸ்தாபப்படுகிறேன். சோதனையை மேற்கொள்வதற்கு வேண்டிய ஆவியின் பெலனும், ஆத்துமாவில் தைரியமும், உம்முடைய தூய ஆவியின் ஒத்தாசையும் எனக்குத் தாரும். பாவம் செய்த தாவீது, உற்சாகத்தின் ஆவியை எனக்குத் திரும்ப தந்து என்று கேட்பது போல கர்த்தாவே, இன்று உம்மை நோக்கிக் கெஞ்சுகிறேன். சில சமயங்களில் நான் செய்வது, பேசுவது, காண்பது தவறு என்று உணர்த்தப்பட்டாலும், எனக்குள் தோன்றின இச்சையினால் அந்தத் தவறைச் செய்து மிகுதியான துக்கம் அடைகிறேன். இயேசு கிறிஸ்துவே, எனக்கு இரங்கும். இனி பாவம் செய்யாதே என்று சொன்னவரே, நானும் இனி பாவம் செய்யாது வாழ எனக்கு உதவி செய்யும். உம்மால் மதிலைத் தாண்டுவேன் என்று சொன்ன தாவீதைப் போல என் வாழ்வில் இடையூறாக, முள்ளாக தோன்றும் எல்லா பாவச் சோதனைகளையும் கடந்து செல்ல எனக்கு உதவி செய்யும். கர்த்தாவே, என் வாயின் வார்த்தைகளைக் கேட்கிறவரே, என் வாயினால் பாவம் செய்யாதிருக்க எனக்கு உதவி செய்யும். வீண் வார்த்தைகளைப் பேசாமலும், பொய்யான காரியங்களைப் பேசாமலும், என் வாய்க்கு இன்று காவல்வையும். என் இருதயம் உம் வார்த்தையினாலும், அன்பினாலும் நிறைய எனக்கு உதவி செய்யும். என் இருதய நிறைவினாலே மற்றவர்கள் கிறிஸ்துவின் அன்பை, வார்தைகளை அறிந்து கொள்ள இன்றே உதவி செய்யும். என் உள்ளத்தின் ஆழத்திலும் நீர் செய்த உபகாரங்களுக்காக ஸ்தோத்திரமும், துதியும், செலுத்தக் கூடியதாய் நிறைந்திருக்க உதவி செய்யும். நீர் எனக்கு உதவி செய்வீர் என்று உமக்கு துதி ஸ்தோத்திரங்களை ஏறெடுக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் வேண்டுகிறேன் பிதாவே, ஆமென்.


E- STORE