''தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில்,

                               உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல்

                                எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்.''

                                                                                                                                1பேதுரு 5:8

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

        கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.

               இந்த உலக வாழ்க்கையிலே நமக்கு பலவிதமான எதிராளிகள் உண்டு. இந்த வாக்கியத்திலே எதிராளியாகிய பிசாசானவன் என்று சொல்லப்பட்டிருக்கிறது. மனுக்குலத்தைப் பாடுபடுத்த வேண்டும், வேதனைப்படுத்த வேண்டும், தவறான தீய காரியங்களிலே சிக்க வைக்க வேண்டும் என்று பிசாசு தந்திரமாய் செயல்படுகிறான். தாவீது சங்27:11ல் 'கர்த்தாவே, உமது வழியை எனக்குப் போதித்து, என் எதிராளிகளினிமித்தம் செவ்வையான பாதையில் என்னை நடத்தும்.' என்று கேட்பதைப் பார்க்கிறோம். எதிராளியாகிய பிசாசானவன் எல்லா நேரங்களிலும் இந்தச் செயலைச் செய்து நம்மை விழுங்க வேண்டும் என்று போராடுகிறேன்.

       சில ஆண்டுகளுக்கு முன்பு வியட்நாமிலே யுத்தம் நடந்தது. அமெரிக்க போர்சேவகர்களும் அந்த யுத்தத்தில்  பங்கேற்றார்கள். அமெரிக்கா யாருக்கு support செய்தார்கள் என்று தெரியாமல் போனதாலும், எதிராளி யார் என்று அறியாததினாலும் அநேக அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். முதலாவது நம்முடைய எதிராளி பிசாசானவன் என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இன்னும் வேதத்தைப் பார்க்கும் போது  பிலேயாம் பண ஆசையினாலே இஸ்ரவேல் ஜனங்களுக்கு விரோதமாய் எழும்பி அழிப்பதற்கு அழைத்த பாலாக்கிடம் சென்றான். அது தேவனுக்கு முன்பாக கோபத்தை மூட்டும் செயலாய் இருந்தது. அதினால் எண்.22:22ன்படி தேவனுடைய தூதன் பிலேயாமுக்கு எதிராக வந்தான்.

     இன்னும் ஏசாயா 63:10ல் கர்த்தருடைய ஆவியானவரை விசனப்படுத்தி, துக்கப்படுத்தி விரோதமாய் கலகம் செய்தபடியால், கர்த்தரே சத்துருவாக மாறினார். இன்றைக்கு நம்முடைய வாழ்க்கையில் நம்மை நீதிமானாக்குகிற கர்த்தர் சமீபமாயிருக்கையில் என்னோடு வழக்காடுகிறவன் யார்? ஏகமாய் நிற்போமாக, யார் எனக்கு  எதிராளி? என்று ஏசாயா 50:8ல் சொல்கிற வாசகத்தையும் பார்க்கிறோம். எதிராளியாகிய பிசாசானவன் நம்மை விழுங்கலாமோ என்று சுற்றித் திரிகிறான். பிசாசைக் குறித்து இயேசு கிறிஸ்து  சொல்லும்போது, அவன் திருடவும், கொல்லவும், அழிக்கவுமே வருகிறான் என்றார். நம் வாழ்வின் சமாதானத்தை, சந்தோஷத்தை, சுகத்தை, ஆசீர்வாதத்தை, அன்பின் ஐக்கியத்தைத் திருடி, கசப்பையும் கண்ணீரையும் பெருகச் செய்கிறவன். இன்று அநேகருடைய குடும்ப வாழ்க்கையிலே பிசாசானவன் கெடுதி விளைவிக்கும்படியாக, தந்திரமாய் செயல்பட்டு குடும்ப ஒற்றுமையை திருடுகிறான். இன்னும் சிலருடைய வாழ்க்கையிலே பலவிதமான காரியங்களில் அழிவைக் கொண்டு வருகிறான். சிலரைக் கொல்லவும் செய்கிறான். இவ்வித வேதனையான செயலை நம் வாழ்வில் செய்வதற்கு நம்மைச் சுற்றிக் கொண்டே இருக்கிறான்.

நான் இளஞனாயிருந்த போது கோழிக்குஞ்சுகளை வளர்ப்பதில் ஆவலுடையவனாய் இருந்தேன். தாய்க்கோழியையும், குஞ்சுகளையும் வெளியே விட்டு ஆகாரத்தை நன்கு தின்ன வேண்டும் என்று திறந்து விடுவேன். திறந்தவுடனே கோழிக்குஞ்சுகள் தன் தாயோடு இருப்பதற்குப் பதிலாக அங்குமிங்கும் திரிந்து அலையும். இதை வானத்தில் இருந்தே பார்த்துக் கொண்டிருக்கும் கள்ளப்பிராந்துகள் அதைச் சுற்றி சுற்றி வந்து, தாயை விட்டு பிரிந்திருக்கும் குஞ்சைப் பிடித்து தூக்கிச் சென்று விடும். இன்று அநேகர் இதைப் போல சபையை விட்டு, கர்த்தருடைய பிள்ளைகளின் ஐக்கியத்தை விட்டு தங்கள் சுயநீதியிலே வாழ்ந்து, மேன்மையையும், ஜீவனையும் இழந்து போகிறார்கள். சத்துருக்களுக்கு இடம் தராதபடி நாம்  தெளிந்த புத்தியோடு விழித்திருக்க வேண்டும் என்ற ஆலோசனைப்படி வாழ்வதற்கு நம்மை ஒப்புக்கொடுக்க வேண்டும்.

I  எப்பொழுது நாம் தெளிந்த புத்தியுள்ளவர்களாய் இருக்க முடியும்?

1) பிசாசின் பிடியில் இருந்து விடுதலையாகும்போது

'' ...சம்பவித்தைப் பார்க்கும்படி ஜனங்கள் புறப்பட்டு, இயேசுவினிடத்தில் வந்து, பிசாசுகள் விட்டுப் போன மனுஷன் வஸ்திரம்தரித்து இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து புத்தி தெளிந்திருக்கிறதைக் கண்டு, பயந்தார்கள்.'' லூக்கா 8:35

         இயேசு கிறிஸ்து கலிலேயாவுக்கு எதிரான கதரேனருடைய நாட்டில் சேர்ந்தார். கரையிறங்கின போது நெடுநாளாய்ப் பிசாசுகள் பிடித்திருந்தவன் வஸ்திரம் தரியாதவனும், வீட்டில் தங்காமல் பிரேதக் கல்லறைகளிலே தங்கினவனுமாயிருந்த அந்தப் பட்டணத்து மனுஷன் ஒருவன் அவருக்கு எதிராக வந்தான், இயேசுவைக் கண்ட போது கூக்குரலிட்டு, முன்பாக விழுந்து இயேசுவே, உன்னதமான தேவனுடைய குமாரனே, எனக்கும் உமக்கும் என்ன? என்னை வேதனைப்படுத்தாதபடிக்கு உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் என்று சத்தத்தோடே சொன்னான். அந்த அசுத்த ஆவி அவனைவிட்டுப் போகும்படி இயேசு கட்டளையிட்ட படியினால்  அப்படிச் சொன்னான். பிசாசினால் பாதிக்கப்பட்டிருந்த அந்த மனிதனுக்குள்ளாய் செயல்பட்ட ஆவிகள் தங்களைப் பாதாளத்திலே போகும்படி கட்டளையிடாதபடி அவரை வேண்டிக் கொண்டன. இயேசு கிறிஸ்து பிசாசின் விண்ணப்பத்திற்குச் செவிகொடுத்து அங்கிருந்த பன்றிகளுக்குள் போக கட்டளையிட்டார். உடனே அவைகள் பன்றிகளுக்குள் சென்றது. பன்றிகள் கடலில் குதித்தபடியால்  மாண்டு போயின. விடுதலை அடைந்த மனிதன் எப்படி இருக்கிறான் என்று பார்த்தபோது புத்தி தெளிந்திருந்தான்.

 2) குறைகள் நிறைந்து தேவைகள் சந்திக்கப்படாத நேரத்தில் புத்திதெளிகிறது

''அவனுக்குப் புத்தி தெளிந்தபோது: அவன் என் தகப்பனுடைய கூலிக்காரர் எத்தனையோ பேருக்குப் பூர்த்தியான சாப்பாடு இருக்கிறது, நானோ பசியினால் சாகிறேன்.''லூக்கா 15:17.

          தகப்பனுடையஅன்பையும், சகோதரனுடைய ஐக்கியத்தையும் விட்டுப் பிரிந்து போன இளையகுமாரன்,  தன் செல்வத்தை இழந்து சமுதாயத்தில் வெறுக்கப்பட்டவனாய் வாழ்ந்தான். பன்றிகளுக்கு வைக்கிற தவிட்டைக்  கூட உண்ண கொடுப்பாரில்லாது கலங்கினான். அப்பொழுது தன் தகப்பன் வீட்டை நினைவு கூர்ந்தான், புத்தி தெளிந்தான்.

3) வானத்தை நோக்கிப் பார்த்தபோது புத்திதெளிவு

 'அந்த நாட்கள் சென்ற பின்பு, நேபுகாத்நேச்சராகிய நான் என் கண்களை வானத்துக்கு ஏறெடுத்தேன்; என் புத்தி எனக்குத் திரும்பி வந்தது.' தானியேல் 4:34.

அரமனைமேல் உலவிக்கொண்டிருந்த நேபுகாத்நேச்சார் என் வல்லமையின் பராக்கிரமத்தினால், என் மகிமைப்பிரதாபத்துக்கென்று, ராஜ்யத்துக்கு அரமனையாக நான் கட்டின மகா பாபிலோன் அல்லவா என்று சொன்னான். இந்த வார்த்தை ராஜாவின் வாயில் இருக்கும் போதே, வானத்திலிருந்து ஒரு சத்தமுண்டாகி ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரே, ராஜ்யபாரம் உன்னைவிட்டு நீங்கிற்று. மனுஷரினின்று தள்ளப்படுவாய்; வெளியின் மிருகங்களோடு சஞ்சரிப்பாய், மாடுகளைப் போல புல்லை மேய்வாய். இப்படியே உன்னதமானவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகை செய்து, தமக்குச் சித்தமாயிருக்கிறவனுக்கு அதைக் கொடுக்கிறா ரென்பதை நீ அறிந்து கொள்ளுமட்டும் ஏழு காலங்கள் உன் மேல் கடந்து போகும் என்று உனக்கு சொல்லப்படுகிறது என்று விளம்பினது. அந்நேரமே அவன் தள்ளப்பட்டுப் போனான். அந்த நாட்கள் சென்ற பின்பு நேபுகாத்நேச்சார் தன் கண்களை வானத்துக்கு ஏறெடுத்த போது அவன் புத்தி அவனுக்குத் திரும்ப வந்தது. அப்பொழுது அவன் உன்னதமானவரை ஸ்தோத்தரித்து, என்றென்றைக்கும் ஜீவித்திருக்கிறவரை புகழ்ந்து மகிமைப்படுத்தினான்.

II. யார் சிங்கங்களின் காரியங்களை மேற்கொள்வார்கள்?

1)விசுவாசத்தினால் சிங்கங்களின் வாயை அடைத்தார்கள்.

  ''விசுவாசத்தினாலே அவர்கள் ராஜ்யங்களை ஜெயித்தார்கள், நீதியை நடப்பித்தார்கள், வாக்குத்தத்தங்களைப் பெற்றார்கள், சிங்கங்களின் வாய்களை அடைத்தார்கள்.” எபிரேயர் 11:33

         இன்று நம்முடைய வாழ்க்கையிலே சிங்கத்தின் வாயை அடைத்து ஜெயம் கொள்ள வேண்டுமானால், கிறித்துவுக்குள்ளான விசுவாசம் நமக்குத் தேவை. விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம். விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது. கிறிஸ்துவை விசுவாசிக்கிற மக்களாகிய நாம், எனக்காக, எங்களுக்காக அவர் தம்முடைய இரத்தத்தைச் சிந்தினார், ஜீவனைக் கொடுத்தார் என்ற உண்மையை ஏற்றுக்கொள்ளும்போது, உங்கள் எல்லைகளில் வருகிற சிங்கங்களை மேற்கொள்ளக்கூடிய பெலத்தை அடைவீர்கள். இன்றைக்கு விசுவாசத்தினால் உண்டாகும் ஆவியின் பெலத்தினால் சிங்கங்களின் வாயை அடைக்கவும், பிசாசின் தந்திரங்களை மேற்கொள்ளவும் முடியும்.

         ஒருமுறை 14வயது முடிந்த மகளை தாயார் ஜெபிக்க அழைத்து வந்தார்கள். அவளுக்காக ஜெபிக்க ஆரம்பித்த போது அந்த மகளை வழி தப்பி நடத்தின ஒரு ஆவி (வேசித்தன ஆவி )(ஓசியா 4:12)எதிர்த்து போராட ஆரம்பித்தது. இவள் எனக்கு வேண்டும் என்று கத்தி சொல்ல ஆரம்பித்தது. தாயாருக்கும் மிகுந்த கவலை. அத்துடன் பயமும் கூட அந்த ஆவி இவளை எப்படி தவறான வழியிலே நடத்தியது என்று சொல்ல ஆரம்பித்தது. ஒரு ஆண் மகனின் பெயரைச் சொல்லி அவனைப் பார்த்து சிரிக்க வைத்தேன், பேச வைத்தேன். தவறான எல்லைகளுக்கு அழைத்துச் செல்ல வைத்தேன். அவளுடைய பேர் கெட்டுப் போக வேண்டும் என்று , அவனை விட்டுவிட வைத்து இன்னொருவனோடு பழக வைத்தேன். இவ்விதமாக அந்த மகளுடைய வாழ்க்கையை அழிக்க வேண்டும் என்று நான் செயல்படுகிறேன், ஆகவே இவள் எனக்கு வேண்டும் என்று கேட்க ஆரம்பித்தது. இயேசு கிறிஸ்து அந்த மகளுக்காக ஜீவனைக் கொடுத்திருக்கிறார், தன் சொந்த இரத்தத்தைக் கொடுத்திருக்கிறார் என்று கூறி ஜெபிக்க ஆரம்பித்தேன். இந்த ஜெபம் எனக்குப் பிடிக்கவில்லை, அவள் எனக்குத்தான் வேண்டும் என்று சத்தமிட ஆரம்பித்தது. அவளுடைய உள்ளத்தில் தெளிவு வந்த போது, இயேசு கிறிஸ்துவே உம்மை விசுவாசிக்கிறேன், எனக்கு இரங்கும் என்று உன் ஆவியிலே, மனதிலே  சொல்லிக்கொண்டேயிரு என்று சொன்னேன். அந்த மகளும் அவ்வாறு சொல்ல ஆரம்பித்த போது, அந்த மகளை அதிகமாக வாதித்தது. 3மணி நேர போராட்டத்திற்குப் பின்பு அந்த மகளை ஆளுகை செய்து கொண்டிருந்த தீய ஆவி மிகுந்த சத்தமிட்டு விலகியது. அந்த மகளுக்குள் என்றுமில்லாத  சமாதானம், சந்தோஷம் வந்தது. தன் வாழ்க்கையில் செத்த தவறுகளை அறிந்து,உணர்ந்து, தன் தாயைக் கட்டிப்பிடித்து அழுதாள். அந்த மகளின் வாழ்க்கையிலே கிறிஸ்துவைக் குறித்து விசுவாசம் இருந்தபடியால், பிசாசின் செயல் மீது ஜெயம் கொண்டாள்.

         அருமையான தேவப்பிள்ளையே, விசுவாசம் கேள்வியினாலே வரும் (ரோமர் 10:17) இந்த வேதத்தை நேசித்து தியானிக்கும் போது, ஆராயும் போது கர்த்தர் மேல் விசுவாசம் நமக்குள்ளாய் தோன்றிவிடும். அன்று இயேசு கிறிஸ்து கானாவூர் திருமணத்திலே செய்த அற்புதத்தைச் சீஷர்கள் கண்டார்கள். தண்ணீர் திராட்சரசமாக மாற்றப்பட்டதை அறிந்து இயேசு கிறிஸ்துவின் மேல் விசுவாசம் வைத்தார்கள் (யோவான் 2:11) இன்று நம்முடைய வாழ்க்கையிலே அவருடைய விசுவாச ஆவியினால் நிறையும் போது பெலனடைகிறோம். 2கொரி.4:13ன் படி விசுவாசத்தின் ஆவியினால் விசுவாசம் பெருகுகிறது.1கொரி 12:9ன் படி ஆவியினாலே விசுவாச வரமும் நமக்குள் தரப்படுகிறது. இந்த விசுவாச வரத்தினால் அநேக காரியங்களைத் திட்டமாய்ச் சொல்லவும், அவர்கள் தங்கள் பாவங்களைக் குறித்து மனஸ்தாபப்படவும் செய்கிறது. விசுவாச வரத்தினால் அநேக காரியங்களைத் தைரியமாய்ச் சொல்லி நீதிக்குட்படுத்துகிற கிருபையின் பாத்திரங்களாய் மாறி விடுகிறோம். விசுவாச வரம் பிசாசுகளைத் துரத்துவதற்கும் ஏற்றதாய் இருக்கிறது. விசுவாசத்தினால் பிசாசின் செயலை நிர்மூலமாக்குகிற கருவிகளாய் மாறுகிறோம்.

 2. சாட்சியின் வாழ்க்கையினால்

  ''சிங்கங்கள் என்னைச் சேதப்படுத்தாதபடிக்குத் தேவன் தம்முடைய தூதனை அனுப்பி, அவைகளின் வாயைக் கட்டிப்போட்டார்.'' தானியேல் 6:22.

      நம்முடைய வாழ்க்கை கிறிஸ்துவின் சாட்சிக்கு ஏற்றதாய் மாறும் போது சிங்கங்கள் நம்மைச் சேதப்படுத்த முடியாதபடி காக்கப்படுகிறோம். தானியேலின் வேலை ஸ்தலத்திலே தானியேல் உயர்த்தப்படாதிருக்க தந்திரமான ஆலோசனைகளைச் செய்து, தானியேலை நேசித்த ராஜாவே சிங்கக்கெபியிலே போடக் கட்டளையிட்டான். தரியு ராஜாவுக்கு தானியேல் பிரியமானவனாய் இருந்தான். மிகுந்த சஞ்சலத்தோடு காலை முதல்  சூரியன் அஸ்தமிக்கும்வரை பிரயாசப்பட்டான். இவ்வாறு சிங்கத்தின் கெபியிலே போடப்பட்ட தானியேல் தப்பமுடியாதபடி கெபியினுடைய வாசலில் கல் வைக்கப்பட்டு முத்திரையும் வைக்கப்பட்டது.

அருமையான சகோதரனே, சகோதரியே உனக்கு விரோதமாய் எழும்பினவர்கள் வேலை ஸ்தலத்தில் இருக்கலாம், ஊரிலே இருக்கலாம். உன் குடும்பத்தில் இருக்கலாம். எந்த விதத்தில் இருந்தாலும், அன்று அவ்வளவு தான் தானியேல் என்று எண்ணிண மக்களைப் போல அவன் ஒழிந்தான் என்று கொண்டாட்டம் இருக்காலாம். அன்று நடந்தது என்ன? தானியேலைச் சிங்கங்கள் சேதப்படுத்தாதபடிக்கு தேவன் தமது தூதனை அனுப்பி அவைகளின் வாயைக் கட்டிப் போட்டார். தேவ சமுகத்திலே சாட்சியாயிருந்த தானியேலைச் சிங்கங்களின் வாய்க்குத் தப்புவித்துக் காத்த, கர்த்தரின் செயல் வல்ல செயலாயிருக்கிறது. காலையிலே ராஜா துயர சத்தத்தோடு தானியேலே, நீ இடைவிடாது ஆராதிக்கிற தேவன் உன்னைத் தப்புவிக்க வல்லவராக இருந்தாரா என்று கேட்டான். தானியேல் உடனே ராஜாவுக்குரிய மரியாதை செலுத்தி ராஜாவே, நீர் என்றும் வாழ்க என்று சொல்லி, தன் வாழ்வில் கர்த்தர் செய்த வல்ல பெரும் செயலைக் கூறினான். இதை ஏன் செய்தார்  என்றால், தேவனுக்கு முன்பாக குற்றமற்றவனாக இருந்தான். ராஜாவாகிய உமக்கு முன்பாக நீதிகேடு செய்ததில்லை என்று கூறினான். கிறிஸ்தவ வாழ்க்கை என்றாலே சாட்சி நிறைந்த வாழ்க்கை ஆகும். இயேசு கிறிஸ்து பரத்திற்கு எடுத்துக் கொள்ளும் முன்பாக தமது சீஷர்களை எருசலேமிலே கூடிவரச் செய்தார். அவ்வாறு கூடின அவர்களுக்கு அப்.1:8ல் பரிசுத்த ஆவி உங்களில் வரும்போது, நீங்கள் பெலனடைந்து உலகமெங்கும் கிறிஸ்துவுக்கு சாட்சிகளாய் இருப்பீர்கள் என்று சொன்னதைப் பார்க்கிறோம். சிங்கங்கள் சேதப்படுத்தாதபடிக்கு நமக்கு விரோதமாய் உள்ள சத்துருக்களுடைய செயல்கள் அழிக்கப்படுவதற்கு நம்மில் சாட்சியின் வாழ்க்கை  அவசியமாய் இருக்கிறது.

        தாவீது  பாவம் செய்தான். தன் மாம்ச இச்சைகளுக்கும், கண்களின் இச்சைகளுக்கும் இடம் கொடுத்து தேவனுக்கு விரோதமாக பாவத்தைச் செய்தான். அவனுக்கு பிறந்த அந்தப் பிள்ளை பிழைக்க வேண்டும் என்று போராடி ஜெபித்தான். தேவ ஊழியராகிய நாத்தான் அவன் பாவத்தைச் சுட்டிக் காட்டிய போது, அவன் பாவத்தை உணர்ந்து தேவனுக்கு விரோதமாய் பாவம் செய்தேன் என்று அறிக்கை செய்தான். நாத்தான் அவனைப் பார்த்து நீ சாகாதபடிக்கு உன் பாவம் நீங்கச் செய்தார். ஆனாலும் இந்தக் காரியத்தினாலே கர்த்தருடைய சத்துருக்கள் தூஷிக்க நீ காரணமாயிருந்த படியினால் உனக்குப் பிறந்த பிள்ளை நிச்சயமாய் சாகும் என்று சொல்லி நாத்தான் தன் வீட்டிற்குப் போய் விட்டான். சாட்சியின் வாழ்வு நமது செய்கையினால் கெடும் போது, தேவனின் நியாயத் தீர்ப்பின் செயலுக்கு ஆளாவோம். தானியேல் சாட்சியுள்ளவனாய் இருந்தபடியால் அவனைச் சேதப்படுத்த முடியவில்லை.

3) தேவனை நமக்கு எல்லாமுமாய் ஏற்றுக்கொள்ளும்போது

 ''எனக்கு அடைக்கலமாயிருக்கிற உன்னதமான கர்த்தரை உனக்குத் தாபரமாகக்கொண்டாய்.''

  ''சிங்கத்தின் மேலும்விரியன் பாம்பின்மேலும் நீ நடந்து, பாலசிங்கத்தையும் வலுசர்ப்பத்தையும் மிதித்துப் போடுவாய்.'' சங்கீதம் 91:9,13.

           இந்த உலக வாழ்க்கையில் இயேசு கிறிஸ்துவை எல்லாமாக ஏற்றுக்கொள்ளும்போது, உங்களின் ஜெபத்திற்கு அற்புதமான பதில் கிடைக்கும். அவரை ஏற்றுக்கொண்டபடியினால் உன் வழிகளிளெல்லாம் உன்னைக் காக்கும்படிக்குத் தூதர்களுக்குக் கட்டளையிடுவார். உன் பாதம் கல்லில் இடறாதபடிக்குத் அவர்கள் உன்னைத் தங்கள் கைகளில் ஏந்திக் கொண்டு போவார்கள். சிங்கத்தின் மேலும், விரியன் பாம்பின் மேலும், நீ நடந்து பாலசிங்கத்தையும், வலுசர்ப்பத்தையும்,மிதித்துப் போடுவாய். உன் சத்துருக்களை மிதிக்கத்தக்கதான பெலனுடையவனாய் உன்னை மாற்றுவார், உன்னை உயர்த்துவார். கர்த்தரை நம்முடைய எல்லாமாக எல்லா நேரத்திலும், அவரையே நம்பி சார்ந்து ஜீவிக்கும் போது, கர்த்தர் நம்மைக் கண்மணிப் போல் காப்பார். உனக்கு விரோதமாய் எழும்புகிற எந்த செயலும் வாய்க்காதே போம். இந்த வல்லமையான காரியத்தைக் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் பெற்றுக் கொள்கிற பாக்கியம் கிடைக்கிறது. அனுதின வாழ்க்கையிலே பல பாடுகள், பிரச்சனைகள், குறைகள் தோன்றலாம். ஆனால் கர்த்தரை எல்லாமாக ஏற்றுக்கொள்ளும் போது அவைகளினால் உண்டாகிற எல்லா பிரச்சனைகளையும், எல்லா கசப்புக்களையும் மேற்கொள்ள கர்த்தரின் உதவி நமக்குக் கிடைக்கும். பிசாசின் தந்திரங்களினால் உண்டாகும் சேதங்களைக் கொண்டு வராது நிறுத்தப்படும். இந்த உலக வாழ்க்கையிலே இவரே என் மாதிரி, என் தலைவர் மாதிரி என்று உலக நடிகர்களையும், நடிகைகளையும், விளையாட்டு வீரர்களையும் தெரிந்து கொள்கிறார்கள். கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர் என்பதை அறியாதிருக்கிறார்கள். இன்று கர்த்தரை எனக்கு எல்லாமாக நாம் ஏற்றுக் கொள்ளும் போது அதிகாரமும், ஆசீர்வாதமும் பெற்றவர்களாய் நாம் மாறிவிடுவோம்.

        ஆஸ்பத்திரியில் நான் என் பெலவீனத்தில் பயந்து கலங்கி வேதனையோடு இருந்த நாளில் என் அருகே இருந்த என் மனைவி ஒரு வேதப்பகுதியை வாசித்தார்கள். தூக்க மருந்து கொடுத்து தூங்க வைத்திருந்த அந்நாளில் திடீரென்று பயத்துடன் எழுந்திருந்தேன. மணி என்ன என்று கேட்டபோது, 12 என்று என் மனைவி கூறினாள். எனக்கு இருக்கிற இந்த வேதனையான வியாதி இயற்கையினால் அல்ல, பிசாசினால் வந்தது என்று என் மனைவியிடம் கூறினேன். எங்கு பிழைப்பேனோ அல்லது மரித்துப் போவேனோ என்று வேதனையோடு சிந்தித்துக் கொண்டிருந்தேன். என் பிள்ளைகள் அனாதையாக ஆவார்களே, என் மனைவியினால் என்ன செய்ய முடியும், எப்படி வளர்க்க முடியும் என்று சிந்தித்துக் கொண்டிருக்கும்போது அன்று இரவிலே என் காதில் விழ சங்கீதம் 91:11ஐ வாசித்தாள். 9,10 வாக்கியங்களை உன்னித்து கேட்டேன். ஏன் என்றால் மீண்டும் உலகத்தில் ஜீவனோடு இருப்பேன் என்ற நம்பிக்கை எனக்குத் தந்தது. அந்தப் பகுதியை மீண்டும் கேட்டபோது, கர்த்தாவே இந்த வார்த்தைகள் எனக்கு வாக்குத்தத்தமாக தருவீர் என்றால் என் வேலையை நான் ராஜினாமா செய்து உமக்காக முழுநேர ஊழியத்தைச்செய்வேன் என்று கூறினேன். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை எனக்கு எல்லாமாக ஏற்றுக் கொண்டு, நான் செய்த தீர்மானத்திற்குப் பதிலாக என் தேவன் எனக்கு அற்புத சுகத்தை என் இருதயத்தில் தந்தார். எனக்குள் இருந்த பயம் நீங்கினது. அன்று முதல் இரவிலே வருகிற ஆவியின் தொல்லைகளை, பயத்தை விட்டு விலகச் செய்தார். ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டுக்குத் திரும்பிய பின் இருவருமாக ஜெபிக்க ஆரம்பித்தோம். அன்று 11 மணிக்கு ஆரம்பித்த ஜெபத்தினால் விரோதமாய் தோன்றின அசுத்த ஆவி எசேக்கியல் 28:18ல் உள்ளது போல சாம்பலானது. மல்கியா 4:3ன் படி துன்மார்க்கரை மிதிப்பீர்கள். உங்கள் உள்ளங்கால்களில் சாம்பலாய் இருப்பார்கள் என்ற கர்த்தரின் வார்த்தையின்படி காரியங்கள் நடைபெற்றது. அந்நாள் முதல் தேவனை அதிகமாக தேடவும் துதிக்கவும் ஆரம்பித்தேன். அதின் பலனாக பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை அன்று பெற்றுக் கொள்ள எனக்கு உதவி செய்தார். அதை அறியாத நான் Nerve system பாதிக்கப்பட்டது என்று கலங்கினேன். கர்த்தரோ தமது கிருபையால் மகிழ்ச்சியினாலும், சமாதானத்தினாலும் என்னை நிறைத்தார். அத்துடன் வரங்கள் என்ன என்று அறியாது எனக்கு வரங்களைக் கொண்டு அநேகரை சந்திக்க வழி  நடத்தினார்.

4) மீட்கப்பட்டவர்களின் வாழ்க்கையில் சிங்கம் இருப்பதில்லை.

   'அங்கே சிங்கம் இருப்பதில்லை; துஷ்டமிருகம் அங்கே போவதுமில்லை, அங்கே காணப்படவுமாட்டாது; மீட்கப்பட்டவர்களே அதில் நடப்பார்கள்.'' ஏசாயா 35:9.

       மீட்பராகிய இயேசு கிறிஸ்து எல்லாவிதமான சத்துருக்களின் செய்கைகளுக்கும் தடைகளுக்கும் போராட்டங்களுக்கும், பெலவீனங்களுக்கும், நம்மை விலக்கி மீட்டுக் கொள்கிறவர். ஏசாயா 43:1ல் நான் உன்னை மீட்டுக் கொண்டேன் என்ற கர்த்தாதி கர்த்தர் சத்துருவினுடைய சதி நாசங்களுக்கு நம்மை விலக்கி மீட்டுக் கொள்கிறார். நம் பாவங்களிருந்தும், சாபங்களிலிருந்தும், மரண பயத்திலிருந்தும் நம்மை மீட்டு நம்மை ஆசீர்வதிக்கிறார். இந்த மீட்பைக் கல்வாரிச் சிலுவையிலே நமக்காக உலகமக்கள் அனைவருக்காக செய்து முடித்து விட்டார். அந்த மீட்பை அறிந்து உணர்ந்து இன்று அதை ஏற்றுக் கொள்வோம் என்றால் எந்தத்  தீங்கும் நம்மை மேற்கொள்ளாது. நான் உன்னை மீட்டுக் கொண்டேன் என்று சொன்னவர், நீ தண்ணீர்களைக் கடக்கும் போது நான் உன்னோடு இருப்பேன், நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை. நீ அக்கினியில் நடக்கும் போது வேகாதிருப்பாய். அக்கினி ஜீவாலை உன் பேரில் பற்றாது (ஏசாயா 43:2) என்ற மேன்மையான  வாழ்வை நமக்கு அருளிச் செய்வார். சிலுவையிலே தமது விலையேறப் பெற்ற இரத்தத்தைச் சிந்தி உங்களையும், என்னையும் நித்திய அக்கினிக்கடலுக்குச் செல்லாதிருக்க மீட்டிருக்கிறார். அந்தக் கல்வாரி அன்பினால் நீங்கள் நிறையும் போது, அவர் பட்ட பாடுகளை உணர்ந்து ஏற்றுக் கொள்ளும்போது மீட்பானது உங்களுக்கு அருளப்பட்டு  ஆசீர்வதிக்கப்படுவீர்கள். வாழ்க்கையிலே சியோனுக்கு வருகிற அவர்களின் வாழ்க்கையில் சிங்கம் இருப்பதில்லை. துஷ்டமிருகம் அங்கே தோன்றுவதில்லை.

5) கர்த்தருடைய ஆவியின் பெலத்தினால்

  "அப்பொழுது கர்த்தருடைய ஆவி அவன் மேல் பலமாய் இறங்கினதால், அவன் தன் கையில் ஒன்றும் இல்லாதிருந்தும், அதை ஒரு ஆட்டுக் குட்டியைக் கிழித்துப்போடுகிறதுபோல் கிழித்துப்போட்டான்; ஆனாலும் தான் செய்ததை அவன் தன் தாய் தகப்பனுக்கு அறிவிக்கவில்லை." நியாயாதிபதிகள் 14:6

                    கர்த்தருடைய தூதனால் முன் அறிவிக்கப்பட்டு பிறந்தான் சிம்சோன். கர்த்தருடைய ஆவியானவர் அவனுக்குள் வரும்போதெல்லாம் மிகுந்த பெலனுடையவனாய் இருந்து சத்துருக்களை அதம் பண்ணினான். சிம்சோன் பெலிஸ்தர் நாட்டைச் சார்ந்த பெண்ணை விவாகம் பண்ணும்படி வீட்டாரை வற்புறுத்தினான். அவர்கள் திம்னாவுக்கு போகும் வழியில் கெர்ச்சிக்கிற பால சிங்கம் எதிர்ப்பட்டது. அப்பொழுது கர்த்தருடைய ஆவி அவன் மேல் பலமாய் இறங்கினதால், அவன் தன் கைகளில் ஒன்றும் இல்லாதிருந்தும் அதை ஒரு ஆட்டுக்குட்டியைக் கிழித்துப்போடுகிறதுபோல் கிழித்துப்போட்டான்.

அன்பின் தேவப்பிள்ளையே, கர்த்தருடைய ஆவியானவர் உனக்குள் நிறைந்திருக்கும்போது, பிசாசின் தந்திரங்களை அழிக்க, மேற்கொள்ள பெலன் தந்து ஆசீர்வதிப்பார். ஒரு முறை இலங்கை தேசத்திலே ஊழியம்  செய்யச்சென்றபோது, 6 பேர்கள் ஒரு ஹாலில் படுத்திருந்தோம். என்னோடு வந்திருந்த ஒருவர் எழுந்திருந்து ஜெபித்துக்கொண்டிருந்தார். அவ்வாறு ஜெபித்துக் கொண்டிருந்த வேளையிலே எனக்கு விரோதமாக ஒரு சிங்கம் தரிசனத்தில் எழுந்து வருவதைக் கண்டு, ஐயோ சகோதரருக்கு இவ்விதமாய் வருகிறதே என்று கலங்கின வேளையில், தூங்கிக் கொண்டிருந்த நான் திடீரென கர்த்தருடைய ஆவியில் நிறைந்து அந்நிய பாஷையில் கர்த்தரைத் துதிக்க ஆரம்பித்தேனாம். அவர் தரிசனத்தில் எழும்பின சிங்கம் தெறித்து ஓடியது என்று அடுத்த நாள் காலையில் தெரிவித்தார். இன்று நாம் கர்த்தருடைய ஆவியில் நிறைந்து வாழும்போது எதிராய் வரக்கூடிய சிங்கங்களின் செயல்களை நொறுக்கிப் போட ஆவியானவர் உதவி செய்வார்.                                      

கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.

கிறிஸ்துவின் பணியில்,  

சகோ.C. எபனேசர் பால்.