அன்பின் தேவனே. இந்த நல்ல ஜெபநேரத்திற்காய் நன்றி கூறுகிறேன். நீர் ஒருவரே எங்கள் ஜெபத்தைக் கேட்டு எங்கள் வாழ்க்கையிலே நன்மையும், சமாதானமும், சந்தோஷமும் தொடர்ந்து வர உதவி செய்கிறவர். குறைவான மதிப்பெண்களினால் என் பிள்ளை நான் விரும்பின படிப்பு படிக்க முடியாதபடி தடையாக இருக்கிறது. இயேசு கிறிஸ்துவே, என் பிள்ளைக்கு இரங்கி எல்லார் கண்களிலும் தயவு கிடைக்கச் செய்து ஆசீர்வதியும். நான் விரும்பின கல்லுாரியிலேயே என் பிள்ளை சேர உதவி செய்யும். இதுவரை என் ஜெபத்தைக் கேட்டு நான் வேண்டினதற்கு மேலாக காரியங்களை வாய்க்கச் செய்தீர். அதற்காக ஸ்தோத்திரம் கர்த்தாவே. இன்னும் கர்த்தாவே, என் பிள்ளை CBSE-ல் சேர்ந்து படிப்பதா, Matriculation-ல் படிப்பதா என்கிற குழப்பம் என் உள்ளத்தில் வருகிறது. எனக்கு இரங்கும். இயேசு கிறிஸ்துவே, என் பிள்ளை நன்கு படிக்கத் தகுதியான பாடத்திட்டதைத் தெரிந்தெடுத்து, துரிதமாய் சேர்ந்து படிக்க உதவி செய்யும். இன்னும் என் பிள்ளை படிக்கும் காலத்தில் நலமான நற்பண்புகள் நிறைந்த ஆசிரியர்கள் கிடைக்க உதவி செய்யும். கர்த்தாவே, என் பிள்ளை நல்ல Professional கல்லுாரியில் சேர்ந்து படிக்க நான் விரும்பினதை நீர் அறிவீர். இன்னும் என் வாஞ்சை நிறைவேறும்படி என் மகனும் என் மகளும் மருத்துவக் கல்லுாரியில் படிக்க இடம் கிடைக்க உதவி செய்வீராக. இயேசு கிறிஸ்துவே, பிள்ளைகளெல்லாரும் நன்றாய் படித்து காலத்தைப் பிரயோஜனப் படுத்திக் கொள்ள உதவி செய்யும். இப்பொழுதும் கல்லுாரியில் நடைபெறக்கூடிய ரகிங் போன்றவைகளினால் பாதிக்கப் பட்டுவிடாதபடி நீர் அவர்களை சமாதானத்தோடு காத்துக் கொள்ளும். கர்த்தாவே, அவர்கள் படிக்கின்ற படிப்பின் திறமையை அதிகரித்து எல்லாவற்றிலும் மேன்மையும் முதன்மையுமாய் இருக்கத்தக்கதாக நீர் உதவி செய்யும். என் பிள்ளைகள் உமக்குப் பிரியமாய் இருக்கிறபடியினால் உமக்கு நன்றி கர்த்தாவே. அவர்கள் அனுதின வாழ்க்கையிலே பரிசுத்தமாய் தங்களைக் காத்துக்கொண்டு கிறிஸ்துவுக்குச் சாட்சியாய் இருக்க உதவி செய்யும். அத்துடன் அவர்கள் மிகுந்த வெற்றியினால் அலங்கரிக்கப்படட்டும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே வேண்டுகிறேன் நல்ல பிதாவே, ஆமென்.