நேர்த்தியாய்  நடைபெற வேண்டிய  காரியங்கள் தாமதிப்பதால் ஏற்படும் கவலைகள் நீங்க ஒரு ஜெபம்

அன்பின் தேவனே, இந்த நல்ல ஜெபவேளைக்காக நன்றி கூறுகிறேன். நான் வேண்டிக்கொண்ட பொழுதெல்லாம் அதிசயமாகவும், ஆச்சரியமாகவும் காரியங்களைச் செய்து வந்தீர், அதற்காக ஸ்தோத்திரம்.  கேட்பதற்கும், வேண்டுவதற்கும் மிகவும் அதிகமாக கிரியைச் செய்கிற தேவனே, என்னுடைய வீட்டிலே நடைபெற வேண்டிய நன்மையான காரியத்தை எப்போது செய்வீர் என்று அதிக ஆவலோடு காத்திருக்கிற என்னை ஒருவிசை நினைத்தருளும், என் ஜெபத்தைக் கேட்டருளும். அதனதன் காலத்தில் நேர்த்தியாய் செய்திருக்கிறார் என்ற வார்த்தையின்படி என் வீட்டில் நடைபெற வேண்டிய மகிழ்ச்சிகரமான காரியங்கள் உமது சித்தப்படி நிறைவேற்றும்படி கெஞ்சி நிற்கிறேன். இவைகள் என் வீட்டாரில் நடைபெறுவது தாமதிப்பதினால் பல நிந்தைகளும், பலவிதமான மனப்போராட்டங்களும் உண்டாகிறது. இதனால் உண்டாகிற கவலைகள் என் உள்ளத்தில் அதிக வியாகுலங்களை உண்டாக்குகிறது. கர்த்தாவே, பிள்ளைகளின் வாழ்வில் நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற காரியம் தடைபடுவதினாலும், தாமதிப்பதினாலும் இரவில் தூங்க முடியாதபடி தவிக்கிறேன். என் மகன்/மகள் வயதிற்கு குறைவான பிள்ளைகளில் நடைபெறும் காரியத்தைக் கேள்விப்படும் போது , எப்பொழுது என் மகனுக்கு/மகளுக்கு காரியம் நடைபெறும் என்ற எண்ணம் எண்ணில் வரும்போது பெருமூச்சுடன் கலங்கி, கண்ணீர் சிந்துகிறேன். கர்த்தாவே நீர் சொன்ன வாக்குத்தத்தங்கள் என்னைத் தேற்றுகிறதாயும், என் கவலைகளை மாற்றுகிறதாயும் இருப்பதால் உமக்கு ஸ்தோத்திரம். கர்த்தாவே, என் மனவியாகுலங்களை நீக்கும்படியாக என் பிள்ளைகளின் காரியங்கள் துரிதமாய் நடைபெற கட்டளையிடும். உம்மைத் தேடுகிறவர்களுக்கு ஒரு நன்மையும் குறைவுபடாது என்ற வார்த்தையின்படி துரிதமாய் குறைவின்றி வாழத்தக்கதான நல்வாழ்வைத் தாரும். மனுஷர்கள் சொல்லுகிற அவதூறான வார்த்தைகள் நீக்கப்படவும், நான் நம்பியிருக்கிற உம்முடைய பரிசுத்த நாமம் மகிமைப்படவும் இதைச் செய்தருளும் . இயேசு கிறிஸ்துவே, நீர் நேற்றும் ,இன்றும், என்றும் மாறாதவர். உம்முடைய வல்ல செயலினால் காரியங்கள் ஜெயமாய் நடைபெறவும், உம்முடைய நாமத்தினால் துதி, ஸ்தோத்திரங்களை ஏறெடுக்கவும் எனக்கு உதவிபுரியும். ஜெபத்தைக் கேட்கிற தேவனே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே என் ஜெபத்தை ஏறெடுக்கிறேன். ஆமென்.