"பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து எருசலேமிலும், யூதேயா முழுவதிலும்,                                        சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.'

                                                                                                                                                                                         அப்போஸ்தலர் 1:8

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினால் உங்களை வாழ்த்துகிறேன்.

நான் மேலை நாட்டில் படித்துக்கொண்டிருக்கும்பொழுது, ஒரு ஆலயத்துக்குச் செல்லுவேன். அந்த ஆலயம் இளம் வாலிபப் பிள்ளைகள் அதிகமாக உள்ள ஒரு சபை. அதில் ஏறத்தாழ 90 சதவீதம் மிஷினெரிமார்களின் பிள்ளைகள் அவர்கள் ஆப்ரிக்கா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் பிறந்தவர்கள் இந்தச் சபையின் தலைமைப் போதகராக Rev Neil Chambers என்ற ஊழியர் இருந்தார். நான் அதிக ஆர்வமாக அந்த ஆலயத்துக்குச் செல்லுவேன். அவரிடம் வெளிபடுத்தின விசேஷத்தைக் குறித்து கலந்துபேச வேண்டும் என்று விரும்பினேன். அப்பொழுது அவர் என்னை ஒரு coffee shop-ல் காலை 8 மணிக்குச் சந்திக்க நேரம் ஒதுக்கினார். நான் அவரைக் காணச் சென்றேன். நான் சரியாக 8 மணிக்குச் சென்று விட்டேன். அதற்குள் என் தொலைபேசியில் அவர் என்னை அழைத்து, நான் ஒரு ஐந்து நிமிடம் தாமதமாக வருவேன். என்னை மன்னித்துவிடுங்கள் என்று கூறினார். அதுபோல அவர் 08.05 க்கு வந்தார்.

ஒரு மிகப்பெரிய சபையின் தலைமைப் போதகர் அதுவும் ஐந்து நிமிடம் தாமதமாக வருவேன் என்று மன்னிப்பு கேட்டதை நினைத்து எனக்கு மிக ஆச்சரியம். அன்றிலிருந்து நான் கவனம் செலுத்தி, சரியான நேரத்திற்குச் செல்ல ஆரம்பித்தேன். சற்று தாமதமாக வந்தால் அவர்களிடம் மன்னிப்பு கேட்க கற்றுக்கொண்டேன்.

அதுபோல கிறிஸ்துவுக்குள் நாம் நம்முடைய உற்றார், உறவினர், நண்பர்களுக்குச் சாட்சிகளாய் இருக்கிறோமா! நம்மை நாம் சோதித்துப் பார்ப்போம். "இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது." மத்தேயு 5:16

கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.

சகோதரர் நத்தானியேல் பால்.