இழந்து போனவைகளைப் பெற்றுக்கொள்ள ஒரு ஜெபம்

 

அன்பின் தேவனே , இந்த ஜெபவேளைக்காக நன்றி கூறுகிறேன். உம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே இம்மட்டும் என்னை நீர் சுகமாய் காத்து வந்தீர். அதற்காக ஸ்தோத்திரம் கர்த்தாவே. நீர் மிகவும் பெரியவராய், புகழப்படத்தக்கவராய் இந்த பூமியிலே உம்முடைய செய்கைகளை செய்து வருகிறீர். என் இக்கட்டுகளிளெல்லாம் எனக்கு நீர் ஆலோசனைத்  தந்து  என்னை ஆசீர்வதித்தீர். ஆலோசனையில் ஆச்சரியமானவரே, செயலிலெ வல்லமையான காரியங்களை செய்தீரே அதற்காக உமக்கு ஸ்தோத்திரம். அன்பின் தேவனே, சில மேன்மையான காரியங்களை இந்த ஆண்டிலே நான் இழந்து போய்விட்டேன் . இதனை நீர் நன்கு அறிவீர் என்று உமக்கு ஸ்தோத்திரம் செலுத்துகிறேன். நான் இழந்தவைகள் உமது பார்வைக்கு ஏற்றதாய் உள்ளதா, இருக்கிறதா என்று நான் அறியேன். ஆனாலும் அதை எனக்கு நன்மையாக முடியப்பண்ணுவீர் என்று உமக்கு ஸ்தோத்திரம் செலுத்துகிறேன். கர்த்தாவே, என் வாழ்வில் நான் இழந்த மேன்மைகளை திரும்ப தாரும். இயேசு கிறிஸ்துவே, நான் உம்மையே தேடி தொழுது கொள்ளுகின்றபடியினால், நான் ஒன்றிலும் குறைவுபடாதபடி என்னை கண்ணின் மணிபோல் காத்து நடத்தும். கர்த்தாவே, நான் இழந்துபோன சமாதானத்தை, சந்தோஷத்தை திரும்ப சம்பூரணமாய் எனக்குத் தாரும் இவைகள் இல்லாதபடியினாலும், குறைந்து போனபடியினாலும், என் உள்ளத்தில் தோல்வியின் நிலைகளும் துக்கமும் உண்டாகிறது. நீர் கொடுத்த சமாதானம் எனக்குள் மீண்டும் பெருக செய்வீராக. உம்மை உறுதியாய்ப் பற்றிக் கொண்டவர்களை பூரண சமாதானத்தோடு காத்துக்கொள்ளுவேன் என்று சொன்ன அன்பின் ஆண்டவரே, எனக்கு இரங்கும். என்னைத் தயவாய் ஆசீர்வதியும், நான் இழந்தவைளை எனக்குத் திரும்ப தந்து என்னை உற்சாக ஆவியினால் தாங்கி நடத்துவீராக. கோணலும் மாறுபாடுமுள்ள சந்ததியின் நடுவில் வாழ்கின்ற என்னை உம்முடைய வசனத்தின்படி அனுதினமும் நடத்தும். கர்த்தாவே உமது வசனத்தினால் எனக்குள் பெருகும் சந்தோஷம், சமாதானம் உமது அன்பு என்னை விட்டு எடுபடாதபடி காத்துக்கொள்ளும். என் வாழ்க்கையிலே என் சரீரத்திலே உண்டான வேதனையினால் இழந்து போன சத்துவத்தை, பெலத்தை, சுகத்தை எனக்குத்  திரும்ப தாரும். நீர் அப்படி செய்வீர்என்று உம்மை துதிக்கிறேன், ஸ்தோத்தரிக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் வேண்டிக்கொள்ளுகிறேன். நல்ல பிதாவே, ஆமென்.