"...நீ நடக்க வேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே".

                                                                                               ஏசாயா  48:17

 கிறிஸ்துவுக்குள்  பிரியமானவர்களே,

            கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே வாழ்த்துகிறேன். புதிய ஆண்டைக் காணச் செய்த தேவனுக்குத் துதிகளையும் ஸ்தோத்திரங்களையும் ஏறெடுப்போம். கர்த்தர் இந்த ஆண்டிலே புதிய கிருபைகளையும் , நன்மைகளையும் , அருள் செய்து  ஆசீர்வதிப்பாராக.

           இன்று நம்முடைய வாழ்க்கையிலே நாம் நலமான விதத்தில் வாழ்வதற்கு நம்மை நடத்துபவர்  ஒருவர் உண்டா  என்று அறிந்து, புரிந்து அதின்படி வாழ  நம்மை அர்பணிப்போம். இவ்விதமாய் ஆலோசனைக்காக காத்திருக்கும்போது , நடத்தப்படவேண்டிய ஆலோசனைகள் தவறாய்  அல்லது குறைவாய் இருக்கும்போது , நஷ்டம், வேதனை , தோல்வி , துக்கம் இவைகளைச் சந்திக்கிறோம். உன்னை நடத்துகிற தேவன் நானே  என்று கர்த்தர் நமக்கு ஆலோசனையாகச் சொல்லி தம்மை வெளிப்படுத்தியிருக்கிறார். இந்த தேவன் நம்மை மரணபரியந்தம்  நடத்தக்கூடியவர் என் சங்கீதம் 48:14ல்  பார்க்கிறோம். மேலும் பிலிப்பியர்  1:5ல்  உங்களில் நற்கிரியையைத் தொடங்கினவர்  அதை இயேசுகிறிஸ்துவின் நாள் பரியந்தம் முடிய நடத்திவருவாரென்று  நம்பி, ...தேவனை  ஸ்தோத்தரிக்கிறேன்'  என்று பவுல்  குறிப்பிட்டிருப்பதைப்  பார்க்கிறோம். இப்படியாக நம்மை செம்மையான பாதையில் நடத்தி இம்மையில்  ஆசீர்வாதத்தையும், மேன்மையையும், நன்மையையும் பெருகச் செய்து நித்தியத்தின்  சகல ஆசீர்வாதங்களையும்  அனுக்கிரகம் செய்வார் . அநேகர் இதை அறியாதபடி தங்கள் மன  விருப்பத்தின்படியும், தேவனல்லாதவர்கள் தேவன் என்று சொல்லும் ஆலோசனையின்படியும் நடந்து அவதியடைகிறதைப்  பார்க்கிறோம். ஆனால்  நாமோ  நம்மை நித்திய வழியில் நடத்தக்கூடிய இயேசுவின் வழியில் நடக்கும்போது ஆசீர்வதிக்கப்படுவோம்.

  I நடக்கவேண்டிய வழி  என்ன ?

1.புத்தியுள்ள வழி

 "பேதைமையை விட்டு விலகுங்கள், அப்பொழுது பிழைத்திருப்பீர்கள்; புத்தியின் வழியிலே நடவுங்கள் என்று விளம்புகிறது." நீதிமொழிகள் 9:6

    இன்று புத்தியுள்ள வழிகளில் நடக்கும்போது , நம் வாழ்க்கை வெற்றியானாலும், ஆசீர்வாதத்தினாலும்  நிறைந்து விடும். ' தாவீது தன்  செய்கைகளிலெல்லாம் புத்திமானாய் நடந்தான் ' என்று 1சாமு.  18:14ல் பார்க்கிறோம். ' அவன் மகா  புத்திமானாய்  நடக்கிறதைச் சவுல் கண்டு, அவனுக்குப்  பயந்திருந்தான்.' என்று 1 சாமு. 18:15ல் பார்க்கிறோம். இன்று நம்முடைய வாழ்க்கையிலும் புத்திமானாய்  நடக்கும்போது , நம்முடைய சத்துருக்கள் பயந்து நடுங்குவார்கள்.

                   அநேகர் கர்த்தர்  அருளியிருக்கிற புத்தியை விட்டுவிட்டு, தங்களுடைய மாம்சத்தின்படி நடப்பதால் பலவிதமான தடைகள், போராட்டங்கள் , பிரச்சனைகள் - இவைகளைச்  சந்திக்கிறார்கள். நம்மை நல்வழி நடத்தக்கூடிய அன்பின் ஆண்டவர், அவர் நடக்க வேண்டும் என்று சொன்ன, விரும்பிய வழி நடந்தால் சத்துருக்கள் வெட்கப்பட்டுப் போவார்கள். நம்முடைய வேலை ஸ்தலத்திலே  புத்தியாய்  நடக்கும்போது , நம் மீது பொறாமை கொண்டவர்கள் நம்மை ஒளித்துவிட  வேண்டும் என்ற எண்ணமுடையவர்கள் மத்தியில் மேன்மையடைவோம்.

                தானியேல் ஞானம் நிறைந்தவனாய், உண்மையுள்ளவனாய், கர்த்தரின் வழியில் நடந்து, நலமானதைச் செய்த படியால்  அவனுடன் இருந்த அதிகாரிகள் அவனைக் குற்றப்படுத்த முகாந்திரம் தேடியும்ஒரு முகாந்திரத்தையும் கன்டுபிடிக்க அவர்களால் கூடாமற்  போயிற்று. அவனுக்கு விரோதமாய் எழுந்தவர்கள் அழிந்தும்  ஒழிந்து  போனார்கள். புத்தியின் வழி  என்றால்  தேவனுடைய வார்த்தையின்படி செய்கிற காரியமாகும்.

2.நித்திய வழி

"வேதனை உண்டாக்கும் வழி  என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து , நித்திய வழியிலே என்னை நடத்தும் ". சங்கீதம்  139:24

 

           அநித்தியமான  காரியங்களை விரும்புகிற மக்கள் ஏராளமாய் இருக்கிறார்கள். அவர்களுடைய வழியானது  அவர்களை மோசம் போக்கும் என்று அறியாது உணராதிருக்கிறார்கள். நித்திய  வழியானது  நித்திய நன்மைகளை  அருளிச்செய்யும் வழி . இந்த நித்திய வழியிலே நடக்கும்போது , நித்தியமான நன்மைகளைப்  பெற்றுக்கொள்வதற்கு  உதவுகிறது .  நித்திய வழியானது  பலவிதமான தியாகங்களையும், பலவிதமான காரியங்களையும் சகிக்கக் வேண்டிய வாழ்க்கையாய் இருக்கிறது. இவர்களைக் கர்த்தர் இடறாத விதத்தில் நடத்துகிறார்.

            கர்த்தராகிய தேவன் மோசேயை தமது ஜனங்களை நடத்த அழைத்த போது, அவனை பலவிதங்களிலே  தகுதிப்படுத்தினார். அநித்தியமான  பாவ சந்தோஷத்தை  அனுபவிப்பதைப்  பார்க்கிலும், தேவனுடைய ஜனங்களோடு துன்பத்தை அனுபவிப்பதே நலம் என்று தெரிந்து கொண்டான் . மேன்மையை அல்ல,  பாடுகளைத் தெரிந்துகொண்டான். நித்திய இராஜ்யத்திற்குச் செல்ல வேண்டிய பாதையானது மிகவும் குறுகிய வாசல். இதைக் கண்டுபிடிப்பவர்கள் சிலர் என்று இயேசு சொன்னார். நித்திய வழியானது  நித்திய நன்மைகளை நமக்குள் பெருகச் செய்வதற்கு உதவி செய்யும். நித்திய வாழ்வினால் தேவனுடைய சமுகத்தில் அவரை சேவிக்கத்தக்கதான கிருபையையும் பெற்றுக்கொள்கிறோம். 'கர்த்தரால் மீட்கப்பட்டவர்கள் திரும்பி, ஆனந்தக்களிப்புடன் பாடி, சீயோனுக்கு வருவார்கள்;  நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின்மேலிருக்கும்;  சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள்;  சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போம்.' ஏசாயா 35:10

 3.பரிசுத்த வழி

              

" அங்கே  பெரும்பாதையான வழியும் இருக்கும்; அது பரிசுத்த வழி என்னப்படும் ..."  ஏசாயா 35:8

              பரிசுத்தமான வழி என்பது கர்த்தரால் பரிசுத்தமாக்கப்பட்டவர்கள் நடந்து செல்லும் பாதையாயிருக்கிறது. '...நான் உங்களைப்  பரிசுத்தமாக்குகிற கர்த்தர்'  என்று சொல்லி லேவி. 20:8ல்  சொன்னவர் உங்களை பரிசுத்த பாதையில் நடத்துவதற்கு உண்மையுள்ளவராயிருக்கிறார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்களைப்  பரிசுத்தப்படுத்துவதற்காக   சிலுவை மரத்திலே நமக்காக இரத்தத்தைச்  சிந்தினார். அவருடைய  இரத்தத்தினாலே  நம்மைச் சுத்திகரித்து , பரிசுத்த வழி நடப்பதற்கு நம்மை தகுதியாக்குகிறார். நான் பரிசுத்தர், உங்கள் செய்கைகளெல்லாவற்றிலும் பரிசுத்தராயிருங்கள்  என்று சொன்னவர், ' உம்முடைய  சத்தியத்தினாலே  அவர்களைப்  பரிசுத்தமாக்கும் ; உம்முடைய வசனமே சத்தியம்' யோவான் 17:7 ன் படி அவருடைய ஜீவ  வசனத்தினாலே  நம்மை பரிசுத்தமாக்குகிறார். நாம் பரிசுத்தமாய் ஜீவிக்க வேண்டும் என்பதற்க்காக அவர் தேவ சமுகத்திலே பரிசுத்த ஆவியைப் பெற்றுத்தந்தார். இந்த ஆவியானவர் நம்மை பரிசுத்தப்படுத்துகிற வல்லமையின் செயலுடையவர். பரிசுத்தம் இல்லாமல் அவரை தரிசிக்க முடியாது , பரிசுத்த ஆவியினாலே நடத்தப்பட்டு நல்வாழ்வை அடைகிறோம். பரிசுத்த வழியிலே நடக்கும்போது,  பேதையர்களாய் இருந்தாலும் திசை கெட்டுப்போவதில்லை. கர்த்தரால் மீட்கப்பட்டவர்கள் அவ்வழி  நடப்பார்கள்.

4. இயேசு கிறிஸ்துவே வழி

      " அதற்கு  இயேசு : நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்". யோவான் 14:6

             ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இந்த உலகத்திற்கு வந்தபோது, நாம் உலகத்தில் வாழ்வதற்குரிய வழிமுறைகளை நமக்கு ஏற்படுத்தினார். இந்த வழியானது  ஜீவ வழியாயும்  சத்திய வழியாயும்  இருக்கிறது. இது அனுதினமும் நம்மை பெலப்படுத்தி வழி  நடத்துகிறது. நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடேன்  என்று சொன்னவர், சத்திய ஆவியினாலே அவருடைய அன்பின் பாதையில் நடப்பதற்கு உதவி செய்கிறவராய் இருக்கிறார்.'  'சத்திய ஆவியாகிய  அவர் வரும்போது , சகல சத்தியத்திற்குள்ளும்  உங்களை நடத்துவார்...' யோவான் 16:13ன் படி ஜீவ  வழியிலே நம்மை நடத்துவார். நாம் நடக்க வேண்டிய வழியைத்  தெரிவித்தவர், நமக்கு மாதிரியாய் இருக்கிறார்.

II).எப்படி  நடத்துவார் ?

1.பத்திரமாய் நடத்தும் தேவன்

   " அவர்கள் பயப்படாதபடிக்கு அவர்களைப்  பத்திரமாய் வழி நடத்தினார்..." சங்கீதம் 78:53

                     நம்மைப் பத்திரமாய் நடத்தக்கூடிய தேவன் இன்றைக்கும் ஜீவிக்கிறார். அவர் நடத்துகிற பாதையானது சில சமயம் வனாந்தர வழியாய் அமைந்து விடுகிறது. 'பார்வோன் ஜனங்களைப்  போகவிட்டபின்: ஜனங்கள் யுத்தத்தைக் கண்டால் மனமடிந்து , எகிப்துக்குத் திரும்புவார்கள் என்று சொல்லி; பெலிஸ்தரின் தேசவழியாய்ப் போவது சமீபமானாலும், தேவன் அவர்களை அந்த வழியாய் நடத்தாமல், சிவந்த சமுத்திரத்தின் வனாந்திர வழியாய் ஜனங்களைச்  சுற்றிப்  போகப்பண்ணினார்...' யாத். .13:17,18ல் பார்க்கிறோம். வனாந்தரம் என்று சொன்னாலே உதவியற்ற நிலைமை. திசை தெரிந்து கொள்ள முடியாத வாழ்க்கைதான் வனாந்தர வாழ்க்கை. இவ்விதமான நெருக்கமும், பாடுகளும்  நிறைந்த வெறுமை நிறைந்த வழியாய் நடத்தினாலும் பயப்படாதபடி பத்திரமாய் நடத்துகிற தேவன்.

          சில பயணங்களிலே பத்திரமாய்ப் போய்ச் சேர வேண்டும் என்று பலவித நலமான முறைகளை மனிதர்கள் கைக்கொள்வதைப் பார்க்கிறோம். திசைக்  கெட்டுப்  போய்விடக்கூடாது என்று விஞ்ஞான முறையில் இந்நாளில்  GPS மூலம் நடத்தப்பட்டு செல்வதைப்  பார்க்கிறோம். இஸ்ரவேல் ஜனங்களை GPS-யை காட்டிலும், மேலான அக்கினி ஸ்தம்பத்தினாலும், மேக  ஸ்தம்பத்தினாலும்  வழிநடத்தினார். கர்த்தரால் மீட்கப்பட்ட , விடுதலையாக்கப்பட்ட ஒவ்வொருவரும் பின் வாங்கி விடாதபடி, சோர்ந்து விடாதபடி, எந்த சூழ்நிலையிலும் பயப்படாதபடி இருக்க மிகப்பத்திரமாய்  நடத்துகிற தேவனாய் இருக்கிறார். எந்த சத்துருவும்  எந்தத்  தீய சக்திகளும் அவனைக் கெடுத்துவிடாதபடி, அவனை மோசப்படுத்திவிடாதபடி, அக்கினியின் வேலியருளி  பாதுகாவலாக நடத்துகிற தேவன் ஜீவிக்கிறார். அவர் பாதுகாத்து போய்  சேரவேண்டிய பரம கானானுக்குள்  நம்மைக் கொண்டு செல்கிற தேவன் செவ்வையாய் நடத்துவார்.   

            இவ்விதமாய் பத்திரமாய் நடத்துகிற தேவன், தம்முடைய அக்கினியை முன் அனுப்பி, ' அக்கினி அவருக்கு முன்சென்று, சுற்றிலும் இருக்கிற அவருடைய சத்துருக்களைச்  சுட்டெரிக்கிறது ' சங்கீதம் 97:3ன் படி நம்மைச்  சுற்றியிருக்கக்கூடிய சத்துருக்களின்  தீயச்  செயல்களை அழித்து ,ஒழித்து  நம்மை நடத்துகிறார். தடைகளை நீக்கி நடத்துகிறார். கர்த்தர்  நம்மை நடத்தும்படியாக  அவருக்கு நம்மை ஒப்புக்கொடுக்கும்போது, வாழ்க்கையில் உள்ள எல்லாத்  தடைகளையும் நீக்கி விடுவார். திருமணத்  தடை, பிள்ளைப்பேறு தடை  , வேலைக் கிடைப்பதில் உள்ள தடை, பணி  மாற்றத்தில், பணி  உயர்வுகளில் உள்ள தடை , குடும்பம் இணைவதில் உள்ள தடை, வீடு கட்டுவதிலே  உள்ள தடை , வீட்டை நிலத்தை விற்க முடியாத தடை, சுகபெலன்  பெற முடியாத தடை - இவ்விதமான காரியங்களில் தடைகள் எதுவாக இருந்தாலும், யாவையும் நீக்கி பத்திரமாய் நம்மை நடத்துவார்.

2.சிட்சித்து நடத்துவார்

    " நீங்கள் சிட்சையைச் சகிக்கிறவர்களாயிருந்தால் தேவன் உங்களைப்  புத்திரராக  எண்ணி நடத்துகிறார் ..." எபிரெயர்  12:7

 

               ' தகப்பன் தான் நேசிக்கிற புத்திரனைச் சிட்சிக்கிறது போல, கர்த்தரும் எவனிடத்தில்  அன்புகூருகிறாரோ அவனைச் சிட்சிக்கிறார் ; என்று நீதி 3:12ல்  சொல்வது போல்  நம்மைச்  சிட்சிக்கிறார். சிட்சித்து நடத்துகிற காரியங்கள் தற்காலத்தில் சந்தோஷமாய்க்  காணாமல் துக்கமாய்க்  காணும்; ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனை தாரும். (எபி.12:11).  ‘நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது; அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன்.' சங்கீதம் 119:71ல் பார்க்கிறோம்.

                 இயேசு கிறிஸ்துவும் பட்ட பாடுகளினாலே நமக்கு நித்திய இரட்சிப்பை உண்டுபண்ணியிருக்கிறார். அவருடைய பாடுகளின் மாதிரியைப் பின்பற்றும்போது , கிறிஸ்துவினால் உண்டாகும் மேன்மைகளைப்  பெறவும் , அழைப்புக்குப் பாத்திரராகவும்  இருக்கிறோம். சிட்சையினாலே பரிசுத்தமாவதற்கு பங்குள்ளவர்களாய் மாறுகிறோம். யோசேப்பைக்  கர்த்தர் பலவிதமான பாடுகளினாலும் , சோதனையினாலும் வழி நடத்தினார். 13 ஆண்டுகள் உபத்திரவப்பட்ட  பின்பு , அவன் எகிப்து தேசத்திலே பார்வோனுக்கு  அடுத்த ஸ்தானத்திலே  வீற்றிருந்து ஜனங்களின் காரியங்களை நடத்தினதைப்  பார்க்கிறோம். கிறிஸ்துவின் சிட்சையினால் உண்டாகும் ஆசீர்வாதத்திற்கு  அளவே இல்லை. நீங்கள் கிறிஸ்துவோடு உறவை உருவாக்குவதற்கு அது வழியாய் அமைந்து விடுகிறது. 

3. போதித்து நடத்துகிறார்

 

                " நான் உனக்குப் போதித்து , நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன் ..." சங்கீதம் 32:8

                  நம்முடைய தேவன் நம்மை அவருடைய வழியில் நடத்துவதற்கு நன்றாய் போதிக்கிறவராய் இருக்கிறார். 'கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் எவனோ அவனுக்குத் தாம் தெரிந்துகொள்ளும் வழியைப் போதிப்பார்.' சங்..25:12 ,  'கர்த்தாவே, உம்முடைய வழிகளை எனக்குத் தெரிவியும் ; உம்முடைய பாதைகளை எனக்குப் போதித்தருளும் ' சங். 25:4 என பார்க்கிறோம். போதனையானது வாழ்க்கையிலே ஆசீர்வாதத்தைச்  சுதந்தரிப்பதற்கு உதவியாக இருக்கிறது. அநேக நேரங்களிலே  இந்தப் போதனையை ஏற்றுக்கொள்ளாதபடியினால் தோல்வியடைகிறோம், தடுமாறுகிறோம். சிலவேளையிலே தவறான வழியிலும் சென்று விடுகிறோம். இயேசு கிறிஸ்து தம்மிடத்தில் வந்த ஜனங்களுக்கு நன்றாய்ப் போதித்தார். இந்தப் போதனையை ஏற்றவர்கள் இரட்சிப்பை அடைந்தார்கள். அவருடைய போதனையின் வார்த்தைகள் மனிதனுடைய வாழ்க்கையிலே ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதலை உண்டாக்கும். மனிதன் கவலையின்றி வாழவும் , பயப்படாதபடி வாழவும் , பரிசுத்தத்தைக் காத்துக் கொள்ளவும் , பரலோக  இராஜ்யத்தின்   காரியங்களை அறிந்து கொள்ளாவும் போதித்தார். ஆகவே தான் அவருடைய கிருபையின்  வார்த்தைகளைக் கேட்பதற்கு , ஜனங்கள் ஆவலுடன் வனாந்தரத்திலேயும் , கடற்கரை அருகேயும் கடந்து வந்தார்கள்.

     

                அத்துடன் தனக்குப் பின்னாக இந்தப் போதனைகளை நமக்குத் தருவதற்கு சத்திய ஆவியாகிய தேற்றரவாளனை பிதாவின் சமூகத்திலே வேண்டி பெற்றுத்தந்தார். இந்தப் பரிசுத்த ஆவியானவர் எல்லாவற்றையும் நமக்குப் போதித்து , இயேசு கிறிஸ்து சொன்னதை நினைப்பூட்டுகிறவராய் இருக்கிறார். போதனையானது மிக அவசியமானதாயும்  பிரயோஜனமானதாயும்  இருக்கிறது. இவ்விதமாய் நம்மைப் போதித்து பிசாசின் தந்திரங்களையும்  சோதனைகளையும் ஜெயித்து , நம் வாழ்வை நன்மையினாலும் கிருபையினாலும்  முடிசூட்டுகிறவராய் இருக்கிறார்.

4.தமது  சித்தத்தின்படி நடத்துகிறார்.

       "...அவர் தமது சித்தத்தின்படியே வானத்தின் சேனையையும் பூமியின் குடிகளையும் நடத்துகிறார்." தானியேல் 4:35

               தேவ  சித்தத்தை அறியாதிருந்தால் மதியற்றவர்களாய் இருக்கிறோம்.' ஆகையால் , நீங்கள் மதியற்றவர்களாயிராமல் , கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்து கொள்ளுங்கள் .' என்று எபேசி. 5:17ல் பார்க்கிறோம். தேவ சித்தத்தின்படி செய்யும்போது , தடைகள் நீங்கி சகலமும் ஜெயமாய் மாறிவிடும். அப்,16ம் அதிகாரத்தில் பவுல்  தேவசித்தத்தின்படி ஆசியாவிலே வசனத்தைச் சொல்லாதபடிக்கு ஆவியானவராலே  தடை செய்யப்பட்டு வழி நடத்தப்பட்டான். தங்குவதற்கும் உண்ணுவதற்கும்  தேவன் வழி ஏற்படுத்தினார். நாமும் தேவ சித்தத்தின்படி காரியங்களைச்  செய்யும்போது , அனுகூலமான மக்களை எழுப்பி, எல்லாத்  தடைகளையும் நீக்கி கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார். நம் மனதிலே தோன்றுகிற  அநேக காரியங்கள் , விருப்பங்கள் , யோசனைகளை விட்டு விட்டு அவர் சித்தம்  செய்ய அர்ப்பணிப்போம். இயேசு கிறிஸ்துவும் கெத்செமனே  தோட்டத்தில் மிகுந்த பாரத்தோடு , இந்தப்  பாத்திரம்  என்னைவிட்டு நீங்கக்கூடுமானால், நீங்கும்படி செய்யும் . ஆகிலும் உம்  சித்தத்தின்படி   ஆகட்டும் என்று ஜெப மாதிரியை வைத்திருக்கிறார். 'ராஜாவின் இருதயம் கர்த்தரின் கையில் நீர்க்கால்களைப்போலிருக்கிறது ; அதைத் தமது  சித்தத்தின்படி அவர் திருப்புகிறார்.' (நீதி .21:1) ' பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே  பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல் , என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே ! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை .' (மத் .7:21) 'பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ , அவனே எனக்குச் சகோதரனும் சகோதரியும் தாயுமாய் இருக்கிறான் என்றார்.'(மத் .12:50) 'தன் எஜமானுடைய சித்தத்தை அறிந்தும் ஆயத்தமாயிராமலும் , அவனுடைய சித்தத்தின்படி செய்யாமலும் இருந்த ஊழியக்காரன் அநேக அடிகள் அடிக்கப்படுவான்.' என லூக்கா 12:47ல் பார்க்கிறோம்.

                    இயேசு கிறிஸ்து , ' என் சித்தத்தின்படியல்ல , என்னை அனுப்பினவருடைய  சித்தத்தின்படி செய்யவே நான் வானத்திலிருந்திறங்கிவந்தேன் .' என்று யோவான் 6:38ல்  சொன்னார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து , தம்முடைய பிதாவின் சித்தத்தின்படி பொல்லாத இப்பிரபஞ்சத்தினின்று  விடுவிக்கும்படி நம்முடைய பாவங்களுக்காக தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார். நம்முடைய வாழ்க்கையிலே 'மனுஷருக்குப் பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாகப்  பார்வைக்கு ஊழியஞ்செய்யாமல் , கிறிஸ்துவின் ஊழியக்காரராக , மனப்பூர்வமாய்த் தேவனுடைய சித்தத்தின்படி  செய்யுங்கள்.' என எபேசியர்  6.6ல் பார்க்கிறோம்.  நாம் தேவனுடைய சித்தத்தின்படி செய்து , வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப்  பெறும்படிக்குப்  பொறுமை நமக்கு வேண்டியதாயிருக்கிறது. (எபி . 10:36) 'உலகமும் அதின் இச்சையும் ஒழிந்து போம் ; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.' 1யோவான் 2:17ன் படி நாம் செய்து , நிலைத்திருப்போம்.

III).யாரை நடத்துவார் ?

1.விடுவிக்கப்பட்டவர்களை நடத்துவார்

           "...அவர்கள் இக்கட்டுகளிலிருந்து அவர்களை விடுவித்தார். தாபரிக்கும் ஊருக்குப் போய்ச் சேர, அவர்களைச் செவ்வையான வழியிலே நடத்தினார் ." சங்கீதம் 107:6,7

            இன்று மனிதனுக்கு அவன் அடிமைப்பட்டிருக்கிற பாவ பழக்க வழக்கத்திலிருந்து விடுதலை அவசியமாயிருக்கிறது. விடுதலை இல்லாதபடியினாலே கசந்துபோன வாழ்வும், பாடுகளும், துக்கமும், அவனை அதிகமாக ஒடுக்குகிறது. அவன் வாழ்க்கை நித்திய நரக  ஆக்கினைக்குள்ளாய்  செல்லக்கூடியதாய் மாறுகிறது. சிலருடைய வாழ்க்கையில் பிசாசின் பிடியிலும் , பலவிதமான துர்க்கிரியைகளினால் உண்டாகிய சூனியத்தின் காரியங்களிலும் , சாபத்தின் காரியங்களிலும் , பொல்லாத பெலவீனங்களிலும் , கடூரமான  தீயப்பண்புகளிலும் விடுதலை அவசியமாகிறது.

               நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து , தமது அன்பின் செயலினாலே  எல்லாவித நிலையிலிருந்தும், பயத்தினின்றும் , பாரம்பரிய வழிபாடுகளிலிருந்தும் நம்மை விடுகிறவராய் இருக்கிறார். இவ்விதமான நிலையிலிருந்து விடுதலைப் பெற்றவர்களைக் கர்த்தர் அனுதினமும் நடத்தி ஆசீர்வதிக்கிறார்.

2.சாந்தகுணமுள்ளவர்களை நடத்துவார்

     "சாந்தகுணமுள்ளவர்களை  நியாயத்திலே நடத்தி , சாந்தகுணமுள்ளவர்களுக்குத்  தமது வழியைப் போதிக்கிறார்." சங்கீதம் 25:9

      சாந்தகுணமானது மிகுந்த ஆசிர்வாதத்தைக் கொண்டுவரக்கூடியது. ஆவியின்  கனிகளுள்  ஒன்று சாந்தகுணம் .'கர்த்தர் சாந்தகுணமுள்ளவர்களை உயர்த்துகிறார் ' (சங். 147:6) , 'சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து , மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.' (சங். 37:11), ' மோசேயானவன் பூமியிலுள்ள சகல மனிதரிலும்  மிகுந்த சாந்தகுணமுள்ளவனாயிருந்தான் .' (எண். 12:3), 'கர்த்தர் நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையுமுள்ளவர் ' என எண் .14:17ல் பார்க்கிறோம். ஆகவே நம்  வாழ்க்கையிலே தேவன் விரும்புகிற இந்த சாந்தகுணத்தைப் பெற்று வாழும் போது , நம்முடைய தேவன் எல்லாவற்றிலும் நம்மைத் திருப்தியடையச் செய்வார். 'சாந்தகுணமுள்ளவர்கள்  புசித்துத் திருப்தியடைவார்கள்.' (சங். 22:26), 'நீடிய சாந்தகுணமுள்ளவன் மகாபுத்திமான் ' (நீதி. 14:29), 'நீடிய சாந்தகுணமுள்ளவனோ சண்டையை அமர்த்துகிறான் ' (நீதி. 15:18)  எனப் பார்க்கிறோம்.

           நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்து சந்தகுணமுள்ளவராய், கழுதையின் மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும்  ஏறிக்கொண்டு உன்னிடத்தில் வருகிறார் என மத். 21:4ல் பார்க்கிறோம் . இப்படியாக சாந்தகுணத்தால்  வரும் ஆசீர்வாதங்களையும் , நன்மைகளையும் பெற்றவர்களாய் மாற நம்மை அர்ப்பணித்து , அவர் நம்மை நடத்தும்படி ஒப்புக்கொடுப்போம், ஆசீர்வதிக்கப்படுவோம்.   

3.கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை மேய்ப்பராக ஏற்றுக் கொண்டவர்களை நடத்துகிறார்

 

"அவர் என் ஆத்துமாவைத் தேற்றிதம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார்." சங்கீதம் 23:3

           மேய்ப்பானவன் தன் ஆடுகளை வெளியே விட்டபின்பு, அவைகளுக்கு முன்பு நடந்து போகிறான். ஆடுகள் அவன் சத்தத்தை அறிந்திருக்கிறபடியால் அவனுக்குப் பின்செல்லுகிறது. மேய்ப்பன் இவ்விதமாய் தன் ஆடுகளை நடத்துகிறான். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் இந்த உலகத்திற்கு வந்த நல்மேய்ப்பராக இருக்கிறார்.மேய்ப்பராகிய இயேசு கிறிஸ்து ,  குறைவில்லாத வாழ்க்கையை உருவாக்கி , ஆடுகளுக்குத் தேவையான புல்லுள்ள இடங்களில் மேய்ப்பதுப் போல , செழிப்பான , சிறப்பான இடங்களிலே நமக்கு ஏற்றவைகளையும் , நன்மைகளையும் அருளிச்செய்து , அமர்ந்த அமைதியான   தண்ணீர் வழியாய் நடத்தி தாகத்தைத்  தீர்த்து, அவருடைய நீதியின் பாதையிலே நடத்துகிறார். அவரின் வாக்குத்தத்தமான வார்த்தைகளினாலே  தேற்றி , பயம் நீங்கின நல்வாழ்வைத் தந்து ஆசீர்வதிக்கிறார். அத்துடன் அவரின் நடத்துதலினாலே சத்துருக்கள் மத்தியிலே நம்மை மேன்மைப்படுத்தி, தம்முடைய அபிஷேகத்தினாலே நிறைத்து , நிரம்பி வழிகிற அனுபவத்தைத் தருகிறார். இவ்விதமாய் நம்மை நடத்தி ஆசீர்வதிக்கிறார்.

IV).கர்த்தரால் நடத்தப்படுவதால் வரும் ஆசீர்வாதங்கள்

1.நீரூற்றுகளிடத்திற்குக்  கொண்டுபோய் விடுகிறார்

 "...அவர்களுக்கு இரங்குகிறவர் அவர்களை நடத்திஅவர்களை நீரூற்றுகளிடத்திற்குக்  கொண்டுபோய் விடுவார்." ஏசாயா 49:10

                  நீரூற்றண்டை நடத்துவது என்றால்  நம்முடைய  தாகமானது  எப்பொழுதும் தீர்க்கப்பட்டதாய்  இருக்கும். எந்த இடங்களில் நீரூற்று உண்டோ அந்த இடம் செழிப்பும் சிறப்புமாய் மாறிவிடும். சிம்சோன்  சத்துருக்களின் மீது ஜெயம் பெற்ற  போது , அவன் கழுதையின் தாடையெழும்பினால்  1000 பேரைக் கொன்று வெற்றிப்  பெற்ற  அந்நாளில் மிகுந்த தாகமடைந்தான். கர்த்தரை  நோக்கிக் கூப்பிட்டு: தேவரீர்  உமது அடியான் கையினால் இந்தப்பெரிய இரட்சிப்பைக்  கட்டளையிட்டிருக்க , இப்பொழுது நான் தாகத்தினால்  செத்து , விருத்தசேதனம் இல்லாதவர்கள்  கையில் விழ  வேண்டுமோ  என்றான். அப்பொழுது தேவன் லேகியிலுள்ள பள்ளத்தைப் பிளக்கப்பண்ணினார்; அதிலிருந்து தண்ணீர் ஓடிவந்தது ; அவன் குடித்தபோது  அவன் உயிர் திரும்ப வந்தது , அவன் பிழைத்தான். (நியா.15:19) நீரூற்று வரும்போது நமக்குள் ஜீவன் உண்டாகிறது. ஈசாக்கின் மேய்ப்பர் மீண்டுமாய் வேறொரு நீர்த்துரவை  வெட்டினார்கள். அதைக் குறித்து கேராரூர் மேய்ப்பர் வாக்குவாதம் பண்ணவில்லை. நீர்த்துரவினால்  தேசத்தில் பலுக  இடம் கொடுத்தார்.

 

2.ஆறுதல் அளிக்கிறார்

"...அவர்களை நடத்திதிரும்பவும் அவர்களுக்கும் அவர்களிலே துக்கப்படுகிறவர்களுக்கும் ஆறுதல் அளிப்பேன் ." ஏசாயா 47:18

           நம்முடைய தேவன் ஆறுதல் அருளும் தேவன். என்னிடத்தில் வாருங்கள் , நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் என்று சொன்ன இயேசு கிறிஸ்து துக்கம் , வேதனை நிறைந்த வேளையிலே ஆறுதல் அளித்து ஆசீர்வதிக்கிறார்.

             ஒரு விபத்தின்போது காதிலிருந்து இரத்தம் வர ஆரம்பித்தது. காது ,வாய் , மூக்கு - இவற்றிலிருந்து இரத்தம் வந்தால் மூளைப்பகுதியில் அடிபட்டிருக்கும்  என்று தெரிந்திருந்தபடியால் உள்ளத்தில் தேவனைத் துதித்து , அடுத்த நாள் நடைபெற வேண்டிய கூட்டம் குறித்து கலங்கினேன். அடிபட்ட என் மகனும் எலும்புமுறிவினால் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருந்தான். கர்த்தரின் அன்பின் வாக்குத்தத்தமான வார்த்தைகள் என்னை ஆறுதல்படுத்தி தேற்றியது. கலங்காதே, காத்திடுவேன் என்று தேற்றியது.அவர் நம்மை ஆறுதல்படுத்தி தேற்றுகிற தேவன்.

2.நித்தமும் நடத்துகிறார்

" கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி மகா  வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி ,உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப்போலவும்வற்றாத நீருற்றைப்போலவும் இருப்பாய்." ஏசாயா 58:11

                 அவரால் நடத்தப்படுவதால் நம்முடைய ஆவி , ஆத்துமா,  சரீரத்திலே பூரண மேன்மையும்  மகிழ்ச்சியும் அடைந்து மற்றவர்களின் தாகத்தைத்  தீர்ப்பதற்கு நம்மைக் கருவியாய் மாற்றுகிறார்.

                 நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற தேவன் நானே என்று சொன்னவர் , வாக்கு மாறாமல் தம்முடைய வார்த்தையின்படி இன்றும் இந்த ஆண்டு முழுவதும் நம்மை நடத்தி ஆசீர்வதிப்பார்.

                கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.

                                                                                                                             கிறிஸ்துவின் பணியில்,

                                                                                                                              சகோ.C.எபனேசர் பால்