சிந்தி செயல்படு

 

  " அவர் தமக்குப் பயந்தவர்களுடைய விருப்பத்தின்படி செய்து , அவர்கள்  கூட்பிடுதலைக்  கேட்டு  , அவர்களை இரட்சிக்கிறார்." சங்கீதம் 145:19

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே ,

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின்  இனிய நாமத்தினால் உங்களை வாழ்த்துகிறேன்.

நம்முடைய தேவன் நம்முடைய இருதயத்தின் நினைவுகளையும் , விருப்பங்களையும் அறிந்திருக்கிறார். ஒரு முறை ஓர் ஊர்  வழியாய்ப் போகும்போது , அந்தச் சாலையின் ஓரத்தில் ஒரு அழகான ஆலயம் இருந்தது. இந்த ஆலயத்தில் வந்து நான் செய்தி கொடுத்து , ஊழியம்  செய்ய முடியுமா என்று உள்ளத்தில் எண்ணினேன். அந்த மாதத்திற்குரிய  ஊழியத்தின் திட்டங்களை ஒழுங்கு செய்யும்போது , எங்கெங்கிருந்து அழைப்பு வந்திருக்கிறதோ  அந்த அழைப்புகளை வைத்து , ஜெபித்து ஒழுங்கு செய்ய  ஆரம்பித்தேன். சில கடிதங்களில் குறிப்பிட்டியிருந்த ஊர்கள் எங்கேயிருக்கிறதென்று எனக்கு தெரியவில்லை. கர்த்தருடைய ஆவியானவர் வழி  நடத்தினபடி , சில அழைப்புகளுக்கு ஒப்புதல் கொடுத்து , பதில் எழுதினேன். அவ்வாறே கூட்டங்களும் ஒழுங்கு செய்யப்பட்டது. எனக்குத் தெரியாத ஓர் இடத்திற்கும் ஒப்புதல் கடிதம் எழுதியிருந்தேன். கூட்டம் நடத்த அந்த  சபைக்குச் சென்ற போது , எனக்கு மிகுந்த ஆச்சரியம். எந்த ஆலயமானது அழகாக இருக்கிறது, இங்கு வந்து ஊழியம் செய்ய முடியுமா என்று எண்ணினேனோ அதே கிராம சபை தான்  அது என்று அறிந்தபோது , தேவனைத் துதித்தேன்.

அருமையான தேவப்பிள்ளையே , நம்முடைய தேவன் நம்முடைய விருப்பங்களையும் , இருதயத்தின் ஆசைகளையும் , வாஞ்சைகளையும்  அறிந்திருக்கிறார். அவருக்குப் பயந்து வாழ்வது , அவருக்குப் பிரியமான காரியம். உங்களுடைய  உள்ளத்தில் கர்த்தருக்குப் பயப்படும் பயம் உள்ளதா என்று ஆராய்ந்து , கர்த்தருக்குப் பயந்து வாழ  உங்களை அர்பணியுங்கள். தீமையான காரியங்களை வெறுப்பது தான் கர்த்தருக்குப்  பயப்படும் பயம். கர்த்தர் ஆபிரகாமிடம்  ஈசாக்கைப்  பலியிடச் சொன்னார். ஆபிரகாம் அதைச் செய்ய  முற்ப்பட்டபோது , ' நீ தேவனுக்குப் பயப்படுகிறவன் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன் ' என்றார். தீமையான காரியங்களை வெறுத்து அவைகளை விட்டு விடுவதுடன் அவருடைய சொல்லுக்குக்  கீழ்ப்படிய நம்மை ஒப்புக்கொடுப்போம். நம்முடைய சிறிய , பெரிய விருப்பங்களைக் கர்த்தர் நிறைவேற்றுவார்.

                        கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.

                             சகோ.C.எபனேசர்பால்.