"....அவரைத் தேடுங்கள்."

ஆமோஸ்  5:7

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே வாழ்த்துகிறேன்.

மனிதன் பலவிதமான காரியங்களைத் தேடிக்கொண்டிருக்கிறான். சிலர் செல்வத்தைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். சிலர் தங்கள் பெலவீனங்கள் நீங்குவதற்கு மருத்துவரை/மருத்துவமனைகளைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சிலர் தங்கள் பெண்ணுக்கு ஏற்ற மாப்பிள்ளை, பையனுக்கு ஏற்ற பெண்ணுக்காக தேடித் திரிகிறார்கள். சிலர் வீட்டைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சிலர் தாங்கள் வாங்கின இடத்திலே நல்ல வீட்டைக் கட்டுவதற்கு வேண்டிய building contractor/ தொழிலாளரைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். படிக்கிற பிள்ளைகள் எந்தப் பள்ளியில், எந்தக் கல்லூரியில் படித்தால் நலம் என்று அவைகளைத் தேடித் திரிகிறார்கள். சிலர் தாங்கள் படித்த படிப்பிற்கு ஏற்ற வேலையைத் தேடித் திரிகிறார்கள். இன்னும் சிலர் தங்கள் திட்டத்தின்படி கடை/தொழில் நடத்துவதற்கு ஏற்ற இடங்களைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். பல நிலைகளிலே அவர்கள் தேவைக்கு ஏற்றபடி உலகக் காரியங்களையும், உலக மனிதர்களையும் தேடி நாடி ஓடிக்கொண்டிருக்கிறார்கள். நம்மை உருவாக்கின அன்பின் தெய்வத்தைத் தேடுவதற்கு மனதில்லை, நேரமில்லை என்று கவலையோடு வாழ்கிறவர்கள் ஏராளம்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, இன்றைக்கு நம்முடைய வாழ்க்கையிலே நாம் முக்கியமாக தேட வேண்டிய காரியம் தேவனுடைய ராஜ்யம் ஆகும். இவுலகத்திற்குரிய காரியங்களைத் தேடுவதினால் குறைவுபட்டு, கவலைப்பட்டு சோர்வடைகிறோம். வீணான கவலைகள் நீங்கி நாம் நல்வாழ்வு வாழ்வதற்கு தேவனுடைய நீதியையும், அவருடைய ராஜ்யத்தையும் தேடுகிற மக்களாய் இருப்பதோடு, நம்மை உண்டாக்கின கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை தேடுவதில் வாஞ்சை உடையவர்களாய் இருக்க வேண்டும். சங்கீதம் 27:8ல் 'என் முகத்தைத் தேடுங்கள்...' என்று சொன்னபடி நாம் அவர் முகத்தைத் தேடுகிற மக்களாய் மாறவேண்டும். உள்ளத்தில் மெய்யான அன்போடு அவரைத் தேடும்போது, அவர் நமக்குத்தென்படுகிறவராயும், நம் வேண்டுதலையும் விருப்பத்தையும் நிறைவேற்றுகிறவராயும் இருக்கிறார். இன்னுமாய் '....அவர் சமுகத்தை நித்தமும் தேடுங்கள். 'சங்கீதம் 105:4ன் படி முழுமனதோடு கர்த்தரைத் தேட நம்மை ஒப்புக்கொடுப்போம்.

நாம் அவரைத் தேடும்போது அவர் அநேக ஆசீர்வாதங்களை அருளுகிறார். அப்படித் தேடும்போது, நம்முடைய விருப்பத்தை எல்லாம் நிறைவேற்றி நம்மை ஆசீர்வதிப்பார். அவரைத் தேடுங்கள் என்ற இந்தச் செய்தியிலே அவரை எப்படித் தேடவேண்டும் என்றும் தேடுவதினால் வருகிற ஆசீர்வாதங்களைக் குறித்தும் தியானிப்போம்.

I. இயேசு கிறிஸ்துவை எப்படித் தேட வேண்டும்?

1. அதிகாலையில் தேட வேண்டும்

"என்னைச் சிநேகிக்கிறவர்களை நான் சிநேகிக்கிறேன்; அதிகாலையில் என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டடைவார்கள்." நீதிமொழிகள் 8:17

மனிதன் காலை நேரத்திலே உலகச் செய்திகளையும், உலகக் காரியங்களையும், அன்று என்ன செய்ய வேண்டும் என்றும் தேடுகிறவனாக, திட்டமிடுகிறவனாக இருக்கிறான். அதிகாலையிலே எழுந்து வேலைக்குப் போக வேண்டும், பள்ளி/கல்லூரி செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தோடு நாம் காரியங்களைச் செய்து அதற்கு ஆயத்த மாகிறோம். சிலர் தங்களுடைய சரீரத்திற்கு அடுத்த காரியங்களை முக்கியப்படுத்தி உடற்பயிற்சிகளைச் செய்வதற்கு, நடப்பதற்கு செல்கிறார்கள். அதிகாலமே கர்த்தரைத் தேடுவதினால் நம்மை நடத்தக்கூடிய போதனைகளை, ஆலோசனைகளை அவர் மூலமாய் பெறுகிறோம். என்ன செய்வது என்று கலங்குகிற நமக்கு காலை நேரத்திலே நமக்கு வேண்டிய  ஆறுதல் வார்த்தைகளைச் சொல்லி தேற்றி நம்மை நடத்துகிறார்.

ஒரு சமயம் காலை நேரத்தில் அவர் சமுகத்தைத் தேடி நாடினபோது, ஒருவர் உன்னைச் சந்திக்க வருகிறார். ஆகவே இன்றைக்கு உன் பள்ளிக்குத் தாமதமாகச் செல் என்று ஆலோசனைக் கூறினார். ஆகவே நானும் தாமதமாகச் செல்ல ஆயத்தமானேன். எனக்கு அறிமுகமான சகோதரரோடு ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர் வந்தார். பள்ளியிலே பெரிய பிரச்சனை. நான் தலைமை ஆசிரியராய் இருக்கிறேன். நிர்வாகம் சொன்ன காரியங்களைப் பள்ளியில் அமல்படுத்தியதால் ஊராரும், மாணவர்களும் ஆசிரியர்களும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த ஆரம்பித்து விட்டார்கள். நிர்வாகத்தில் இதைக்குறித்து கேட்டபோது, இதை உங்களால் சமாளிக்க முடியாதா என்று கூறி கை கழுவி விட்டார்கள் என்றார். அப்போது அவருக்கு ஏற்ற ஆலோசனையை கர்த்தருடைய ஆவியானவர் அருளினார். அந்த ஆலோசனைப்படி அவர் செய்த போது, பள்ளி நிர்வாகமே அமல்படுத்திய காரியங்களைச் சற்று சரிப்படுத்தி னார்கள். கொந்தளிப்பைப் போல எழுந்த எல்லாப் பிரச்சனைகளும் அமர்ந்தது. நாம் அதிகாலையில் தேவ சமுகத்தில் இருக்கும்போது, புதிய காரியங்களைப் போதிக்கிறார். ஆகவே நாம் தேவ சமுகத்தை அதிகாலையில் தேடும்போது, அதிசயமான விதத்திலே, ஆசீர்வாதமான  பாதையிலே நடத்துவார்.

2. உபவாசத்தோடு ஜெபத்துடன் தேட வேண்டும்

''நான் உபவாசம்பண்ணி, இரட்டிலும் சாம்பலிலும் உட்கார்ந்து, தேவனாகிய ஆண்டவரை ஜெபத்தினாலும் விண்ணப்பங்களினாலும் தேட என் முகத்தை அவருக்கு நேராக்கி,'' தானியேல் 9:3

இன்று நாம் கர்த்தரை உபவாசத்தோடும் ஜெபத்தோடும் தேடும்போது, அவர் ஏற்ற ஆலோசனைகளையும், ஆறுதலையும் தந்து நம்மை ஆசீர்வதிக்கிறவராயிருக்கிறார். நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்குப் பெயர் ஆலோசனைக் கர்த்தர். தானியேல் தேவ தரிசனங்களிலே சிறந்தவனாய் இருந்தான். அவன் அவ்வாறு கண்ட தரிசனம் ஒன்றினால் பயந்து கலங்கினான். ஆகவே அவன் கர்த்தரை அதிகமாய் ஜெபத்தினாலும், உபவாசத்தினாலும் தேட ஆரம்பித்தான். அவனுடைய ஜெப வாழ்க்கை மிகவும் மேன்மை உள்ளது. அவனுடைய உள்ளம் தேவன் பேரில் பிரியமாயிருந்தபடியால், தன் சரீரத்தை ஒடுக்கி கர்த்தரின் சமுகத்தை தேட ஆரம்பித்தான். இவ்வாறு தேடிய தானியேல் கர்த்தருக்குப் பிரியமானவனாய் இருந்தான். தினம் 3 வேளையும் தடை விதிக்கப்பட்டிருந்தும் ஜெபிக்கிறவனாய் இருந்தான்.

இன்றைக்கு நம்முடைய வாழ்க்கையிலும் நம் சரீரத்தை ஒடுக்கி கர்த்தரைத் தேடும்போது, அது கர்த்தருக்குப் பிரியமான செயலாய் இருக்கிறது. தானியேல் இவ்வாறு கர்த்தரைத் தேட தன் உள்ளத்திலே இடம் கொடுத்து, இசைந்திருந்தபடியினால் அவன் ஜெபிக்கத் தொடங்கின போது, கர்த்தர் அவன் ஜெபத்தைக் கேட்டு உடனே பதில் தந்தார். அவனுடைய சத்துருக்கள் அவனுக்கு விரோதமாக எழுந்து தந்திரமாய் காரியங்களைச் செய்து அவனைக் குற்றப்படுத்தி சிங்கக் கெபியிலே போட்டபோதும், கர்த்தர் அவன்மேல் பிரியமாயிருந்து சிங்கங்களின் வாயைக் கட்டிப்போட்டார். அத்துடன் சிங்கக் கெபியிலிருந்து தூக்கி விடப்பட்ட தானியேல் இராஜாவினிடத்தில் சாட்சியும் கூறினான். தானியேலைக் குற்றப்படுத்தின மக்களை இராஜா குற்றப்படுத்தி சிங்கக் கெபியிலே அவர்களைப் போடுவித்தான். அவர்கள் சிங்கக் கெபியின் அடியில் சேருமுன்பாக சிங்கங்கள் அவர்களைப் பட்சித்துப் போட்டது. ஜெபத்தினாலும் உபவாசத்தினாலும் கர்த்தரைத் தேடுகிற மக்களைக் காக்கிற தேவனாயிருக்கிறார். அவர்களில் பிரியப்படுகிற தேவனாயிருக்கிறார்.   

3. முழு மனதோடு தேட வேண்டும்        

''இந்த ஆணைக்காக யூதா ஜனங்கள் யாவரும் சந்தோஷப்பட்டார்கள்; தங்கள் முழு இருதயத்தோடும் ஆணையிட்டு, தங்கள் முழுமனதோடும் அவரைத் தேடினார்கள்...'' 2 நாளாகமம் 15:15

இன்றைக்கு மனதில் பூரணப்படாதபடி ஏனோ தானோ என்று பெயருக்காக ஆலயம் செல்கிற மக்கள் மிகுதியாய் உண்டு. சிலர் சிலரைச் சந்திக்கச் செல்கிறார்கள். பலர் பலவிதமான, வித்தியாசமான எண்ணத் தோடும் நோக்கத்தோடும் கர்த்தரின் சமுகத்தைத் தேடுகிறார்கள். அருமையான சகோதரனே/சகோதரியே, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம் இருதயத்தைக் காண்கிற தேவனாய் இருக்கிறார். நம் சிந்தனைகளை அறிந்து செயல்படுகிறார். நம்மை நேசிக்கிற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம் மன விருப்பத்தின்படி நமக்குச் செய்ய வல்லவராய் இருக்கிறபடியால், எதைச் செய்தாலும் கர்த்தருக்கென்று அதை முழுமனதோடு செய்ய இடம் கொடுக்க வேண்டும்.              

என்னுடைய வாழ்வில் இருதய நோயினால் பலவீனமடைந்து அதிக வேதனையோடு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தேன். பிழைப்பேன் என்ற நம்பிக்கையற்ற நிலையிலே, வேதத்தின் வசனம் என் மனைவியால் வாசிக்கப்பட்டதைக் கேட்டபோது, என் முழு மனதோடு என்னைக் கர்த்தருக்கென்று ஒப்புவித்து அவரைத் தேடவும், அவரை நோக்கி ஜெபிக்கவும் ஆரம்பித்தேன். அற்புதங்களைச் செய்யும் இயேசு கிறிஸ்து, அதிசயமான விதத்தில் எனக்குச் சுகத்தைக் கொடுத்தார். நாம் முழு மனதோடு அவரைத் தேடும்போது, அவர் சமுகத்தை நாடும்போது, அதிசயங்களைச் செய்து நம்மை ஆசீர்வதிக்கிறார்.             

    நம் வாழ்வில் இன்றுமுதல் கர்த்தரை முழுமனதோடு தேடுவோம். அதினால் உண்டாகும் ஆசீர்வாதத்தை அடைவோமாக.  

4. கர்த்தர் நமக்கு நீதியை வருஷிக்கப் பண்ணுமட்டும் அவரைத் தேட வேண்டும்.

''நீங்கள் நீதிக்கென்று விதை விதையுங்கள்; தயவுக்கொத்ததாய் அறுப்பு அறுங்கள்; உங்கள் தரிசுநிலத்தைப் பண்படுத்துங்கள்; கர்த்தர் வந்து உங்கள்மேல் நீதியை வருஷிக்கப்பண்ணுமட்டும், அவரைத் தேட காலமாயிருக்கிறது.'' ஒசியா 10:12

   நாம் ஜெபத்தினால் கர்த்தரைத் தேடுகிறபோது, அந்த ஜெபத்திற்குப் பதில் பெற்றுக்கொள்ளும் வரை கேட்க வேண்டும். கேளுங்கள், கொடுக்கப்படும், தேடுங்கள், கண்டடைவீர்கள் என்ற இயேசு கிறிஸ்துவை நாம் முழுமனதோடு தேடும்போது, நமக்கு அனுகூலமான காரியங்களைச் செய்வார். வேதத்தை ஆராயும்போது லூக்கா 15:8,9ல் காணாமல் போன வெள்ளிக்காசைக் குறித்துப் பார்க்கிறோம். அவள் அதைத் திரும்பப் பெற்றுக்கொள்ளுபடியாக விளக்கைக் கொளுத்தினாள். அவள் முழு இருதயத்தோடு வீட்டைப் பெருக்கி தேடினாள். விளக்கைக் கொளுத்தி தேடினவள், அது கிடைக்கும்வரை ஜாக்கிரதையாக முழு மனதோடு தேடினாள். அதன் பயனாக அவள் அதைப் பெற்றுக் கொண்டாள் என்று பார்க்கிறோம். நம்முடைய வாழ்க்கையிலும் கர்த்தர் தமது வல்லமையான செயலை நடப்பிக்கும்வரை நாம் தேட வேண்டும். நாம் எப்பொழுதுமே சகலமும் துரிதமாய் நடைபெற வேண்டும் என்று எண்ணுகிறோம். இன்று நம்முடைய வாழ்க்கையில் இயேசு கிறிஸ்துவை முழு மனதுடன் பதில் கிடைக்கும்வரை தேடும்போது அவரை நாம் காண முடியும்.

5. ஒருமுகப்பட்டு தேட வேண்டும்

''அப்பொழுது யோசபாத் பயந்து, கர்த்தரைத் தேடுகிறதற்கு ஒருமுகப்பட்டு யூதாவெங்கும் உபவாசத்தைக் கூறுவித்தான்.'' 2 நாளாகமம் 20:3

மோவாப் புத்திரர், அம்மோன் புத்திரர், அம்மோனியருக்கு அப்புறத்திலுள்ள மனுஷர் யாவரும் யோசபாத்துக்கு விரோதமாய் யுத்தம் பண்ண வந்தார்கள். சிலர் யோசபாத்திடம் வந்து இதை அறிவித்தபோது, அவன் பயந்தான். ஜனங்கள் யாவரும் ஒருமுகப்பட்டு கர்த்தரைத் தேடுவதற்கு யூதாவெங்கும் உபவாசத்தைக் கூறுவித்தான். யூதாவிலுள்ள எல்லாப்  பட்டணங்களிலும் இருந்து அவர்கள் கர்த்தரைத் தேட வந்தார்கள். யூதா கோத்திரத்தார் அனைவரும், அவர்கள் குழந்தைகளும், அவர்கள் பெண்ஜாதிகளும், அவர்கள் குமாரரும் கர்த்தருக்கு முன்பாக நின்றார்கள். யூதாவுக்கு விரோதமாய் வந்த சத்துருக்கள் ஒருவரை யொருவர் அழிக்கத்தக்க விதமாய்க் கை கலந்தார்கள். ஒருவரும் தப்பவில்லை. கர்த்தர் அவர்களுக்காக யுத்தம் பண்ணினார்.                 

     ஒருமுறை ஒரு வாலிப சகோதரன் தன் கழுத்தில் அணிந்திருந்த செயினைக் கால் பந்தாட்டம் விளையாடும்போது இழந்து விட்டான். வீடு வந்தபோதுதான் தன்னுடைய தங்கச் செயினை இழந்து போய் விட்டேன் என்று அறிந்தான். மீண்டுமாய் அவன் இரவு நேரமாயிருந்தாலும் தன் கல்லூரியின் கால் பந்தாட்ட மைதானத்திற்குச் சென்று அந்த மைதானம் முழுவதையும் பொறுமையோடு அந்த இரவிலே தேட ஆரம்பித்தான். அவன் அவ்வாறு தேடி இழந்த செயினைக் கண்டுபிடித்தான். நம் வாழ்க்கையிலும் நலமான காரியம் நடைபெற வேண்டும் என விரும்பி கர்த்தரைத் தேடும்போது, கண்டடைவோம். இன்று நாமும்கூட இழந்து போனதைத் திரும்பப் பெற்றுக் கொள்ளும் வரை முழு மனதோடு தேடுகிற மக்களாய் மாறுவோம்.               

கர்த்தரைத் தேடுவதினால் வரும் ஆசீர்வாதங்கள்

1.       பயம் நீங்கின வாழ்க்கை

''நான் கர்த்தரைத் தேடினேன்,  அவர் எனக்குச் செவிகொடுத்து, என்னுடைய எல்லாப் பயத்துக்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார்.'' சங்கீதம் 34:4

நாம் பல காரியங்களில் பயந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சிலர் அந்தப் பயத்தினாலே மனநிலை சீர்கெட்டுப் போய் கலங்கி வேதனையோடு வாழ்கிறார்கள். சிலர் பயந்தபடியினால் தெளிந்த புத்தி இல்லாதபடி தூக்கமின்றி  பழையவைகளை எண்ணி பிதற்றிக்கொண்டே இருக்கிறார்கள். இன்னும் சிலர் தங்களின் குடும்ப வாழ்க்கையிலே உண்டான பாதிப்புகளினால் ஏற்பட்ட பயம், ஏன் வாழ வேண்டும் என்ற எண்ணமும், தற்கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணமும்  உடையவர்களாய் மாறிவிடுகிறார்கள். இன்று பயமானது வேதனையானது என்று உணராதபடி பயமடைந்து தவறான காரியங்களைச் செய்துகொண்டே இருக்கிறார்கள் . இப்படிப்பட்ட போராட்டங்கள் வருவதற்கு அடிப்படையாக இருப்பது பயம். யோபு 3:25ல் 'நான் பயந்த காரியம் எனக்கு நேரிட்டது; நான் அஞ்சினது எனக்கு வந்தது' என்று கூறுவதைப் பார்க்கிறோம்.              

சிலர் தங்களுடைய சிறு பிள்ளைகளுக்கு ஊட்டும்போது பூச்சாண்டி வருகிறான், பூனை வருகிறது என்று பல காரியங்களைச் சொல்லி ஆகாரம் ஊட்டுகிறார்கள். சிலருடைய வாழ்க்கையை நான் பார்த்திருக்கிறேன். பெரிய தைரியசாலிகளைப் போல் காரியங்களைச் செய்வார்கள். ஆனால் சிறிய ஒரு கரப்பான் பூச்சியைக் கண்டு பயந்து  ஓடுவார்கள்.

ஒருமுறை ஊழியம் செய்த ஒரு சகோதரி வந்து தங்கியிருந்தார்கள். பல்லி என்று சொன்னாலே போதும் ஓ என்று சத்தமிடுவார்கள். ஒருநாள் இரவிலே படுக்கைக்கு மேலாக இருந்த சுவரிலே இருந்த பல்லியைப் பார்த்து பயந்து இரவிலே கத்தினார்கள். அவர்களிலே இந்த பயமானது மிகுந்த போராட்டமாக இருப்பதைக் காண முடிந்தது. சிலர் தங்களுடைய எதிர்கால வாழ்க்கையைக் குறித்து பயப்படுகிறார்கள். சிலர் தங்கள் பிள்ளைகளின் வாழ்க்கையைக் குறித்துப் பயப்படுகிறார்கள். சிலர் தங்களுடைய தொழிலின் வருவாயைக் குறித்துப் பயப்படுகிறார்கள். பயமானது வேதனை உள்ளதாய் இருக்கிறது. நம்முடைய தேவன் அதினதின் காலத்தில் எல்லாவற்றையும் செய்ய வல்லவர். தேவன் நம்முடைய ஆத்துமாவிலே பெலன் தந்து நம்மைத் தைரியப்படுத்துகிறார்.

சிலர் தங்களின் பயந்த காரியங்களினாலே தங்களுக்குரிய தாலந்துகளை,  ஆசீர்வாதங்களை, வெற்றியை சுதந்தரிக்க முடியாதவர்களாக மாறிவிடுகிறார்கள். 

சிலர் ஆரம்பத்தில் கொண்ட விசுவாசத்தை இழந்து விடுகிறார்கள். மத்தேயு 14:30ல் சீஷர்கள் பயந்து கொண்டிருந்த நேரத்தில் நான்தான் என்று திடப்படுத்தின இயேசு கிறிஸ்துவின் சத்தத்தையும் உருவத்தையும் பார்த்த பேதுரு, கடலில் தானும் நடந்து வர உத்தரவு கேட்டான். இயேசு கிறிஸ்து அவனை வா என்று அழைத்தார். பேதுரு படகை விட்டிறங்கி கடலிலே நடந்து சென்றான். வா என்ற வார்த்தை அவனது வாழ்க்கையில் பெரிய விசுவாசத்தை உருவாக்கியது. அவன் விசுவாசித்தபடியினால் தைரியசாலியாய்  கடலில் நடந்தான். ஆனால் பேதுரு திடீரென்று எழும்பின கடல் அலையைப் பார்த்தான், பயந்தான். கடலிலே மூழ்க ஆரம்பித்தான். அலையைப் பார்த்த அவன் விசுவாசம் இழந்து போய் கடலில் மூழ்கினான். ஆனாலும் இரட்சியும் கர்த்தாவே என்று இயேசு கிறிஸ்துவை நோக்கி கூப்பிட்டபடியினாலே இயேசு கிறிஸ்து அவன் கையைப் பிடித்து அற்ப விசுவாசியே ஏன் சந்தேகப்பட்டாய் என்று கேட்டார். ஆகவே பயமானது நம்மிலுள்ள விசுவாசத்தை நம்மிடத்திலிருந்து எடுத்துப்போடும். இயேசு கிறிஸ்து நான் உனக்குத் துணை செய்கிறேன் என்று சொன்ன வார்த்தையினாலே நமக்கு துணையாயிருந்து பயம் நீங்கின வாழ்க்கையை உருவாக்குகிறார்.

இன்று மனிதன் ஜீவகாலமெல்லாம் மரண பயத்தினால் நிறைந்து வேதனையுடன் வாழ்கிறான். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோ, மரண பயத்துக்கு அடிமையாய் இருக்கிற யாவரையும் விடுவிக்கும்படி சிலுவையில் அடிக்கப்பட்டார். நாம் இயேசு கிறிஸ்துவையும், அவர் பாடு மரணங்களையும், நமக்காக உயிர்தெழுந்ததையும் நம்பி, அவரைத் தேடும்போது, பயம் நீங்கின நல் வாழ்வை அடைவோம்.                      

2.தேடுகிறவர்களைக் கைவிடமாட்டார்

''கர்த்தாவே, உம்மைத் தேடுகிறவர்களை நீர் கைவிடுகிறதில்லை...'' சங்கீதம் 9:10

இந்த உலக வாழ்க்கையிலே மனிதர்கள் பல காரணங்களினால் கைவிடப்படுவதால் கலங்கி, உடைந்துபோன உள்ளதோடு  அனாதைகள் என்று சொல்லி அலைந்து திரிகிறார்கள். சில நண்பர்கள் கூட்டாக தொழில் செய்வோம், வியாபாரம் செய்வோம் என்று ஆரம்பத்தில் செயல்படுகிறார்கள். பின்னால் மிகுந்த பணத்தை எடுத்துக்கொண்டு கைவிடுகிற மக்களைப் பார்க்கிறோம்.

ஒருமுறை கர்த்தரை நேசிக்கிற ஒரு சகோதரர் தனக்குத் தெரிந்த ஒரு சகோதரனை அழைத்து வந்தார். திருமணமாகி குழந்தை பிறந்த பிறகு வெளி நாட்டில் கிடைத்த வேலைக்குச் சென்றார். மனைவியை நேசித்த அவர் பிள்ளை எப்படி இருக்கிறது என்று தொலைபேசியில் பேசி விசாரித்து வந்தார். பல ஆண்டுகள் அங்கேயிருந்து சம்பாதித்து தன் மனைவிக்கு பணத்தை அனுப்பி வந்தார். அவள் ஒரு இடத்தை வாங்கி வீட்டைக் கட்டியுள்ளேன் என மிகுந்த சந்தோஷமாக தெரிவித்தாள். அதிக நேரம் பணிபுரிந்து பணத்தைச் சம்பாதித்து அனுப்பினார். கடைசியில் அவர் இனி வெளிநாட்டில் இருக்க வேண்டாம், குடும்பத்தோடு சேர்ந்து வாழ்வோம் என கூறினபோழுது, ஒருசில ஆண்டுகள் பணிசெய்து பணத்தை அனுப்புங்கள் என்று சொன்னதினால் எல்லாப் பணத்தையும் அனுப்பிவிட்டு வீடு திரும்பினார். வீட்டிற்கு வந்து மனைவியின் பெயரைச் சொல்லி கதவைத் தட்டினார். கதவைத் திறவாது வேறொருவர் வந்து, நீங்கள் யார் என்று கேட்டார். சத்தத்தைக் கேட்ட மனைவி வந்து பார்த்துவிட்டு, தான் இன்னொரு மனிதனுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்று சொல்லி அவரை அனுப்பிவிட்டாள். இத்தனை ஆண்டுகள் பணத்தைச் சம்பாதித்து அனுப்பிய பின்னும் கைவிடப்பட்டதினாலும், மனைவியின் துரோகச் செயலினாலும் மனம் உடைந்து தற்கொலை செய்யச் சென்றவனை அழைத்து வந்தார்கள். யோசித்துப் பாருங்கள். சொந்த மனைவியால் கைவிடப்பட்டு கலங்கின நிலையைப் பார்க்கிறோம்.

நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோ தம்மைத் தேடுகிறவர்களை ஒருபோதும் கைவிடுகிறதில்லை. 'குருடரை அவர்கள் அறியாத வழியிலே நடத்தி, அவர்களுக்குத் தெரியாத பாதைகளில் அவர்களை அழைத்துக் கொண்டு வந்து, அவர்களுக்கு முன்பாக இருளை வெளிச்சமும், கோணலைச் செவ்வையுமாக்குவேன்; இந்தக் காரியங்களை நான் அவர்களுக்குச் செய்து, அவர்களைக் கைவிடாதிருப்பேன்.' என்று ஏசாயா 42:16ல் சொன்னவர் இன்றும் ஜீவிக்கிறார். நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவது மில்லை என்று சொன்ன தேவன் எல்லா சூழ்நிலையிலும் நம்மைக் கைவிடாது ஆதரித்து ஆசீர்வதிக்கிறவராய் இருக்கிறார்.                                            

 

2.       கர்த்தரைத்  தேடுகிறவர்களுக்கு  ஒரு  நன்மையும்  குறைவுபடாது  

            ''சிங்கக்குட்டிகள்  தாழ்ச்சியடைந்து  பட்டினியாயிருக்கும்;  கர்த்தரைத்  தேடுகிறவர்களுக்கோ  ஒரு  நன்மையுங்  குறைவுபடாது''   சங்கீதம் 34:10   

இன்று  கர்த்தராகிய  இயேசு  கிறிஸ்துவை  நாம்  தேடும்போது  நம்முடைய  வாழ்க்கையின்  எல்லா  குறைவையும்  மாற்றக்குடிய,  அகற்றக்கூடிய  உன்னத  தேவனாயிருக்கிறார். அவர்  சொல்ல  ஆகும்;  அவர்  கட்டளையிட  நிற்கும். குறைவுகள்  நீங்கி  நிறைவு  பெருகிவிடும்.  நம்முடைய  குறைவுகளை  எல்லாம்  தம்முடைய  ஐசுவரியத்தின்  மகிமையினாலே  நிறைவாக்குகிற  இயேசு  கிறிஸ்து,  நமக்கு  உண்டாகிற   சமாதான குறைவையும்  முற்றிலும்  அகற்றி  பூரண  சமாதானத்தைப்  பெருகச்  செய்வார்.

இன்று  தனிப்பட்ட  மனிதனுடைய  வாழ்க்கையிலும்,  குடும்ப வாழ்க்கையிலும்,   சமுதாய  வாழ்க்கையிலும்,   திருச்சபைகளிலும்,  தேசத்திலும்  சமாதானம்  குறைவுபட்டு  பலவிதமான  பிரிவுகளும்,  போராட்டங்களும்  நிறைந்து  இருப்பதைத்தான்  பார்க்க  முடிகிறது.  குடும்பத்தில்  பொருளாதாரக்  குறைவினால்  கண்ணீரோடு  வாழ்ந்து  கொண்டிருக்கிற   மக்கள்  மிகுதியாய்  இருக்கிறார்கள். அண்மையில்  ஒரு  கூட்ட  முடிவிலே  மனைவியின்  பெலவீனங்கள்   மாறவும்  அவளுக்குள்ளாய்  செயல் பட்ட   தீய  ஆவி   வெளியேற  வேண்டும்   என்றும் ஒரு சகோதரர்  ஜெபிக்கக்  கேட்டதால்  ஜெபித்தோம்.  தீயஆவி  நீங்கியபின்  அந்த  மகளில்  சுகம்  உண்டானது. கணவனையும்  மனைவியையும்  பார்த்து   சகோதரியே,  இனி  உங்கள்  கணவனை  நீங்கள்  அடிக்கக்கூடாது என்றபோது,  மிகுந்த  வெட்கத்தோடு  தலைகுனிந்தார்கள். கணவனுக்குள்ளாய் மகிழ்ச்சி உண்டானது. திருமணமாகி சில காலத்திலேயே குடும்பத்தில் சமாதானம் இல்லாத நிலைமை.  ஆனால் இயேசு கிறிஸ்துவைத்  தேடி  வந்தபடியினால்,  விடுதலையும்  சமாதானமும்  உண்டானது.

இன்று   குடும்பங்களிலே  வீடு  இல்லை  என்ற  குறைவு  பெரிதான  கஷ்டங்களையும்,  பாடுகளையும்   உண்டாக்குகிறது.  வீட்டுச் சொந்தக்காரர் களுக்குப்  பயந்து  பயந்து  நமக்கு  விருப்பமான  காரியம்  கூட  செய்ய முடியாத  வேதனையின்  காரியங்களைப்  பார்க்கிறோம்.  இன்னும்  சிலருடைய வாழ்க்கையிலே  பொருளாதாரக்   குறைவு,  குழந்தை  இல்லாத  குறைவு,  வேலையில்லாக்  குறைவு  என்று  பலதரப்பட்ட குறைவுகளினால்  கலங்குகிறார்கள்.  கிறிஸ்துவுக்குள்  பிரியமானவர்களே,  ஜீவனுள்ள  தேவனாகிய  இயேசு கிறிஸ்துவை   முழு  மனதோடு  நாம்  தேடும்போது,  குறைவுகள்  மாறி  நிறைவுகள்  பெருகுவதைப்  பார்க்கமுடியும்.  தாவீது  தன்   வாழ்க்கையிலே  கர்த்தரைத்  தன்   மேய்ப்பராய்  ஏற்றுக்  கொண்டேன்  என்று சாட்சி  கொடுத்திருப்பதைப்  பார்க்க  முடிகிறது.  அதின் பலனாக நிறைந்து வழிகிற  பாத்திரமாக  மாறினதைப்  பார்க்கிறோம்.  இன்றைக்கு  நம்முடைய  வாழ்க்கையிலே  சரீர  சுகக்  குறைவினாலே  கலங்குகிற  தம்மைத்  தேடுகிற  மக்களுக்குச் சுகத்தைத்  தரும்படி இயேசு கிறிஸ்து கல்வாரிச் சிலுவையில் '...நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக்கொண்டு, நம்முடைய நோய்களைச் சுமந்தார்...' என்று மத்தேயு 8:17ல் பார்க்கிறோம். 1பேதுரு 2:24ல் 'அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்' என்றும் பார்க்கிறோம். நம்முடைய அன்பின் தேவன் நம்முடைய குறைவுகளை நீக்குகின்ற தேவனாய் இருக்கிறபடியினால் எப்பொழுதும் துதிகளையும், ஸ்தோத்திரங்களையும் ஏறெடுப்போமாக.

 4. காரியங்களை வாய்க்கச் செய்வார்.

''தேவனுடைய தரிசனங்களில் புத்திமானாயிருந்த சகாரியாவின் நாட்களிலே தேவனைத் தேடமனதிணங்கியிருந்தான்; அவன் கர்த்தரைத் தேடின நாட்களில் தேவன் அவன் காரியங்களை வாய்க்கச் செய்தார்''                                                                                                                                 2 நாளாகமம் 26.5

நாம் கர்த்தரைத் தேடும்போது நம் காரியங்களை வெற்றியாக முடியப் பண்ணுகிற தேவனாயிருக்கிறார். இன்று அநேகருடைய வாழ்க்கையிலே காரியங்கள் வாய்க்காதே போனப்படியினால் கண்ணீர் சிந்துகிறார்கள். கவலைப்படுகிறார்கள் இன்றும் சிலர் தாங்க முடியாதபடி இடத்தை மாற்றிக் கொள்கிறார்கள். மிகுதியான தோல்வியினாலே தற்கொலையும் செய்து கொள்கிறார்கள். நான் என் வீட்டை, என் இடத்தை விற்று என் கடனை அடைக்க வேண்டும், என் வீட்டை விற்று திருமணக் காரியங்களை நடத்த வேண்டும்  என்று நினைத்த காரியம் வாய்க்காதபடி, சோர்ந்து போன பெற்றோர் உண்டு. நம்முடைய தேவனை நம்மோடு வைத்திருக்கும் போது, நம் காரியங்களை ஜெயமாக்குவதோடு, சந்தோஷத்தையும் நிறைவாக்குவார். நாம் அவருடைய வேதத்தை நேசித்து இரவும் பகலும் தியானிக்கும்போது, அவர் நம்முடைய காரியங்களை வாய்க்கச் செய்வார்.  என்றும் அவர் ஆலோசனையைப் பெற்று நடப்போமானால் நம்முடைய காரியம் ஜெயமாய் இருக்கும். அவர் ஆலோசனையைக் கேட்டு நடக்கும்போது நமக்கு ஜெயம் கொடுக்கிறவராய் இருக்கிறார். இயேசு கிறிஸ்து நமக்கு ஜெயம் கொடுக்கிறவர் என ரோமர் 8:37ல் பார்க்கிறோம்.            

இன்று நம்முடைய  வாழ்க்கையிலே இயேசு கிறிஸ்துவை முழு மனதோடு தேடி, நாம் சகல நல் ஆசீர்வாதங்களையும் பெற்று ஜெயமாய் வாழ்வோமாக.

கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.

                                                                                                                                                                             கிறிஸ்துவின்  பணியில்,
சகோ.C. எபனேசர் பால்.