செய்தி

                          ".....பயப்படாதே; உன்னை மீட்டுக் கொண்டேன்... "

                                                                                                       ஏசாயா 43:1

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே உங்களை வாழ்த்துகிறேன்.

நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்து நம்மை மீட்கிற ஆற்றலுடையவராய் இருக்கிறார். அவர் அதிசயமாய் நம்மை மீட்டு, எல்லா விதமான இக்கட்டுகளுக்கும் கண்ணின்மண்ணிபோல காத்து, அனுதின வாழ்க்கையிலே நம்மை சமாதானத்தோடும் சந்தோஷத்தோடும் வாழ்வதற்கு வழிநடத்துகிற அன்பின் ஆண்டவராய் இருக்கிறார். இன்று நாம் அநேக காரியங்களிலே மீட்கப்பட வேண்டியது அவசியமாய் இருக்கிறது.

மனிதர்களுடைய வாழ்க்கையிலே பணதேவை ஏற்படும்போது, அவர்களுடைய பொன் உடைமைகளை அடகு வைக்கிறார்கள். இவ்விதமாய் அடகுவைத்த அந்த நகையை ஏற்றக்காலத்தில் திருப்பிக்கொள்ள வேண்டும். அவ்விதமாய் அந்த நகையை மீட்காவிட்டால், அதை அடகு வாங்கியவர் விற்றுவிடுவார். அது நம் கைக்கு என்றுமே திரும்பாத படி மாறிப் போய் விடும். அதைப்போலத்தான் நம்முடைய ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்து நம்மை அவருக்குச் சொந்தமாக்கிக் கொண்டு, நம்மை இழந்து போகாதபடி மிகுந்த ஆவலோடு, ஆர்வத்தோடு நம்மிடத்திலே அவர் அநேக காரியங்களைச் செய்தார், செய்துகொண்டிருக்கிறார்.

அவருடைய மீட்பின் காரியங்கள் மிகுதியாய் உண்டு. அதில் ஒன்று ஆத்தும மீட்பு என்று சங்கீதம் 49:9ல் 'அவர்கள் ஆத்துமமீட்பு மிகவும் அருமையாயிருக்கிறது; அது ஒருபோதும் முடியாது.' என்று பார்க்கிறோம். இயேசு கிறிஸ்து நம்மை மீட்பதற்கு உண்மையுள்ளவராய் இருக்கிறார். உண்மையுள்ள தேவன் நம்மை அநேக காரியங்களிலிருந்து மீட்பதை வேதத்தின் வழியாக தெளிவாய்த் திட்டமாய் அறிந்துகொள்ள முடிகிறது.

I. எவைகளிலிருந்து நம்மை மீட்கிறார்?

1. அடிமைத்தனத்திலிருந்து நம்மை மீட்கிறார்.

"கர்த்தர் உங்களில் அன்புகூர்ந்ததினாலும், உங்கள் பிதாக்களுக்கு இட்ட ஆணையைக் காக்கவேண்டும் என்பதினாலும்; கர்த்தர் பலத்த கையினால் உங்களைப் புறப்படப்பண்ணி, அடிமைத்தன வீடாகிய எகிப்தினின்றும் அதின் ராஜாவான பார்வோனின் கையினின்றும் உங்களை மீட்டுக் கொண்டார்." உபாகமம் 7:8

இன்றைக்கு பலவிதமான அடிமைத்தனங்களில் சிக்கி வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பலவிதமான இச்சைகளுக்கு, உலக இன்பங்களுக்கு அடிமையாய் இருக்கிறோம் என்று தீத்து 3ம் அதிகாரத்தில் பார்க்கிறோம். இந்த அடிமைத்தனத்தில் வாழ்கிறபடியினால் கசந்துபோன வாழ்க்கை ஏற்படுகிறது. இவ்விதமான அடிமைத்தனத்தில் வாழ்கிறபடியினாலே மனிதனுடைய வாழ்க்கையானது கேடானதாயும், போராட்டமானதாயும், மிகுதியான கசப்பாயும் மாறுவதைப் பார்க்கிறோம். '.... ஆத்துமாவுக்கு விரோதமாய்ப் போர்செய்கிற மாம்ச இச்சைகளை விட்டு விலகி,' 1 பேதுரு 2:11ன் படி இச்சையானது மனிதனுடைய வாழ்க்கைக்கு விரோதமாய், ஆத்துமாவுக்கு விரோதமாய் போர் செய்கிற ஒன்று என்று பார்க்கிறோம். அதோடு மாத்திரம் அல்ல இச்சையானது நமக்குள்ளாய் பாவத்தைக் கர்ப்பந்தரிக்கிறது என்று யாக்கோபு 1:15ல் '... இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும் …' என பார்க்கமுடிகிறது .இச்சையானது மனிதனுடைய வாழ்க்கையிலே சாபங்களையும், மரணத்தையும் விளைவிக்கக்கூடியது. 2சாமுவேல் 11ம் அதிகாரத்தில் தாவீது கண்களின் இச்சைக்கு ஆளாவதைப் பார்க்கிறோம். யுத்தத்திற்குச் செல்ல வேண்டியவன் யுத்தத்திற்குச் செல்லாதபடி, தன் வீட்டின் உப்பரிகையில் இருக்கும்போது, ஸ்நானம் பண்ணுகிற ஒரு பெண்ணைப் பார்த்தவுடனே, அவனுடைய மனதிலே ஒரு அருவருப்பான எண்ணமும், ஆசையும் வந்தது. இச்சையின் அடிப்படையிலே ஆசை வந்ததினாலே, அவன் அந்தப் பெண்ணை அழைத்து தன்னுடைய மாம்சத்தின் இச்சைகளை நிறைவேற்றினதைப் பார்க்கிறோம். இதனுடைய விளைவு என்னவென்னில், 'இப்போதும் நீ என்னை அசட்டை பண்ணி, ஏத்தியனாகிய உரியாவின் மனைவியை உனக்கு மனைவியாக எடுத்துக்கொண்டபடியினால், பட்டயம் என்றைக்கும் உன் வீட்டை விட்டு விலகாதிருக்கும். ''...கர்த்தருடைய சத்துருக்கள் தூஷிக்க நீ காரணமாயிருந்த படியினால், உனக்குப் பிறந்த பிள்ளை நிச்சயமாய் சாகும்...'' 2சாமுவேல் 12:10, 14 ன் படி, அவன் சந்ததிக்கு சாபத்தைத் தேடி வைத்தான்.

மனிதனுடைய வாழ்க்கையிலே இச்சையானது பலவிதமான வேதனைகளைத் தருகிறது. ஆனால் அதற்கு அடிமையாய் வாழ்ந்து கொண்டிருக்கிறவர்கள் ஏராளம். இந்த இச்சையானது அன்று ஏவாளுக் குள்ளும் இருந்தபடியினாலே பழத்தைப் பறித்து புசித்து கணவனுக்கும் கொடுத்து தேவனுடைய மகிமையை இழந்துபோன நிகழ்ச்சியை ஆதி.3:5,6ல் பார்க்க முடிகிறது. நம்முடைய வாழ்க்கையிலும் இவ்விதமான காரியங்களுக்கு அடிமையாயிராதபடி காத்துக் கொள்ள வேண்டும், விடுவிக்கப்பட வேண்டும், மீட்கப்படவேண்டும் என்று நம்முடைய தேவன், நம்மைக் குறித்து கருத்தாய் இருப்பதோடு, அதற்குரிய காரியங்களை நமக்காய்ச் செய்கிறார். இச்சைகளுக்கும், இன்பங்களுக்கும் அடிமையாய் இருக்கிற நம்மை, அந்த அடிமைத்தனத்திலிருந்து விடுவிப்பதற்காக குமாரனாகிய இயேசு கிறிஸ்து தம்முடைய ஜீவனைக் கொடுத்தார்.

இன்னும் பலர் பயத்திற்கு அடிமையாய் இருப்பதைப் பார்க்கிறோம். 'ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கும் அப்படியானார்.' எபி. 2:15ல் பார்க்கிறோம். ஜீவகாலமெல்லாம் மரண பயம் - இம்மரணபயத்தினாலே நிறைந்து வாழ்க்கையிலே ஒன்றும் செய்யாதிருக்கிற மக்கள் ஏராளமாய் இருக்கிறார்கள். இயேசு கிறிஸ்து இந்த மரண பயத்திலிருந்து நம்மை மீட்டு, காத்துக்கொள்கிற தேவனாய் இருக்கிறார். மரணபயமானது வேதனையானது. இந்த வேதனையான பயம் அதிகமாய் பரவி வருகிறது.            '...பயமானது வேதனையுள்ளது…' என்று 1 யோவான் 4:18ல் பார்க்கிறோம். இவ்விதமான மரண பயத்தோடு வாழ்ந்து, தன் வாழ்க்கையில் போராட்டத்தோடு இருக்கிற மக்கள் ஏராளமாய் இருக்கிறபடியினாலே, நாம் பயத்திற்கு இடம் கொடாதபடி வாழ வேண்டும். இயேசு கிறிஸ்து நமக்குள்ளாய் தைரியம் தர வந்தவர். அவர் சிந்திய இரத்தத்தினாலே நமக்கு தைரியம் வருகிறது என்று '...அவருடைய இரத்தத்தினாலே நமக்குத் தைரியம் உண்டாயிருக்கிறபடியினாலும்' எபி. 10:20ல் பார்க்கிறோம். '...என் ஆத்துமாவிலே பெலன் தந்து என்னைத் தைரியப்படுத்தினீர்' என சங்கீதம் 138:3ல் பார்க்கிறோம்.

இந்த வார்த்தைகளைத் தியானிக்கிற அருமையான சகோதரனே, சகோதரியே, உன்னை மீட்டுக்கொண்டேன் என்று சொன்ன தேவன், எல்லாவிதமான காரியங்களிலும் நம்மை விலக்கி மீட்கிறவராய் இருக்கிறார். 'அப்படியே நாமும் சிறுபிள்ளைகளாயிருந்த காலத்தில் இவ்வுலகத்தின் வழிபாடுகளுக்கு அடிமைப்பட்டவர்களாயிருந்தோம்' கலாத்.4:3ன் படி, பலவிதமான கலாச்சாரங்களுக்கும் வழிபாடுகளுக்கும் அடிமையாய் வாழ்கிற மக்களை, அந்நிலையிலிருந்து மீட்கிறவராய் இருக்கிறார். ஏன் இதைச் செய்கிறோம்? எதற்குச் செய்கிறோம்? என்று அறியாதபடி இவைகளுக்கெல்லாம் அடிமையாய் வாழ்ந்து கொண்டிருக்கிற மக்கள் ஏராளமாய் இருக்கிறார்கள். ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோ, இந்தக் கலாச்சாரத்திலிருந்து நாம் விடுபட்டு, இந்த சமுதாயத்திலே உள்ள வழக்க முறைமைகளின்படி வாழாதபடி அவருடைய வேத ஒழுங்கின்படி வாழ வேண்டும், ஜீவ வசனத்தின்படி காரியங்களைச் செய்ய வேண்டு மென்று விரும்புகிறவராய் இருக்கிறார். இன்று நாம் அர்ப்பணிக்கும் போது, நம்மைக்குறித்து கரிசனையோடு காரியங்களைச் செய்யும் தேவன், நம்மை மீட்கிறவராய் இருக்கிறார்.

ஒருமுறை ஒரு அருமையான சகோதரனுடைய வீட்டிலே ஜெபிக்க என்னை அழைத்தார். வீட்டிலே சமாதானமே இல்லை, எப்பொழுது பார்த்தாலும் சண்டை, பலவிதமான குறைவுகள், பிரச்சனைகளினாலே கலங்கினார். புதிதாக வீடு கட்டினோம், இந்த வீடு ராசியில்லை என்று அவர் சொல்லிகொண்டிருந்தார். ஐயா, உங்களுடைய வீட்டின் முன்புறத்திலே என்ன புதைத்தீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர் ஐம்பொன்களை புதைத்திருக் கிறோம் என்றார். எங்கள் வீடு ஆசீர்வாதமாய் இருக்கும், செழிப்பாய் இருக்கும் என்று சொன்னதினால் செய்தோம் என்றார். உலக வழிபாடு களுக்கு இடம் கொடுத்தார்கள். இன்னுமாய் மற்றொரு வீட்டிலே ஒரு காரியத்தைப் பார்தேன். அவர் வீட்டினுடைய மூலையிலெல்லாம் சிலுவையைப் புதைத்திருக்கிறோம் என்று சொன்னார்கள். அதன் விளைவு என்னவென்றால், அந்த வீட்டிலே உள்ள வாலிப சகோதரன் திடீரென்று தற்கொலை செய்து கொண்டார். இன்றைக்கு அநேகர் அறியாமையினாலே தவறான நம்பிக்கையிலே தவறான காரியங்களைச் செய்து, அவர்கள் செய்வது சரியான, செவ்வையான காரியங்கள் என்று நம்பி தோல்வியும் துக்கமும் அடைகிறார்கள். ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோ இவ்விதமான வழிபாடுகளிலிருந்து நம்மை மீட்கிற தேவனாயிருக்கிறார்.

‘நீங்கள் தேவனை அறியாமலிருந்த போது, சுபாவத்தின்படி தேவர் களல்லாதவர்களுக்கு அடிமைகளாயிருந்தீர்கள்.' கலாத். 4:8ல் பார்க்கிறோம். இவைகளையெல்லாம் வணங்குகிற மக்கள் உண்டு. நட்சத்திரங்களைப் பார்த்து வணங்குகிறார்கள். சூரியனைப் பார்த்து வணங்குகிறார்கள். மின்னல் அடித்தால் போதும், அதைப் பார்த்து வணங்குகிறார்கள். இடி சத்தம் கேட்டால் போதும், வணங்குகிறார்கள். அறியாதபடி தேவனால் உண்டாக்கப் பட்டவைகளுக்கு தங்கள் எண்ணங்களை, தங்கள் கவனங்களைச் செலுத்தி மிகுந்த பயபக்தியாய் வணங்குகிற மக்களைப் பார்க்கிறோம். இவைகளை விட்டு விடுவதற்கு அவர்கள் சந்ததியாரும் ஆயத்தமாகவில்லை. என் தகப்பனார், என் தாயார் செய்தார் என்று சொல்லி அதையே செய்து கொண்டிருக்கிற மக்கள் ஏராளமாய் இருக்கிறார்கள். அருமையான சகோதரனே, சகோதரியே, இவ்விதமான வழிபாடுகளுக்கு அடிமையாகாதபடி இவைகளிலிருந்து விடுவிக்கிற தேவன் நம் மத்தியில் ஜீவிக்கிறார். அவர் உங்களை மீட்கிற தேவன். இவ்விதமான அடிமைத்தனங்களிலிருந்து மீட்கிற, விடுவிக்கிற அன்பு நிறைந்த தேவன் இன்றைக்கு ஜீவிக்கிறார். நம்மை எல்லா நிலைகளிலும் ஆசீர்வதிக்க விரும்புகிறவராய் இருக்கிறார்.

கடன் வாங்கினவன் கடன் கொடுத்தவனுக்கு அடிமையாயிருக்கிறான் என்று பார்க்கிறோம். பொருளாதாரத்தில் நெருக்கப்பட்டு, கடன் வாங்கி அடிமைகளாய் வாழ்ந்து கொண்டிருக்கிற மக்கள் ஏராளம். மீட்கிற தேவனாகிய இயேசு கிறிஸ்து, இவ்விதமான குறைகளிலிருந்து நம்மை மீட்டு ஆசீர்வதிக்கிறவராய் இருக்கிறார்.

2. பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்கிறார்

'உன் பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்டு...' சங்கீதம் 103:4

நம்முடைய ஜீவனைக் காக்கிற தேவன், ஜீவாதிபதியாகிய இயேசு கிறிஸ்து நம்மை நேசிக்கிற தேவனாய் இருப்பதோடு வருகிற எல்லாவிதமான எதிர்ப்புகள், போராட்டங்களுக்கு மத்தியிலே கண்ணின்மணி போல காத்து, பெரிதான மீட்பை அருளுகிறவராய் இருக்கிறார்.என்னுடைய வாழ்க்கையிலே மறக்க முடியாத அநேக நிகழ்ச்சிகள் உண்டு.

ஒருமுறை ஒரு வாகன விபத்திலே ஒரு காரினுடைய டயரானது என்னுடைய தலை முடியிலே ஏறிச்சென்றது. நான் உயிர் தப்பினேன். அன்றைக்கு என் மனைவியிடம், இயேசு கிறிஸ்து என்னை நேசிக்கிறார் என்று சொன்னேன். என் ஜீவனை கிருபையாய்க் காப்பாற்றினார் என்று நினைத்த போது, ஆச்சரியமாக இருந்தது. மேலான மகிழ்ச்சியைக் கொடுத்தது. அழிவுக்கு விலக்கி மீட்கிற தேவன், தம்முடைய சொந்த இரத்தத்தைச் சிந்தினவர், தன்னையே நமக்காக ஜீவபலியாக கொடுத்தவர், நம்மை மீட்டுக்கொள்கிறவராய் மகிழ்ச்சியினால் முடிசூடிகிறவராய் இருக்கிற படியினால், கர்த்தருக்கு ஸ்தோத்திரங்களையும், துதிகளையும் ஏறெடுக்க கடமைப்பட்டிருக்கிறோம்.

சத்துருவாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல யாரை விழுங்கலாம் என்று வகை தேடி சுற்றித்திரிந்து கொண்டிருக்கிறான். நாம் இயேசு கிறிஸ்துவை முன் வைக்கும் போது, பிசாசானவன் வெட்கப்பட்டு போய்விடுவான். ஆனால் நாமோ அதை அறியாதபடி உலகத்தை முன்வைத்து ஓடுகிறபடியினாலே இந்த உலகத்தின் அதிபதியானவன் தந்திரமான சில காரியங்களைச் செய்து போராட்டங்களைப் பெருகச் செய்கிறான். இந்த வார்த்தைகளைத் தியானிக்கிற சகோதரனே, சகோதரியே, பெலத்தின் மிகுதியினால் ஆயுசுநாட்கள் கூடினாலும் அதனுடைய சஞ்சலம் மிகுதி என்று பார்க்கிறோம். பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்கிற தேவனுடைய சத்தத்திற்குச் செவிக்கொடுத்து காக்கப்படவேண்டும்.

ஒருமுறை ஒரு போதகர் ஒரு காரியத்தைக் கூறினார். என்னுடைய மகன் எப்பொழுதுமே நான் சொல்வதற்கு மாறாகவேச் செய்வான் என்றார். அந்தப் போதகரோடும், மகனோடும் கொஞ்ச தூரம் நடந்து கொண்டிருந்த போது, அறியாத திசையிலிருந்து திடீரென்று வந்த வாகனத்தினால் பாதிப்படைந்தார்கள். உடனடியாக தகப்பனார் அவனைப் பார்த்து மகனே, நீ இடதுபுறமாய்க் குதி என்று சொன்னார். ஆனால் அவனோ வலதுபுறமாய்க் குதித்தான். ஆகவே விபத்துகளில்லாதபடி தப்பினார்கள். அப்போதுகூட ஏன் அவனைத் தவறாய் நடத்துகிறீர்கள் என்று கேட்டபோது, என் மகன் எப்போதுமே கிழக்கு என்றால் மேற்கு என்று சொல்லுவான். தெற்கு என்றால் வடக்கு என்று சொல்லுவான். வலதுபுறமாய் குதித்தால் அடிபட்டு விடுவான் என்று மாற்றிக் கூறினேன் என்றார்.

இதை வாசிக்கும் அருமையான சகோதரனே, சகோதரியே, கர்த்தர் இரக்கம் செய்கிற தேவனாயிருக்கிறார். அவருடைய சொல்படி செய்வதற்கு இடம்கொடுக்கும்போது, நம்முடைய பிராணனை அழிவுக்கு மீட்கிறார். இன்றைக்கு நம்முடைய வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் உண்டான போராட்டங்களிலும் கசந்த காரியங்களிலும், ஏன் விபத்துகளிலுமிருந்து மீட்டு விடுகிறார். விபத்து என்று சொன்னாலே பலவிதமான விபத்துகள். சாலையில் ஏற்படுகிற விபத்துகள், வீடுகளில், மின்சாரத்தினாலே, அடுப்பிலே வேலை செய்கிற போது ஏற்படுகிற விபத்துகளைப் பார்க்க முடிகிறது. என்னுடைய வாழ்க்கையிலே நான் மறக்க முடியாத சில நிகழ்ச்சிகளில் ஒன்று, ஆல்செயின்ட்ஸ் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்த சமயம், நான் விளையாடிக்கொண்டிருந்த போது, திடீரென்று என்னுடைய ஒரு காலில் பாம்பு ஏறி விரைவாய்ச் சென்றுவிட்டது. எனக்கு மிகுதியான ஆச்சரியம். அவர் நம்முடைய பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்கிற தேவன். ஒரு சில சமயத்தில் சில குடும்பங்களிலே gas stove அணையாதபடியால் பிரச்சனைகள். எங்கு விபத்து நடைபெறுமோ எங்கு போராட்டம் நடைபெறுமோ என்று பயத்தை உண்டுபண்ணுகிற காரியங்கள். இன்றைக்கு இயேசு கிறிஸ்து நாம் அழிந்து போகாதபடி, நம்முடைய ஜீவன் முடிந்து போய்விடாதபடி நம்மை மீட்டு ஆசீர்வதிக்கிறவராய் இருக்கிறார்.

3. சாபத்திலிருந்து மீட்கிறார்

''... கிறிஸ்து நமக்காக சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார்." கலாத்தியர் 3:13

 

நம்மை எல்லாவிதமான சாபத்திலிருந்து மீட்டெடுக்கிறார். சாபமானது வேதனையான ஒரு காரியம். ஆதிமுதல் இந்நாள் வரை சாபமானது மனிதனுக்குள்ளாய் பெருகி வருகிறது. இந்த சாபமானது அவனை மாத்திர மல்ல அவன் சந்ததியையும் பாதித்துக் கொண்டிருக்கிறது. சிலருடைய வாழ்க்கையிலே இந்தச் சாபத்தினால் கசந்துபோய் இருக்கிறார்கள். சாபத்தோடு வாழ்கிற மக்களாய் அல்ல ஆசீர்வாதத்தை சுதந்தரிக்கும் மக்களாய் வாழ, நம்மை மீட்கிற தேவனாயிருக்கிறார். ஆகவே இன்றைக்கு நம்முடைய வாழ்க்கையிலே சாபங்களை ஆசீர்வாதமாக மாற்றி நமக்குள் மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கையைத் தருகிறார். அந்த அன்பின் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஜீவிக்கிறவராய் இருக்கிறபடியினால், அழிவுக்கு மீட்கிற தேவன், சாபத்திலிருந்தும் மீட்டு நம்மை நடத்துகிற தேவனையிருக்கிறார்.

4. பாவத்திலிருந்து மீட்கிறார்.

"(குமாரனாகிய) அவருக்குள், அவருடைய இரத்தத்தினாலே, பாவமன்னிப் பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது." கொலோசெயர் 1:14

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பாவத்திலிருந்து நம்மை மீட்டு தேவனுடைய இராஜ்யத்திற்கு நம்மைப் பங்கடையச் செய்கிறவராய் இருக்கிறார். இந்தப் பாவத்திலிருந்து மீட்கப்படுகின்ற காரியத்தைப் பார்க்கும்போது, ' நியாயப்பிரமாணத்தின்படி கொஞ்சங்குறைய எல்லாம் இரத்தத்தினாலே சுத்திகரிக்கப்படும்; இரத்தஞ்சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது.' எபி. 9:22ன் படி இரத்தம் சிந்துதல் இல்லாதபடி பாவ மன்னிப்பு கிடையாது. இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் பாவ மன்னிப்பாகிய மீட்பைப் பெற்றுக் கொள்ளுகிறோம். மீட்பராகிய இயேசு கிறிஸ்து நமக்காக எல்லாவற்றையும் செய்து முடித்திருக்கிற தேவன் பரிந்து பேசுகிற தேவன் இன்றைக்கு ஜீவிக்கிறவராய் இருக்கிறபடியினால், நாம் ஒருபோதும் கலங்காதபடி கர்த்தரை அதிகமாய் நேசிக்க, துதிக்க இடம் கொடுக்க வேண்டும்.

மீட்பைப் பெற என்ன செய்ய வேண்டும்?

 1. அவர் சமுகம் வர ஒப்புக்கொடுக்க வேண்டும்.

"...கானானிய ஸ்திரீ ஒருத்தி அவரிடத்தில் வந்து:  ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும், என் மகள் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறாள் என்று சொல்லிக் கூப்பிட்டாள்." மத்தேயு 15:22

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே மீட்பை அடைய வேண்டுமானால், மீட்பினாலே உள்ளம் களிகூர வேண்டுமானால் அவரிடத்தில் வருவதற்கு நம்மை ஒப்புக்கொடுக்க வேண்டும். அவருடைய சமுகத்திலே வருவதற்கு நாம் இடம் கொடுப்போமானால் நிச்சயமாக அவர் நமக்கு விடுதலையை, மீட்பைத் தருகிறார். கானானிய ஸ்திரீ தன் மகள் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறதினால், இயேசு கிறிஸ்துவிடம் வந்து, தொடர்ந்து விடுதலைக்காக கெஞ்சினாள். அவளுடைய விசுவாசத்தைப் பார்த்து, அந்த மகளுக்கு விடுதலைக் கொடுத்து மீட்பை அருளினார். அவரிடத்தில் வரும்போது, சந்தோஷம் உண்டாகத்தக்கதாக தீய ஆவிகள் நம்மை விட்டு விலகுகிறது. ஆகவே தேவன் கொடுத்த அதிகாரத்தின் படி நமது பாவமன்னிப்பாகிய இரட்சிப்பைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத் தோடு வாழும்படியாக நாம் அவரிடத்திலே வருவதற்கு இடம் கொடுக்க வேண்டும். நம்முடைய பாவ அறிக்கையோடு நம்முடைய மன்றாட்டும் இருக்கவேண்டும். அவரிடத்திலே வரும்போதெல்லாம் நம்முடைய ஜெபத்தைக் கேட்கிறவர், நம்முடைய வேதனைகளைக் காண்கிறவர், அற்புதம் செய்து நம்மை மீட்டுக்கொள்கிறார். பிசாசினுடைய பிடியிலிருந்து நம்மை மீட்டு ஆசீர்வதிக்கிறவராய் இருக்கிறார்.

2. மாற்றம் இருக்க வேண்டும் .

"இப்போதும் யாக்கோபே, உன்னைச் சிருஷ்டித்தவரும், இஸ்ரவேலே, உன்னை உருவாக்கினவருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: பயப்படாதே; உன்னை மீட்டுக்கொன்டேன்..." ஏசாயா 43:1

யாக்கோபாக சிருஷ்டிக்கப்பட்டவன், இஸ்ரவேலாக மாறி உருவாக்கப் படுவதைப் பார்க்கிறோம். அதினிமித்தமாய் கர்த்தர் அவனை, மீட்டுக் கொன்டேன், பயப்படாதே என்று சொல்வதைப் பார்க்கிறோம். மீட்கப்படுவது என்று சொன்னாலே, கர்த்தருடைய வல்லமையான செயலினாலே பாவத்தின் ஆக்கினைக்கு நாம் ஆளாகாதபடி பாவத்தின் தண்டனைக்குத் தப்பி கொள்ளத்தக்க மேலானப் பாக்கியத்தை அடைவது. ஆகவே முடிவில்லாத ஆத்தும மீட்பானது நம்முடைய வாழ்க்கையிலும், நடைபெறும்போது, நம்மை வேதனைப்படுத்துகிற, துக்கப்படுத்துகிற சத்துருவினுடைய வேதனையான காரியங்களெல்லாம் மாறிப்போகும். வாழ்க்கையிலே சமாதானமும் சந்தோஷமும் நிறைந்துவிடும். மீட்பானது மாற்றத்தினால் வருகிறது. யாக்கோபு என்று சொல்லப்பட்டவனுடைய வாழ்க்கையிலே, சகோதர சிநேகம் இல்லாதவன், பாசமில்லாதவன், கண் தெரியாத தகப்பனாரை தந்திரமாக ஏமாற்றியவன். அவனுடைய வாழ்க்கையிலே உலக ஆசை நிறைந்தவனாய், உலகத்தின் ஆசீர்வாதங்களைத் தேடினவனாய் இதைச் செய்தான். ஆனால் அவனுடைய வாழ்க்கையிலே நிர்பந்தமான நேரத்திலே மாற்றம் அடைகிறான். இரவிலே தனித்து விடப்பட்டபோது, கலங்கினவனாய், பயந்தவனாய் என்ன ஆகுமோ, என் சகோதரன் என்ன செய்வானோ என்று அங்கலாய்த்த அவனுடைய வாழ்க்கையிலே கர்த்தர் அனுக்கிரகம் பண்ணின படியினால், அவன் எளிதாக தன் சகோதரனைச் சந்தித்ததோடு, மேற் கொள்ளக்கூடிய பாக்கியத்தைப்  பெற்றான். ஆகவே நம்முடைய வாழ்க்கையிலே ஒரு மாற்றத்தை அடையும்போது, அவர் நம்மை மீட்டு, தமக்கேற்ற ஒரு பாத்திரமாக, கருவியாக வனைந்து கொள்கிறார். 

3. மனந்திரும்ப வேண்டும்.

"உன் மீறுதல்களை மேகத்தைப்போலவும், உன் பாவங்களைக் கார் மேகத்தைப்போலவும் அகற்றிவிட்டேன்; என்னிடத்தில் திரும்பு; உன்னை நான் மீட்டுக்கொண்டேன்." ஏசாயா 44:22

மனந்திரும்பாதபடி ஒரு பெரிய ஆசீர்வாதத்தை அடைய முடியாது. மீட்பை அடைய இயலாது. நம்முடைய பாவங்களும் அக்கிரமங்களும் கர்த்தர் கிரியைச் செய்வதற்குத் தடையாய் இருக்கிறது. ஆகவே இன்றைக்கு நம்முடைய வாழ்க்கையிலே தடையைக் கொண்டு வருகிற காரியங்கள் அகன்று, தடைக்குக் காரணமாய் இருக்கிற காரியங்கள் என்னவென்று ஆராய்ந்து, அறிந்து அதை விட்டுவிட்டு, இரக்கத்தைப் பெற்றவர்களாய் மாற வேண்டும்.  அவருடைய வல்லமையான செயலினாலே நாம் அவரிடத்தில் வருவதற்கு, உறவு கொள்வதற்குரிய ஒரு உள்ளத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். மனதிலே ஒரு திருப்பம். பழைய வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து, புதிய வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டும். இயேசு கிறிஸ்து இந்த மாற்றத்தை ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் எதிர்ப்பார்க்கிறார். நம்முடைய பாவங்களை அறிக்கை செய்து, அவரிடத்தில் மனஸ்தாபப்பட்டு திரும்பும் போது, அவர் நம்மை ஆசீர்வதித்து, மகிழ்ச்சியினாலே முடிசூட்டி மேன்மையாக்குகிறவராய் இருக்கிறார்.

4. அவருடைய அன்புக்கு பாத்திரராய் இருக்க வேண்டும்.

"கர்த்தர் உங்களில் அன்புகூர்ந்ததினாலும், உங்கள் பிதாக்களுக்கு இட்ட ஆணையைக் காக்கவேண்டும் என்பதினாலும்; கர்த்தர் பலத்த கையினால் உங்களைப் புறப்படப்பண்ணி, அடிமைத்தன வீடாகிய எகிப்தினின்றும் அதின் ராஜாவான பார்வோனின் கையினின்றும் உங்களை மீட்டுக் கொண்டார்." உபாகமம் 7:8

அவருடைய அன்புக்கு பாத்திரராய் இருக்க வேண்டும். அவர் நம்மை நேசிக்கிறவர். அவருடைய அன்புக்கு பாத்திரராய் இருக்கிறோமா? அநேக நேரங்களிலே உலக மனிதனுக்குப் பிரியமாய் நடக்கப் பார்க்கிறோம். ஒரு அதிகாரிக்குப் பிரியமாய் நடந்தால், பதவி உயர்வு கிடைக்கும் அல்லது ஊதிய உயர்வு கிடைக்கும் அல்லது நாம் வாஞ்சித்த இடத்திற்கு பணிமாற்றம் கிடைக்கும் என்ற நம்பிக்கையிலே வாழ்கிற மக்கள் ஏராளம் உண்டு. ஆனால் நம்முடைய வாழ்க்கையிலே இயேசு கிறிஸ்து ஒரு பெரிய காரியத்தைச் செய்ய விரும்புகிறார். எந்த விதமான காரணத்தினாலும் கலங்காது, முழுமையான மீட்பைப் பெற்றவர்களாய் ஜீவிக்க உதவி செய்கிறார். 'கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் சிட்சித்து...' எபி. 12:6ன் படி அவர் யாரை நேசிக்கிறாரோ அவர்களை அவர் சிட்சிக்கிறார். அவர் நம்மை நேசிக்கிறபடியினாலே பலவிதமான கஷ்டங்கள், துக்கங்கள் வருகிறது. நம்மை மீட்டு மகிழ்விக்கத்தக்கதாக, இந்த ஆசீர்வாதமான காரியத்தை அவர் செய்கிறார். 'இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே.' ரோமர் 8:37ன் படி யாரை நேசிக்கிறாரோ அவர்களுக்கு ஜெயம் தருகிறார். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இன்றைக்கு நம்முடைய வாழ்க்கையிலே ஜெயம் தந்து, பெரிய மாற்றத்தைக் கொடுத்து முழுமையாய் நம்மை மீட்டு நடத்து கிறவராய் இருக்கிறார்.  

5. ஊழியம் செய்கிற மக்களாய் மாற வேண்டும்.

"கர்த்தர் தமது ஊழியக்காரரின் ஆத்துமாவை மீட்டுக் கொள்கிறார்..." சங்கீதம் 34:22

ஊழியருடைய ஆத்துமாவை அவர் மீட்கிற தேவன். கிறிஸ்துவுக்காக நாம் உழைக்கிற மக்களாய், ஊழியம் செய்கிற மக்களாய் மாற வேண்டும். அநேக நேரங்களிலே நாம் இந்த உலகத்தாரைப் போல வாழ்ந்து கொண்டிருக் கிறோம். யாராவது போய் இயேசு கிறிஸ்துவைச் சொல்லட்டும் என்ற எண்ணத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அப்படியல்ல, ஊழியம் செய்வது கர்த்தருக்குப் பிரியமான காரியும். இந்த ஊழியம் செய்வது நம்மேல் விழுந்த கடமை என்று பவுல் அழகாகச் சொல்வதைப் பார்க்கிறோம். தேவனுக்குப் பிரியமான விடுதலையின் ஊழியத்தைச் செய்யும்போது, கர்த்தர் மகிழ்ச்சியோடு நம்மை எல்லா நிலைகளிலும் மேன்மைப் படுத்துகிறவராய் இருக்கிறார். விலையேறப் பெற்ற ஆத்துமாவைக் குறித்து கரிசனை உடைய தேவன், ஊழியருடைய ஆத்துமாவை மீட்கிற தேவனாய் இருக்கிறார். அவர்கள் ஒருபோதும் தொய்ந்துபோகாதபடி, சோர்ந்து போகாதபடி, அனுகூலமான துணையாய் நின்று காத்து நடத்துகிறவராய் இருக்கிறார்.

இன்று இந்த வார்த்தைகளை தியானிக்கிற சகோதரனே/சகோதரியே, இயேசு கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்கிற மக்களாய் மாற வேண்டும். அவருடைய அன்பு நிறையும்போது, அந்த அன்பினாலே   ஊழியத்தைச் செய்கிற மக்களாய் நாம் மாறிவிடுகிறோம். இன்றுமுதல் நாம் கர்த்தருக்காக உழைப்பதற்கு, அவருக்காய் வாழ்வதற்கு நம்மை ஒப்புக்கொடுப்போம். நிச்சயமாய் மீட்கப்பட்ட வாழ்க்கையிலே நிலைத்தும், ஆசீர்வதிக்கப்பட்டும் மேன்மையாய் இருக்கக் கர்த்தர் கட்டளையிடுவார்.

                 கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.

 

                         கிறிஸ்துவின் பணியில்,

                        சகோ.C . எபனேசர் பால்.