செய்தி

''...கேளுங்கள், அப்பொழுது உங்களுக்கு கொடுக்கப்படும்...”

மத்தேயு 7:7

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களை வாழ்த்துகிறேன் .

நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்து நம்முடைய ஜெபங்களைக் கேட்கிற தேவனையிருக்கிறார். நம்முடைய ஜெபங்களைக் கேட்டு பதில தருகிறதேவனாயிருக்கிறர். நம்முடைய ஜெபங்களைக்கேட்டு பதில் தருகிற தேவன் இன்றைக்கு நம் மத்தியில் ஜீவிக்கிறவராய் இருக்கிற படியினால், தேவனை நாம் ஸ்தோத்தரிக்க கடமைப்பட்டிருக்கிறோம். ‘...கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்...’ என்று மத்தேயு 7:8ல்  பார்க்கிறோம். அருமையான சகோதரனே, சகோதரியே, உன் ஜெப வாழ்க்கையானது தேவனோடுள்ள உறவை உருவாக்கக்கூடிய ஆற்றல் உடையதாய் இருக்கிறது. இந்த ஆசீர்வாதமான ஜெப ஜீவியத்திற்கு உங்களை ஒப்புக்கொடுக்கும்போது உங்களுடைய ஜெபத்தின் மூலமாக அநேக நன்மைகளை, மேன்மைகளை, ஆசீர்வாதங்களை நீங்கள் சுதந்தரித்துக்கொள்ள முடியும். ஆவிக்குரிய நன்மைகளையும் அடைய வேண்டுமென்றால், இந்த ஜெப வாழ்க்கையானது அவசியமாய் இருக்கிறது. பலவிதமான மக்களுடைய ஜெபங்களைப் பார்த்திருக்கிறோம். வேதத்திலே நம் பார்க்கும்போது முதலாவதாக எப்படிக் கேட்கவேண்டும் என்று அறிந்து கொள்ளவேண்டும்.

I.எப்படிக் கேட்கவேண்டும் ?

1.விசுவாசத்தோடு ஜெபிக்கவேண்டும்

''அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்... '' யாக்கோபு 5:15

இன்றைக்கு நம்முடைய வாழ்க்கையிலே விசுவாசமானது மிகவும் அவசியமாய் இருக்கிறது. விசுவாசம் இல்லாதபடி நாம் ஜெபிப்போம் என்றால், வாழ்க்கையிலே ஒன்றுமே பெற்றுக்கொள்ளமுடியாதபடி போய் விடும். அநேக நேரங்களிலே இந்த அவிசுவாசத்தினாலே, தேவனுடைய ஆசீர்வாதங்களைப் பெறமுடியாமல் போகிறது. இயேசு கிறிஸ்து இருந்த காலத்திலே, அவர்களுக்குள் அவிசுவாசம் இருந்தபடியினால், அங்கு அவர் அநேக அற்புதங்களைச் செய்யவில்லை என்று வேதம் சொல்லுகிறது. இன்றைக்கு நம்முடைய வாழ்க்கையிலே விசுவாசமானது கர்த்தருக்குள் மிகவும் முக்கியமான பண்பாக, ஆசீர்வாதமான செயலாய் இருக்கிறது. இந்த விசுவாசத்தோடு ஜெபிக்க நாம் கற்றுக்கொள்ளவேண்டும். விசுவாசமுள்ள ஜெபமானது பிணியாளியை இரட்சிப்பதோடு மாத்திரமல்ல, விசுவாசத்தினாலே அநேக காரியங்களைப் பெற்றுக்கொள்கிறோம். அநேக நேரங்களிலே இந்த விசுவாசமானது நம்முடைய ஜெப வாழ்க்கையிலே இல்லாதபடியினாலே அநேக தோல்விகளை, தடைகளைத் தாண்டிச் செல்ல முடியாதபடி தவிக்கிற மக்களாய் இருக்கிறோம்.

இன்று நாம் எவ்விதமாய் ஜெபிக்கிறோம்? ‘இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்.’'1தெசலோ. 5:17ல் பார்க்கிறோம். இடைவிடாமல் ஜெபிக்க நாம் கற்றுக்கொள்ளும்போது, நம்முடைய உள்ளத்தைப் பக்குவப்படுத்திக் கொள்ளும்போது, அந்த ஜெபஜீவியத்தின் முலமாக எல்லாவிதமான நிலைகளிலும் மாற்றங்களை நாம் பெற்றுக்கொள்ளமுடியும். ஜெப வாழ்க்கையின் மூலமாக அநேக தேவனுடைய பிள்ளைகள் ஆசீர்வாதத்தோடு மிகுந்த விசுவாசத்தோடு செயல்பட்ட நிகழ்ச்சிகளைப் பார்க்கிறோம். எலியாவின் வாழ்க்கையில் பார்க்கும்போது, அவன் தேவனுடைய சமுகத்திலே எப்பொழுதுமே நின்று ஜெபிக்கிற ஜெப வீரனாய் இருந்தான். யாரெல்லாம் ஜெபவீர்களாய் இருக்கிறார்களோ அவர்களுடைய வாழ்க்கையானது ஆசீர்வாதமாய் மாறிவிடும். வெற்றியுள்ளதாய் மாறிவிடும். சத்துருக்களின்மீது ஜெயம் கொள்ளுகிற மக்களாய் மாறி விடுவார்கள். தேவனுடைய திட்டங்களை அறிந்து செயல்படுகிறவர்களாய் மாறி விடுவார்கள். ஆகவே ஜெப வாழ்க்கை யானது மிகவும் முக்கியம். அதிலும் விசுவாசத்தோடு ஜெபிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.

இந்த விசுவாசமானது மனிதனுக்குள்ளாய் எப்படி வருகிறதென்றால், முதலாவது கேள்வியினாலே இந்த விசுவாசம் ஆரம்பமாகிறது. இந்த விசுவாசமானது தொடர்ச்சியாக வளர்வதற்கு, இயேசு கிறிஸ்துவின் அற்புதங்களை நாம் ஆராய வேண்டும். கானா ஊர் திருமணத்திலே அவர் அற்புதத்தைச் செய்தார். சாதாரண தண்ணிரைத் திராட்சரசமாக மாற்றினார். அது ஒரு சிலருக்கு மாத்திரமே தெரிந்திருந்தது. இவ்விதமாய் இயேசு கிறிஸ்துவினுடைய அற்புதத்தைக்கண்ட சீஷர்கள் விசுவாசத்திலே பெருக ஆரம்பித்தார்கள். அதினிமித்தமாய் விசுவாச ஜெபத்தை ஏறெடுக்கிற மக்களாய் மாறினார்கள். இன்று நம்முடைய விசுவாசம் வளருவதற்கு கேள்வியானது மிகவும் முக்கியமாய் இருக்கிறது. ‘ஆதலால் விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும்.' ரோமர் 10:17ல் பார்க்கிறோம். இரண்டாவதாக, இயேசு கிறிஸ்துவின் அற்புதங்களைக் காணும்போது விசுவாசம் பெருகுகிறது. மூன்றாவதாக அவருடைய ஆவியினாலே நிரப்பப்படவேண்டும். விசுவாச ஆவி தேவை. 2கொரி. 4:13ல் விசுவாசத்தின் ஆவியைப் பார்க்கிறோம். இப்படியாக விசுவாசத்தில் பெருகி, அவருடைய ஆவியினால் நிறைந்த நல் வாழ்க்கை உருவாகும்போது, விசுவாச ஆவியினால் ஜெபிக்கிற ஜெபங்களுக்குப் பதில் கிடைக்கிறது.

அதோடு மாத்திரமல்ல இந்த விசுவாசம் பெருக ஆவியின் வரங்கள் தேவை. ஆவியின் 9 வரங்களில் ஒன்று விசுவாச வரம். இது பெருகும்போது, ஜெப ஜீவியமானது ஆசீர்வாதமாய் மாறுகிறது. விசுவாசத்தோடு கேட்கிற ஒவ்வொரு காரியங்களிலும் அவர் பதிலைத் தருகிற தேவனாய் இருக்கிறார். ‘உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது', ‘நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய்’ என்று தேவன் சொல்லுகிற ஒவ்வொரு வார்த்தைகளையும் பார்க்கமுடிகிறது. ஆகவே விசுவாசமான ஜெபம் நமக்குத்தேவை. விசுவாச ஜெபமானது தேவனுடைய சமுகத்திலே நன்மையானவைகளைப் பெற்றுகொள்வதற்கு வழி செய்கிறதாய்  இருக்கிறது.

2. கண்ணீரோடு ஜெபிக்க வேண்டும்

“அவள் கர்த்தருடைய ஆலயத்திற்குப் போகும்சமயத்தில், அவள் வருஷந்தோறும் அந்தப்பிரகாரமாய் செய்வாள். இவள் அவளை மனமடிவாக்குவாள்; அப்பொழுது அவள் சாப்பிடாமல் அழுது கொண்டிருப்பாள்.”1சாமு.1:7

பலவிதமான சூழ்நிலைகளிலே கண்ணீரோடு ஜெபிக்கிற ஜெபத்தைப் பார்க்கிறோம். தன் வாழ்க்கையிலே குறைவினிமித்தமாய் அழுத அன்னாள், தேவ சமுகத்திற்குச் சென்று தன்னுடைய இருதயத்தை ஊற்றினாள். கண்ணீரோடு கூடிய ஜெபத்தைப் பார்க்கிறோம். அவள் மிகவும் அழுது விண்ணப்பம் பண்ணினாள் என்று 1சாமு.1:10ல் பார்க்கிறோம். அழுது ஜெபிக்கிற ஜெபத்தைக் கர்த்தர் கேட்கிற தேவனாயிருக்கிறார். கண்ணீரைக் கண்டேன் என்று சொன்னவர், நம்முடைய விண்ணப்பத்தைக் கேட்கிற தேவனையிருக்கிறார். வாழ்க்கையில் அநேக நேரங்களிலே பிரச்சனைகளைப் பார்த்து சோர்ந்துபோய் வேதனையோடு வாழ்கிறோம். ஆனால் நாம் எவ்வளவு கண்ணீரோடு, பாரத்தோடு தேவ சமுகத்தை நோக்கி ஜெபிக்கிறோமோ, அவ்வளவு அதிகமாய் அந்த ஜெபத்தைக் கர்த்தர் கேட்டு அதிசயங் களையும் அற்புதங்களையும் செய்கிற தேவனாய் இருக்கிறார்.

                அருமையான சகோதரனே, சகோதரியே, இந்தச் செய்தியை நீ வாசிக்கிற வேலையில் உன் வாழ்க்கையின் பிரச்சனையின் நிமித்தமாய், நீ கண்ணீர் சிந்தி கலங்கிக் கொண்டிருக்கலாம். ஆனால் கலங்கிக் கொண்டுடிருக்கிற நிலைகளை விட்டு கண்ணீரோடுகூடிய ஜெபத்தைத் தேவ சமுகத்தை நோக்கி ஏறெடுக்கும்போது, அவர் அற்புதமான காரியத்தைச் செய்து உன் வாழ்க்கையில் உள்ள கண்ணீரைத் துடைப்பதற்குரிய அற்புதங்களைச் செய்கிற தேவனாயிருக்கிறார். அநேகருடைய வாழ்க்கையிலே கண்ணீரோடு ஜெபிக்கிற ஜெப ஜீவியம் குறைவுபட்டிருக்கிறது. அநேக நேரங்களில் அழுகிறோம், துக்கப் படுகிறோம், துயரப்படுகிறோம். ஆனால் தேவ சமுகத்தை நோக்கி எவ்வளவு நேரம் கண்ணீரோடு ஜெபிக்கிறோம்?

3. எல்லா நேரங்களிலும் தேவ சித்தத்தின்படி ஜெபிக்க வேண்டும்

''நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம்.” 1யோவான் 5:14

தேவ சித்தம் இன்னதென்று அறிந்து கொள்ளவேண்டும். அவருடைய சித்தத்தை அறியாதபடி நாம் இருப்போமானால், வாழ்க்கையிலே தவறு செய்கிற மக்களாய் இருக்கிறோம். தேவ சித்தத்திற்கு மாறாக பல சமயங்களிலே ஜெபங்களைச் செய்கிறபடினாலே பதில் பெறமுடியா திருக்கிறது. நாம் ஞானமற்றவர்களாய் இராதபடி ஞானமுள்ளவர்களாய் கவனமாய் நடந்துகொள்ளவேண்டும் என்றும் பார்க்கிறோம். ‘...நீங்கள் மதியற்றவர்களாயிராமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்து கொள்ளுங்கள்.' என்று பவுல் கடுமையாக எபேசியர் 5:17 ல் சொல்வதைப் பார்க்கிறோம். நம்முடைய ஜெப ஜீவியத்திலே தேவ சித்தத்தின்படி ஜெபிக்கவேண்டும். அநேக நேரங்களிலே சித்தத்திற்கு மாறாக நாம் ஜெபிக்கும்போது, பெற்றுக்கொள்ளவேண்டிய நன்மைகளை, ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்ளமுடியாதபடி தடையாகி விடுகிறது. ஒவ்வொரு காரியத்திலும் தேவசித்தம் என்னதென்று அறிந்து கொள்ளவேண்டும். ஒருவேளை ஒரு வீடு வாங்குவதாக இருக்கலாம். திருமணகாரியமாக இருக்கலாம். அல்லது படிப்பு காரியமாக இருக்கலாம். அது என்ன விதமான காரியமாக இருந்தாலும், தேவ சித்தம் இன்னதன்று அறிவதற்கு உள்ளத்திலே நாம் இடம் கொடுக்கவேண்டும். அவர் பாதத்தில் அமர்ந்து அவருடைய சித்தம் இன்னதென்று தெரிந்து கொண்டு, அதின்படி நாம் செய்யும்போது தான், குறைவில்லாதபடி, தடையில்லாதபடி, தாமதமில்லாதபடி வாழ்க்கையின் காரியமெல்லாம் வெற்றியாய்  மாற முடியும். ஆகவே தேவ சித்தப்படி ஜெபிக்கக்கற்றுக்கொள்ளவேண்டும்.

அநேக நேரங்களில் சித்தமில்லாதபடி செய்கிறபடியினாலே நஷ்டங்களை, தோல்விகளை அடைகிறோம். பலவிதமான இழப்புகளை அடைந்து விடுகிறோம். ஆனால் வாழ்க்கையிலே தேவ சித்தம் அறிந்து, சித்தத்தின்படி செய்வதற்கு ஒப்புக்கொடுக்கவேண்டும். ஒருமுறை ஓய்வுபெற்ற ரெயில்வே அதிகாரி சித்தமில்லாதபடி தன் ஓய்வு பெற்ற பணத்தையெல்லாம் ஒரு வங்கியிலே போட்டுவிட்டார். அது self finance என்பதை அறியாதபடி நன்றாய் எனக்கு வட்டி கிடைக்கிறது, ஒவ்வொரு மாதமும் அது தருகிற வட்டியானது போதுமானது என்று நினைத்து விட்டார். ஆனால் அவருடைய வாழ்க்கையிலே நினையாத ஏமாற்றம் தான் வந்தது. அந்தக் கம்பெனியானது முதல்மாதம் எல்லாம் கொடுத்தது. அடுத்தமாதம் எல்லாவற்றையும் சுருட்டிக்கொண்டுபோய் விட்டார்கள். தேவசித்தம் இல்லாதபடி செய்துவிட்டேனே என்று கலங்கினார்கள். இன்று நம்முடைய வாழ்க்கையிலே எதைச் செய்தாலும் தேவசித்தத்தின்படி செய்வதற்கு நம்மை அர்ப்பணிக்கவேண்டும். தேவசித்தத்தின் படி ஜெபிக்கிற ஜெபத்திற்கு அவர் பதில் தருகிற உன்னதமான தேவனாய் இருக்கிறார்.

மத்தேயு 8:2,3ம் வாக்கியங்களிலே குஷ்டரோகியானவன் இயேசு கிறிஸ்துவினிடத்தில் வந்து உமக்குச் சித்தமானால் என்னைச் சுத்தமாக்கும் என்று தேவ சித்தத்தின்படி தன் வாழ்க்கையில் சுகமடைய வேண்டும் என்று கேட்பதைப் பார்க்கிறோம். இயேசு கிறிஸ்து அவனைத் தொட்டு, சித்தமுண்டு சுத்தமாகு என்று சுத்தமாக்கினார் என்று பார்க்கிறோம். இந்த அருமையான வார்த்தைகளை வாசிக்கிற சகோதரனே, சகோதரியே, உங்கள் வாழ்க்கையிலே தேவ சமுகத்திலே அவர் சித்தம் இன்னதன்று அறிந்து செயல்படும்போது, கேட்கும்போது, உங்கள் ஜெபத்திற்கு பதில் வருகிறது. மகிழ்ச்சி பெருகிவிடும், நன்மைகள் நிறைந்து விடும்.

4. மனந்திரும்பி ஜெபிக்கக் கற்றுக்கொள்ளவேண்டும்

“...அவர்கள் மனந்திரும்பி, உம்மை நோக்கி கூப்பிட்டபோதோ, நீர் பரலோகத்திலிருந்து கேட்டு, அவர்களை உம்முடைய இரக்கங்களின் படியே அநேகந்தரம் விடுதலையாக்கிவிட்டீர்.”நெகேமியா 9:28

மனந்திரும்பி ஜெபிக்கிற ஜெபத்திற்கு தேவன் பதில் அளிக்கிறவராய் இருக்கிறார். ஏனெனில் நம்முடைய பாவங்கள் தேவனுக்கும் நமக்கும் உள்ள உறவைத் தடை செய்கிறதாய் இருக்கிறது. ஆனால் இயேசு கிறிஸ்துவின் பாதத்திலே நம்முடைய பாவங்களெல்லாம் மன்னிக்கப் படுவதற்கு, நம்முடைய பாவங்ககளெல்லாம் கழுவப்படுவதற்கு, நம்முடைய பாவங்களெல்லாம் சுத்திகரிக்கப்படுவதற்கு நாம் நம்மைத் தாழ்த்தும் போது, அவர் தம்முடைய தூய இரத்தத்தினாலே பாவங்களைக் கழுவி, அவருக்கும் நமக்கும் இடையே உள்ள தடுப்புச்சுவராகிய இந்த பாவத்தின் சுவரை அகற்றி, அவரோடு ஒப்புரவாக்குகிறபடியினால், ஜெபங்களைக் கேட்கிற தேவன், ஜெபத்தைக் கேட்டு அதிசயங்களைச் செய்கிறவராய் இருக்கிறார்.

இன்றைக்கு அருமையான சகோதரனே, சகோதரியே, உங்கள் வாழ்க்கையிலே நீங்கள் செய்த பாவங்களை, தேவன் விரும்பாத காரியங்களை, பிழையான காரியங்களை நாம் அறிக்கை செய்யக் கற்றுக் கொள்ளவேண்டும். தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடைய மாட்டான் என்று வேதம் சொல்லுகிறது. ஆனால் நம்முடைய பாவங்களை அறிக்கை செய்து அவைகளை விட்டுவிட்டால் தேவ இரக்கத்தைப் பெறுகிற பாக்கியம் உண்டு. நம்முடைய ஜெபங்கள் கேட்கப்படுவதற்கு இன்று ஒருவிசை நம்மை ஆராய்ந்து பார்த்து, என்னுடைய தப்பிதம் என்ன? என்னுடைய பாவம் என்ன ? என்று உணர்ந்து நம்மை ஒப்புக்கொடுக்கும் போது, கர்த்தர் அதிசயங்களைச் செய்கிறவராய் இருக்கிறார்.

தாவீது சங்கீதம் 25ல் தன் பாவங்களைச் சுட்டி காட்டிச் சொல்வதைப் பார்க்கிறோம். அவனுடைய இளவயதின் பாவங்களை நினையாதிரும் என்று பாவத்தினிமித்தமாய் மனஸ்தாபப்பட்டு, உள்ளத்தில் உணர்த்தப் பட்ட மகனாய் அந்தப் பாவத்திற்காக உள்ளத்திலே வேதனையோடு மன்றாடுவதைப் பார்க்கிறோம். ஆகவே அவனுடைய ஜெபங்கள் கேட்கப்பட்டதாய் இருக்கிறது. இன்று நம்முடைய வாழ்க்கையிலும் நம் பாவங்கள் தேவ சமுகத்தில் தடையாய் இருக்கிறபடியினால், பாவத்திற்குரிய காரியத்தை அகற்றுவதற்கு நம்மை தாழ்த்த வேண்டும். அவ்விதமாய் நாம் செய்யும்போது, கர்த்தர் அதிசயங்களைச் செய்கிற அன்பு நிறைந்த தேவனாய் இருக்கிறார். பாவங்களை உணர்த்துகிற பரிசுத்த ஆவியானவர் இன்று நம் மத்தியில் இருக்கிறார். எந்தப் பாவியையும் புறம்பே தள்ளேன் என்று சொன்னவர், நம்மைத் தள்ளி விடாதபடி, வாழ்க்கையிலே அற்புதங்களைச் செய்து நடத்துகிற உண்மையான ஆண்டவரராய் இருக்கிறார். இன்று எவைகள் பாவங்கள் என்று நாம் உணர்த்தப்பட்டிருக்கிறோமோ, அந்தப் பாவங்களை அறிக்கை செய்து, மனந்திரும்பின மக்களாக அவர் பக்கமாய் திரும்பின மக்களாக, அவர் சமுகத்தை நோக்கும்போது, அவர் அதிசயமாய் ஜெபத்தைக் கேட்டு அற்புதங்களைச் செய்கிறவராய் இருக்கிறார்.

5. பரிசுத்த ஆவிக்குள்ளாய்  ஜெபிக்க வேண்டும்

"...உங்கள் மகா  பரிசுத்தமான விசுவாசத்தின் மேல் உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, பரிசுத்த ஆவிக்குள்  ஜெபம் பண்ணி" யூதா  1:20

பரிசுத்த ஆவிக்குள்ளாய் ஜெபிக்கிற ஜெபவாழ்க்கை மிகவும் முக்கியமானது. தேவ சமுகத்திலே அநேக நேரங்களிலே நாம் அவ்விதமாய் ஜெபிக்க மனதில்லாதிருக்கிறோம். பரிசுத்த ஆவியினால் நிறைந்து ஜெபிக்க ஜெபிக்க கர்த்தருடைய பிரசன்னம் இறங்குவதோடு, மக்களுக் குள்ளாய் மகிழ்ச்சியும், ஆவிக்குரிய புதிய அனுபவங்களும் கடந்து வர முடியும். என்னுடைய ஆரம்ப காலத்திலே ஒரு குடும்பத்தாரோடு இணைந்து, பரிசுத்த ஆவிக்குள்ளாய் நிறைந்து ஜெபிக்க ஆரம்பித்த போது, அதிசயமானவைகளைக் கர்த்தர் செய்து நன்மையானவைகளைப் பெருகச் செய்தார் .

இந்த வார்த்தைகளைத் தியானிக்கிற, வாசிக்கிற மகனே, மகளே, உன்னுடைய வாழ்க்கையிலே பரிசுத்த ஆவிக்குள்ளாய் நிறைந்து ஜெபிக்கிற ஒரு ஜெப வாழ்க்கைக்கு இடம் கொடுக்கும்போது, கர்த்தர் நன்மையானவைகளையும, மேன்மையானவைகளையும் பெருகச் செய்து உங்களை வழிநடத்துகிற தேவனாயிருக்கிறார்.

II. கேட்பதினால் என்ன ஆசீர்வாதங்கள்?

நம்முடைய வாழ்க்கையிலே நாம் கேட்கும்போது தான் பெற்றுக் கொள்ளக்கூடிய சிலாகியத்தைக் கர்த்தர் வைத்திருக்கிறார். ஒரு மனுஷன் தன் வாழ்க்கையிலே பெற வேண்டியவைகளைப் பெறுவதற்கு தேவ சமுகத்திலே கேட்பதற்கு கவனமாய் இருக்க வேண்டும்.

1.சந்தோஷத்தைப் பெறுகிறோம்

“இதுவரைக்கும் நீங்கள் என் நாமத்தினாலே ஒன்றும் கேட்கவில்லை; கேளுங்கள், அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக்கொள்வீர்கள்.” யோவான் 16:24

நாம் தேவனுடைய சமுகத்திலே இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உன்னதமான தேவனை நோக்கிக் கேட்கும்போது, அவர் மிகுதியான சந்தோஷத்தைக்கொடுத்து நம்மை ஆசீர்வதிக்கிறார். மனிதனுடைய வாழ்க்கையில் சதோஷமானது ஒரு முக்கியமான காரியமாயிருக்கிறது. சந்தோஷம் இல்லையானால் அவனுடைய ஆவி முறிந்துபோகிற நிலை வருகிறது. மனதுக்கம் இருக்குமானால் ஆவி முறிந்துபோகும். இந்த சந்தோஷத்தைப் பெறுவதற்கு முழுமனதோடு, விசுவாசத்தோடு,  தாழ்மையோடு, மனந்திரும்பின மக்களாய் தேவ சித்தத்தின்படி ஜெபிக்கும்போது, சந்தோஷத்தைத் தந்து ஆசீர்வதிக்கிறவராய் இருக்கிறார். ‘கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள், சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்’ என்று பிலிப்பியர் 4:4ல் பார்க்கிறோம். இந்த சந்தோஷத்திற்கு அடிப்படையாய் இருப்பது ஜெப வாழ்க்கையாய் இருக்கிறது. எவ்வளவு நேரம் நீங்கள் ஜெபிக்கிறீர்களோ, அந்த ஜெபநேரமெல்லாம் கர்த்தருக்குள்ளாய் மகிழ்ச்சி நிறைந்ததாய், மேன்மை நிறைந்ததாய் இருக்கிறது.

ஒருமுறை ஒரு ஆசிரியர்  தன்னுடைய retirement பணத்தைக் கொண்டு வீடு சென்றார். அவரோடு பணியாற்றின இன்னொரு ஆசிரியர் தனக்கு இவ்வளவு பணம் தேவை என்று அவரிடம் கேட்டபடியினாலே அவர்கள் நண்பர்களாய் இருந்ததோடு, ஒரே பகுதியில் வசித்துவந்த படியினாலும், அவரிடத்திலே அவர் கேட்ட பணத்தைக் கொடுத்துவிட்டார். சில மாதங்கள் கழித்து அந்தப் பணமானது ஓய்வு பெற்ற ஆசிரியருக்குத் தேவையாயிருந்தபடியினாலே, அவரிடம் போய் கேட்டபோது, அவர் சற்று கோபமடைந்ததோடு மாத்திரமல்ல, நீ எப்பொழுது எனக்கு பணம் கொடுத்தாய் என்று சொல்லிவிட்டார. ஆகவே பணத்தைக் கொடுத்த ஆசிரியருக்கு பெரிய துக்கம் வந்துவிட்டது. துக்கத்தினாலே துயர மடைந்ததோடு தன்னோடு பணியாற்றிய ஒரு ஆசிரியரைக் கொண்டு என்னை அழைத்தார். நானும் அவருடைய வீட்டிற்கு சென்றேன். நான் ஒரே ஒரு காரியத்தைச் சொன்னேன். நீங்கள் இனி துக்கப்படாமல் இருப்பதற்கு, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஜெபியுங்கள் என்றேன். சில நாட்களில் தேவன் அவருடைய மனதை, மாற்றி அவரே உங்கள் வீடு தேடி வந்து பணத்தைக் கொடுத்துவிட்டுச்செல்வார் என்றும் சொன்னேன். நடைபெற்றது என்னவென்றால், இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே தேவ சமுகத்தை நோக்கி ஜெபிக்க ஆரம்பித்த அவருக்கு, அற்புதமான காரியத்தைக் காண முடிந்தது. மகிழ்ச்சியின் செய்தியைக்கேட்கமுடிந்தது. பணத்தை வாங்கின ஆசிரியர் மன்னியுங்கள் என்று சொல்லி, அந்தப் பணத்தை அவர் வீடு தேடி வந்து கொடுத்துவிட்டுப்போய் விட்டார். ஜெப வாழ்க்கையானது நம்முடைய துக்கத்தை சந்தோஷமாய் மாற்றக் கூடியதாய் இருக்கிறது.

2.ஞானத்தைப் பெற்றுக்கொள்ளமுடியும்

“உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்து கொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்." யாக்கோபு 1:5

வேதத்தைப் பார்க்கும்போது, ஞானமில்லாத மக்கள் ஏராளமாய் இருக்கிறார்கள். பலவித ஞானங்கள் வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ஞானத்தை எல்லாருக்கும் நிறைவாய்த் தருகிற தேவனுடைய சமுகத்திலே ஞானத்தைக் கேட்டுப்  பெறுவோமானால், குறைவின்றி வாழ்வதற்கு ஏதுகரமாய் இருக்கிறது. தானியேலைக் குறித்துப் பார்க்கும்போது, அவனும் அந்த மூன்று சிநேகிதர்களும் தேவ சமுகத்தை நோக்கி ஜெபிக்கிற வர்களாய் இருந்தார்கள். அவர்களுக்கு தேவன் விசேஷித்த ஞானத்தைக் கொடுத்தார். அதில் குறிப்பாக தானியேலுக்கு, சொப்பனங்களையும் தரிசனங்களையும் அறியத்தக்கதான ஞானத்தைக் கொடுத்தார்.

இன்று நம் வாழ்க்கையிலே ஞானம் இல்லை என்று கலங்கிகொண்டு இருக்கலாம். எனக்கு எந்த ஞானம் இல்லையே, பேசுவதற்குரிய ஞானம் கூட இல்லையே, காரியங்களைச் செய்வதற்குரிய ஞானம் இல்லையே, என்னுடைய வேலை செய்வதற்குரிய ஞானம் இல்லையே என்று ஏங்கிக் கொண்டிருக்கிற சகோதரனே, சகோதரியே, விசுவாசத்தோடு ஜெபிக்கும் போது, தேவன் அருளுகிற உன்னதமான ஞானமானது உங்களை மேன்மையாக்கக்கூடியதாய் இருக்கிறது. தானியேலில்  இந்த ஞானம் இருந்தபடியினாலே, அவன் இராஜாவுக்கு  அடுத்த ஸ்தானத்திலே எல்லாருக்கும் மேலான ஒரு அதிகாரியாய் இருந்தான் என்று பார்க்கிறோம். அந்த ஞானமானது அவனை உயர்த்தியது. இந்த தேவன் நமக்கு ஞானத்தைத் தருகிறவர், அவரே ஞானமாய் இருக்கிறார். 'அவரே தேவனால் நமக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார்.' என்று 1 கொரி. 1:31ல்  பார்க்கிறோம். இந்த அன்பு நிறைந்த தேவன், தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும் சம்பூரணமான ஞானத்தைக்  கொடுத்து, அவர்களை ஆசீர்வதிக்கிறவராய்  இருக்கிறார்.

3.சுக வாழ்வைத்தருகிறார்.

“...உன் விண்ணப்பத்தைக் கேட்டேன்; உன் கண்ணீரைக் கண்டேன்; இதோ, உன் நாட்களோடே பதினைந்து வருஷம் கூட்டுவேன்.”ஏசாயா 38:5

எசேக்கியா என்ற ராஜா நோய்வாய்ப்பட்டு மரணத்துக்கேதுவான நிலையில் இருந்தான். அவ்விதமாய் இருந்த எசேக்கியா ராஜா தேவ சமுகத்தை நோக்கி ஜெபித்தான். விண்ணப்பித்தான். அதனுடைய மேன்மை என்னவென்றால், அற்புதமான சுகத்தைப் பெற்றுக் கொள்கிறான். அருமையான தேவ ஜனமே, நாம் ஜெபிக்கின்றபொழுது, நமக்குள்ளாய் ஒரு சுக வாழ்க்கை மலர்கிறது. இன்னுமாய் உபவாசத்தோடு ஜெபிக்கும்போது கூட சுக வாழ்க்கையானது மலரக்கூடியதாய் இருக்கிறது. அநேக நேரங்களிலே ஜெப வாழ்க்கையிலே நாம் குறைவு  பட்டு இருக்கிறபடியினாலே சுகத்தைப் பூரணமாய் பெற முடியாதபடி தடையாய் இருக்கிறது. ஆகவே ஜெபமானது நமக்குள் சுக வாழ்க்கையை உண்டாக்கக்கூடியதாய் இருக்கிறது. அநேக நேரங்களிலோ சுகத்தைக் குறித்து கவலையற்றவர்களாய் இருக்கிறோம். என்னுடைய வாழ்க்கையில் அதிகமான சாட்சிகளைச் சொல்லமுடியும். பலவிதமான நோய்கள், பலவிதமான விபத்துகளினால் உண்டான வேதனைகள் உண்டாகும் பொழுதெல்லாம், ஜெபத்திலே நிறைந்து பெருகினபடியினாலே, கர்த்தர் கிருபையாய் இரங்கி, ஜீவனை இம்மட்டுமாய் சுகத்தோடு காத்து வருகிறார். ஆகவே ஜெபத்தின் மூலமாய் அற்புத சுகத்தைப் பெறுகிறோம். நாம் பெறுவதோடு மாத்திரமல்ல நமக்குள்ளாய் உள்ள விசுவாச ஜெபமானது பிணியாளிகளைக் குணமாக்கக்கூடிய ஆற்றலுடையதாய் மாறுகிறது. எந்த மனிதருக்காய் நாம் விசுவாசத்தோடு தேவ சமுகத்திலே ஜெபிக்கிறோமோ, அந்த ஜெப வாழ்க்கையின் நிமித்தமாய் கண்ணீரோடு ஜெபிக்கிற ஜெபத்தைக் காண்கிற தேவன், நமக்கு ஏற்றத்தைச் செய்கிற தேவனாய் இருக்கிறார். நாம் ஜெபிக்கின்றபோது, நமக்கு விரோதமாய் எழும்புகிற எல்லாவிதமான தீதான ஆவிகளின் மூலமாயும், பொல்லாத பெலவீனங்கள் மூலமாயும் வந்த வேதனையான நோய்களைக் குணமாக்கி, நமக்குள்ளாய் ஒரு சுக வாழ்வை மலர செய்கிறவராய் இருக்கிறார்.

4.எல்லாப் புத்திக்கும் மேலான தேவ சமாதானம் தருகிறார்

“அப்பொழுது எல்லாப் புத்திக்கும் மேலான தேவ சமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக் கொள்ளும்.” பிலிப்பியர் 4:7

ஸ்தோத்திரத்தோடுகூடிய விண்ணப்பத்தை, ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபங்களை அவருக்கு ஏறெடுக்க வேண்டும். இவ்விதமாய் ஏறெடுப்பதினாலே, நாம் கர்த்தருக்குள்ளாய் சமாதான வாழ்க்கையைப் பெற்றுக்கொண்டு, நம்முடைய இருதயத்தின் சிந்தைகளைக் காக்க முடியும். வீணான சிந்தைகளுக்கு நாம் அடிமையாகாதபடி ஜெப வாழ்க்கையானது நமக்குள்ளாய் ஒரு சமாதான வாழ்வை உண்டு பண்ணுகிறது. சமாதானத்தை இழந்து போவதினாலே அநேகர் தடுமாறுகிறார்கள், தவிக்கிறர்கள், ஏன் இந்த வாழ்க்கை என்று கூட எண்ணுகிறார்கள். தவறான தீர்மானங்களுக்கு கூடச் செல்கிறார்கள்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, சமாதான பிரபுவாய் வந்தவர், சமாதானத்தை நம்முடைய எல்லைகளிலே தருகிற தேவனாய் இருக்கிறார். அதோடு பிள்ளைகளின் மூலமாய் வருகிற கேடுபாடுகளை நீக்கி, பிள்ளைகளின் மூலமாய் சமாதானத்தைத் தந்து, நம்மை தேற்றுகிற தேவனாய் இருக்கிறர். அவருடைய போதனையின் மூலமாக இந்த தேவ சமாதானத்தை பிள்ளைகளின் வாழ்க்கையிலே நாம் காணக்கூடிய வர்களாய் இருக்கிறோம். நம்முடைய வாழ்க்கையிலே முக்கியமான பகுதி இதுதான். சமாதானத்தை உண்டுபண்ணுகிற தேவன், சமாதானத்தைத் தருகிற தேவன், நம் மத்தியில் ஜீவிக்கிறவராய் இருக்கிறார். 

5. ஜெயத்தைத் தருகிறார்

"தரியுவின் ராஜ்யபார காலத்திலும், பெரிசியானாகிய கோரேசுடைய இராஜ்ய பாரகாலத்திலும் தானியேலின் காரியம் ஜெயமாயிருந்தது." தானியேல் 6:28

கர்த்தர் ஜெயமுள்ள ஓட்டத்தை ஓடுவதற்கு உதவி செய்கிறவர். தானியேல் ஒவ்வொரு நாளும் ஜெபிக்கிற ஜெப வீரனாய்  இருந்தான். தானியேலின் காலம் முழுவதும் ஜெபத்தில் வெற்றிப் பெற்றவனாய் இருந்தான். ஜெப வாழ்க்கையானது நமக்கு வெற்றியைத் தரக்கூடியது. சத்துருக்களின் மீது ஜெயம் தரக்கூடிய ஜெப வாழ்க்கையானது மிக முக்கியமானது. எலியா தேவனுடைய சமுகத்திலே ஜெபிக்கிறவனாய் இருந்தபடியினால், தேவன் ஒரு திட்டத்தை அவனுக்குக் கொடுத்தார். பாகாலின் தீர்க்கதரிசுக்கு முன்பாக கர்த்தரே தேவன் என்று ஜனங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்று அவனை நன்றாய்ப் போதித்து நடத்தினார். கர்த்தருடைய வார்த்தைகளின்படி அவன் செய்தபடியினாலே அவன் கடைசியில் ஒரு ஜெபத்தை ஏறெடுக்கும் போது, அங்கிருந்த பாகாலின் தீர்க்கதரிசிகளுக்கு முன்பாக கர்த்தர் தம்முடைய அக்கினியை அனுப்பி, பலிபீடத்திலுள்ளதெல்லாம் அங்கீகரித்தார் என்று பார்க்கிறோம். 

ஜெபமானது தேவனுடைய சமுகத்திலே பதிலைக் கொண்டு வருவதோடு சத்துருக்களின் மத்தியில் நமக்கு ஜெயம் தரக்கூடியது, வெற்றியைத் தரக்கூடியது. இன்று வார்த்தைகளைத் தியானிக்கிற வாசிக்கிற அருமையான சகோதரனே, உன் வாழ்க்கையிலே ஜெபமானது வெற்றியின் வாழ்க்கையைத் தருகிறது. வாழ்க்கைக்கையில் வெற்றி வேண்டுமானால், சுகம் வேண்டுமானால், சமாதானம் வேண்டுமானால், ஞானம், சந்தோஷம் வேண்டுமானால் இந்த ஜெப வாழ்க்கைக்கைக்கு உங்களை ஒப்புக்கொடுங்கள். கேட்கிற எவனும் பெற்றுக்கொள்கிறான் என்று சொன்ன வார்த்தையின்படி உங்கள் ஜெபங்களை அவர் கேட்டு அற்புதமான காரியங்களைச் செய்கிறவராய் இருக்கிறார். ஆகவே அந்த அன்பு நிறைந்த தேவனுடைய சமுகத்திலே நம்முடைய ஜெபத்தை ஏறெடுப்போம், அதிசயத்தைக் காண்போம்.

கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.

 

கிறிஸ்துவின் பணியில்,

சகோ. C . எபனேசர் பால் .