“...காணாமற்போன வெள்ளிக்காசைக் கண்டுபிடித்தேன்...”

லூக்கா 15:9

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

     கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினால் உங்களை வாழ்த்துகிறேன்.

     லூக்கா 15:8,9ல் ஒரு ஸ்திரீ பத்து வெள்ளிக்காசை உடையவளாய் இருந்து ஒன்று காணாமற்போனபடியினாலே அதிக கவனமாய் அதைத் தேடினாள் என்று பார்க்க முடிகிறது. இன்றைக்கு நம்முடைய வாழ்க்கையிலும் அந்த மகள் இழந்து போன வெள்ளிக் காசைப் போல பல காரிய ங்களை இழந்து தவிக்கிறோம். ஒன்றை நாம் இழப்போம் என்றால், வாழ்க்கையிலே துயரமும் துக்கமும் அடைகிறோம். இவ்விதமான துயரம் அடைகிற நேரத்திலே கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலமாய் நாம் அநேக காரியங்களைப் பெற்றுக் கொள்ள முடியும். ஏனென்றால் நம்முடைய வாழ்க்கையைக் கட்டுகிற தேவன், திரும்ப நம்முடைய வாழ்க்கையைப் புதுப்பிக்கிற தேவனாயிருக் கிறார். பழையவைகள் ஒழிந்தன, எல்லாம் புதிதாயின என்றபடி புதிதாக்கக்கூடிய ஆற்றல் உடையவர் இயேசு கிறிஸ்து. உவமானமாய் சொல்லப்பட்ட இந்தக் காரியம், நம்முடைய வாழ்க்கையிலே இழந்து போன காரியங்களைப் பெற்றுக் கொள்வதற்கு வழியாக அமைந்திருக்கிறது. எவைகளையெல்லாம் இழந்துபோகிறோம் என்று ஆராய்வோம்.

 

I. எவைகளை இழந்துபோகிறோம்?

1. தேவனுடைய உறவை இழந்து போகிறோம்.

     தேவனுடைய உறவானது மிகவும் அவசியமானது. இது முக்கியமானது. அதைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டியது நம்முடைய பொறுப்பாயும் இருக்கிறது. கர்த்தருக்கும் உங்களுக்கும் உள்ள உறவு எவ்விதமாய் இருக்கிறது? இந்த உறவை இழந்து தவிக்கிற மக்கள் ஏராளம் உண்டு. உலக மனிதர்களுடைய உறவை இழந்தவர்கள் ஒண்டு. தன் கணவன் உறவை இழந்தவர்கள் உண்டு. மனைவியினுடைய உறவை இழந்தவர்கள் உண்டு. பிள்ளைகளுடைய உறவை இழந்து தவிக்கிற மக்கள் ஏராளம் உண்டு. ஆனால் தேவனோடுள்ள உறவை ஏன் இழந்து போகிறோம். ஏன் அது தொலைந்து போனது?

கீழ்ப்படியாமையினால் உறவை இழக்கிறோம்

     தேவனுடைய வாக்குத்தத்தங்கள், தேவனுடைய வார்த்தைகள், அதோடு அவருடைய ஒவ்வொரு செயலினால் உண்டாகிற நன்மைகளை நாம் பெற்றுக் கொண்டு வாழ்வதற்குப் பதிலாக இழந்து போனவர்களாய் இருக்கிறோம். வேதத்தை நாம் பார்க்கும்போது, அநேக காரியங்களை இழந்து கொண்டே வருகிறோம். உறவினால் அவரைக் கனப்படுத்தாதபடி, அவர் தந்த வார்த்தைகளைக் கனப்படுத்தாதபடி நம்முடைய உள்ளமானது உலகத்தைச் சார்ந்து, உலகத்தை நாடி உலகத்திலுள்ளவைகளை நேசிக்கிற படியினாலே வேதனை அடைகிறோம். தேவ உறவை இழந்து போகிறோம். இந்த சம்பவமானது ஏதேன் தோட்டத்திலே நடைபெறுவதைப் பார்க்கிறோம். ஆதி மனிதனாகிய ஆதாமும் ஏவாளும் தேவனோடு இணைந்து, இசைந்து மிகுந்த மகிழ்ச்சியாய் சஞ்சரித்து வந்தார்கள். ஏவாள் தேவன் சொன்ன வார்த்தையை அசட்டை செய்து அதை மீறி புசிக்க வேண்டாம் என்ற மரத்தின் விருட்சத்தை பறித்துப் புசித்து கணவனுக்கும் கொடுத்தாள் என்று பார்க்கிறோம். அதற்கு அடிப்படையான காரணம் என்ன? தேவனுடைய வார்த்தையை அசட்டைசெய்து விட்டாள். அவளின் இச்சையானது அவ்விதமாய் செய்ய வைத்தது. தேவனுடைய சத்தத்திற்கும், தந்திரமாய் பிசாசானவன் சொன்ன வார்த்தைகளுக்கும் வித்தியாசம் அறியாதபடி பிசாசாசின் சத்தத்திற்கு செவி கொடுத்தபடியினால் உறவை இழந்து போனார்கள். ஆதி. 3:4-6ல் 'அப்பொழுது சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி: நீங்கள் சாகவே சாவதில்லை; நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது. அப்பொழுது ஸ்திரீயானவள், அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள்; அவனும் புசித்தான்.' என்று பார்க்கிறோம். தேவன் சொன்ன வார்த்தைக்கு மாறாக பொய்யான வார்த்தைகளைப் பிசாசானவன் கூறினதைப் பார்க்கிறோம். இந்தப் பழத்தைச் சாப்பிடும் நாளில் நீ சாகவே சாவாய் என்பது தேவன் சொன்ன வார்த்தை. ஆனால் பொய்யும் பொய்க்கும் பிதாவாகிய பிசாசானவன் ஏவாளிடத்திலே ஒரு பொய்யைக் கூறுகிறான். இதைப் புசிக்கும் நாளிலே நீங்கள் சாகவே சாகமாட்டீர்கள்.

     அநேகருடைய வாழ்க்கையிலே இதை அறியாதபடி யினாலே தங்கள் ஜீவனை இழந்து கொண்டிருக்கிறார்கள். தங்கள் சந்ததியின் மேன்மைகளை இழந்து கொண்டிருக் கிறார்கள். காரணம் என்ன? தேவனுடைய வார்த்தைகளை, தேவனோடுள்ள உறவைக் காத்து, அவர் சொன்னபடி செய்வதற்கு மாறாக தங்கள் வாழ்க்கையில் இச்சைக்கு இடம் கொடுப்பதினாலே, தேவ உறவை இழந்து ஆசீர்வாதத்தை இழந்து போகிறோம். இச்சையானது  அங்கு அடிப்படையாய் அமைவதைப் பார்க்கிறோம். தொடவேண்டாம், புசிக்க வேண்டாம் என்ற கனியைக் கண்ட மாத்திரத்திலே அதை இச்சிக்கிறதைப் பார்க்கிறோம். அந்த இச்சையானது கர்ப்பந்தரித்து பாவமாக மாறி பழத்தைப் பறித்து புசித்தாள். 

அருமையான தேவ ஜனமே, இச்சையானது வாழ்க்கையில் கெடுதிகளை விளைவிக்கக்கூடியது. இச்சையானது பாவத்தைக் கொண்டு வரக்கூடியது. அநேக நேரங்களிலே இதை அறியாதிருக்கிறோம். பாவ இன்பங்களைக் கொண்டு வருவது இச்சையாயிருக்கிறது. 'உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்பு கூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை. ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவி னாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டான வைகள்.' 1யோவான் 2:15,16 ன்படி உலகத்தினால் உண்டான வைகள் எனப் பார்க்கிறோம். இச்சையானது மனிதனுடைய வாழ்க்கையைக் கெடுக்கிறது. பலவிதமான சம்பவங்களை வேதத்திலே பார்க்கிறோம். 2சாமு. 11:1-3ல் தாவீதைக் குறித்துப் பார்க்கும்போது, என் இருதயத்துக்கு ஏற்றவன் என்று அவனைக் குறித்து தேவன் ஒரு சாட்சி கொடுத்திருந்தார். அப்படிப்பட்ட சாட்சியுடைய மனிதன், கண்களின் இச்சைக்கு இடம் கொடுக்கிறான். மாம்சத்தின் இச்சையை நிறை வேற்றுகிறான். பாவத்தைத் துணிகரமாய்ச் செய்து சாபத்தைப் பெற்றுக் கொண்டான். தாவீதின் கண்களின் இச்சையானது குளித்துக் கொண்டிருக்கிற ஸ்திரீயைப் பார்த்தவுடனே பாவ காரியத்திற்கு இடம் கொடுக்கிறதைப் பார்க்கிறோம். அவனுடைய வாழ்க்கையிலே அவன் அதைத் தவறாய் செய்து வேதனையான காரியத்தை நடப்பித்தான். அதினிமித்தமாய் கர்த்தருடைய ஆசீர்வாதங்களை இழந்து, கர்த்தருடைய உறவை இழந்து, கர்த்தருடைய நாமம் துஷிக்கப் படுவதற்குக் காரணமாக மாறினான்.

     '...இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும்' யாக்கோபு 1:15ல் பார்க்கிறோம். இவ்விதமாய் மரணத்தை விளைவிக்கக்கூடியதாய் இருக்கிறது. இன்று நம்முடைய வாழ்க்கையில் எந்த நிலையிலே வாழ்கிறோம்? இச்சைகளுக்கு இடம் கொடுப்போமானால் தேவனுடைய உறவை இழந்து போவோம். உறவுகள் பிரிந்து போகிறது. அநேக குடும்பங்களிலே இந்த இச்சையின் அடிப்படையிலே மனைவியை விட்டு கணவன் பிரிந்து போகிறதைப் பார்க்கிறோம். இச்சையினிமித்தமாய் கணவனை விட்டு தான் விரும்பின மனிதனோடு வாழப் போகிற பெண்களைப் பார்க்கிறோம். மேலும் இச்சையானது சஞ்சலத்தைக் கொண்டு வருகிறது. தேவனோடுள்ள உறவை நாம் இழந்து போவதோடு தேவனுடைய மேன்மையான காரியங்களைப் பெற்றுக் கொள்ள இச்சையானது தடை செய்கிறது. இது நம்முடைய ஆத்துமாவுக்கு விரோதமாய் போர் செய்கிற ஒன்று. '...நீங்கள் ஆத்துமாவுக்கு விரோதமாய்ப் போர்செய்கிற மாம்ச இச்சைகளை விட்டு விலகி' என 1பேதுரு 2:11ல் பார்க்கிறோம்.       

      இவ்விதமான இச்சைகளுக்கு நாம் கவனமாய் இருக்க வேண்டும். இவ்விதமான இச்சைகளினாலே கசந்த காரியங் களையும் வேதனையான காரியங்களையும் அடைகிறோம், உறவை இழந்து போகிறோம். இன்று அப்படிப்பட்ட வாழ்க்கை யுடையவர்களாய் அல்ல. இச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்போம். கர்த்தரோடு உள்ள வாழ்க்கை வாழ்வோம். தேவன் தந்த அந்த நல்ல உறவைக் காத்துக் கொள்வோம். அநேக குடும்பங்களிலே பிள்ளைகளுக்கும் பெற்றோர்க்கும் பிரிவினை. உறவுகளிலே முறிந்துபோன உறவு. இழந்துபோன உன்னுடைய உறவுகளை இன்றைக்கு திரும்ப பெற்றுக் கொள்ள கர்த்தர் உதவி செய்ய உண்மையுள்ளவராய் இருக்கிறார். ஆகவே அந்த வெள்ளிக்காசைப் போல உங்களுடைய வாழ்க்கையிலே தேவனோடு உள்ள உறவை இழந்து போயிருக்கலாம்.

      அதுமாத்திரமல்ல, தேவ ஊழியர்களோடு உள்ள உறவை இழந்து போயிருக்கலாம். அநேகர் தேவ ஊழியர்களோடு உள்ள உறவை இழந்து பகையாக மாறி பிரிந்து செல்லுகிற மக்களாய் இருக்கிறார்கள். பிரிந்து செல்லுவதினாலே பாதிப்பும், பாடுகளும் உண்டாகிறது. வேதத்தைப் பார்க்கும் போது, ஆபிரகாம் தேவனால் அழைக்கப்பட்ட ஊழியன். லோத்து அவனோடே இணைந்து கொண்டவன். ஆனால் என்ன ஆயிற்று? ஆபிரகாமும், லோத்தும் ஒன்றாய் இணைந்து இருக்க முடியாதபடி அவர்களுடைய செல்வங்கள் பலுகி பெருகிவிட்டது. ஆகவே தான் ஒருமித்து வாசம்பண்ண முடியாது என்ற நிலைமை வந்து, லோத்துடைய மேய்ப்பர்களுக்கும், ஆபிரகாமின் மேய்ப்பர்களுக்கும் வாக்குவாதம் நடைபெற்றது. பின்பு லோத்து, யோர்தான் நதியின் கரைகளைப் பார்த்து, செழிப்பாய் இருக்கிறது என்று அறிந்து அவனுக்கு மனதில் பட்டபடி தெரிந்துகொண்டு செல்லுகிறான். விளைவு தவறான இடத்துக்கு செல்கிறான், மனைவியை இழந்துபோகிறான். பிள்ளைகளின் பாவ வாழ்க்கைக்கு, மாறுபாடான சந்ததிக்கு காரணமாகவும் மாறிவிடுகிறான். அவன் தேவ உறவை இழந்து, தேவனுடைய எல்லாவிதமான ஆசீர்வாதங்களையும் இழந்து, வாழ்க்கையிலே கசந்துபோனவனாக மாறுகிறான்.

     அருமையான தேவ ஜனமே, தேவ ஊழியரோடு உள்ள உறவை இழந்து போகாதபடி காத்துக்கொள்ள வேண்டும். தேவனோடுள்ள உறவைக் காத்துக்கொள்ள வேண்டும்.

2. கர்த்தர் அருளின ஆசீர்வாதத்தை இழந்து போகிறான்

"அந்த தேசத்துக் குடிகளில் ஒருவனிடத்தில் போய் ஒட்டிக்கொண்டான். அந்தக் குடியானவன் அவனைத் தன் வயல்களில் பன்றிகளை மேய்க்கும்படி அனுப்பினான்.

அப்பொழுது பன்றிகள் தின்கிற தவிட்டினாலே தன் வயிற்றை நிரப்ப ஆசையாயிருந்தான், ஒருவனும் அதை அவனுக்குக் கொடுக்கவில்லை." லூக்கா 15:15,16

ஒரு செல்வந்தனுடைய மகன் அவ்விதமான வேதனையோடு இருந்த சூழ்நிலையைப் பார்க்கிறோம். ஒருவரும் அவனுடைய பசியைத் தீர்ப்பதற்கு, கேவலமான பன்றிகளின் ஆகாரத்தைக் கூட கொடுக்கவில்லை. அவன் செல்வந்தருடைய வீட்டைச் சார்ந்தவன். அவனுடைய தகப்பனார் ஒரு பெரிய ஐசுவரியவானாக இருந்தார். அவன் இந்த வேதனையான நிலைமைக்கு வந்தற்கு காரணம், அவன் தானாக தன் தகப்பனை விட்டுப் பிரிந்து தவறான காரியத்தைச் செய்தான். பிரிந்து போகிற மக்களைப் பார்க்கும்போது, அவர்கள் இச்சைக்கு அடிமையாகிறார்கள். 'பிரிந்துபோகிறவன் தன் இச்சையின்படி செய்யப் பார்க்கிறான், எல்லா ஞானத்திலும் தலையிட்டுக் கொள்ளுகிறான்.' நீதி.18:1ன் படி நடக்க விரும்புகிறான். அவனுடைய விருப்பத்தின்படி எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்று பிரிந்து போகிறான். அவன் பரம தகப்பனை விட்டுப் பிரிந்தான். அவனுடைய சகோதரனின் ஐக்கியத்தை விரும்பவில்லை. அவன் பிரிந்து தன்னிச்சையாக வாழ முற்படுகிறான்.

      கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, இந்த வார்த்தைகளை வாசிக்கிற சகோதரனே, பிரிவினையின் காரணங்களுக்கு இடங்கொடுக்கிற மக்கள் ஏராளம் உண்டு. தகப்பனை, தன் சகோதரனை விட்டு அவன் பிரிந்து, தன் செல்வத்தையெல்லாம் பிரித்துக்கொண்டு, அவையெல்லா வற்றையும் விற்று பணமுடிப்பாக மாற்றிக்கொண்டு தூரமான தேசத்துக்குச் சென்றான் என்று பார்க்கிறோம். தூரமான தேசத்துக்கு செல்வது என்றாலே கர்த்தரை விட்டுப் பிரிந்துபோகிற வாழ்க்கை. தூரமாய் பின்பற்றும் பொழுது இயேசு கிறிஸ்துவை மறுதலித்த பேதுருவைப் போல நாம் மறுதலித்து விடுவோம். 'பேதுரு, தூரத்திலே அவருக்குப் பின்சென்று, பிரதான ஆசாரியனுடைய அரமனை வரைக்கும் வந்து, உள்ளே பிரவேசித்து, முடிவைப் பார்க்கும்படி சேவகரோடே உட்கார்ந்தான்.' மத்தேயு 26:58.  இங்கு தூரமாய் பின்பற்றினவன் அங்கு இயேசுவுக்கு என்ன நடக்கவிருக்கிறது என்று பார்க்க விரும்புகிறான். அவன் அவ்விதமாய் இருந்த போது, இவன் இயேசுவோடு இருந்தவன் என்று சொன்ன பொழுது, அவன் மறுதலித்தான். அவன் இயேசுவை அறியேன், எனக்கு அவரைத் தெரியாது என்று சொல்லுகிறவனாக மாறினான். அவரை நான் அறியேன் என்று சபிக்கவும், சத்தியம் பண்ணவும் தொடங்கினான் என்று பார்க்கிறோம். வேதனையான ஒரு வாழ்க்கையைப் பார்க்கிறோம். காரணம் அவன் தூரமாய் பின்பற்றினான். அவன் பேச்சு இயேசுவோடு இருந்தவனாய் இருந்ததை வெளிப்படுத்தினது. மூன்றாவது முறையாக 73ம் வசனத்திலே 'சற்றுநேரத்துக்குப்பின்பு அங்கே நின்றவர்கள் பேதுருவினிடத்தில் வந்து: மெய்யாகவே நீயும் அவர்களில் ஒருவன்; உன் பேச்சு உன்னை வெளிப்படுத்து கிறது என்றார்கள்.' என்று பார்க்கிறோம். அவனுடைய பேச்சு அவனை வெளிப்படுத்துகிறது. ஆகவே, அவன் இயேசுவோடு இருந்தபடியினாலே இயேசு கிறிஸ்து பேசுகிற மாதிரி அவனுடைய தொனிகள், அவனுடைய வார்த்தைகள் எல்லாம் இருந்தது.

     கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, நம்முடைய வாழ்க்கையிலே அப்படித்தான். இயேசு கிறிஸ்துவைப் போல நாம் இருந்தாலும், அவரை அறியாதிருக்கிறோம் என்று சத்தியம் பண்ணுவதினாலே, தேவன் அருளுகிற ஆசீர்வாதத்தை இழந்து போகிறோம். இந்த இளைய குமாரனுடைய வாழ்க்கையிலே தூரமாய்ப் போனபடி யினாலே நாசம் அடையத் தக்கதாக நிலைகள் வந்தது. 'இதோ, உம்மைவிட்டுத் தூரமாய்ப்போகிறவர்கள் நாசமடைவார்கள்; உம்மைவிட்டுச் சோரம்போகிற அனைவரையும் சங்கரிப்பீர்.' சங்கீதம் 73:27ல் பார்க்கிறோம். அவன் சோரம் போகிறவனாய் மாறினான். பிற்பாடு மனந்திரும்பி, இழந்து போனதை திரும்பப் பெற்றுக் கொள்ளுகிறவனாக மாறினான்.

     இன்றைக்கு வாழ்க்கையிலே சுகம், சமாதானம், சந்தோஷம் இவற்றை நீங்கள் இழந்திருக்கலாம். தேவன் கொடுத்த நல்ல சரீர சுகத்தை உடையவர்களாய் இருந்து, இன்றைக்கு அவற்றையெல்லாம் இழந்துபோய் தவித்துக் கொண்டிருக்கலாம். கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, இழந்துபோனதைத் திரும்பத் தருகிற தேவன் நமக்கு இருக்கிறார். இழந்து போனவர்களை இரட்சிக்க வந்தவர் இன்றைக்கு ஜீவிக்கிறவராக இருக்கிறார். அருமையான தேவ ஜனமே, நாம் அறியாது செய்த பாவத்தினாலோ, பிழைகளினாலோ இழந்துபோனதைத் திரும்பத் தரக்கூடிய தேவன், நமக்குத் திரும்பத்தந்து, நம்மை உற்சாகத்தின் ஆவினாலே இடைக்கட்டுகிறவராக இருக்கிறார்.

3. ஆவிக்குரிய பெலனை இழந்து போகிறோம்

"அப்பொழுது அவள்: சிம்சோனே, பெலிஸ்தர் உன்மேல் வந்துவிட்டார்கள் என்றாள்; அவன் நித்திரைவிட்டு விழித்து கர்த்தர் தன்னைவிட்டு விலகினதை அறியாமல், எப்போதும்போல உதறிப்போட்டு வெளியே போவேன் என்றான்.

பெலிஸ்தர் அவனைப் பிடித்து, அவன் கண்களைப் பிடிங்கி, அவனைக் காசாவுக்குக் கொண்டுபோய், அவனுக்கு இரண்டு வெண்கல விலங்குபோட்டுச் சிறைச்சாலையிலே மாவரைத்துக்கொண்டிருக்க வைத்தார்கள்." நியாயாதிபதிகள் 16:20,21

     இங்கு ஆவிக்குரிய பெலனை உடைய சிம்சோனைப் பார்க்கிறோம். அவன் ஒரு பெலசாலியாக இருந்தான். அந்த பெலன் எல்லாம் அவனை விட்டு விலகிற்று. காரணம் கர்த்தர் அவனை விட்டு விலகினார். அவன் தன் பெலனை இழந்தபோது, அவனைச் சிறைப்பிடித்தார்கள், கண்ணைப் பிடுங்கினார்கள். மாவரைக்கும் இயந்திரத்தை இயக்குவதற்கு அவனை பயன்படுத்தினார்கள். வேதனையான ஒரு சூழ்நிலை வருகிறது. தேவன் கொடுத்த ஆவிக்குரிய பெலனை, ஆசீர்வாதத்தை இழந்தபோது, அவனுடைய வாழ்க்கை ஒரு சஞ்சலம், போராட்டம், அருவருப்பு நிறைந்த வாழ்க்கையாய் மாறிற்று. அவனுடைய வாழ்க்கையானது கசந்துபோய் இருப்பதைப் பார்க்கிறோம். உன்னதமான தேவனுடைய ஆவியின் பெலத்தையுடையவனாய் வாழ்ந்து கொண்டிருக்கவேண்டிய அவனுடைய வாழ்க்கையிலே இதை இழந்துபோவதற்குக் காரணம் என்ன ? பாவம் அவனில் பிரவேசித்தது. 'பின்பு சிம்சோன் காசாவுக்குப் போய், அங்கே ஒரு வேசியைக் கண்டு, அவளிடத்தில் போனான்.' நியாயா. 16:1ல் வேசியைக் காண்கிற வேசித்தன ஆவிக்கு அடிமையான மனிதனாக மாறினான். வேசித்தன ஆவி அவனை வழித்தப்பித் திரியப்பண்ணிற்று. அதோடு அவன் நிற்கவில்லை.  'அதற்குப் பின்பு அவன் சோரேக் ஆற்றங்கரையில் இருக்கிற தெலீலாள் என்னும் பேருள்ள ஒரு ஸ்திரீயோடே சிநேகமாயிருந்தான்.' நியாயா. 16:4. அவன் இன்னொரு பெண்ணோடு மறுபடியும் தொடர்பு கொண்டு சிநேகமாய் மாறுகிறான். அவளோ வஞ்சிக்கிற ஒரு பெண். நெருங்கின மக்களோடு கூட இருக்கும்போது வாய் திறவாமல் இருக்க வேண்டும் என்று வேதம் நமக்குத் தெளிவாய்ச் சொல்லுகிறது. இதை 'சிநேகிதனை விசுவாசிக்க வேண்டாம், வழி காட்டியை நம்பவேண்டாம்; உன் மடியிலே படுத்துக் கொள்ளுகிறவளுக்கு முன்பாக உன் வாயைத் திறவாமல் எச்சரிக்கையாயிரு.’ என மீகா 7:5ல் பார்க்கிறோம். மடியிலே படுத்துக் கொண்டிருக்கிறவளுக்கு முன்பாக உன் வாயைத் திறவாமல் எச்சரிக்கையாயிரு என்ற வார்த்தைக்கு மாறாக அவனுடைய பெலத்தின் இரகசியத்தை அவன் சொன்னபடி யினாலே அவள் பணத்தை வாங்கிக் கொண்டு அவனுடைய தலைமுடிகளெல்லாம் எடுத்து விடுகிற, சிரைத்து விடுகிற நிலையைப் பார்க்கிறோம்.  

     கிறிஸ்துவுக்குள் பிரியமானவைர்களே, பாவ கரியமானது, வேசித்தன காரியமானது நம்முடைய வாழ்க்கையை, மேன்மையான காரியங்களை இழக்கச் செய்கிறது. அவன் அடிமையாக மாறுகிறான், வேதனையடைகிறவனாயிருக் கிறான், சிறைப்பட்டவனாய் வாழ வேண்டிய நிர்ப் பந்தத்தைப் பார்க்கிறோம். இன்றைக்கு அப்படிப்பட்ட வாழ்க்கை அல்ல இழந்து போனதைத் திரும்பத்தருவதற்கு உண்மையுள்ளவராக இயேசு இருக்கிறார். 

4. ஆவியின் வரங்களை இழந்து போகிறோம்.

"அப்பொழுது அவள்: என்னைக்  காண்பவரை நானும் இவ்விடத்தில் கண்டேன் அல்லவா என்று சொல்லி, தன்னோடு பேசின கர்த்தருக்கு நீர் என்னைக் காண்கிற தேவன் என்று பேரிட்டாள்." ஆதியாகமம் 16:13

     அவளுடைய வாழ்க்கையிலே ஒரு பெரிய சமாதானம் வரத்தக்கதாக, சந்தோஷம் வரத்தக்கதாக கர்த்தர் அவளை நடத்தினார். அவளுடைய வாழ்க்கையிலே தன் எஜமாட்டி அதிகமாய் துக்கப்படுத்துகிற வண்ணமாய் நடத்துகிற படியினாலே வீட்டை விட்டே ஓடிவிடுகிறாள். தேவனுடைய தூதன் அவளைச் சந்திக்கிறார். அவளை நேர்த்தியாய் நடத்துகிறார். நடத்தினதோடு மாத்திரம் அல்ல அவளுக்குப் பிறக்கப் பிறக்கப் போகிற குழந்தையைக்குறித்து, வருங்காரியத்தைக் குறித்து சொல்வதைப் பார்க்கிறோம். இவ்விதமான வார்த்தைகளைக் கேட்ட, அதே காரியத்தைக் கண்ட ஆகார், 'என்னைக் காண்கிற தேவன்' என்று கர்த்தருக்கு ஒரு பெயரை சூட்டுவதைப் பார்க்கிறோம். உள்ளான ஆவியின் கண்கள் திறக்கப்பட்ட ஒரு மகளாய் இருந்தாள். ஆனால் ஆதி. 21:15,16ம் வாக்கியங்களிலே தண்ணீர் இல்லாத ஒரு குறைவினாலே வனாந்தர வாழ்க்கையின் நிமித்தமாக சோர்வடைந்த மகளாய் அவள் சத்தமிட்டு என் பிள்ளை சாகப்போகிறது என்று யூகித்து அழுது கொண்டிருப்பதைப் பார்க்கிறோம்.

      கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, இன்றைக்கு அநேக நேரங்களில் அநேக காரியங்களைக்குறித்து யூகித்து யூகித்து கலங்குகிறோம், தவறு செய்கிறோம். தேவனுடைய சமுகத்தைப் பார்ப்பதற்குப் பதிலாக உலகத்தின் பிரச்சனைகளைப் பார்ப்பதினாலே இழந்து போகிறோம். இந்த ஆகார் தன்னுடைய பிரச்சனையைப் பார்த்த படியினால் தேவன் தந்த வரங்களை எல்லாம் இழந்து போனதோடு உள்ளான மனிதனுடைய கண்கள் திறந்து காரியங்களை ஆராய்கின்ற நிலைமையை இழந்து வேதனையடைகிற நிகழ்ச்சியைப் பார்க்கிறோம். கர்த்தர் அந்த மகளுடைய கண்களை மீண்டுமாய்த் திறந்தார் என ஆதி. 21:19ல் பார்க்கிறோம். தாகம் தீர்க்கப்படத்தக்கதாக கர்த்தர் அந்த மகளுடைய இழந்துபோன ஆவியின் கண்களைத் திறந்து அவள் தாகத்தைத் தீர்த்து வழி நடத்தியதைப் பார்க்கிறோம்.

      நாம் இன்று அநேக காரியங்களை இழந்துபோயிருக்க லாம். ஆனால் இயேசு கிறிஸ்துவோ அந்த வெள்ளிக் காசை அந்த மகள் பெற்றுக்கொள்ள உதவி செய்ததுபோல நம்முடைய வாழ்க்கையிலும் இழந்து போனதைப் பெற்றுக் கொள்ள வகை செய்வார், வழி செய்வார்.

இழந்துபோனதைப் பெற்றுக்கொள்ள என்ன செய்ய வேண்டும் ?

1. விளக்கு ஏற்ற வேண்டும்.

"...விளக்கைக் கொளுத்தி" லூக்கா 15:8

     விளக்கு ஏற்றப்படுவது என்று சொன்னால், நம்முடைய வாழ்க்கையில் கர்த்தர் அதைச் செய்கிறவராக இருக்கிறார். நாமாக அதை ஏற்றுவது கிடையாது. கர்த்தரே அதை ஏற்றுகிற தேவன். 'தேவரீர் என் விளக்கை ஏற்றுவீர்; என் தேவனாகிய கர்த்தர் என் இருளை வெளிச்சமாக்குவார்.' சங்கீதம் 18:28ல் பார்க்கிறோம். மனிதனுடைய வாழ்க்கையிலே இந்த விளக்கு ஏற்றப்பட்டதாய் இருக்க வேண்டும். அவனுடைய எல்லை களிலே இந்த விளக்கு இருக்குமானால் காரியங்களை ஆராய்கிறதற்கு ஏற்றதாயிருக்கிறது. இந்த விளக்கைக் குறித்து பார்க்கும்போது, நம்முடைய கண்கள் கர்த்தருடைய விளக்காய் திகழ்கிறது. 'உன் கண் கெட்டதாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் இருளாயிருக்கும்; இப்படி உன்னிலுள்ள வெளிச்சம் இருளாயிருந்தால், அவ்விருள் எவ்வளவு அதிகமாயிருக்கும்!' மத்தேயு 6:23ல் பார்க்கிறோம். தேவனுடைய வெளிச்சத்தைத் தரக்கூடிய கண்களானது இருளடைந்து போயிருக்கிறது. இந்த இருளடைந்த வாழ்க்கையின் நிமித்தமாய் பல தவறுகளைச் செய்கிறோம். நம்முடைய கண்களைத் திறக்கக்கூடிய தேவன், நம் கண்களை விளக்காக மாற்றுகிறார்.

     விளக்கு ஏற்றப்பட்டபடியினாலே வெளிச்சம் வந்தது. விளக்கை ஏற்றித் தேடினாள். வெளிச்சம் வருவதற்கு நாம் இயேசு கிறிஸ்துவை பின்பற்ற வேண்டும். நானே உலகத்திற்கு வெளிச்சம் என்று சொன்னார். அவருடைய வெளிச்சத்திலே வாழ்க்கை வாழ ஒப்புக்கொடுக்க வேண்டும். அவரைப் பின்பற்றும்போது நாம் ஜீவ ஒளியை அடைகிறோம். ஆகையால் இந்த ஜீவ ஒளியினால் நிறைந்த வாழ்க்கை நமக்கு வரும்போது, இழந்து போனதைத் திரும்பப் பெற்றுக் கொள்வதற்கு அது வழியாக இருக்கிறது. நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, 'இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்...' ஏசாயா 9:2ன் படி இருளில் இருக்கிற ஜனங்களை வெளிச்சத்துக்கு அழைத்து வருகிற தேவன் என்று பார்க்கிறோம். நம்முடைய இருண்ட வாழ்க்கையயை அவர் ஒளிமயமாக மாற்றுகிற தேவன். இவ்விதமான வெளிச்சத்தை உடையவர்களாய் மாறி வீட்டிலே வெளிச்சம் உண்டாகும்போது, எல்லைகளில் வெளிச்சம் நிறையும்போது, இழந்து போன வெள்ளிக் காசை திரும்பப் பெற்றதுபோல, நாமும் இழந்து போனதைப் பெற்றுக் கொள்ள முடியும்.

2. சுத்தப்படுத்தினாள்

"...வீட்டைப் பெருக்கி..." லூக்கா 15:8

வீட்டைச் சுத்தப்படுத்தி பெருக்கினாள் என்று பார்க்கிறோம். வீடு அழுக்காய் இருந்த படியினால் எங்கே விழுந்தது என்று தெரியவில்லை. தன்னைச் சுத்தப்படுத்துகிற, சுத்திகரித்துக்கொள்கிற ஒரு காரியத்தைப் பார்க்கிறோம். அநேக காரியங்களைச் செய்ய முற்படுகிறோம். ஆனால்  இருதயத்தில் சுத்தம் இல்லை என்றால் பல பாடுகளுக்கு ஆளாகிவிடுவோம். இருதயமானது சுத்தமாக்கப்பட வேண்டும். நாம் சுத்திகரிக்கப்பட்ட நிலையைப் பெற்றுக் கொள்ள வேண்டும். 'இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்ளையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கும்' என்று பார்க்கிறோம். இந்த சுத்திகரிப்போடு நாம் வாழும்போது, இழந்தவைகளைப் பெற வழி பிறக்கிறது.

3. முழுமனதோடு தேடினாள்

"...அதைக் கண்டுபிடிக்கிறவரைக்கும் ஜாக்கிரதையாத் தேடாமலிருப்பாளோ ?" லூக்கா 15:8

அந்தப் பெண்ணானவள் இழந்து போன வெள்ளிக்காசை கண்டுபிடிப்பதற்கு விடாப்பிடியாக, முழுமனதோடு தேடினாள் என்று பார்க்கிறோம். கண்டுபிடிக்கும் வரை முழுமனதோடு தேடுகிற ஒரு உணர்வுள்ள, வைராக்கியமுள்ள மக்களாய் நாம் மாறும்போது, இழந்துபோன எல்லா வற்றையும் திரும்பப் பெற்று மகிழக்கூடிய நல்ல வாழ்க்கையைத் தருகிறார். அதை நாம் இன்றே புதுப்பித்து பெற்று வாழ கர்த்தர் உதவி செய்வார் என்று கர்த்தர் ஸ்தோத்தரிப்போம்.

          கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.

 

கிறிஸ்துவின் பணியில்,

சகோ. C. எபனேசர் பால்.