செய்தி

"...அவர் எனக்கு வாக்கு அருளினார்; அந்தப் பிரகாரமே செய்தார்…"

ஏசாயா 38:15

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினால் உங்களை வாழ்த்துகிறேன்.

இன்று மனிதன் பல காரியங்களில் வாக்குக் கொடுப்பதுண்டு. ஆனால் பல காரணங்களைச் சொல்லி அதை நிறைவேற்றுவதில்லை. இன்று திருமண வாழ்வில் உண்டாகிற பிரிவினைகள், சண்டைகள், போராட்டங்களை நாம் எல்லா இடங்களிலும், நாடுகளிலும் பார்க்கிறோம். ஏன் இந்த நிலை உண்டாகிறது? திருமண நாளில் வாக்குறுதிகளை ஒருவருக்கொருவர் தேவ சமுகத்தில், தேவ ஊழியர்களின் முன்னிலையில், நண்பர்கள், உற்றார் உறவினர் மத்தியில் பகிர்ந்து கொள்கிறார்கள். ஆனால் இந்த வாக்குறுதிகளில் ஆணோ, பெண்னோ உண்மையற்றவர்களாய் மாறும்போது, திருமண வாழ்வு பாதிப்படைகிறது. சமாதானம் இழந்து விடுகிறார்கள். கண்ணீரும் கவலையும் நிறைந்த நிலை உருவாகி விடுகிறது. இத்துடன் இணைந்து இருக்க மனதில்லாது பிரிந்து வாழ்கிறார்கள். பல விதமான பாடுகளும், குற்றச்சாட்டுகளும் பெருகி விடுகிறது.

நம்மை உண்டாக்கின தேவனோ உண்மையுள்ளவர். அத்துடன் அவர் என்றென்றைக்கும் உண்மையைக் காக்கிறவர். நம் பாவங்களை மன்னிப்பதிலும், அழைப்பிலும் உண்மையுள்ள தேவன், தம்முடைய வாக்குறுதிகளில் உண்மையுள்ளவர். ஆகவேத்தான் அவருடைய வாக்குத்தத்தங்கள் ஆம் என்றும் ஆமென் என்றும் இருக்கிறது. கர்த்தர் தம்முடைய வாக்குறுதிகளை உண்மையுள்ள வார்த்தைகளினால், தான் விரும்பின, தெரிந்து கொண்ட மக்களுக்கு அறிவிக்கிறார். இன்னும் சிலருடைய வாழ்வில் யோசேப்பைப் போல தம்முடைய திட்டத்தை ஆசீர்வாதமான வாழ்வை, சொப்பனங்களின் மூலம் வாக்கருளியத்தைப் பார்க்கிறோம். வாக்குமாறா தேவன் நமக்குள் இருக்கிறார்.

வாக்குத்தத்தங்கள் என் தரப்படுகிறது?

1. உன் குறைகளை நீக்கி உன்னை ஆசீர்வதிக்க

"நான் உன்னைப்பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்..." ஆதியாகமம் 12:2

பிள்ளையில்லாத ஆபிரகாமை அழைத்தார். உன்னுடைய தேசத்தையும், உன் தகப்பன் வீட்டையும் விட்டுப் புறப்பட வேண்டும் என்று கூறினார். அத்துடன் நான் காண்பிக்கும் தேசத்துக்குப் போ என்று சொன்னபோது, ஆபிரகாம் அதற்குக் கீழ்ப்படிந்தான். அவனுடைய தேசத்தில் உள்ள வீணான பழக்க வழக்கங்களை கர்த்தர் அங்கிகரியாதபடியால், அந்த தேசத்தை விட்டு புறப்படச் சொன்னார். பலவிதமான கலாச்சாரங்களும், சடங்காச்சாரங்களும் நிறைந்த அநேக நாடுகளும் ஊர்களும் இன்றும் உண்டு. ஆபிரகாமை அழைத்தவர் பிரித்தெடுக்கப்பட்ட பரிசுத்தமான வாழ்வு வாழ அழைத்தார். அதினால் அவனில் அதிக மேன்மைகளைச் செய்ய விரும்பினார். என் உதடுகள் விளம்பினதை மாற்றாமல் இருப்பேன் என்று சொன்ன கர்த்தர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் இருக்கிறார். தன் தேசத்தை தன் தகப்பன் வீட்டை விட்டு கர்த்தர் சொன்ன இடத்துக்கு சென்ற ஆபிரகாமின் வாழ்வில் பல போராட்டங்களும் வந்தது. தன்னை அழைத்தவர் உண்மையுள்ளவர், அவர் அப்படியே செய்வார் என்று முழு நிச்சயமாய் நம்பினான். தன் பெலவீனங்களை, தன் மனைவியின் குறைகளை நினையாது தேவனை மகிமைப்படுத்தி விசுவாசத்தில் வல்லவனாகி, தேவனின் வாக்குத்தத்தங்களைச் சுதந்தரித்தான்.

இன்று பிள்ளையில்லாத குறைவினால் கலங்கும் தேவப்பிள்ளையே, உன்னை நேசிக்கிற கர்த்தர் உன் குறைவை அறிவார். நீங்கள் பலுகிப் பெருகி பூமியை நிரப்புங்கள் என்ற அன்பின் தேவன் மாறாதவர். விசுவாச சந்ததியாகிய ஆபிரகாமை ஆசீர்வதித்ததைப் போல் உங்களை ஆசீர்வதிப்பார். 'பெறப்பண்ணுகிறவராகிய நான் பெறச் செய்யாமல் இருப்பேனோ' என்ற அன்பின் தேவன் உன்னைப் பலுகிப் பெருகச் செய்வார். அன்று தமது மாறாத வாக்குறுதியின் படி ஆபிரகாமை ஆசீர்வதித்து பெரிய ஜாதியாக்கிய கர்த்தர், அற்புதத்தை இன்றே, இப்பொழுதே உன் வாழ்விலும், உன் குடும்ப வாழ்விலும் செய்வார். அன்று உன் பேரைப் பெருமைப் படுத்துவேன் என்ற கர்த்தாதி கர்த்தர் உன் எல்லைகளில், உன் குடும்பத்தாரின் மத்தியில், உன் சத்துருக்களுக்கு முன்பாக உன்னை மேன்மையாக்குவார். என் கணவர் குடும்பத்தால் நான் சிறுமைப்படுத்தப்பட்டு இருக்கிறேன் என்று கண்ணீர் சிந்தி, கலக்கத்துடன் வாழும் உன்னை மேன்மைப்படுத்துவார். என் மனைவியும் குடும்பத்தாரும் எனக்கு உண்டான குறைவினால் என்னை அற்பமாக எண்ணி, துக்கப்படுத்துகிற காரியத்தை நீர் அறிவீர் கர்த்தாவே என்று உள்ளம் உடைந்து வாழ்கிற சகோதரனே, அன்று தமது மாறாத வாக்குத்தத்ததினால் ஆபிரகாமை மேன்மைப்படுத்தின தேவன், உன் பேரைப் பெருமைப்படுத்துவார். கடந்த கால காரியங்களை நினைத்து இனி கலங்காதே. உன் வனாந்தர வாழ்வில் வழியை உண்டுபண்ணும் தேவன், உன்னில் புதிய காரியத்தை இன்றே செய்வார். வாக்குத்தத்தங்கள் நம் குறைவை நீக்கி, ஆசீர்வாதத்தை சுதந்தரிக்க நம்மை கிறிஸ்துவுக்குள் வழி நடத்துகிறது.

2. நாம் பயப்படாதபடிக்கு வாழ வாக்குத்தத்தம் கொடுத்திருக்கிறார்

"இதோ, உன் மேல் எரிச்சலாயிருக்கிற யாவரும் வெட்கி இலச்சையடைவார்கள்; உன்னோடே வழக்காடுகிறவர்கள் நாசமாகி ஒன்றுமில்லாமற் போவார்கள்.

உன்னோடே போராடினவர்களைத் தேடியும் காணாதிருப்பாய்; உன்னோடே யுத்தம்பண்ணின மனுஷர் ஒன்றுமில்லாமல் இல்பொருளாவார்கள்." ஏசாயா 41:11, 12

            வாக்குத்தத்தத்தின் தேவன் இன்று வாழ்வில் உள்ள போராட்டங்களின் மத்தியில் இவ்விதமான வாக்குறுதிகளினால் நம் வாழ்வில் ஏற்படும் பயத்தை முற்றிலும் நீக்கி சமாதானத்துடன் சந்தோஷத்துடன் நம்மை வாழச் செய்வார். நாம் வசிக்கும் பகுதியில் அக்கம், பக்கம் வசிப்பவர்கள் மிகுந்த பொறாமையும் எரிச்சலும் உடையவர்களாய் இருந்து காரணமில்லாத பிரச்சனை உண்டுபண்ணி நம் சமாதான வாழ்வைக் கெடுத்து வேதனைப்படுத்தும்போது, சோர்வடைந்து என்ன செய்வது என்று ஏங்கும்போது, கலங்காதே, திகையாதே என்று பயம் நீங்க வாக்குகளை நமக்கு ஈந்து நம்மைத் தம் வழி நடக்கச் செய்கிறவர் இன்றும் ஜீவிக்கிறார்.

இன்று வேலை ஸ்தலத்தில் என்னை விரோதித்து பகைக்கிற குற்றப்படுத்துகிற மக்களுக்கு மத்தியில் வேதைனையுடன், மிகுந்த சஞ்சலத்துடன் வேலைக்குச் சென்று கொண்டிருக்கிறேன். பல நாட்கள் கழித்துதான் இந்த வேலை கிடைத்துள்ளது, எப்படி விடுவது என்று கண்ணீருடன் வேலைக்குச் செல்கிறேன். எனக்கு மேலாக உள்ள அதிகாரிகயோ என்னைக் கண்டாலே எரிந்து விழுகிறார். குற்றம் காண அவருடைய கண்கள் ஆவலுடன் பார்க்கிறது என்று கலங்கும் தேவப் பிள்ளையே, கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார். தானியேலைக் குற்றப்படுத்தி சிங்கக்கெபியில் போட்டவர்கள் போல் மிகுந்த சந்தோஷத்துடன், ஒழிந்தான் நம் பகைஞன் என்று உங்கள் பேரில் களிகூர்ந்து கொண்டு இருக்கலாம். உண்மை தெரிந்தவர்களும் ஊமையராகி விட்டார்களே என்று உள்ளம் பதறிக் கொண்டு இருக்கலாம். அன்று சிங்கங்களின் வாயைக் கட்டின அன்பின் தேவனுடைய வல்லமை உனக்காகச் செயல்படும். எதை விதைத்தார்களோ அதையே அறுப்பார்கள் என்ற வாக்கு நிறைவேறுவதைக் காண்பீர்கள். யார் குழியில் தள்ளினார்களோ, அவர்களே தூக்கிவிடவும், அவர்களே அங்கு தள்ளப்படவும், உனக்காக, உங்களுக்காக கர்த்தர் யாவையும் செய்து முடிப்பார்.

3. வாக்குத்தத்தங்கள் கண்ணீரைத் துடைக்க கொடுக்கப்படுகிறது

"...கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், உன் விண்ணப்பத்தைக் கேட்டேன்; உன் கண்ணீரைக் கண்டேன்; இதோ, உன் நாட்களோடே பதினைந்து வருஷம் கூட்டுவேன்." ஏசாயா 38:5

கண்ணீருடன் வாழ்ந்து கொண்டிருக்கும் அருமையான சகோதரனே, சகோதரியே, இன்று உன் கண்ணீரைக் காண்கிற தேவன் உன் கண்ணீரைக் காண்பதோடு துடைக்கிறவராக இருக்கிறார். அவருடைய வல்லமையின் செயல்கள் அப்படிப்பட்டது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் வந்ததின் ஒரு நோக்கம் 'எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைத்து, தமது ஜனத்தின் நிந்தையைப் பூமியிலிராதபடிக்கு முற்றிலும் நீக்கிவிடுவார்' என்று ஏசாயா 25:8ல் பார்க்கிறோம். இன்று உங்கள் கண்ணீர் எதினிமித்தம் உண்டானது?

என் சரீரத்தில் உண்டான வியாதி மரணத்தை விளைவிக்கும் என்று நீ பயந்து கலங்குகிறாயா? அதினால் என்ன ஆகுமோ என் வாழ்க்கை என்று மிகுந்த போராட்டத்துடன் நாளைக் கழித்துக் கொண்டிருக்கிறாயா? என்னால் ஒன்றும் செய்ய முடியாதிருக்கிறேன், என் பெலவீனத்தினால் என் குடும்பத்தாருக்கு நான் பாரமாய் இருக்கிறேன் என்று மிகுந்த துக்கத்துடன் நாளைக் கழித்துக் கொண்டு இருக்கிறீர்களா? நம்முடைய தேவன் மரண வாசல்களிலிருந்து தூக்கிவிடுகிறவர் என்ற வார்த்தையை மறவாது துதியுங்கள். வாதை உன் கூடாரத்தை அணுகாது என்றவர், எந்த பொல்லாப்பும் உனக்கு நேரிடாது காப்பார். உன் நோயின் நிமித்தம் உண்டான கண்ணீரைத் துடைப்பார்.

ஆகாரைப் போல பிள்ளையின் நிமித்தம், நீங்கள் கண்ணீருடன் கலங்கியிருக்கலாம். என்ன ஆகுமோ என்று உடைந்துபோன உள்ளத்துடன் நேரத்தைச் செலவிட்டுச் கொண்டு இருக்கலாம். உன் பிள்ளைகளுடைய சமாதானம் பெரிதாயிருக்கும் என்ற அன்பின் தேவன், அதிசயம் செய்வதைக் காண்பீர்கள். அவர்களின் தாகம் தீர்ப்பார். தடைகளை நீக்கி மேன்மைப்படுத்துவார். குறைகளை நீக்கி நிறைவைத் தருவார். சோர்ந்து போகாமல் துதியினால் அவரின் வாக்குறுதியை சொந்தமாக்கிக் கொண்டு மகிழ்ச்சியோடே அவர் சந்நிதிமுன் வந்து ஆராதியுங்கள். பிள்ளையில் உண்டான தோல்வி, குடும்ப வாழ்வில் உள்ள பிரச்சனை போன்றவைகளினால் கலங்கும் தேவப்பிள்ளையே, உங்கள் மனவிருப்பத்தை நிறைவேற்றி ஆசீர்வதிக்கும் தேவன் அற்புதம் செய்வதைக் காண்பீர்கள். கலங்காதீர்கள். என் பிள்ளைக்கு ஞானமில்லை, பூரண சுகமில்லை, சரீர வளர்ச்சியில் குறைவு என்று ஏங்கும் சகோதரியே, சகோதரனே, உன்னை நேசிக்கும் கர்த்தராகிய இயேசுவை பாருங்கள். அவரே அதிசயம் செய்து சகலவற்றையும் சீர்ப்படுத்துவார்.

இன்று பொருளாதாரத்தினால் கலங்கி கண்ணீர் சிந்தி வேதனையுடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறீர்களா? நம்மை நேசிக்கிறவர் போதிக்கிறவராக, ஆதரிக்கிறவராக இருக்கிறார். அனுதினமும் பராமரித்து உங்கள் தேவைகளை எல்லாம் சந்திப்பார். என் கணவர்/மனைவி ஒருவரே என் வீட்டுக்கு வேண்டியவைகளைச் சம்பாதித்து வந்தார். ஆனால் இன்று உண்டான இயலாமையினாலும், மரணத்தினாலும் எந்த வருவாயும் இல்லாதிருக்கிறேன், ஒரு வழி பிறக்காதா? என் பிள்ளைகளை என்ன செய்வேன், என்னால் படிக்க வைக்க முடியாத நிலையில் நான் இருக்கிறேனே என்று ஏங்கும் தேவப் பிள்ளையே, இன்றே அவர் வழி திறப்பார். சோர்வடையாதிருங்கள். காகங்களைக் கொண்டு போஷித்த தேவன், ஏழை விதவையை வைத்து பராமரித்தவர், உன் தேவைகளைச் சந்திப்பார். அன்பின் ஆண்டவராகிய கர்த்தாதி கர்த்தர் எல்லாவற்றிலும் உங்களுக்குப் போதுமானவராக இருந்து உங்களை ஆசீர்வதிப்பார், கண்ணீர் துடைப்பார். 'இனி நீ அழுது கொண்டிராய்' என்ற கர்த்தர் அதிசயம் செய்வார். 'முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூட கொடுக்கப்படும்' என்ற வாக்கின்படி சகலமும் நிறைவாகிவிடும். என் பாத்திரம் நிரம்பி வழிகிறது என்று சாட்சியும் கூறுவீர்கள், உங்கள் கண்ணீர் களிப்பாக மாறிவிடும்.

4. உன்னைத் தேற்றி ஸ்திரப்படுத்த வாக்குத்தத்தம் தரப்படுகிறது

"நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை; நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை." யோசுவா 1:5

என்றும் நம்மைக் கைவிடாத தேவன் ஜீவிக்கிறார். யோசுவா, மோசேக்கு பின்னாக கர்த்தரால் தெரிந்து கொள்ளப்பட்ட தேவ மனிதன். தன் வாலிப பருவத்தில் ஆசரிப்புக் கூடாரத்தை விட்டுப் பிரியாதிருந்தவன். மோசே சொன்னபோது அமலேக்கியரோடு யுத்தம் செய்து ஜெயம் பெற்றவன். மோசே கானான் தேசத்தைச் சுற்றிப் பார்ப்பதற்கும், அங்குள்ள மக்களின் நிலவரத்தை விசாரித்து வர அனுப்பின போது, யோசுவாவும், காலேப் மாத்திரமே நலமான செய்தியைக் கொண்டு வந்தார்கள். இந்த யோசுவாவை மோசே இஸ்ரவேல் ஜனங்களைத் தனக்குப்பின் தொடர்ந்து வழி நடத்த மோசே தெரிந்து கொண்டு நியமித்தான். இது கர்த்தரால் ஏற்படுத்தப்பட்டது. அச்சமயம் மோசே, யோசுவாவை திடப்படுத்தி கர்த்தரின் வார்த்தையான வாக்குறுதிகளை தெரிவித்ததை நாம் இங்கு பார்க்க முடிகிறது.

அன்பு சகோதரனே, உங்கள் பணியில், ஊழியத்தில் கர்த்தர் தம்முடைய தீர்மானத்தின்படி உங்களை மேலாக, முக்கியமானப் பதவியில் இன்று நியமித்திருந்தால், அன்று யோசுவாவைத் திடப்படுத்தி, ஸ்திரப்படுத்தின தேவன், உங்களையும் உங்கள் பொறுப்பான இந்த பதவியில் பெலப்படுத்தி, திடப்படுத்தி நடத்துவார். ஒருவரும் எதிர்த்து நிற்க முடியாத கிருபையையும், வார்த்தைகளையும், ஞானத்தையும், செய்கையையும், திட்டத்தையும் தந்து கைவிடாது உங்களை விட்டு விலக்காதிருப்பார். கல்வாரிச் சிலுவையில் நமக்காகச் செய்து முடித்த அவரையேப்  பாருங்கள், அதிசயமாய் உங்களை நடத்துவார். சமாதானத்தினாலும், சந்தோசத்தினாலும் சம்பூரணப்படுத்துவார்.

5. இச்சைகளினால் உண்டாகும் கேட்டுக்குத் தப்பி திவ்விய சுபாவத்துக்குப் பங்குள்ளவர்களாகும்படி வாக்குத்தத்தங்கள் நமக்கு உதவிச்செய்யும்

"இச்சையினால் உலகத்திலுண்டான கேட்டுக்குத் தப்பி, திவ்விய சுபாவத்துக்குப் பங்குள்ளவர்களாகும்பொருட்டு, மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களும் அவைகளினாலே நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது." 2பேதுரு 1:4

இந்த உலக வாழ்வில் இச்சையானது பல விதங்களில் நம்மை பாவ வலைக்கும் அடிமைத்தனத்துக்கும் உட்படுத்துகிறதாய் இருக்கிறது. ஆதியிலே சர்ப்பத்தின் தந்திரமான பொய்யான வார்த்தைகளினால் புசிக்க வேண்டாம் என்று தேவன் விலக்கின விருட்சத்தின் பழத்தை, 'பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத் தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள்' என்று ஆதி3:6 ல் பார்க்கிறோம். மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள் என்று 1 யோவான் 2:16 வலியுறுத்துகிறது.

ஆகான், தன் வாழ்க்கையில் கொள்ளையிலே நேர்த்தியான ஒரு பாபிலோனிய சால்வையையும், இருநூறு வெள்ளிக்காசையும், ஐம்பது சேக்கல் நிறையான பொன் பாளத்தையும் கண்டு இச்சித்து எடுத்தபடியால், அவனும், குடும்பமும் உடைமையெல்லாம் அழிந்து போனதை நாம் அறிவோம். கண்களின் இச்சைக்கு அடிமையான தாவீது சாபத்தைப் பெற்றான். தனக்கு பிறந்த பிள்ளையையும் இழந்தான். ஆனால்   கர்த்தருடைய வாக்குத்தத்தங்களினால், நாம் இவைகளுக்கு அடிமையாகாதபடி, கேட்டுக்குத் தப்பி பரிசுத்த பங்கடைய நமக்கு ஆறுதலாயும், ஆசீர்வாதமாயும் அமைந்திருக்கிறது.

நமக்கு கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தங்கள் சில:

1.சுகமாயிருக்கப்பண்ணுவேன்

"...நான் இப்பொழுது எழுந்து, அவன்மேல் சீறுகிறவர்களுக்கு, அவனைக் காத்துச் சுகமாயிருக்கப்பண்ணுவேன்." சங்கீதம் 12:5

இன்று மனிதனுக்கு மிக முக்கியமான ஒன்று சுகம் நிறைந்த நல்வாழ்வு, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்முடைய பெலவீனங்களை ஏற்றவர் இன்றும் என்றும் ஜீவிக்கிறார். அவர்தாமே நம்முடைய நோய்களை சுமந்தார் என்ற வாத்தையின்படி நம்முடைய எல்லா வியாதிகளையும் நீக்க சிலுவையிலே பாடுபட்டார். அவருடைய தழும்புகளினால் நாம் குணமாகிறோம். இன்னும் நாம் அவர் சமுகத்திற்கு வரும்போது, பெரும்பாடுள்ள சகோதரிக்கு நடைபெற்றது போல நமக்கும் வேதனை நீக்கி சுகவாழ்வைத் தருவார். அவர் விரும்பின உகந்த உபவாசம் செய்யும்போது, நம்முடைய சுகவாழ்வை மலரச் செய்வார். நம் வாழ்வில் மிக அவசியமான, முக்கியமான வாக்குத்தத்தமாக இதை நமக்கு கொடுத்திருக்கிறார். இன்னும் நாம் பென்யமீன் போல கர்த்தருக்குப் பிரியமான வாழ்வு வாழும்போது, அவரோடு சுகமாய் தங்கியிருப்பான் என்ற உபகமம் 33:12 ன் வார்த்தையின்படி சுகவாழ்வைப் பெற்றுக்கொள்வோம்.

2.எல்லா தீங்குக்கும் விலக்குவார்

"கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்..." சங்கீதம் 121:7

இன்று நாம் நினையாதபடி தீங்கான காரியங்கள் தோன்றி நம்மை பலவிதமான, பாடுகள் நிறைந்த வாழ்வுக்குள்ளாக்கிவிடுகிறது. இவ்விதமான தீங்கு நம்மை மிகுதியாகத் துக்கப்படுத்திவிடுகிறது.சிலருடைய வாழ்வில் மனதில் போராட்டங்களை பெருகச்செய்துவிடுகிறது. ஜெபித்த யாபேஸ் வாழ்வில் தீங்குக்கு விலக்கி கர்த்தர் காக்க கிருபைச் செய்தார். தீங்குநாளில் தமது கூடாரத்தின் மறைவிலே ஒளித்துவைத்துக்காத்து கன்மலையின் மேல்  உயர்த்தும் அன்பின் தேவன் தம் செயலில் மாறாதவர்.  நான் உன்னுடனே கூட இருககிறேன். உனக்குத் தீங்கு செய்யும்படி ஒருவனும் உன் மேல் கை போடுவதில்லை என்ற கர்த்தர் உன்னோடே இருக்கிறார்.இவ்விதமாய் தம் மாறாத வாக்குறுதியினால் தீங்குக்கு மனஸ்தாபப்படும் கர்த்தர் நம்மை காத்து நடத்துவார்.

3.வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பரிசுத்த ஆவி நமக்கு ஈவாக கொடுக்கப் படுகிறது 

"நீங்களும் உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தை கேட்டு, விசுவாசிகளானபோது, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியால் அவருக்குள் முத்திரைப்போடப்பட்டீர்கள்" எபேசியர்1:13

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்காக பிதாவை வேண்டிக்கொண்ட படியால் நாம் இன்று எல்லாரும் பரிசுத்த ஆவியைப் பெரும் பாக்கியமுடைய வர்களாய் இருக்கிறோம். மனிதன் தனிமையாய்  இருப்பது நல்லதல்ல வென்று ஏற்றத்துணையாக ஏவாளை உண்டாக்கினார். கர்த்தர் பாவம் செய்த ஆதாமை பார்த்து நீ உன் மனைவியின் வார்தைக்குச் செவிகொடுத்து புசிக்க வேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின கனியைப் புசித்தபடியினாலே  பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும் என்று கூறினார். தேவன் விழுந்து போன, வழி விலகின தம்மை விட்டுப்பிரிந்துபோன, கெட்டுப்போன நம்மை நேசித்து தம் குமாரனாகிய இயேசுகிறிஸ்துவை நமக்காக ஜீவபலியாக அனுப்பினார். அவர் பழைய ஏற்பாட்டில் பரிசுத்தவான்களுக்கு மாத்திரமே கொடுக்கப்பட்ட பரிசுத்தஆவியானவரை, எல்லாரும் பெரும்படியாக வாக்குத்தத்தமாக கொடுக்க பிதாவை வேண்டினார். பரிசுத்த ஆவியின் துணையினால் காக்கப்படும்படி அவரை நமக்கு தந்தருளினார். பரிசுத்த    ஆவியானவர் யாருடைய வாழ்வில் அருளப்படுகிறாரோ, அவர்கள் அடிமைத்தன வாழ்வில் இருந்து விடுதலையாவார்கள். இதை 2 கொரிந்தியர் 3:17 ல் பார்க்கிறோம். பரிசுத்த ஆவியானவர் பாவத்தை கண்டித்து உணர்த்தும் ஆற்றலுடையவர். அத்துடன் நம் இருதய பலகையில் தேவனுடைய வார்த்தைகளை எழுதி நம்மை பெலப்படுத்துகிறார். பரிசுத்த ஆவியானவர் சத்தியத்தை போதித்து அனுதினமும் நீதியின் பாதையில் நடத்துவார்.மேலும் நமக்கு ஊற்றப்பட்ட வாக்குத்தத்தமான பரிசுத்த ஆவியானவர், தேவ அன்பை நமக்குள் ஊற்றி நாம் ஊழியம் செய்ய அன்பின் உள்ளதை உருவாக்குகிறார். இயேசு கிறிஸ்துவை நல்ல மேய்ப்பராக ஏற்றவர்களுக்கு வாக்குத்தத்தமாக இந்த பரிசுத்த ஆவியைக் கொடுத்திருக்கிறார். தாவீது, என் தலையை எண்ணெயால் அபிஷேகம் பண்ணுகிறீர் என்று சங்கீதம் 23:5 ல் சொல்லுகிறார். வாக்குத்தத்தமாக அருளப்படுகிற பரிசுத்த ஆவியானவரின் நிறைவு இன்று மிக அவசியமாக இருக்கிறது.

4.நித்திய ஜீவனை வாக்குத்தத்தமாக நமக்கு கொடுத்திருக்கிறார்

"நித்திய ஜீவனை அளிப்பேன் என்பதே அவர் நமக்குச் செய்த வாக்குத்தத்தம்." 1யோவான் 2:25

மரணமானது நம் வாழ்வின் முடிவல்ல. அதற்குப் பிறகு உள்ள வாழ்வு நித்திய காலமாக இருக்கிறது. இந்த நித்திய வாழ்வு நாம் இவ்வுலகில் வாழும்போது செய்யும் செயலைப் பொருத்திருக்கிறது. பாவம் மன்னிக்கப்பட்ட புது வாழ்வை பெறுபவன் தேவ சமுகத்தில் என்றும் வாழ்வை அடைவான். நித்திய ஜீவனை கர்த்தருடைய பிள்ளைகளுக்கு வாக்கு கொடுத்திருக்கிறார். யார் யார் இயேசு கிறிஸ்துவை தங்களின் நல் மேய்ப்பராக ஏற்று நடக்க வாழ இடம் கொடுக்கிறார்களோ, அவர்களுக்கு நித்திய ஜீவனைக் கொடுப்பேன் என்று கர்த்தர் வாக்குக் கொடுத்திருக்கிறார். இதை யோவான