இந்த ஆண்டின் சகல நல் ஆசீர்வாதங்களுக்கான ஒரு ஜெபம்

அன்பின் தேவனே, இந்த நேரத்திற்காக மிகுதியான நன்றியைத் தெரிவிக்கிறேன். கடந்த ஆண்டினை முடிக்கச்செய்தீரே, அதற்காக கோடா கோடி ஸ்தோத்திரங்களைச் செலுத்துகிறேன். கர்த்தாவே, இந்த ஆண்டிலே நீர் எனக்கும், என் குடும்பத்திற்கும் சொன்ன வாக்குத்தத்தங்கள் நிறைவேறுவதாக. என் மனைவி/ என் கணவன்/ என் பெற்றோர் வாழ்வில் காணப்பட்ட சகல போராட்டங்களும் நீங்க உதவிச் செய்யும். இயேசு கிறிஸ்துவே, நீரே மெய்யான சுகத்தை, சமாதானத்தை, சந்தோஷத்தை, பெலத்தைத் தருகிறவர் என்று உம்மை நம்பி துதிக்கிறேன். ஸ்தோத்தரிக்கிறேன். கர்த்தாவே, என் மகன்/ என் மகள் வாழ்வில் உண்டான எந்தப் பிரச்சனையும், என்னையோ எங்களையோ தொடராது நீர் கிருபையாய் காக்கும்படி கெஞ்சுகிறேன். அன்பின் இயேசுவே, இந்த ஆண்டிலாவது என் மகன்/ என் மகள் திருமணம் நடைபெற உதவிச்செய்யும். அவனுக்காக/ அவளுக்காக உண்டாக்கின மகனை, மகளை தாமதமின்றி அழைத்துவாரும். கர்த்தாவே, பிள்ளைக்காக காத்திருக்கிற என் மகன்/ என் மகள் குடும்பத்தை நினைத்தருளி புத்திர பாக்கியத்தைத் தாரும். கர்த்தாவே, நான் செய்கிற என் வேலை/ வியாபாரம்/ தொழில் இந்த ஆண்டு நிறைவாகப் பெருகச் செய்ய வேண்டும் என்று வேண்டுகிறேன். தொடர்ந்து நான் சிக்கிய கடன் தொல்லையில் இருந்து என்னை விடுதலையாக்கும் கர்த்தாவே. இயேசு கிறிஸ்துவே, என் ஆவிக்குரிய வாழ்வில் நான் வளர்ந்து, என் சபைக்கும் உமது நாமத்துக்கும் நான் மேன்மையாக இருக்க எனக்கு உதவிச் செய்யும். அன்பான இயேசு கிறிஸ்துவே, எங்கள் தேசத்தில் சமாதானத்தைத் தாரும் எந்த அநீதியான காரியங்களும் தோன்றாது இருக்க உதவிச் செய்யும். சண்டைகளும் கலவரங்களும் தோன்றாது காரும். நாங்கள் சமாதானத்துடன் வாழ உதவிச் செய்யும். சுவிஷேப் பணி சென்ற ஆண்டை விட விரிவடைய உதவிச்செய்யும். சமய வாக்குவாதங்கள் நீங்கட்டும்.  அன்பும் ஐக்கியமும் உண்டாகட்டும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் வேண்டுகிறேன் நல்ல பிதாவே, ஆமென்.