“கர்த்தாவே, உமது வழியை எனக்குப் போதித்து, என் எதிராளிகளினிமித்தம் செவ்வையான பாதையில் என்னை நடத்தும்."                                                                                                                                                                              சங்கீதம் 27:11

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

                            கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினாலே உங்களை வாழ்த்துகிறேன் நம்முடைய வாழ்க்கையில்  அநேக விதமான எதிராளிகள் உண்டு. நம்முடைய வாழ்க்கையிலே அத்தனை பிரச்சனைகளும் ஒரு எதிராளியாய்த்தான் இருக்கிறது. அத்தனைப் பிரச்சனைகளும் ஒரு எதிராளியைப் போல காணப்படுவதினாலே நாம் அதிகமாய்க் கலங்குகிறோம். அவைகளைப் பார்க்கும்போது நாம் சோர்ந்தும் போய்  விடுகிறோம். ஆனால் நம்முடைய கர்த்தரோ நாம் நன்றாய் அறிந்து செயல்படும்படியாய், நம்முடைய திராணிக்குத்தக்கதாக போதிக்கிற தேவன். அவர்களுடைய திரணிக்குத்தக்கதாக அவர் உபதேசித்தார்,போதித்தார் என்று மாற்கு 4:33-ல் அவர் தெளிவாய்ச் சொல்லிருப்பதைப் பார்க்கிறோம். தாவீது தன் வாழ்க்கையிலே போதிக்கப்பட்டான். எதிரிகளின் மத்தியிலே தேவன் அவனை நேர்த்தியாய் நடத்தினார்.

                     நம்முடைய தேவன் நம்மைப் போதித்து சரியான பாதையிலே நம்மை நடத்துகிறவர். "நான் உனக்குப் போதித்து நீ நடக்க வேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்." என்று சங்கீதம் 32:8-ல் பார்க்கிறோம். நம்மை வழி  நடத்தக் கூடிய  தேவன், நம்முடைய பாதையைச் செவ்வையாக்குகிற தேவன் இன்றைக்கும் ஜீவிக்கிறவராய்  இருக்கிறார். அநேக நேரங்களிலே எதிராளிகளின் மிகுதியினாலே, நம்மைச் சுற்றி எதிர்க்கிற சக்திகள் நிறைந்திருக்கிறபடியினாலே , பொறாமையும், எரிச்சலுமுடைய மக்கள் நம்மைச் சூழ்திருக்கிறதினாலே நான் என்னச் செய்வேன்? என்று கலங்குகிறோம். ஆனால் நம்முடைய கர்த்தரோ நமக்குத் பிரயோஜனமானவைகளைப் போதிக்கின்ற தேவன் என்று ஏசாயா 48:17-ல் பார்க்கிறோம். இஸ்ரவேலின் பரிசுத்தர் நம்முடைய வாழ்க்கைக்கு எவைகள் தேவையோ,எவைகள் முக்கியமாய் நமக்கு வேண்டுமோ அதை நன்றாய்ப் போதித்து நடத்துகிற தேவனாய் இருக்கிறார். அதோடு அவருடைய வல்லமையான செயலினாலே , பிசாசின் தந்திரங்களை ஜெயிப்பதற்குரியா கிருபையை நமக்குத் தருகிற தேவனாய் இருக்கிறார். சங்கீதம் 84:4,5-ல் "உம்முடைய வீட்டில் வாசமாய் இருக்கிறவர்கள் பாக்கியவான்கள்... உம்மிலே பெலன் கொள்ளுகிற மனுஷனும்,தங்கள் இருதயங்களில் செவ்வையான வழிகளைக் கொண்டிருக்கிறவர்களும் பாக்கியவான்கள்.” என்று பார்க்கிறோம்.நம்முடைய தேவன்,நம்முடைய இருதயத்திலே செம்மையான வழிகளைப் போதித்து அதை நடைமுறையிலே நடத்துவதற்கு உதவுகிற தேவனாய் இருக்கிறார்.இன்னுமாய் அவருடைய வல்லமையான செயலினாலே நாம் மேன்மையாய் நடத்தப்படுகிற காரியங்களைப் பார்க்கிறோம். நீதி 14:12-ல் "மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழி உண்டு; அதின் முடிவோ மரண வழிகள்." என்று பார்க்கிறோம். என்னுடைய வாழ்க்கையிலே நான் எல்லாவற்றையும் செம்மையாகத்தான் செய்கிறேன், சரியாகத்தான் செய்கிறேன் என்று சொல்லுகிற மக்கள் ஏராளம் உண்டு. அவ்விதமாய் எண்ணுகின்ற மக்கள் தவறு செய்கிறார்கள். அதன் விளைவாகத் தங்களையே அவர்கள் அழித்துக் கொள்ளுகிற மக்களாய் இருக்கிறார்கள் அருமையான ஒரு சகோதரரை அறிவேன், அவர் தன் வாழ்க்கையிலே கற்றறிந்ததைக் கொண்டு,ஒரு பெரிய கம்ப்யூட்டர் ஸ்தாபனத்தை அயல்நாடு ஒன்றிலே நிறுவினார்.ஒருவரோடு இணைந்துச் செய்தார். அதினிமித்தமாய் அதன் காரியங்கள் எல்லாம் ஆரம்பத்தில் நலமாய்த் தோன்றியது.ஆனால் அந்த பார்ட்னர் திடீர்ரென்று பிரிந்து போய்விட்டார்.இவரோ அதை அறியாதவராய் தன்னுடைய எல்லா விதமான முக்கியமான காரியங்களையும் அந்த மனிதனிடத்தில் கொடுத்தபடியினால், அவருடைய புதிய கம்பெனி மிகவும் நன்றாய் செயல்பட ஆரம்பித்தது. இவருடையதோ ஒன்றுமில்லாமல் மூடப்பட வேண்டிய நிர்ப்பந்த நிலைமை. அதோடு அவர் வாழ்க்கையிலே கடன் வாங்கி கஷ்டப்படுகிற மனிதனாய் மாறினார். ஆகவே இன்று மனிதனுக்கு அநேக வழிகள் தெரியும். ஆனால் கர்த்தருடைய வழியோ நம்முடைய வாழ்க்கையிலே நீதியைத் தரக்கூடியதாய், நன்மைகளைத் தரக்கூடியதாய் இருக்கிறது. ஆகவே இந்த வழிகளைக் குறித்து நம்முடைய வாழ்க்கையிலே அறிந்துக் கொள்ள வேண்டும். கர்த்தருடைய வழி இன்னதென்று நாம் அறிந்துக் கொண்டால், அந்த வழியிலே ஓடினாலும், சேதமடையாதபடி, களைப்படையாதபடி ஒரு வாழ்க்கையை நாம் பெற்றுக் கொள்ள முடியும். கர்த்தருடைய வழியிலே நாம்  நடக்கும் போது, நமக்கு நன்மைகளும் ஆசீர்வாதங்களும் உண்டு. 

நம்முடைய வழிகள் எப்படிப்பட்டதாய் இருக்க வேண்டும்?

1. வழிகளைச் சீர்ப்படுத்த வேண்டும்.

                    "இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; உங்கள் வழிகளையும் உங்கள் கிரியைகளையும் சீர்படுத்துங்கள், அப்பொழுது உங்களை இந்த ஸ்தலத்திலே குடியிருக்கப் பண்ணுவேன்." எரேமியா 7:3

                   உங்கள் வழிகளை நீங்கள் சீர்ப்படுத்திக் கொள்ளும் போது, தேவனுடைய கண்களிலே அது செம்மையாக மாற்றப்படும் போது, நாம் எங்கு இருக்கிறோமோ அங்கு அவர் நம்மை ஸ்திரப்படுத்துகிறவராய் இருக்கிறார். 2தெச 3:3-ல் "கர்த்தரோ உண்மையுள்ளவர், அவர் உங்களை ஸ்ரப்படுத்தி, தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுவார்." என்று தெளிவாய் தேவ ஆவியானவர் ஒரு ஆறுதலின் வார்த்தையாக, ஆசீர்வாதத்தின் வாக்குறுதியாய் நமக்குக் கொடுத்திருக்கிறார். ஆகவே நம்முடைய தேவன் நம்மைக் காத்துக் கொள்ளும்படியாக, நாம் நலமாய் வாழும்படியாக, நாம் இருக்கிற இடத்திலே அமைதலோடு ஆசீர்வாதத்தோடு, எல்லா விதங்களிலும் மேன்மையடைந்து வாழ்வதற்கு வழிச் செய்யும் படியாக விரும்புகிறார். ஆகவே ஒரு மனிதனுடைய வாழ்க்கை அவருக்கு ஏற்றதாய், பிரியமாய் இருக்கும் போது, அந்த வாழ்க்கையானது ஆசீர்வதிக்கப்பட்டதாய் இருக்கிறது நம்முடைய வழியை அவர் நோக்கிப் பார்க்கிறவராய் இருக்கிறார். நீ எந்த வழியாய் நடந்துக் கொண்டிருக்கிறாய்?  உன் போக்கையும், உன் வரத்தையும், நான் அறிவேன் என்றுச் சொன்ன தேவன், நம்முடைய வழியை அறிந்திருக்கிறார். அந்த வழி மாறுபாடான வழியா என்று ஆராய்ந்துப் பார்க்கிறார். ஒரு மனிதனுடைய வழியானது சீர்ப்படுத்தப்பட்டு, அது கர்த்தருக்குள்ளாய் ஏற்றதாய் இருக்குமானால், அந்த  இடத்திலே அவனை ஸ்திரப்படுத்தி, அவனை ஆசீர்வதிக்கிறவராய் இருக்கிறார்.ஆகவே இன்றைக்கு நம்முடைய வழி எப்படிப்பட்டது என்று நாம் நமைச் சீர்துக்கிப் பார்க்க வேண்டும். மாறுபாடான வழி நம்மில் இருக்குமானால் தேவன் தடைகளை உண்டாக்குவார் என்று எண்ணாகமம் 22:31-ல் தெளிவாய் பார்க்க முடிகிறது. பிலேயாமுடைய வழிகள் கர்த்தருக்கு முன்பாக மறுபாடாய் இருந்தப்படியினாலே, கர்த்தருடைய தூதன் அவனுடைய பாதையிலே வந்து தடைசெய்ததைப் பார்க்கிறோம். கழுதை பாதையிலே செல்ல முடியாதபடி படுத்துக் கொண்டது. கர்த்தர் பிலேயாமின் கண்களைத் திறந்தார். கர்த்தருடைய தூதன் வழியிலே நின்று, உருவின பட்டயத்தை தம்முடைய கையில் பிடித்திருக்கிறதை அவன் கண்டு, தலை குனிந்து முகங்குப்புற விழுந்து பணிந்தான் என்று பார்க்கிறோம். அவனுடைய வாழ்க்கையிலே மாறுபாடு இருந்தப்படியினாலே, தேவனுடைய தூதனே அங்குத் தடையாகத் தோன்றி, எதிர்ப்பைத் தெரிவித்ததைப் பார்க்கிறோம். ஆகவே நம்முடைய வழியானது சீர்ப்படுத்தப்பட்டதாக, கர்த்தருக்குள் செம்மையாய் இருக்குமானால், நாம் வசிக்கிற ஸ்தலத்திலே, சமாதானத்தோடும், சந்தோஷத்தோடும் வாழ அவர் வகைச் செய்வார்.

2. நம்முடைய வழி கர்த்தருக்குப் பிரியமாய் இருக்க வேண்டும்.

  "ஒருவனுடைய வழிகள்  கர்த்தருக்குப் பிரியமாய் இருந்தால், அவனுடைய சத்துருக்களும் அவனோடே சமாதானமாகும்படி செய்வார்." நீதி 16:7

               வழிகளைக் குறித்து ஆராயும்போது இன்றைக்கு நம்முடைய வழி கர்த்தருக்கு ஏற்றதாய் இருக்கிறதா? அவருக்குப்  பிரியமான, சத்திய வழியிலே நடக்கிறோமா? அவர் நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாய் இருக்கிறேன் என்றுச் சொன்னாரே. அந்த வழியிலே நாம் நடக்கிறோமா? அல்லது உலகப் பிரகாரமான பாரம்பரியமாய் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறோமா? நம்முடைய வழிகளை அறிந்தவர், நம்முடைய உள்ளத்தின் எண்ணங்களை ஆராய்ந்து அறிகிறவராயிருக்கிறார். தேவன் நம்முடைய வழிகளை ஆராய்ந்து \ அறிந்து  அது பிரியமாய் இருக்கிறபடியினாலே நமக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா சத்துருக்களையும், சமாதானமாகும்படியாய்ச் செய்வார். ஆகவே சமாதானத்தின் தேவன் நம்முடைய வழிகளை இன்றைக்கு சமாதானமாக்கி நம்முடைய சத்துருக்களுக்கு மத்தியிலே ஒரு பந்தியை ஆயத்தப்படுத்துகிறவராய்  இருக்கிறார். இவ்வதமாய் நம்முடைய பாதையைச் செவ்வையாக்கி வாழ்க்கையை ஆசீர்வதிக்கிறவர் அவர்.தாவீதினுடைய வாழ்க்கையிலே கர்த்தருக்குப் பிரியமான பாதை என்ன என்பதை அறிந்து, அதன்படி நடந்தபடியினாலே, தாவீது தன் வாழ்க்கையிலே அநேக ஆசீர்வாதங்களைக் கண்டடைந்தான்.இன்றைக்கு நம்முடைய வாழ்க்கையிலே நாம் எவ்விதமாய் நடந்துக் கொண்டிருக்கிறோம்.? வழி என்றுச் சொன்னால் எவ்விதமாய் நம்முடைய வாழ்க்கையின் பண்புகள், செய்கைகள் அமைந்திருக்கிறது என்பது தான். கர்த்தருக்கு ஏற்றதாய், பிரியமானதாய் இருக்கிறதா என்று ஆராய்ந்து அறிந்து , இன்றே அவருக்குப் பிரியமானதைச் செய்வோமானால், கர்த்தர் நம்மைக் கண்ணின் மணிபோல காத்துக் கொள்ளுவார். நமக்கு விரோதமாய் எழுப்புகிற மக்களையும் நம்மோடு சமாதானமாய்ச் செல்லுவதற்குரிய  வழிகளை அவர் செவ்வையாய்ச் செப்பனிடுவார்.

3. கர்த்தருடைய ஜனத்தின் வழிகளைக் கற்றுக்கொள்ளல் வேண்டும்.

"... என் ஜனத்தின் வழிகளை நன்றாய்க் கற்றுக்கொண்டால், அவர்கள் என் ஜனத்தின் நடுவிலே ஊன்றக் கட்டப்படுவார்கள்.".எரேமியா 12:16

                      நம்முடைய வாழ்க்கை, நாம் அறியாதபடி செய்த தவறுகளினாலே, அறியாதபடி தவறான மார்க்கத்திலே நடந்தபடியினாலே, பாடுகள் நிறைந்ததாய் மாறிவிடுகிறது. ஆனால் கர்த்தருடைய ஜனத்தின் வழிகளை நாம் கற்றுக்கொள்வோம்.என்றுச் சொன்னால் நிச்சயமாகவே அவர் சொன்னபடியே நம்முடைய இடிந்த வாழ்க்கையை அவர்  நேர்த்தியாய் மீண்டும் கட்டுகிறவராய் இருக்கிறார். அநேக நேரங்களிலே நாம் நம்மை அறியாதிருக்கிறோம். ஆமோஸ் 9:12-ல் "அந்நாளிலே விழுந்துபோன தாவீதின் கூடாரத்தை நான் திரும்ப எடுப்பித்து, அதின் திறப்புகளை அடைத்து, அதில் பழுதாய்ப்போனதைச் சீர்ப்படுத்தி, பூர்வநாட்களில் இருந்ததுபோல அதை ஸ்தாபிப்பேன் என்று இதைச் செய்கிற கர்த்தர் சொல்லுகிறார்."  என்று பார்க்கிறோம். தேவனுடைய சமுகத்திலே நம்முடைய வாழ்க்கை இன்று ஏற்றதாய் இருக்கிறதா? கர்த்தர் விரும்புகிற வழியிலே நாம் நடக்கிறோமா? கர்த்தருக்கு ஏற்றதான காரியங்களை செய்வதற்கு நம்முடைய வழி சிறப்பாய், செம்மையாய் இருக்கிறதா? என ஆராய்வோம். கர்த்தருடைய ஜனங்களுடைய வழியைக் கற்றுக் கொள்ள வேண்டும். நாம் அநேக நேரங்களிலே அதைக் குறித்து அறிவதற்கு மனதில்லாதிருக்கிறோம். "வழிகளிலே நின்று, பூர்வ பாதைகள் எவையென்று கேட்டு விசாரித்து, நல்ல வழி  எங்கே என்று பார்த்து, அதிலே நடவுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாவுக்கு இளைப்பாறுதல்  கிடைக்கும்..." எரேமியா 6:16-ன் படி ஆத்துமாவுக்கு இளைப்பாறுதல் கிடைக்கத்தக்கதாக, விசாரித்து கர்த்தருடைய வழியிலே நடக்க வேண்டும். இவ்விதமாய் நடக்கும் போது கர்த்தர் அபரிதமான ஆசீர்வாதங்களைத் தந்து நம்மை மேன்மைப்படுத்துகிறவராய் இருக்கிறார்.

எப்பொழுது கர்த்தர் நம்முடைய வழிகளைச் செவ்வைப்படுத்துவார்?

1. கர்த்தரால் நாம் விடுவிக்கப்படும் போது

               “தங்கள் ஆபத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள், அவர்கள் இக்கட்டுகளிலிருந்து அவர்களை விடுவித்தார். தாபரிக்கும் ஊருக்குப் போய்ச் சேர, அவர்களைச் செவ்வையான வழியிலே நடத்தினார்." சங்கீதம் 107:6,7

                          கர்த்தரால் நாம் விடுவிக்கப்படும் போது, அவர் நம்முடைய வழிகளைச் செவ்வையாக்குகிற தேவனாயிருக்கிறார். இன்றைக்கு அநேக நேரங்களிலிலே நாம் புரிந்து கொள்ள முடியாதபடி தவித்துக்கொண்டிருக்கிறோம்.நாம் செவ்வையான வழியிலே நடக்க வேண்டுமானால் நாம் வாழ்க்கையிலே விடுதலை அடைய வேண்டும். போராட்டமான நிலையில் இருந்து, நம்முடைய \ எல்லாவிதமான பிரச்சனையிலிருந்து விடுவிக்கப்பட்ட மக்களாய் நாம் மாற வேண்டும். அநேக நேரங்களிலே போராட்டத்தோடு நம்முடைய வாழ்க்கை நடந்து கொண்டு இருக்கிறபடியினால் கசந்து போய், கலங்கின வாழ்க்கையாய் இருக்கிறது. ஆனால் இன்றைக்கு நம்முடைய வாழ்க்கையிலே கர்த்தர் நமக்கு மேலான ஒரு வழியை கற்றுக் கொடுத்திருக்கிறார். மேலான ஆலோசனையை நமக்குச் சொல்லியிருக்கிறார்.ஒரு வேளை பயத்திலிருந்து விடுதலை தேவையாய் இருக்கலாம். காலமெல்லாம் மரண பயத்தினால் வேதனையோடு வாழ்கிற  வாழ்க்கையாய் இருக்கலாம். எதிர்காலத்தைக் குறித்துப் பயந்திருக்கலாம் .நம்முடைய கையின் பிரயாசங்களில் உள்ள நஷ்டங்களின்  நிமித்தமாய் நாம் பயத்தோடு, கலக்கத்தோடு வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கலாம். விடுதலையின்றி அநேகருடைய வாழ்க்கையிலே பல தவறான காரியங்களை செய்து பாடு அனுபவிக்கிற நிலையைப் பார்க்கிறோம்.ஆனால் இன்றைக்கு இயேசு கிறிஸ்து நம்மை விடுவிக்கிறவராயிருக்கிறார் . " ஆகையால் குமாரன  உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்."யோவான் 8:36-ன்படி மெய்யான ஒரு விடுதலையை நாம் பெற்றுக் கொள்ளுவோமானால்  வாழ்க்கையிலே எல்லா விதமான இன்னல்களிலிருந்தும், பல விதமான போராட்டங்களிலிருந்தும் விடுதலைப் பெற்றவர்களாய் நாம் வாழ முடியும். ஆகவே இன்றைக்கு நம்முடைய வழியைச் செவ்வையாக்க விரும்புகிற தேவன், நம்முடைய வாழ்க்கையிலே விடுதலையைக் குறித்து கரிசனையுடைய தேவனாய் இருக்கிறார். நாம் ஆபத்திலே அவரைக் கூப்பிட்டப்படியினாலே அவர் நம்மை விடுவிக்கிறவராய் இருக்கிறார். சங்கீதம் 50:15ல் ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கி கூப்பிடு, நான் உன்னை விடுவிப்பேன் என்றுச் சொன்னவர், நம்மை விடுவிப்பதற்கு உண்மையுள்ளவராய் இருக்கிறார். இந்த விடுதலை இல்லாதபடியினாலே வாழ்க்கையிலே நாம் எதைச் செய்தாலும், தோல்வியும், நஷ்டமும் அடைந்து, கண்ணீரோடு கலங்கி இருக்கிற மக்களாய் இருக்கிறோம். ஆனால் வழியை செவ்வையாக்க விரும்பும் தேவன் முதலாவது நம்மை விடுவிக்கிறவராய் இருக்கிறார்.                           இன்றைக்கு அநேகருடைய வாழ்க்கையிலே எனக்கு ஏன் விடுதலை வேண்டும் நான் ஒன்றுக்கும் அடிமையாய் இல்லையே என்று சொல்லுகிற மக்கள் உண்டு. ஆனால் அவர்கள் அறியாதடி பல விதமான பாவத்திற்கு, பாவப்பழக்கத்திற்கு, போராட்டங்களுக்கு அவர்கள் அடிமையாய் இருப்பதைப் பார்க்கிறோம். இன்றைக்கு மாணவர்கள் நடுவே காணப்படுகிற ஒரு காரியம், செல்போனில் விளையாடுகிற விளையாட்டு. இதைக் காலை விழிக்கும் போதிலிருந்து இரவு தூங்கும் வரை விளையாடுகிற அடிமைத்தனத்தில் இருக்கிறார்கள். பாடத்தைப் படிக்க மனதில்லை. தங்கள் வாழ்க்கையிலே முன்னேற வேண்டும் என்கிற எண்ணமே இல்லை. ஆகாரம் கூட உண்ணாதபடி , ஒழுங்காக உடுத்திக்கொள்ளாதப்படி,கல்லூரிகளுக்கு, பள்ளிகளுக்கு செல்ல வேண்டும் என்ற ஏதோவொரு காரியத்தைச் செய்ய வேண்டும் என்றுச் சொல்லி கடினப்பட்ட உள்ளத்தோடு, சென்று வருவதைப் பார்க்கிறோம். அவர்களுடைய முழுக் கவனமும் இந்த செல்போனில் உள்ள விளையாட்டுகளின்  மீது இருக்கிறப்படியினால், பாடத்தைப் படிக்க இயலாதபடி இருக்கிறார்கள். கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே நம்முடைய வழியைச் செவ்வையாக்குகிற தேவன் நம்மை முதலாவது விடுவித்து நம்மைச் செவ்வையான வழியிலே நடத்துகிறார். நாம் மீண்டும் விழுந்து விடாதபடி மீண்டும் அந்தப் பாதையிலே சிக்கிக் கொள்ளாதபடி நமது வாழ்க்கை நலமாய் இருக்கும்படி நம்முடைய வழிகளை அவர் செவ்வையாக்குகிறார்.ஒரு முறை ஒரு அருமையான குடும்பத்தாரால் அழைக்கப்பட்டிருந்தேன். அந்த வீட்டலில் உள்ள ஒரு வாலிப சகோதரனோடு நான் பேசினேன். மிகுதியான ஞானம் உடைய மகன். பலவிதமான  தாலந்துகளை உடையவன் . ஆனால் அவனுடைய வாழ்க்கையிலே, இன்ஜினியரிங் காலேஜ்-க்கு சென்று கொண்டிருந்த முதலாம் ஆண்டிலே, தொடர்ந்து அவன் கல்லூரிக்குச் செல்லாதபடி, தன் அறையை அடைத்துக் கொண்டு, காலை முதல் இரவு வரை இந்த செல்போன் விளையாட்டிற்கு அடிமையாய் இருந்தான். அவன் வாழ்க்கையிலே ஒரு தெளிவு வந்தபோது அவன் விடுதலை அடைந்தான். இன்றைக்கு நம்முடைய வாழ்க்கையிலே விடுதலையானது அவசியம். அந்த விடுதலையை நாம் பெறும் போது அவர் நம்மை செவ்வையான வழியிலே நடத்துகிற தேவனாய் இருக்கிறார்.

   2. கர்த்தரை முன் வைக்கும்போது, வழியைச் செவ்வையாக்குகிறார்.

                      “கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை." சங்கீதம் 16:8.

                      தாவீது  தன் வாழ்க்கையிலே கர்த்தரை முன் வைத்ததினால், அசைக்கப்படுவதில்லை என்ற இரகசியத்தை தாவீது சொல்கிறார். வாழ்க்கையிலே பிரச்சனைகளை அல்ல, போராட்டங்களை அல்ல , கஷ்ட நஷ்டங்களை அல்ல, குடும்ப பிரச்சனைகளை அல்ல, வாழ்க்கையிலே எல்லாவற்றிலும் கர்த்தரை முன் வைக்கும் ஒரு உணர்வுள்ள, உண்மையான உள்ளம் அவனுக்குள் இருந்தபடியினாலே அவன் தவறு செய்தபோதும் , தன்னைத் திருத்திக் கொண்ட செயலைப் பார்க்க முடிகிறது. இன்றைக்கு நம்முடைய வாழ்க்கையிலே கர்த்தரை முன்னாக வைக்கும்போது பலவிதங்களிலே கர்த்தர் நம்மை ஆசிர்வதிக்கிறவராய் இருக்கிறார்.

                       அதில் ஒன்று கோணலானவைகளைச் செவ்வையாக்குகிறார். 'நான் உனக்கு முன்னே போய் கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன்' ஏசாயா 45:2-ல் பார்க்கிறோம். கர்த்தரை முன்பாக வைத்து வாழும்போது , அவர் அருளுகிற ஒரு ஆசீர்வாதமான காரியம், கோணலான காரியங்களைச் செவ்வையாக்குகிறார் .இன்றைக்கு அநேக கோணலான காரியங்கள் உண்டு. இந்தக் கோணலான காரியங்கள் என்ன என்று ஆராயும்போது, நமக்கு எல்லாம் சரியாக இருக்கும்போது, ஏதாவது ஒருசில காரியங்கள் நமக்குப் பொருந்தாதவைகளாய் இருக்கலாம். ஏதாவது ஒரு இடம் கிடைக்கவில்லை என்ற போராட்டமான, கோணலான காரியமாக இருக்கலாம். நம்முடைய வேலையாக இருக்கலாம். கர்த்தர் நமக்கு முன்னே போவாரானால், அது எவ்விதமான கோணலாக இருந்தாலும் அதைச் செவ்வைப்படுத்தி, செம்மையான வழியிலே கொண்டு செல்வார்.

                  சில இடங்களில் வேறு வீடு கிடைக்கவில்லை , இந்த வீடுதான் கிடைத்தது. இந்த வீட்டிலே இரவெல்லாம் ஒரே சத்தம், ஏதோ பெண் நடப்பது போல் இருக்கிறது. பலவிதமான சத்தங்கள் தொனிக்கிறது என்று கலங்குகிற மக்கள் உண்டு. ஆகவே கர்த்தர் நம்முடைய கோணலானவைகளைச் செவ்வையாக்கும்படியாக, அவருடைய அக்கினியை நமக்கு முன்பாக அனுப்புகிறார் . சங்கீதம் 97:3-ல் “அக்கினி அவருக்கு முன்சென்று, சுற்றிலும் இருக்கிற அவருடைய சத்துருக்களைச் சுட்டெரிக்கிறது “,என்றுப் பார்க்கிறோம் .

                ஒரு குடும்பத்தார் தாங்கள் வசித்து வருகிற வீட்டிலே திடீரென்று என்னுடைய bathroom-ல் உள்ள   tap திறந்து விடுகிறது.என்னுடைய வீட்டிலே தீடிரென்று கதவு திறந்து மூடுகிறது  என்றுச் சொல்லி ஒரு காரியத்தைப் பகிர்ந்து கொண்டார்கள். ஆனால் கர்த்தரோ உண்மையுள்ளவர். அவர் வல்லமையுள்ளவர் , அவர் மிகுதியான காரியங்களைச் செய்யக்கூடியவர்.அந்த வீட்டாருக்கு ஏற்றப்படி அவர் செய்ய ஆரம்பித்தார் .இன்றைக்கு நம்முடைய வாழ்க்கையிலே என்ன காரியமாக இருந்தாலும் அதில் உள்ள சந்துருவின் தந்திரமான காரியங்களை  அழித்து நம்முடைய பாதையிலே சந்தோஷத்தையும் , சமாதானத்தையும் உண்டாக்குகிற தேவன், நமக்கு முன்சென்று கோணலானவைகளை செவ்வையாக்குகிற தேவன்,ஜீவிக்கிறார். அக்கினியை  அனுப்பி சத்துருக்களின் எல்லாச் செய்கைகளையும் அழித்து அகற்றி வழிகளை செவ்வையாக்குகிறார்.

                     கர்த்தரையே மேய்ப்பராக முன் வைத்துக் கொள்ளும்போது, அவரை நம்முடைய மேய்ப்பராக ஏற்றுக்கொண்டு வாழும்போது, அவர் நம்மை நீதியின் பாதையிலே நடத்துகிற தேவனாய் இருக்கிறார். மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும், பொல்லாப்புக்குப் பயப்படாத நலமான வாழ்க்கை வாழ உதவிச் செய்கிறவராய் இருக்கிறார். 

                  ஆகவே இன்றைக்கு நம் வாழ்க்கையிலே போராட்டங்களை அல்ல பிரச்சனைகளை அல்ல, கர்த்தரை முன் வைத்துக் கொள்வோம் என்றுச் சொன்னால் அவர் நமக்கு முன்னேச் சென்று, எல்லாவற்றையும் சீர்ப்படுத்தி, செம்மையான வழியிலே நடத்துகிற தேவனாய் இருக்கிறார்.                                  

                                                                                               

 

3.வழிகளில் எல்லாம் கர்த்தரை நினைத்துக் கொள்ள வேண்டும்.

                       “உன் வழிகளில் எல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளை செவ்வைப்படுத்துவார்." நீதிமொழிகள் 3:6

                        அநேக நேரங்களிலே  நாம் கர்த்தரை முன்பாக வைப்பதற்குப் பதிலாக நம்முடைய ஞானத்தை வைக்கிறோம். கர்த்தரை நினைப்பதற்குப் பதிலாக பூர்வீகமான பழங்காரியங்களை நினைத்துக் கொண்டிருக்கிறோம். "முந்தினவைகளை நினைக்க வேண்டாம், பூர்வமானவைகளைச் சிந்திக்க வேண்டாம் " என்று வேதத்திலே சொல்லியிருக்கிறது. ஆனால் நாமோ உலகக் கவலைகளை நினைக்கிறோம் உலகக் காரியங்களினால் கவலைக் கொண்டிருக்கிற  மக்களாய் இருக்கிறோம். கர்த்தரை நினைக்கும்பொழுது, அவர் அன்பின் வழிகளை, செயலை நினைக்கும்பொழுது, அவர் நம்முடைய வழிகளைச் செவ்வையாக்குகிற தேவனாயிருக்கிறார். நம்முடைய நினைவுகள் அவரைப் பற்றியதாக இருக்க வேண்டும். கிறிஸ்து இயேசுவின் சிந்தை நமக்குள்ளாய் இருக்க வேண்டும். இந்த உலகத்தாரைப் போல உலகத்திற்கு அடுத்தவைகளைச் சிந்திக்கும் போது நாம் ஜெயம்கொள்ள முடியாது. ஆகவேதான் "உங்கள் வழிகளைச் சிந்தித்துப் பாருங்கள்...." என்று ஆகாய் 1: 7-ல் பார்க்க முடிகிறது. நம் வழிகளை சிந்தித்துப் பார்க்க வேண்டும். சிலருடைய சிந்தை வேதத்தைப் பற்றியதாயும், நமக்காக தன் ஜீவனைக் கொடுத்த இயேசு கிறிஸ்துவைப் பற்றியதாயும் இருப்பதினாலே அவர்களுடைய வேதனைகள்  நீங்கி, நலமான நல்வாழ்வை அடைந்திருக்கிறார்கள். நாமும் அவற்றை அடைவதற்கு நம்முடைய வழிகளிலே அவரை நினைக்க வேண்டும். கர்த்தருடைய வல்லமைகளை, மேன்மைகளை, நன்மைகளை, நினைக்கத்தக்கதான உள்ளம் இருக்குமானால், நிச்சயமாக அவர் நம்முடைய வழிகளைச் செம்மையாக்கி, நம்மைச் சமாதான தாபரங்களிலே நிலைப்படுத்துகிற தேவனாயிருக்கிறார்.

4. நீதிமானாய் மாறும் போது.

                         "நீதிமானுடைய பாதை செம்மையாயிருக்கிறது..." ஏசாயா 26:7

                         நாம் நீதி செய்கிற மக்களாய் மாறுவோம் என்றுச் சொன்னால், கர்த்தர் நம்முடைய வழிகளை செவ்வையாக்குகிற தேவனாயிருக்கிறார். நாம் ஆபிரகாமைப் பார்க்கும் பொழுது, அவன் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது. அவனுடைய வழிகளையெல்லாம் செவ்வையாக்கினார். அவனுடைய வாழ்க்கையிலே போராட்டங்கள் வந்தது. நெருக்கங்கள் வந்தது. ஆனால் அவனுடைய வழிகளை அவர் நேர்த்தியாய் செம்மையாக்கினார். அவனுடைய கூடாரத்தை ஆசீர்வதித்தார். வாக்குத்தத்தங்களைச் சொல்லிய தேவன், வாக்கு மாறதவராய் இருந்து, அவனை ஆசீர்வதித்ததைப் பார்க்கிறோம். இன்றைக்கு நம்முடைய வாழ்க்கையிலே நாம் நீதியைச் செய்கிற மக்களாய் இருக்கிறோமோ? நீதிமான்கள் என்று அழைக்கப்படுவதற்கு பாத்திரராய் இருக்கிறோமா? நீதியான காரியங்களைச் சிந்திக்கிறோமா? நீதிமானாகிய இயேசு கிறிஸ்துவை , நம் உள்ளத்திலே வைத்திருக்கிறோமா?இன்றைக்கு நீதியின் தேவன். நன்மையானதைச் செய்ய விரும்புகிற தேவனாயிருக்கிறார். தேவன் நீதிமான்களுடைய வாழ்க்கையிலே ஆசீர்வாதங்களைப் பெருகச் செய்வார். இன்றைக்கும் நீதிமான்களின்  வழிகளை செவ்வையாக்குகிற தேவனாய் இருக்கிறார்.

                        இன்னுமாய் நம்முடைய வாழ்க்கையிலே கர்த்தர் நம்மை வழிநடத்தும் பொழுது நம்முடைய வழியானது செவ்வையாக்கப்படுகிறது. கர்த்தர் நம்மை வழிநடத்தும் பொழுது எல்லா வேதனையான காரியங்களையும் அகற்றி, நம்முடைய வழிகளைச் செவ்வையாக்குகிற தேவனாயிருக்கிறார். "இந்தக் காரியங்களை நான் செய்து அவர்களை கைவிடாதிருப்பேன்." என்ற வாக்குத்தத்தைப் பார்க்கிறோம். வழி நடத்துகிற தேவன் நம்முடைய இருண்ட வாழ்க்கையை ஒளிமயமாய் மாற்றுவதோடு நம்மைச் செவ்வையான வழியிலே நடத்துகிற தேவனாயிருக்கிறார்.

5. கர்த்தர் நம்மை நடத்த ஒப்புக்கொடுத்தல் வேண்டும்.

                     "கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்; நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப்போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய்." ஏசாயா 58:11

                      இன்றைக்கு ஒவ்வொருவர்  வாழ்விலும் அவர் நேர்த்தியாய் வழிநடத்துவதைப் பார்க்கிறோம். அன்று வான சாஸ்திரிகள் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை, நட்சத்திரத்தைக் கண்டு, அவரை வணங்க வேண்டும். அவருக்கு வேண்டிய மேன்மையான காரியங்களைக் காணிக்கையாக கொடுக்க வேண்டும். என்று எண்ணின போது நட்சத்திரம் அவர்களை வழி நடத்தியது. ஆனால் இயேசு கிறிஸ்துவினுடைய வீட்டிற்கு வந்ததோடு அது நின்றுவிட்டது. இன்றைக்கு வான சாஸ்திரத்தின்படி நட்சத்திரங்கள் அல்ல, நம்மை நடத்துபவர் இந்த உலகத்தில் அவதரித்த இயேசு கிறிஸ்துவே. அவர் நித்தமும் உங்களை நடத்துகிற தேவன். அவர் நமக்கு அடிச்சுவடுகளை வைத்திருக்கிறார். அவருடைய வழியிலே நடப்பதற்கு, அவரைக் கவனித்து பார்க்கிற மக்களாய் மாறுவோமானால், வாழ்க்கையிலே சகலமும் செவ்வையாக்கப்பட்டு, சிறப்படைகிற மேலான பாக்கியத்தை பெற்றுக் கொள்ளுவோம்.

                         நம்முடைய வழிகளைச் செவ்வையாக்கி, நமக்கு நன்குப் போதித்து, எதிராளிகளுக்கு மத்தியிலே நலமாய் நடத்துகிற தேவன் இருக்கிறபடியினால் நாம் தேவனுக்கு துதிகளையும், ஸ்தோத்திரங்களையும் எப்பொழுதும் ஏறெடுத்து ஆசீர்வதிக்கப்படுவோம்.!

                                                   கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக .

 

                                                                                                                                     கிறிஸ்து இயேசுவின் பணியில் ,

                                                                                                                                          சகோ. சி . எபனேசர் பால்