"...கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையிலும்

                                                            அவரை அறிகிற அறிவிலும் வளருங்கள்"

                                                                                                                                   2 பேதுரு 3:18

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினால் உங்களை வாழ்த்துகிறேன். மனிதன் சகல காரியங்களிலும் வளர வேண்டும் என்று விரும்புவதுடன், அதற்காக பாடுபடுகிறான். சென்ற ஆண்டைவிட என் தொழில், என் வியாபாரம், என் வங்கிக்கணக்கு வளர்ந்திருக்கிறதா என்று ஆராய்ந்து செயல்படுகிறான், சில வீடுகளில் உள்ள பிள்ளைகள் கடந்த ஆண்டில் நான் இவ்வளவு உயரம் இருந்தேன். இந்த ஆண்டில் இவ்வளவு வளர்ந்துள்ளேன் என்று ஆர்வத்துடன் அளந்து மகிழ்கிறார்கள். சிலர் என் முடி கொட்டிவிட்டது, ஆனால் இப்பொழுது வளர்கிறது என்று சந்தோஷப்படு கிறார்கள். இவைகளெல்லாம் உலக மக்களுக்குள் உள்ள காரியங்கள். ஆனால் வேதம் இயேசு கிறிஸ்துவின் கிருபையிலும், அவரை அறிகிற அறிவிலும் வளருங்கள் என்ற பெரிய ஆலோசனையை நமக்கு அருளியிருக்கிறது. இவைகளில் நாம் வளரும்போது நம் வாழ்வில் ஆவிக்குரிய வாழ்விலும், பக்திக்குரிய நிலையிலும் வளர்ந்து விடுவோம்.

I கிருபையில் வளர வேண்டும்

'...கிருபையும் சத்தியமும் இயேசு கிறிஸ்துவின் மூலமாய் உண்டாயின.' யோவான் 1:17. கிருபையானது இவ்வுலகில் இயேசு கிறிஸ்துவின் மூலம் உண்டானபடியால்  நாம் பல நிலைகளில் மிகுதியான ஆசீர்வாதத்தை அடைகிறோம். கர்த்தர் சவுலை விட்டு தமது கிருபையை விலக்கினபடியால், அவன் ஆசீர்வாதங்களை எல்லாம் இழந்து போனான். அவன் முன் செய்த தீர்மானத்தை மீறி பல காரியங்களைத் தவறாகச் செய்தான். அஞ்சனம் பார்க்கிறவர்களையும், குறி சொல்கிறவர்களையும், தேசத்தில் இராதபடிக்கு நிர்மூலமாக்கின சவுல் அஞ்சனம் பார்க்கிற ஒரு ஸ்திரியைத் தேடிச் சென்றான். கிருபையை இழந்தவனின் வாழ்வில் பரிதாபகரமான காரியங்கள் நடைபெற்றது. யுத்தத்தில் தோல்வியடைந்தான். தன் பட்டயத்தை நட்டு அதில் தானே விழுந்து தன் ஜீவனைப் பரிதாபமாக இழந்தான். அவனது பிள்ளைகளும் யுத்தத்தில் மாண்டார்கள்.

ஏன் கிருபை அவசியம்?

1. நாம் நிர்மூலமாகாதிருக்க

"நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை." புலம்பல் 3:22

கிருபையினால் நாம் காக்கப்படுகிறோம். பலருடைய வாழ்வில் பல அழிவுக்கு ஏதுவான நிகழ்ச்சி நடைபெறும் போது, கிருபையினால் தப்புவதை நாம் அனுதினமும் பார்க்க முடிகிறது. தகுதியற்ற நமக்குத் தேவன் பாராட்டுகிற அன்பின் செயல்தான் கிருபை. இது காலைதோறும் புதிதாய் இருக்கிறது.

ஒருமுறை சகோதரர் ஒருவர் ஆலய வளாகத்தில் கட்டப்பட்டு வந்த மண்டபத்தை ஒருவருடன் பார்வையிடச் சென்றார். அந்த மண்டபத்தின் ஒரு பகுதியில் நின்று பார்த்துவிட்டு, சில அடிகள் மட்டுமே அந்த இடத்தை விட்டு கடந்து வந்தார்கள். அவர்கள் அதிர்ச்சியடையும்படியாக, அந்த மண்டபத்தில் போடப்பட்டிருந்த 'பீம்' ஒன்று கீழே விழுந்தது. அவர்கள் உயிர் தப்பினார்கள். அவர்கள் நிர்மூலமாகாதபடி கர்த்தரின் கிருபை காத்தது.

2.கிருபையினால் இரட்சிக்கப்படுகிறோம்

"கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு." எபேசியர் 2:8

நாம் இரட்சிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமானது. நித்திய ராஜ்யத்தை அடைய இரட்சிப்பு ஒரு நுழைவுச் சீட்டாக இருக்கிறது. இந்த இரட்சிப்பைக் கர்த்தர் இலவசமாக அருளுகிறார். இந்த இரட்சிப்பானது நம்முடைய முயற்சியினாலோ, தூய்மையினாலோ அல்ல அவரது கிருபையினால் நாம் பெறும் சிலாக்கியம் உண்டாயிருக்கிறது.

சிலரின் வாழ்வில் இவர் மிகுதியான பாவங்களைச் செய்தவர் என்று எண்ணி கலங்கலாம். ஆனால் எந்தப் பாவியையும் புறம்பே தள்ளேன் என்ற அன்பின் தேவன் தமது அளவில்லாத கிருபையை அவர்களில் பெருகச் செய்து, அவர்களில் இந்த இரட்சிப்பின் வாழ்வைப் பெருகச் செய்கிறார். சிலர் நாம் இரட்சிப்பின் சந்தோஷத்தை அடைய வேண்டும் என்று காத்திருந்தும் பெறமுடியாதபடி வேதனை அடைகிறார்கள். கிருபையினால் இரட்சிக்கப்படுகிறோம்.

3. கிருபையினால் தாங்கப்படுகிறோம்

"என் கால் சறுக்குகிறது என்று நான் சொல்லும்போது, கர்த்தாவே, உமது கிருபை என்னைத் தாங்குகிறது." சங்கீதம் 94:18

அநேக நேரங்களில் சிலர் குளியலறையில் கால் வழுக்கி விழுந்து, கை எலும்பு உடைந்து விட்டது என்றும், இடுப்பின் பந்து கிண்ணமூட்டு உடைந்து விட்டது என்றும் கண்ணீர் சிந்துகிறதைப் பார்க்கிறோம். ஆனால் கர்த்தரின் கிருபையால் தாங்கப்படுகிற நிகழ்ச்சியுமுண்டு.

ஒரு சகோதரர் தன் சாட்சியைப் பகிர்ந்து கொண்டார். வயதானவர், தன்  காலியான மாடி வீட்டைப் பார்த்து விட்டு, கீழே படிக்கட்டில் இறங்கும்போது கால் வழுக்கி விட்டது. ஆனால் அவரது கை கதவின் கைப்பிடியைப் பிடித்திருந்தபடியால், தான் விழுந்து காயமடையாது தப்பினார் என்றும் உதவி செய்ய வாருங்கள் என்று சத்தமிட்ட  நேரத்தில் மற்றவர்கள் வந்து அவரைத் தூக்கி விட்டார்கள்  என்றும் பகிர்ந்து கொண்டார். கிருபையானது அவரைத் தாங்கிக் காத்தது.

கிருபையானது நமக்கு மிகுந்த அவசியமாக இருக்கிறது. இந்தக் கிருபையை பல விதங்களில் நாம் பெற்றுக் கொள்ள முடிகிறது. 'கிருபையானது அநேகருடைய ஸ்தோத்திரத்தினாலே பெருகும்' என்று 2கொரிந்தியர் 4:15 ன் படி கிருபையைப் பெற்றுக்கொள்ளும் சிலாக்கியம் அடைகிறோம். ஆகவே தான் நாம் கூடிவரும் போதெல்லாம் கர்த்தரை ஸ்தோத்தரிக்கின்றோம். 'கர்த்தரை நம்பியிருக்கிறவனையோ கிருபை சூழ்ந்து கொள்ளும் ' என்று சங்கீதம் 32:10ன் மூலம் நாம் தெரிந்து கொள்ள முடிகிறது. இன்று யாரை நீ நம்பியிருக்கிறாய்? உன் வேலை, பலம், சரீர சுகம் என்று சொல்வாயானால், கிருபையில்லாமல் பாடுபடுகிற நாட்கள் வந்து விடும். ஆகவே இன்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை முழுமனதுடன் நம்புவோம். என்றும் கிருபை நம்மை சூழ்ந்திருக்கும்.

மேலும் நம்முடைய வாழ்வில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நல் மேய்ப்பராக ஏற்றுக்கொள்ளும்போது, 'என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையையும் கிருபையும் என்னைத் தொடரும்' என்ற சங்கீதம் 23:6 ன் படி பெரிதான சிலாக்கியத்தை அடைவோம். ஆகவே அனுதின வாழ்வில் நாம் கிருபையின் மேல் கிருபை பெற்று வாழ இடம் கொடுக்கும்போது, நமக்கு மிகுந்த சமாதானத்தையும், சந்தோஷத்தையும் உண்டாக்கிவிடும்.

II அறிகிற அறிவில் வளர வேண்டும்

உலகப்பிரகாரமான காரியங்களை அறிவதில் மிகுதியான ஆர்வமுடையவர்களாய் இருக்கிறார்கள். சிலர் உலகச் செய்திகளைக் கேட்டு என்ன என்று ஆராய்கிறார்கள். சிலர் வானத்தின் நட்சத்திரங்களையும் மற்றவைகளையும் ஆராய்கிறார்கள். ஆனால் வேதத்தில் சொல்லப்பட்டவை களை ஆராய்வதில் ஆர்வம் குறைவாகவே இருக்கிறது.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அறிவதே நித்திய ஜீவன். "ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன்" என்று யோவான் 17:3 ல் பார்க்கிறோம். நாம் வேதத்திலுள்ள ஒவ்வொரு காரியத்தையும் உண்மையாய் ஆராய்ந்து அறியும்போது, மிகுதியான ஆசீர்வாதத்தை அனுதின வாழ்விலும், ஆவிக்குரிய வாழ்விலும் பெற்று விடுவோம்.

1.சத்தியத்தை அறிய வேண்டும்

"சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்." யோவான் 8:32

சத்தியமாகிய இயேசு கிறிஸ்துவையும், அவரது வார்த்தைகளையும் அறிந்து கொள்ளும்போது, நம் வாழ்வில் உண்டான அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாகி விடுவோம். இன்று பலவித பாவ பழக்கத்திற்கு, கடன் வாங்கும் செயலுக்கு நாம் அடிமைகளாய் இருக்கலாம். ஆனால் இயேசு கிறிஸ்துவையும், வசனத்தையும் நாம் அறியும்போது, இப்பழக்கத்தில் இருந்தும், குடிப்பழக்கம், மற்றும் அனைத்து தீய பழக்கத்தில் இருந்தும் விடுதலையடைவோம்.

2. நாமத்தை அறிகிற அறிவு

"...என் நாமத்தை அவன் அறிந்திருக்கிறபடியால் அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன்." சங்கீதம் 91:14

இந்தப் பூமியில் 'நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீலெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை' என்று அப். 4:12ல் பேதுருவும் யோவானும் திட்டமாக, தெளிவாக தெரிவித்திருப்பதை நாம் பார்க்க முடிகிறது. எல்லா நாமங்களுக்கும் மேலான நாமத்தை நாம் உச்சரிப்பதனால் ஆசீர்வதிக்கப் படுகிறோம். 'இதுவரைக்கும் நீங்கள் என் நாமத்தினாலே ஒன்றும் கேட்கவில்லை; கேளுங்கள், அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக்கொள்வீர்கள்' என்று யோவான் 16:24 ல் உள்ளபடி நாம் நிறைவான சந்தோஷத்தை அவருடைய நாமத்தினால் பெற்றுக்கொள்ளும் பாக்கியத்தை உடையவர்களாய்  இருக்கிறோம். இன்னும் 'அவருடைய நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்' என்று மாற்கு 16:17ன் படி அவர் நாமம் அதிகாரமுடையதாய் இருக்கிறது. இந்த உன்னதமான இயேசுவின் நாமத்தை அறியும்போது அவர் கரத்தில் ஒரு வல்லமையான கருவியாகவும் மாறிவிடுகிறோம்.

3.சத்தியத்தை அறிகிற அறிவு

"அவன் தன்னுடைய ஆடுகளை வெளியே விட்டபின்பு, அவைகளுக்கு முன்பாக நடந்து போகிறான், ஆடுகள் அவன் சத்தத்தை அறிந்திருக்கிறபடியினால் அவனுக்குப் பின் செல்லுகிறது." யோவான் 10:4

ஆடுகளாகிய நாம் அவர் சத்தத்தை நன்கு அறிந்திருப்போமானால் வழி, நெறி தவறாதபடி இயேசுவுக்குப் பின்னே செல்லமுடியும். இன்று அநேக வித்தியாசமான சத்தங்களைக் கர்த்தருடைய பிள்ளைகள் கேட்டு கலங்குகிறார்கள். குழம்புகிறார்கள். நாம் இது கர்த்தருடைய சத்தம் என்று அறியும்போது, அவர் சத்தம் கேட்டு, கீழ்ப்படிந்து, கர்த்தருக்காக காரியங்களைச் செய்ய முடியும். இந்த அன்பின் தேவனுடைய சத்தத்தை அறிகிற அறிவிலே நாம் ஜாக்கிரதையாய் இருந்தால் அவர் சத்தத்தின்படி செய்து ஆசீர்வதிக்கப்படுவோம்.

4) அன்பை அறிந்துகொள்ள வல்லவர்களாக வேண்டும்

"அறிவுக்கெட்டாத அந்த அன்பை அறிந்துகொள்ள வல்லவர்களாகவும், தேவனுடைய சகல பரிபூரணத்தினாலும் நிறையப்படவும்…" எபேசியர் 3:19

அன்பை அறிந்துகொள்ள வல்லவர்களாக இருக்க வேண்டும் என்று பவுல் தான் வேண்டிக்கொள்ளுகிறேன் என்று எபேசு சபையாருக்கு எழுதின நிருபத்தில் பார்க்கிறோம். கிறிஸ்துவின் அன்பை அறியும்போது, கண்ணீருடன் அவருக்காக வாழ, உழைக்க நம்மை அர்பணித்துவிடுவோம். இங்கிலாந்து தேசத்தில் இருந்து புறப்பட்ட வாலிப மிஷினரிகள் பல வல்ல காரியங்களைக்  கிறிஸ்துவுக்காகச் செய்து, தங்களின் ஜீவனை கொடுத்தார்கள். அவர்களின் உற்றார் உறவினரின் அன்பைவிட பெரிதாய் கிறிஸ்துவின் அன்பு இருந்தபடியால், இந்தத் தியாகத்துடன் கிறிஸ்துவுக்காக உழைத்தார்கள். கொரிந்தியருக்கு எழுதின நிருபத்தில் பவுல் 'கிறிஸ்துவின் அன்பு என்னை நெருக்கி ஏவுகிறது' என்று தெளிவாக கூறியிருப்பதை நாம் பார்க்க முடிகிறது.

இந்தப் பெரிதான அன்பை அறிந்தவுடனே, நான் என் வேலையை முற்றிலும் விட்டு அவருக்காக வாழ, உழைக்க என்னை ஒப்புக்கொடுத்தேன். இந்த அன்பை ருசித்தவர்கள் மீண்டும் உலகத்தைப் பாராது அந்த அன்பிலே வேரூன்றி நிலைப்பெற்றவர்களாகி, அந்த அன்பிலே நடந்து கொள்வார்கள். நம்மீது அன்பு வைத்து தன்னையே சிலுவையில் பலியாக அற்பணித்த இயேசு கிறிஸ்துவின் அன்பு முழுமையாக அவருக்காக நம்மை மாற்றிவிடும்.

இன்று பலவிதமான விதங்களில் பல காரியங்களை நமக்குள் கர்த்தர் வளரச் செய்ய வல்லவராக இருக்கிறார். என் பிராணனை என்னைவிட்டு எடுத்துக்கொள்ளும் என்று மிகுந்த துயரமும், எரிச்சலும் அடைந்தான். யோனா நகரத்திலிருந்து புறப்பட்டு நகரத்துக்குக் கிழக்கே போய் ஒரு குடிசையைப் போட்டு, நகரத்துக்குச் சம்பவிக்க போகிறதை நான் பார்க்கும் மட்டும் அதின் கீழ் நிழலில் உட்கார்ந்திருந்தான். யோனாவுடைய தலையின் மேல் நிழலுண்டாயிருக்கவும், அவனை அவனுடைய மனமடிவுக்கு நீங்கலாக்கவும் தேவனாகிய கர்த்தர் ஒரு ஆமணக்குச் செடியை முளைக்கக் கட்டளையிட்டு அதை அவன்மேல் ஓங்கி வளரப்பண்ணினார்.

அன்று யோனாவுக்கு ஆமணக்குச் செடியை வளரச் செய்தவர் இன்றும் ஜீவிக்கிறார். மோசேயைத் தன் தாயே வளர்க்க சம்பளம் கொடுக்கச் செய்த தேவன் இன்றும் மாறாதவர். நல்ல நிலத்தில் விழுந்த வேத வசனமாகிய விதையை வளரச்செய்து 30, 60, 100 ஆக விளையச் செய்கிற தேவன் இன்றும் நம்மில் அநேக காரியங்களை வளர, பெருகச் செய்ய வல்லவராக இருக்கிறார். இவ்விதமாய் வளருவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்று ஆராய்வோம்.

III  நாம் வளர என்னென்ன செய்ய வேண்டும்?

1) தப்புவிக்கப்படவேண்டும்

"மாயையைப் பேசும் வாயும், கள்ளத்தனமான வலதுகையும் உடைய அந்நிய புத்திரரின் கைக்கு  என்னை விலக்கித் தப்புவியும். அப்பொழுது எங்கள் குமாரர் இளமையில் ஓங்கிவளருகிற விருட்சக் கன்றுகளைப் போலவும், எங்கள் குமாரத்திகள் சித்திரந்தீர்ந்த அரமனை மூலைக்கற்களைப் போலவும் இருப்பார்கள்." சங்கீதம் 144:11, 12

இன்று பலவிதமான தந்திரமான வார்த்தைகளைப் பேசும் மக்கள் மத்தியில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். நம் பிள்ளளைகள், இளமையில் ஓங்கி வளருகிற விருட்சக்கன்றுகளைப் போல இருக்க வேண்டும். எல்லாவிதமான படிப்பும் படிக்கும்படி நம் சக்திக்கு மேலாக செலவு செய்து கொண்டு இருக்கிறோம். அவர்கள் சரியாக வளரும்போது நாம் மகிழ்ச்சியும், அவர்களால் மேன்மையும் அடைகிறோம். என் மகன் இன்ன வேலை செய்கிறான் அல்லது இன்ன படிப்பு படிக்கிறான் என்று நம்முடன் பணிபுரிபவரிடம் பகிர்ந்து கொள்ளுவது ஒரு மகிழ்ச்சியான காரியமாக இருக்கிறது. இன்று மாயையான தந்திரமான காரியங்களை நம் பிள்ளைகளின் படிப்புக்கு விரோதமாக செய்கிற மக்கள் ஏராளமாக இருக்கிறார்கள். சகோதர, சகோதரிக்குள்ளாக என் பிள்ளை மருத்துவராக வேண்டும். என்ஜினீயர் ஆக வேண்டும். scientist ஆகவேண்டும், வெளி நாடு சென்று படிக்க வேண்டும் என்ற போட்டியைப் பார்க்க முடிகிறது. என் மகன் படிக்கவில்லை. உன் மகனும் படிக்க கூடாது என்ற எண்ணத்துடன் செயல்படுகிற மக்களையும் பார்க்கிறோம். இவ்விதமான பொறாமை, தந்திரமான காரியங்களுக்கு கர்த்தர் நம்மை விடுவித்து தப்புவிக்கும்போது, பிள்ளைகளின் வாழ்வு மேன்மையான மாறிவிடும். சீரும் சிறப்பும் அடைவார்கள்.

2. கர்த்தரின் நாமத்துக்கு பயந்திருக்க வேண்டும்

"ஆனாலும் என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள் மேல் நீதியின் சூரியன் உதிக்கும்; அதின் செட்டைகளின்கீழ் ஆரோக்கியம் இருக்கும் ; நீங்கள் வெளியே புறப்பட்டுப்போய் கொழுத்த கன்றுகளைப்போல வளருவீர்கள் ." மல்கியா 4:2

காத்தருடைய நாமத்துக்குப் பயந்து வாழ்கிற வாழ்க்கை அவசியமாக இருக்கிறது. எந்த மனுஷன் கர்த்தருக்குப் பயந்து வாழ தன் வாழ்வில் இடம் கொடுக்கிறானோ அவன் கர்த்தரால் மிகுதியான ஆசீர்வாதம் அடைவான். நாம் கர்த்தருக்குப் பயந்து அவரின் வழி நடக்கும்போது பாக்கியவான்களாக மாறி விடுவோம். அத்துடன் நம் கையின் பிரயாசத்தை நாமே சாப்பிடும் மேன்மையையும் அடைவோம்.இன்று அநேகரின் சம்பாத்தியம் வீணான விதத்தில் கரைந்து போகிறது. ஆனால் கர்த்தருக்குப் பயப்படுகிறவர்கள் உன் பிரயாசத்தை நீ சாப்பிடுவாய் என்ற மேன்மையான நல் வாழ்வை அடைவோம். அத்துடன் நீதியின் சூரியன் உங்கள் மேல் உதிக்கும் என்ற மேன்மையடைவோம். தேவனால் உருவாக்கப்பட்ட சூரிய வெளிச்சம் மனிதனின் சுக வாழ்வுக்கு மிகுதியான ஆசீர்வாதத்தைக் கொண்டு வருகிறது. இதனால் வைட்டமின் ‘D’ சரீரத்துக்கு கிடைக்கிறது. இது நம் ஆரோக்கிய சுக வாழ்வுக்கு அவசியமாக இருக்கிறது. இதைப்போல விண்மீன்களையெல்லாம் உண்டாக்கினவர் நீதியின் சூரியனாக இருக்கிறார். அதினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் புறப்பட்டு போய் கொழுத்த கன்றுகளைப் போல் வளருவீர்கள் என்று தெளிவாக சொல்லப்பட்டும் இருக்கிறது.

3. திருவசனத்தின் மீது வாஞ்சை வேண்டும்

" நீங்கள் வளரும்படி, புதிதாய்ப்பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல்  வாஞ்சையாயிருங்கள்." 1 பேதுரு 2:3

வேத வசனம் களங்கமில்லாதது. இந்த வசனங்கள் ஆவியாயும் ஜீவனுமாயிருக்கிறது. இந்த அன்பின் வசனத்தை ஆராயும்போது நற்குணசாலிகளாய் மாறி விடுவோம். இந்த வசனங்கள் அடங்கிய வேதத்தை நேசிக்கும்போது, சமாதானத்தைப் பெற்றுக்கொள்வோம். இந்த வேத வசனத்தைத் தியானிக்கும்போது நம் காரியங்கள் ஜெயமாக மாறிவிடும். இந்த வசனத்தை எப்படி ஏற்றுக்கொண்டிருக்கிறோம்? கேட்கிறவர்களாய் மாத்திரம் அல்ல அதின்படி செய்கிற மக்களாய் மாறவேண்டும். இந்த ஜீவ வசனத்தால் நமக்கு அருளப்படுகிற வாக்குத்தத்தங்கள் ஆம் என்றும் ஆமென் என்றும் இருக்கிறது. அவைகள் கர்த்தரின் சமுகத்தில் இருந்து பெற்றுக் கொள்ளப்போகும் நன்மைகளை முன் அறிவிக்கிறதாக இருக்கிறது. இந்த வேத வசனங்கள் நம்மை ஆறுதல் படுத்தக்கூடியவைகள். சோர்ந்து போன நேரத்தில் நம்மைத் தேற்றி நல்வழி நடத்துகிறவைகள்.

கர்த்தர் இந்த வசனங்களை அனுப்பி நம்மை குணமாக்கி ஆசீர்வதிக்கிறவர். என் வாழ்வில் மிகுதியாக நோய்வாய்ப்பட்டு, I.C. ward -ல் இருந்தபோது என்னை மிகவும் திடப்படுத்தியது. இருதய நோயினால் பாதிக்கப்பட்டு மரணம் நேரிட்டால் என் குடும்பம் என்ன ஆகும் என்று உள்ளத்தில் எண்ணி உடைந்து போன இருதயத்துடன் துக்கம் நிறைந்தபோது, நம்பிக்கையற்ற என் உள்ளத்தில் 'பொல்லாப்பு நேரிடாது, வாதை உன் கூடாரத்தை அணுகாது ' என்ற வசனம் என்னைத் தேற்றி திடப்படுத்தியது. புது உற்சாகத்தை எனக்குள் பெருகச் செய்தது. அவ்வாக்கியம் புது வாழ்வை எனக்குள் உருவாக்கியது. அழிவின் குழிக்கு விலக்கிக் காத்தது.

இந்த ஜீவ வசனங்கள் நம்மை நல் வழிநடத்தக்கூடிய நீதியின் வசனங்களாகும். இல்லாதவைகளை இருக்கிறவைகளைப்போல் அழைக்கிற தேவனின் வசனங்கள் சந்ததியைப் பெருகச் செய்யும். சகலவிதமான சமாதானத்தை சம்பூரணமாக பெருகச் செய்கிற இந்த வசனத்தை இன்று தியானிக்க நேசிக்க இடம் கொடுப்போம். இவைகள் தேவனின் ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ள ஆலோசனையின் வார்த்தைகளாய் இருக்கிறது. இதின் மேன்மை நன்மை இன்றும் என்றுமுள்ளது. எனவே இவ்வசனங்களின் மேல் வாஞ்சையாயிருப்போமாக.

4. தாக்கமுள்ளவர்களாய் மாற வேண்டும் 

"தாகமுள்ளவன்மேல் தண்ணீரையும், வறண்ட நிலத்தின் மேல் என் ஆறுகளையும் ஊற்றுவேன்; உன் சந்நிதியின் மேல் என் ஆவியையும் உன் சந்தானத்தின் மேல் என் ஆசீர்வாதத்தையும் ஊற்றுவேன்.” ஏசாயா 44:3

"அதினால் அவர்கள் புல்லின் நடுவே நீர்கால்களின் ஓரத்திலுள்ள அலரிச்செடிகளைப்போல வளருவார்கள்." ஏசாயா 44:4

தாகமுள்ளவர்களாய் மாறும்போது நம் சந்ததியில் சிறந்த நல்  ஆசீர்வாதங்கள் பெருகிவிடும். இன்று நம் உள்ளத்தில் எவ்விதமான காரியங்கள் இருக்கிறது? நமக்குள் அவரைப் பற்றிய எண்ணங்களும், சிந்தைகளும் இருக்குமானால், எந்நேரமும் துதியும் ஜெபமும் வாழ்வில் நிறைந்துவிடும். இந்த தேவ வார்த்தையடங்கிய புத்தகம் உங்கள் உள்ளத்தில் பதிந்து விடும். அவர் வல்லமையைப் பற்றி, அவரின் பிரசன்னத்தை பற்றிய ஆவல்கள் பெருகுவதால், அதைக்குறித்தே பேசுவோம். தியானிப்போம். இன்று நம் பிள்ளைகளுக்கு , சந்ததிக்கு இந்த உலகப் பிரகாரமான ஆஸ்திகள், செல்வங்களைச் சேர்த்து வைக்க ஆவலுடன் பாடுபடுகிறோம். என் இளைய மகனுக்கு, மூத்த மகனுக்கு என்று வீடு நிலம் பொருட்களைத் தேடி சேர்க்கிறோம். இவைகளைக் காட்டிலும் கர்த்தரைக் குறித்து ஒரு விருப்பம், தாகம் நமக்குள் இருக்குமென்றால், கர்த்தர் தம்முடைய வார்த்தையின்படியே நாம் நினைப்பதற்கும் வேண்டுவதற்கும் மிக மேலான ஆசீர்வாதத்தைப் பெருகச் செய்வார்.

இவ்வுலகத்தின் ஆஸ்திகள், பிள்ளைகளின் அன்பின் ஐக்கியத்தை கெடுத்து, சமாதானத்தை ஒழிந்து போகச் செய்துவிடும். ஆனால் கர்த்தரிடம் தாகமாயிருந்து, அவர் சமூகத்தை நித்தமும் தேடி அதினால் கர்த்தாதி கர்த்தர் அருளும் ஆசீர்வாதத்தைப் பிள்ளைகளுக்குச் சேர்த்து வைப்போம் என்றால், என்றும் அன்பின் ஐக்கியமும் ஒருவரை ஒருவர் தாங்கி ஆதரித்து வாழும் வாழ்க்கையும் இருக்கும்.

5) நீதிமானாக மாற வேண்டும்

"நீதிமான் பனையைப்போல் செழித்து லீபனோனிலுள்ள கேதுருவைப்போல் வளருவான்." சங்கீதம் 92:12

இன்று நாம் நீதிமானாக மாற்றப்பட்ட இடம் கொடுக்க வேண்டும். நீதிமான் என்றாலே கர்த்தரின் நீதியை என்றும் எல்லாவற்றிலும் செய்வதாகும். சிலர் மற்றவர் காரியங்களில் நீதியானதைப் பேசுவார்கள். நீதியானத்தைச் செய்ய ஆலோசனைத் தருவார்கள். ஆனால் தங்கள் குடும்பத்தில், தங்கள் காரியங்களில் நீதிக்கு மாறான காரியங்களைச் செய்வார்கள். அவைகள் அநீதியான காரியங்கள் ஆகும். தேவ சமூகத்தில் நாம் எப்படி நம் காரியங்களைச் செய்கிறோம்.

இன்று நாம் கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக் கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறோம். 'நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறோம்.' என்ற ரோமர் 5:1 ன் படி நாம் வளர்ச்சியைப் பெற தகுதியடைகிறோம். இன்னும் 'நாம் அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்க' என்று ரோமர் 5:9 ல் பார்க்கிறபடி இயேசு கிறிஸ்து நமக்காக சிலுவையில் சிந்திய இரத்தத்தாலே இந்த மேன்மையைப் பெற்றுக்கொள்கிறோம்.

இவ்விதமாய் நீதிமானாக மாறுவதினால் நம் வாழ்வு பனையைப் போல செழிப்பும், கேதுருவைப்போல் வளரும் ஆசீர்வாதத்தையும் அடைகிறோம். கேதுரு மரமானது அதிக உறுதியானது. சாலொமோன் கேதுருமர உத்திரங்களாலும் பலகைகளாலும் ஆலயத்தை மச்சுப்பாவி  முடித்தான் என  1 இராஜா 6:9 ல் பார்க்கிறோம். இவ்விதமாய் நீதிமான் உறுதியான நல் வாழ்வையடைவான்.

இந்த மேன்மையான நல் வாழ்வை நாம் பெற்று வாழ இயேசு கிறிஸ்து தம் இரத்தத்தைச் சிலுவையில் சிந்தி, நம்மை கழுவி நீதிமான்களாக்கி யிருக்கிறார்.

கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.

கிறிஸ்து இயேசுவின் பணியில்

சகோ.c. எபனேசர் பால்.