"கர்த்தர் உன் போக்கையும் உன் வரத்தையும் இது முதற்கொண்டு என்றைக்குங் காப்பார்."

                                                                                                                                                          சங்கீதம் 121:8

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினால் வாழ்த்துகிறேன். நவம்பர் 02, 1984 ம் ஆண்டு வெள்ளி இரவில் புதுக்கோட்டையில், T.E.L.C  Middle school கட்டிடத்தில் முழு இரவு ஜெபம். அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சகோ. தாமஸ் அவர்கள், அங்குள்ள ஜெபக்குழுவினருடன் ஒழுங்கு செய்திருந்தார்கள். அந்த முழு இரவு ஜெபக்கூட்டத்திற்குக் காலஞ்சென்ற G. சாமுவேல் அவர்கள் செய்தி கொடுக்க அழைக்கப்பட்டிருந்தார்கள். தன் தொண்டையில் உண்டான கேன்சர் நோயிலிருந்து அற்புத சுகத்தை அக்டோபர் மாதத்தில் பெற்றிருந்த அவர்கள், கூட்டத்திற்கு செல்வதா, வேண்டாமா என்னிடம் கேட்டார்கள். போங்கள் அது உங்களுக்கு மகிழ்ச்சியையும், ஆசீர்வாதத்தையும் உண்டாக்கும் என்றேன். நீங்களும் என்னுடன் வருகிறீர்களா என்று கேட்டார்கள். சரி என்று கூறினேன். நாளைக்கு இந்திய பிரதமர் இந்திரா காந்தியின், இறுதிச் சடங்கு இருக்கிறது. பஸ்  எல்லாம் ஓடாதே என்றார்கள். நான் உடனே என் ஸ்கூட்டரில் சென்று விடலாமா என்று கேட்டேன். அவர்கள் என்னால் உட்கார்ந்து அவ்வளவு தூரம் வர முடியாது என்றார்கள். சரி பஸ்சில் செல்வோம் என்றேன். காலை வீடு திரும்ப என்ன செய்வது என்று கேட்டார்கள். 3 ம் தேதி காலை 5 மணிக்கு பஸ் நிலையம் வந்தால் கர்த்தர் வாகனம் தருவார் என்று சொன்னேன். சரி என்று புறப்பட்டோம். திருச்சி பஸ் நிலையத்தில் ஒரு மஞ்சள் நிற பஸ் நின்று கொண்டு இருந்தது. அதன் நடத்துனர் புதுக்கோட்டை புதுக்கோட்டை என்று சத்தமிட்டு கொண்டு இருந்தார். பஸ் நிலையத்தில் எந்த பஸ்சும் வாகனமும் இல்லை. சரி என்று சொல்லி அதில் ஏறினோம். நாங்கள் உட்கார இடம் கிடைத்தது. சாமுவேல் சகோதரர் நாளை இந்த பஸ் திரும்பி வருமா என்றார்கள்? சார் இப்பொழுதே பயந்து கொண்டு செல்கிறோம். இதன் shed புதுக்கோட்டையில் இருப்பதால் போகிறோம் என்றார்கள்.

கூட்டம்  நடத்தும்  இடத்திற்குச்  சென்றோம். துதி ஸ்தோத்திரங்கள் ஜெபங்கள் ஏறெடுக்கப்பட்டது. பின்னர் சகோ. சாமுவேல்  அவர்கள் செய்தி   கொடுத்தார்கள் . காலை 4.30 மணிக்கு சகோ. தாமஸ் அவர்களின் மோட்டார் சைக்கிளில் நாங்கள் இருவரும் ஏறிக் கொண்டோம். பஸ் நிலையத்தில் எங்களை விட்டு விட்டு அவர்கள் சென்று விட்டார்கள். பஸ் நிலையத்தில் எந்த வாகனமும் இல்லை. அந்த நேரத்தில் ஒரு டாக்சி ஒன்று எங்கள் முன் வந்து நின்றது. டிரைவரைப்  பார்த்து எங்கே  போகிறது என்று சகோதரர் கேட்டார்கள். அவர் திருச்சிக்கு என்று சொன்னார். நாங்கள் வரலாமா என்று கேட்டார்கள். சார் அங்கே போயிருக்கிறார். அவரிடத்தில் தான் கேட்க வேண்டும். செய்தி தாளைப் போட்டுவிட்டு பயத்துடன் திருச்சி போய்க் கொண்டு இருக்கிறோம் என்றார். அந்த சமயத்தில் செய்தி தாளைக் கொடுக்க வந்தவர் வந்தார். நாங்களும் உங்கள் வாகனத்தில் வரலாமா என்று கேட்டவுடன் வாங்க சார். நாங்கள் பயந்து போய் கொண்டு இருக்கிறோம் என்றார்கள். கர்த்தரின் வார்த்தைப்படி காலை 5 மணிக்கு ஏற்ற வாகனம் கிடைத்தது சுக பத்திரமாய் வீடு வந்தடைந்தோம். 

அன்பு சகோதரனே. சகோதரியே, இன்று ஏற்பட்ட 'லாக்டவுன்' நிமித்தம் நீங்கள் வேலை செய்துகொண்டிருந்த நாட்டிற்கு இன்னும் விமான சேவை இல்லையே என்று கலங்காதீர்கள். ஐயோ என் மனைவி மக்களைவிட்டு விட்டு வந்தேன். நான் போகமுடியாதிருக்கிறேன் என்று சோர்வடையாதிருங்கள். எனக்கு ஒத்தாசை வரும் பர்வதமாகிய என் கர்த்தாதி கர்த்தரை நோக்கி பார்க்கும்போது அவர் ஒத்தாசை அருளி ஆசீர்வதிப்பார். அவரே நம் பாதையின் தடைகளை நீக்குவார். வழியைச் செவ்வையாக்குவார். இன்றே உதவி வரும் அந்த அன்பின் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை நோக்குவோம். யாரும் பூட்ட முடியாத திறந்த வாசலைத் தருவார். உன் போக்கையும், வரத்தையும் காப்பதுடன் உன்னை ஆசீர்வதிப்பார்.

கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.

சகோ. எபனேசர் பால்.