"கர்த்தர்மேல் நம்பிக்கைவைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான்.''

                                                                                                   எரேமியா 17:7

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

      கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினால் வாழ்த்துகிறேன்.

      சில காலங்களுக்கு முன்பாக ஒரு குடும்பத்தார் மிகுந்த கவலையோடு, கண்ணீரோடு, ஐயா, நாங்கள் செய்கிற வைக்கில் வேலையிலே நாங்கள் பெறவேண்டிய கூலியைப் பெறமுடியவில்லை. எங்கள் கூலிக்குரிய பில்லைக் கொடுத்தும், அது பலமாதங்கள் ஆகியும் கிடையாமல் தாமதித்துக் கொண்டே இருக்கிறது. நாங்கள் கட்டவேண்டிய INSTALMENT PAYMENT எல்லாம் சரியாக செலுத்த முடியாதபடி கஷ்டப்படுகி றோம் என்று சொன்னார்கள். அவர்களோடு சேர்ந்து ஜெபிக்க ஆரம்பித்தேன். நீங்கள் வைத்திருந்த கோழிக்குஞ்சை எதற்காகவாவது யாருக்காகவாவது கொடுத்தீர்களா என்றேன். முதலில் ஞாபகம் இல்லை என்று சொன்னார்கள். பின்னர் அந்தச் சகோதரி, ஆமாம், என் சிறுவனான மகனுக்கு ஒரு கோழிக்குஞ்சை விளையாட, பார்க்க, வளர்க்க, என் வீடடின் அருகில் உள்ள ஒரு இளைஞன் கொடுத்தான். என் மகன் அதைப் பார்த்து மகிழ்வான். ஆனால் ஒரு நாளிலே அந்தக் கோழிக்குஞ்சைக் கொடுத்த இளைஞனும் அவனது இரண்டு நண்பர்களும் வீட்டுக்கு அருகில் வந்த வெள்ளத்தைப் பார்க்க சென்றபோது,  வெள்ளத்தில் இழுப்புண்டு மரித்துப் போனார்கள். அவர்கள் இறந்த நாள் சனிக்கிழமையாய் இருந்தது. சனிப்பிணம் துணைத்தேடும் என்று பயந்து, அந்த இளைஞனின் வீட்டில் கோழிக்குஞ்சு தேடினார்கள். மற்ற இரு இளைஞனின் வீட்டாருக்கும் கோழிக்குஞ்சு கிடைத்துவிட்ட சூழ்நிலையில் இவர்கள் என்ன செய்வது என்று யோசித்தார்கள். அந்த நேரத்தில் அந்த இளைஞன் என் மகனுக்குக் கொடுத்த கோழிக்குஞ்சை நாம் வைத்திருக்கக் கூடாது என்று கொடுத்துவிட்டேன். நானும் என் சிறுபிள்ளையான என் மகனைப் பயந்து என் இனத்தார் வீட்டிற்கு அனுப்பி வைத்தேன். நாங்கள் வளர்த்து கொடுத்த அந்த கோழிக்குஞ்சை அந்த இளைஞனின் பாடையில் கட்டித் தொங்க விட்டு ஈமச்சடங்கு செய்யக் கொண்டு சென்றார்கள்.

      அன்பு சகோதரனே/சகோதரியே, பாரம்பரிய பழக்கத்தின்படி தவறான காரியங்களுக்கு உங்கள் உடைமைகளை, பொருட்களை, பூக்களை கொடுக்காதீர்கள். மனிதர்களை பிரியப்படுத்தும்படியாக இதை நீங்கள் செய்யும் போது, உங்கள் கைகளின் பிரயாசங்களின் ஆசீர்வாதங்கள் தடைபடும். தாங்கள் செய்தது தவறு என்றும், தவறான நம்பிக்கைக்கு தங்களின் வீடடில் உள்ள கோழிக்குஞ்சை கொடுத்தேன் என்றும், பாவ அறிக்கை செய்த போது, அவர்களுக்கு வரவேண்டிய பணத்தை கிடைக்கச் செய்து, அலுவலகப் பணியாளர்களுக்கு கொடுக்க வேண்டிய சம்பளம், வீட்டின் வாடகை மற்றும் எல்லாவற்றையும் கொடுக்க கர்த்தர் உதவி செய்தார். கர்த்தரை விட்டு விலகும் காரியங்களுக்கு இடம் கொடாது எல்லாக் காரியங்களிலும் எல்லா வேலையிலும் கர்த்தரையே நம்பி செயல்படுவோம்.

       கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.

      சகோ.c. எபனேசர் பால்