இந்த மாத செய்தி

செய்தி

"...நீங்கள் துக்கப்படுவீர்கள், ஆனாலும்
உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்."

                                                                                    யோவான் 16:20

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தினால் வாழ்த்துகிறேன்.

அநேகர் என் துக்ககரமான வாழ்வின் காரியத்தை யாரிடம் பகிர்ந்து கொள்ள முடியும், யார் இதைப் பொறுமையுடன் கேட்பார்கள், யார் இதிலிருந்து விடுதலை தருவார்கள் என்று அங்கலாய்க்கிறவர்களாய் இருக்கிறார்கள். வாழ்க்கையில் சந்தோஷம் நிறையும் நேரமுண்டு. அதே சமயத்தில் துக்கம் நிறைந்த நேரமுமுண்டு. மனிதரின் வாழ்வில் உண்டாகும் 'லேளகிக துக்கமோ மரணத்தை உண்டாக்குகிறது' என 2 கொரி. 7:10ல் பார்க்கிறோம். உலக காரியங்கள் அநேகர் வாழ்வில் துக்கத்தைப் பெருகச் செய்கிறதைப் பார்க்கிறோம். வீட்டில், வேலை ஸ்தலத்தில், தங்கும் இடங்களில், குடும்ப வாழ்வில் உண்டாகும் துக்கங்கள் அனுதின வாழ்வில் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தன்னயம், நான், என்னுடைய காரியங்கள் என்பதினால் மற்றவர்களின் உள்ளங்கள் உடையத்தக்க வார்த்தைகளைப் பேசி, செய்கைகளைச் செய்கிறார்கள். இது மற்றவர்களின் வாழ்வில் துக்கத்தை அதிகரித்து விடுகிறது.

ஒருமுறை ஒரு சகோதரி தற்கொலை எண்ணத்திற்குள் இருப்பதை ஜெப நேரத்தில் உணர்ந்து ஏன் இந்த நிலைக்கு ஆளாகுகிறீர்கள் என்று கேட்டேன். என் கணவரின் அன்பற்ற செயல் என்றார்கள். குடும்ப வாழ்வில் ஏற்பட்ட துக்கம் அவர்கள் உள்ளத்தில் துக்கத்தை நிறைத்தது. மரணத்தை விளைவிக்கும் வண்ணமாக செயல்படுத்தியது. இதைப்போல பலர் வாழ்வில் உலகக் காரியங்களினால் உண்டாகும் துக்கம் மரணத்தைக் கொண்டு வரக்கூடியதாக இருக்கிறது.

நமக்குள்ளாக தேவனுக்கேற்ற துக்கம் உண்டானால் அது மனஸ்தாபப்படுவதோடு நின்றுவிடாமல் இரட்சிப்புக்கேதுவான மனந்திரும்புதலை உண்டாக்குகிறது. அநேகர் தங்கள் சரீரத்தின் குறைவுகளினால் துக்கமடைகிறார்கள். இவர்களின் துக்கம் லெளகிக மக்களில் உள்ள துக்கம்போல இருந்தாலும் கர்த்தரின் முகத்தை நாட இடங்கொடுத்தவர்களாய் இருப்பார்கள். உள்ளங்களை ஆராய்கிறவர் அவர்களின் துக்கங்களை அறிந்தவர். அவர்களில் மனந்திருப்புதலை உண்டாக்கும் உணர்வைத் தருகிறார். அவர்கள் மனது கல்வாரியின் அன்பை, கிருபையைப் பெற்றுக் கொள்ளும். தாழ்மையடைந்து கிறிஸ்துவிடம் முழுமையாகத் திரும்பிவிடுகிறார்கள். இந்த வார்த்தைகளை வாசிக்கும் தேவப்பிள்ளைகளே! துக்கத்தை உண்டாக்கிய காரியங்களினால் இன்று கர்த்தரைப் பற்றி, கல்வாரியின் அன்பைப் பற்றி நீங்கள் உணர்வடையும்போது மனந்திரும்புதல் அடைந்து விடுவீர்கள்.

மேலும் சிலர் தங்களின் வாழ்வில் மீட்கப்படும் நாளுக்காக அருளப்பட்ட பரிசுத்த ஆவியானவரைத் துக்கப்படுத்திவிடுவார்கள். இவர்கள் தங்கள் வார்த்தை செயல்களின் கர்த்தர் விரும்பாத காரியங்களைச் செய்து விடுவார்கள். இவர்கள் அந்தப் பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்துவார்கள். தொடர்ந்து துக்கப்படுத்தும்போது அவர்களில் இருந்த கர்த்தருடைய ஆவியானவர் பூரணமாக விலகிவிடுவார். சிம்சோன், சவுல் என்பவர்களின் வாழ்வில் துக்கப்பட்ட ஆவியானவர் வெளியேறினார்.

இயேசு கிறிஸ்து துக்கமடைந்த நிகழ்ச்சியை நாம் மத். 26:37ல் பார்க்கிறோம். தனது சிலுவைப் பாடுகளின் மரணத்தின் கொடூரத்தை உணர்ந்து துக்கமடைந்தார். இவ்வுலகில் தோன்றி, நன்மையான காரியங்களைச் செய்து, அநேகரில் அற்புதங்கள் செய்து தேவனுடைய ஜீவ வார்த்தைகளைப் போதித்தவர் துக்கமடைந்தார். அவரின் உள்ளத்தின் துக்கம் நம்மைக் குறித்து இருந்தது. இவ்வுலகில் அவர் தமது கடைசி நேரத்தில் தமக்கு நடக்க இருக்கும் அனைத்துக் காரியங்களையும் தன் உள்ளத்தில் அறிந்து வியாகுலப்பட்டார். அன்பு சகோதரனே, சகோதரியே! நம்மை மீட்க நம் பாவங்களை, நம் நோய்களை, நம் துக்கங்களைச் சுமக்க, நம் சாபங்களைத் தீர்க்க சிலுவைப் பாடுகளின் மரணத்திற்கு தம்மையே அர்ப்பணித்த ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம் நல்வாழ்விற்காகத் துக்கப்பட்டார்.

ஏன் மனிதருக்கு துக்கம் உண்டாகுகிறது?

1. சாபத்தினால் துக்கம்

"தேசம் விபசாரக்காரரால் நிறைந்திருக்கிறது, தேசம் சாபத்தினால் துக்கிக்கிறது..." எரேமியா 23:10

இன்று விபசாரப் பாவமானது உலகமெங்கும் அதிகமாகக் காணப்படுகிறது. இதன் பிரதிபலனாக அநேகக் கொடும் வியாதிகள் உருவாகிவிட்டது. மருத்துவரால் என்ன வியாதியென்று அறிய முடியாத வியாதிகள், எய்ட்ஸ் நோய் போன்றவைகள் பாதிப்பைக் கொண்டு வந்திருக்கிறது. இந்தக் கொடூரமான வியாதிகள் சாபமாக வந்திருக்கிறது. தேசங்களில் இந்த விபசாரமானது சாதாரண செயலாக மாறிவிட்டது. வாலிபர் வயோதிகர் யாவரையும் இந்த விபசாரப் பாவம் ஆட்கொண்டிருக்கிறது.

ஒருமுறை ஒரு தேசத்தில் நடைபெற்ற ஊழியத்தை முடித்து தங்கியிருந்த இடத்திற்கு வந்தோம். அவ்வாறு வரும்போது சாலையின் இருபுறமும் சொல்ல முடியாத அளவிற்கு வாலிபப் பெண்கள், நடுத்தர வயதுடையவர்கள் அழகாக உடுத்தி இரவு 12 மணிக்கு மேல் நின்று கொண்டிருந்தனர். எதற்கு என்று பார்த்தால் தங்கள் சரீரங்களை விற்று சம்பாதிக்க என்று அறிந்தேன். யுனிவர்சிட்டியில் உயர்படிப்பு படிக்க வந்தவர்கள், பணத்தேவைக்காக  வேறு வழியில்லாது, இந்த விபசாரத்திற்குத் தங்கள் சரீரங்களை விற்றுப் போட்டிருக்கிறார்கள். சம்பாத்தியத்திற்காக சுமார் 2 கி.மீ. தூரம் வரை இந்தக் காட்சி இருந்தது. என்னுடன் கூடவந்த மகனைப் பார்த்துக் கேட்டேன் ஏன் என்று? வேலை கிடைக்காத காரணம். கல்லூரிக்கு வேண்டிய Fees யைக் கட்டி, சாப்பாட்டிற்கும், தங்கும் இடத்திற்கும் வாடகைப் பணத்தைக் கொடுக்க முடியாததால், தேவைகளைச் சந்திக்க இந்தக் காரியத்தைச் செய்ய தங்கள் சரீரங்களை ஒப்புக்கொடுத்துள்ளார்கள் என்றான். வார நாட்களில் இவ்வாறு நிற்பவர் எண்ணிக்கை சில ஆயிரங்களாக இருக்கும். வெள்ளி, சனி, ஞாயிறு தினங்களில் இது பல்லாயிரமாக இருக்கும் என்றான். சாலையோர நடைபாதையில் நடக்க முடியாத அளவு பெண்களின் கூட்டம் இன்றும் இருப்பதைக் பார்க்கலாம்.

ஒரு காலத்தில் வேலை செய்ய வழியில்லாதவர்கள் ஒரு சிலர் இவ்வாறு சுற்றுலா இடங்களில் இப்பாவம் நடைபெற வழி வகுத்திருக்கிறார்கள். ஆனால் இன்று பணத்தேவை என்ற அடிப்படியில் பல ஆயிரக்கணக்கானவர்கள் இந்தப் பாவத்திற்கு அடிமையாயிருக்கிறார்கள். இவ்வகையான பாவம் சாபத்திற்குட்படுத்துகிறது. இந்த சாபத்தினால் துக்கம் நிறைகிறது.

2. கர்த்தருடைய சிட்சையினால் உண்டாகும் துக்கம்.

"எந்தச் சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல் துக்கமாய்க் காணும்; ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும்." எபிரேயர் 12:11

சிட்சையானது எல்லாருக்கும் அல்ல. கர்த்தர் யாரை நேசிக்கிறாரோ அவர்களில் இந்தக் காரியத்தைக் கட்டளையிடுகிறார். நம் வீட்டில் பிள்ளை ஒன்று சிறு வயதில் படிக்க முடியாது, நல்ல வழியில் நடக்க முடியாது என்று சொல்லும்போது, செயல்புரியும்போதும் நாம் அப்பிள்ளையை அடித்து அல்லது ஏதாவது ஒரு வழியில் அன்புடன் திருத்த முயற்சிக்கிறோம். இதைப் போல் நம் பரிசுத்த வாழ்வுக்காக, கர்த்தர் நம்மைத் தம் பக்கமாக இழுக்க நம்மைச் சிட்சிக்கிறார்.

எனது வாழ்வில் சிறுவயதில் இருந்தே என்னுடைய பொழுதுபோக்குக்கு  முக்கியத்துவம் கொடுத்து வந்தேன். நண்பர்களும் அதற்கேற்றவிதமாகவே இருந்தனர். இதினால் கிறிஸ்துவை அறிகின்ற வாழ்வுக்கு இடம் கொடுக்கவில்லை. மேலும் எனது தகப்பனார் ஒரு சி.எஸ்.ஐ போதகராகப் பணியாற்றிய காலத்தில் பட்டப்   பாடுகளைப் பார்த்தேன். என் தகப்பனார் அவருக்குப் பின் தொடர்ந்து ஊழியம் செய்ய வேதாகமக்  கல்லூரிக்குச் சென்று படித்து வரும்படி என்னிடம் கூறினார்கள். அதற்கு நான் மாட்டேன் என்று கூறி, உலகப் பிரகாரமான வேலையில் இருந்து, உலகத்தானைப் போல வாழ்ந்தேன். கர்த்தர் ஒரு வியாதியை அனுமதித்ததினால் 14 ஆண்டுகள் கழித்து நானாக ஊழியத்தைச் செய்ய என்னை அந்த சிட்சையின் வழியாக அர்ப்பணித்தேன்.

அன்பு தேவப்பிள்ளையே! உன் வாழ்வில் சகலவற்றையும் செம்மையாக்கி, சீர்ப்படுத்தி ஒரு ஜெயமுள்ள வாழ்வு வாழ வழிநடத்தும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்மை மீட்பதற்காக நம்மை சிட்சிக்கிறார். இவைகள் நம் நல்வாழ்வுக்காக என்று அறிந்து புரிந்து செயல்படும் போது நம் துக்கம் நீங்கிவிடும்.

3. அன்பின் பண்புகள் குறைந்துள்ளவர்கள் வாழ்வில் துக்கம் உண்டாகும்.

"அதற்கு இயேசு: நீ பூரண சற்குணனாயிருக்க விரும்பினால், போய், உனக்கு உண்டானவைகளை விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது, பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு என்னைப் பின்பற்றி வா என்றார். அந்த வாலிபன் மிகுந்த ஆஸ்தியுள்ளவனாயிருந்தபடியால், இந்த வார்த்தையைக் கேட்டபொழுது, துக்கமடைந்தவனாய்ப் போய்விட்டான்." மத்தேயு 19: 21, 22

ஒரு வாலிபன் இயேசு கிறிஸ்துவினிடம் வந்த நிகழ்ச்சியை மத். 19:16 முதல் பார்க்கிறோம். இந்த வாலிபன் நித்திய ஜீவனை அடைய விரும்பினான். அவன் உள்ளம் விரும்பின அந்த மேன்மையான காரியத்தை அவன் பெற முடியாதவனாய் துக்கத்துடன் திரும்பிப்போனான். இந்த வாலிபன் தன் தாய் தகப்பனைக் கனம் பண்ணினவன். உன்னிடத்தில் அன்பு கூருவதுபோல் பிறனிடத்திலும் அன்பு கூருவாயாக என்ற வார்த்தையைக் கைக்கொள்ளுகிறேன் என்றவன். அதை நடைமுறையில் கைக் கொள்ளாதவன். கிறிஸ்து இயேசுவின் ஆலோசனையின்படி வாழ்க்கையில் செய்ய முடியாதவனாய் இருந்தான். உலகத்தின் ஐசுவரியத்தைக் கிறிஸ்துவுக்காக இழக்க ஆயத்தமாக இல்லை. இதினால் அவன் துக்கமடைந்து அந்த இடத்தை விட்டுச் சென்றான். இன்றும் அநேகர் தங்கள் வாயினால் நான் கர்த்தரை நேசிக்கிறேன், கர்த்தரை நம்புகிறேன் என்று அறிக்கை செய்கிறார்கள். ஆனால் வாழ்க்கையின் நடைமுறையில் கைக்கொள்ளாதவர்களாயிருக் கிறார்கள். 

அன்பு சகோதரனே, சகோதரியே! உன் வாழ்வில் கர்த்தருக்கு நீ என்ன செய்திருக்கிறாய் ? அவர் உனக்காக செய்து முடித்திருக்கும் காரியத்தை நீ உணர்ந்து அறிந்திருக்கிறாயா? அவர் எனக்கு இதைச் செய்யவில்லை என்று பல காரியங்களில் இன்று குறைவுப்பட்டுக் கொண்டு  செய்யவில்லை என்று பல காரியங்களில் இன்று குறைவுப்பட்டுக் கொண்டு இருப்பாய் என்றால் அவருடைய அன்பில் பூரணப்பட இடங்கோடு. உனக்கு உள்ளவைகளில் மற்றவர்கள் உதவியடைய இடங்கொடு. உன் நேரமாக இருக்கலாம். தாலந்துகளாக இருக்கலாம். பொருள் பணம் எதுவாக இருந்தாலும் இதைச் செய்ய இடங்கொடு. கர்த்தர் உன்னை நிச்சயமாய் ஆசீர்வதிப்பார். நித்திய ஜீவன் அடைய தகுதியும் அடைவாய். இந்த அன்பின் ஆலோசனை அந்த ஐசுவரியம் நிறைந்த வாலிபனுக்குத் துக்கத்தைக் கொடுத்தது. அவன் துக்கத்துடன் இயேசு கிறிஸ்துவை விட்டுத் திரும்பிப் போனான்.      

4. பல சோதனைகளினால் துக்கம் உண்டாகுகிறது.

"...இப்பொழுது கொஞ்சக்காலம் பலவிதமான சோதனைகளினாலே துக்கப்படுகிறீர்கள்." 1பேதுரு 1:6

சோதனை என்றவுடன் எல்லோருக்கும் ஒரு கலக்கமாக மனதிற்கு வேதனையாக இருக்கிறது. ஒருமுறை ஒரு வாலிபனின் சான்றிதழ்கள் வேலை தரும் ஸ்தாபனத்தார் மூலம் சோதிக்கப்பட்டது. சோதித்தவர்கள் அவைகளைத் திரும்பக் கொடுத்துவிட்டார்கள். உனக்கு வேலை இல்லை என்று கூறிவிட்டார்கள். ஏன் என்றால் அது பொய் சான்றிதழ்.

நம்முடைய விசுவாசம் சோதிக்கப்படும்போதும், கிறிஸ்துவின் அன்பு சோதிக்கப்படும்போதும் சோர்ந்தும் கலங்கியும் விடுகிறோம். சோதனையில் நாம் ஜெயங்கொள்ளும்போது உயர்வும் ஆசீர்வாதமும் கிடைக்கும். கானானிய ஸ்திரீ இயேசு கிறிஸ்துவிடம் வந்தபோது, அவளது விண்ணப்பத்தையும், சீஷர்களின் பரிந்துரையையும் கேட்டு அந்த மகளில் அற்புதம் செய்யவில்லை. ஆனால் பெரிய விசுவாசத்தை அவளில் கண்டார். நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது என்றார். உடனே மகள் சுகமடைந்தாள். சோதனைகளில் ஜெயம் அற்புதத்தை விளைவிக்கும்.

உயிர்த்தெழுந்த ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தமது ஊழியத்தின் பொறுப்பைத் தன்னை மூன்று முறை மறுதலித்த பேதுருவின் அன்பைச் சோதித்தறியும் வண்ணமாக மூன்று முறை என்னை நேசிக்கிறாயா என்று கேட்டார். மூன்று முறையும் என்னை நேசிக்கிறாயா என்ற இயேசு கிறிஸ்துவின் கேள்வி அவனைத் துக்கப்படுத்தியது.

இன்று உன் விசுவாசம், கிறிஸ்துவின் மேலுள்ள அன்பு, கீழ்ப்படியும் காரியங்கள் சோதிக்கப்படும்போது துக்கப்படாது தேவனைத் துதி.

நம் வாழ்வில் துக்கம் எப்போழுது சந்தோஷமாக மாறும் ?

1. சத்துருவின் தந்திரங்களின் மீது ஜெயம் வரும்போது.

"வருஷந்தோறும் ஆதார் மாதத்தின் பதினாலாம் பதினைந்தாம் தேதிகளை, யூதர் தங்கள் பகைஞருக்கு நீங்கலாகி இளைப்பாறுதல் அடைந்த நாட்களாகவும், அவர்கள் சஞ்சலம் சந்தோஷமாகவும், அவர்கள் துக்கம் மகிழ்ச்சியாகவும் மாறின மாதமாகவும் ஆசரித்து." எஸ்தர் 9:21

நம்முடைய சத்துருவாகிய பிசாசானவன் நம்முடன் தந்திரமாய் யுத்தம் செய்கிறவனாய் இருக்கிறான். உலகம் அனைத்தையும் மோசம் போக்குகிற பிசாசென்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம் (வெளி.12:9) தன் ஆளுகைக்குட்பட்டவர்களைக் கொண்டு நம்மிடம் யுத்தம் செய்கிறவனாய் இருக்கிறான். கர்த்தரின் ஜனங்களாகிய யூதர்களுடன் அன்று தந்திரமாய் யுத்தம் செய்தான்.

ஆகாஸ்வேருவின் மோதிரத்தினால் முத்திரையிடப்பட்ட கட்டளையை எல்லா தேசங்களுக்கும் அனுப்பி யூதர்களை அழிக்க ஆமான் கட்டளை பெற்றான். ஆதார் மாதம் 13ம் தேதியில் யூதர்களை முற்றிலும் அழிக்க ஆமான் திட்டம் தீட்டினான். இந்தச் செய்தி எங்கெல்லாம் சென்றதோ அங்குள்ள யூதர்களுக்குள்ளே மகா துக்கத்தையும், அழுகையையும், புலம்பலையும் உண்டாக்கியது. இந்த நிலையில் மொர்தெகாய் எஸ்தரிடன் நிலையைக் கூறினான். எஸ்தருக்கு ராஜாவின் கண்களில் தயவு கிடைத்தபோது அவள் விரும்பினதற்கு இணங்கி ஆயத்தமாக்கின விருந்துக்கு ராஜா வந்தான். அவனுடன் ஆமானும் வந்தான். இவன்தான் யூதர்களை அழிக்கத் திட்டம் தீட்டினவன். அந்த நாளில் எஸ்தர், ராஜாவின் சமுகத்தில் யூதர்களின் அழிவை அறிவித்தபோது, அதற்குக் காரணம் இந்த துஷ்ட ஆமான் என்று ராஜாவுக்கு அறிவித்தாள்.       

ஆமான் திகிலடைந்தான், ராஜா உக்கிரத்தோடே திராட்சரசப் பந்தியை விட்டெழுந்தான். கடைசியில் நிலை மாறியது. எல்லா நாடுகளுக்கும் மறு செய்தி கொடுக்கப்பட்டு யூதர்கள் தங்களின் சத்துருக்களை மேற்கொண்டார்கள். சத்துருவினால் அழிவை நோக்கின யூதர்கள் துக்கம் நீங்கி மகிழ்ச்சியடைந்தார்கள்.

நமக்காக சாத்தானின் அதிகாரங்களையும் சகல காரியங்களையும் உரிந்து கொண்டு சிலுவை மரத்திலே வெற்றி சிறந்த இயேசு கிறிஸ்துவிடம் நாம் திரும்பும்போது அதிகாரத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்வோம். மனந்திருந்தி தகப்பனிடம் வந்த இளைய குமாரன் பெற்றதுபோல நாமும் பெறுவோம். 'யூதா' என்றால் துதிப்பதாகும். ஆகவே மனந்திருந்தி, கர்த்தரைத் துதிக்கும்போது சத்துருவின் சகல துர்க்கிரியைகளின் மீது ஜெயமடைவோம். துக்கம் மகிழ்ச்சியாக மாறும்.

2. ஜெபிக்கும்போது துக்கம் நீங்கிய வாழ்வு உண்டாகும்.

"...நான் கர்த்தருடைய சந்நிதியில் என் இருதயத்தை ஊற்றிவிட்டேன்."           1 சாமுவேல் 1:15

குறை நிறைந்த வாழ்வில் கலங்கும் தேவப்பிள்ளையே! உங்கள் துக்கம் சந்தோஷமாக மாற வேண்டுமானால் உங்கள் உள்ளத்தின் வியாகுலங்களை கர்த்தரின் சமுகத்தில் ஊற்றி ஜெபிக்க வேண்டும். நாம் என்று இதைச் செய்கிறோமோ அன்றே எதினால் உண்டான துக்கமானாலும் முற்றிலும் நீங்கிவிடும்.

ஜெபமானது தேவனுக்கும் நமக்கும் உறவை உண்டாக்கும் செயலாகும். நாம் அதிகமாக அவர் சமுகத்தில் ஜெபிக்கும்போது தேவாதிதேவன் தமது திட்டத்தை குமாரனாகிய இயேசு கிறிஸ்துவினால் நமக்குத் தந்து, ஆவியானவர் மூலம் தெரியப்படுத்துவார். அத்தோடு ஊழியத்துக்கு உதவும் ஆவியின் வரங்களினாலும் நம்மை நிரப்புவார். அழியும் ஒவ்வொரு ஆத்துமாவையும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் மீட்கும் கருவியாக நாம் செயல்படும்போது மீட்கப்பட்டவர் வாழ்விலும் மிகுந்த சந்தோஷம் உண்டாகும். இன்று ஜெப வாழ்வுக்கு இடம் கொடுப்போம். துக்கம் சந்தோஷமாக மாறட்டும்.

3. தேவ சமுகத்திற்கு வரும்போது துக்கம் சந்தோஷமாக மாறும்.

"...நான் அவர்கள் துக்கத்தைச் சந்தோஷமாக மாற்றி, அவர்களைத் தேற்றி, அவர்கள் சஞ்சலம் நீங்க அவர்களைச் சந்தோஷப் படுத்துவேன்." எரேமியா 31:13

இந்த மேலான ஆசீர்வாதங்களும் நன்மைகளும் யாருக்கு கிடைக்கு மென்றால் கர்த்தரின் சமுகத்திற்கு வருகிறவர்களுக்குத்தான். இந்த ஆசீர்வாதங்களினால் மகிழ்ச்சி அடைவோம். 'கர்த்தர் அருளும் கோதுமை, திராட்சரசம், எண்ணெய், ஆட்டுக்குட்டிகள், கன்றுக்குட்டிகள் என்பவைகளாகிய இந்த நன்மைகளுக்காக ஓடிவருவார்கள்' என்று எரேமியா 31:12ல் உள்ளதுபோல கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் ஓடி வருவோமாக.

அவரின் பிரசன்னம் இரண்டு அல்லது மூன்றுபேர் கூடி ஆராதிக்க வரும்போது, துதித்துப் போற்றும்போது இறங்கி வருகிறது. ஆகவே இன்று கர்த்தரின் ஆலயத்திற்குச் செல்வதும், தேவப்பிள்ளைகளாய்க் கர்த்தரின் நாமத்தைத் துதிப்பதும் நாம் தேவ சமுகத்திற்கு வருவதாய் இருக்கிறது.தேவ சமுகத்திற்கு வருவோம்! இன்றே நம் துக்கம் சந்தோஷமாய் மாறட்டும்.

கர்த்தர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக.

கிறிஸ்து இயேசுவின் பணியில்,

சகோ. C. எபேனேசர் பால்  


E- STORE