சிந்தி செயல்படு

"...கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்;
அவர் உன் ஆத்துமாவைக் காப்பார்."

                                                                                                           சங்கீதம் 121:7

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் உங்களை வாழ்த்துகிறேன்.

ஒரு முறை இங்கிலாந்து தேசத்தில் ஊழியங்களைச் செய்ய சென்றோம். என்னுடன் புதுக்கோட்டையைச் சார்ந்த தாமஸ் என்ற சகோதரரும் வந்திருந்தார்கள். ஊழியங்களை முடித்து இந்தியா திரும்பவேண்டியதற்கு முன் தினம் Oxford Circle Station முன்பாக என் மகனை சந்திக்க காத்திருந்தோம். இவ்வாறு காத்திருந்த நேரத்தில் உடன் வந்த சகோதரர் தனது சிறிய பெட்டியை தன் கால்களுக்கு இடையே வைத்து இருக பிடித்து இருந்தார். இந்த பெட்டியில் தான், அடுத்தநாளின் விமான பயணச் சீட்டும் பாஸ்போர்ட்டும் இருந்தது. நாங்கள் கொண்டு சென்ற Dollars-ம் காணிக்கையாக வந்த பணமும் இருந்தது. என் மகன் வருவான் என்று அந்த Station-னின் வெளிவரும் வாசல்படிக்கு முன் நின்று கொண்டு இருந்தோம். சுமார் 30 படிகள் மேலே ஏறி வரவேண்டும்.

இப்படியாக காத்திருந்து மேலே நின்று கொண்டிருந்தபோது உடன் வந்த ஊழியரின் கால்களில் இடையே வைத்திருந்த பெட்டியை நன்றாக கோட், சூட், டை கட்டி இருந்த வெள்ளை நிற மனிதன், பறித்துக்கொண்டு எதிரே இருந்த படியில் இரங்க ஆரம்பித்துவிட்டான். பெட்டி பெட்டி என்று சகோதரர் சத்தமிட்டவுடன், அந்த மனிதரின் பின்னாக நான் அவனைத் துரத்தி  அவன் இறங்கின படிக்கட்டின் வழியே சென்றேன். கர்த்தரின் பெலத்தாலும், கிருபையினாலும் அவனைப்பிடிக்கும் அளவு நெருங்கினபோது, அவர் அந்த பெட்டியை என் பக்கமாக தூக்கி எரிந்து விட்டு, அந்த Station-ன் உள்ளாக மறைந்து சென்று விட்டான். பெட்டியை இருவரும் எடுத்து சற்று அந்த படியிலேயே அமர்ந்து இளைப்பாறினோம். அதற்குள் என் மகனும், அவன் நண்பரும், படிக்கட்டில் ஏறி வெளியேச் செல்ல வந்தார்கள். பின்பு மெதுவாக படிக்கட்டுகளை ஏறி வெளிவந்தோம். ஒரு திரள் கூட்டம் என்ன நடக்கிறது என்று வேடிக்கைப் பார்த்து கொண்டு இருந்தார்கள். அக்கூட்டத்தில் இருந்த ஒரு சைனீஸ் சகோதரி, நீங்கள் அதிர்ஷ்டசாலிகள் (Your are lucky person). உங்கள் பெட்டியைத் திரும்ப பெற்று விட்டீர்கள் என்றார்கள். அந்தக் கூட்டம் அனைவரும் கேட்கும் படியாக, இது அதிர்ஷ்டம் அல்ல, 'இயேசு கிறிஸ்துவின் கிருபை' என்று சத்தமாக ஆங்கிலத்தில் கூறினேன். இந்த இடத்தில் ஒவ்வொரு நாளும் 20க்கும் மேற்பட்டவர்கள் தங்களின் பெட்டியை, பறிகொடுத்து வேதனையுடன் செல்வார்கள். நீங்களோ உங்கள் பெட்டியை பத்திரமாகத் திரும்பப் பெற்றுக்கொண்டீர்கள் என்றார்கள்.

அன்பு  சகோதரனே, சகோதரியே, இன்று உங்கள் வாழ்க்கையில் உங்கள் உடைமைகளைப் பறித்து சென்றுவிட்டார்களே என்று கலங்கவேண்டாம். 'இழந்து போனதைத் தேடவும் இரட்சிக்கவும்' வந்த இயேசு கிறிஸ்து, இழந்த எல்லாவற்றையும் திரும்பப் பெற்றுக் கொள்ள உதவிச் செய்வார். ஆவிக்குரிய தாலந்துகளையும், வரங்களையும் திரும்ப தந்து உங்களை பயன்படுத்துவார். உங்களின் நல் உறவை ஸ்தாபிப்பார். இழந்த வேலை, சமாதானம், சுகம், வீடு, சந்தோஷம், படிப்பு சகலவற்றையும் உங்களுக்குத் திரும்பத்தந்து ஆசீர்வதிப்பார். இழந்து விட்டேனே என்று கலங்காது, அதைத் திரும்பப் பெற, கர்த்தரின் நாமத்தினால் மன்றாடுவோம், முயற்சிப்போம். தாவீது ஒன்றும் குறைவுபடாமல் எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டது போல நீங்களும் எல்லாவற்றையும் திரும்பப் பெற்று மகிழ்வீர்கள்.

கர்த்தர் தாமே ஆசீர்வதிப்பாராக.

சகோ. C. எபினேசர் பால்    


E- STORE