ஜெபம்

குடும்பங்களில் மெய்யான சமாதானமும் ஐக்கியமும் உண்டாக ஒரு ஜெபம்

அன்பின் தேவனே, இந்த நல்ல நேரத்திற்காக நன்றி கூறுகிறேன். ஜெபத்தைக் கேட்கிறவரே உமக்கு கோடாக் கோடி ஸ்தோத்திரங்கள் ஏறெடுக்கிறேன். என் ஜெபத்தை எல்லாம் கேட்டீர். அதற்காக ஸ்தோத்திரம். உம் பெரிதான இரக்கத்தால் இந்தப் புதிய ஆண்டின் முதல் மாதத்தை  முடிக்கச் செய்தீர், அதற்காக ஸ்தோத்திரம். கர்த்தாவே, என் குடும்ப வாழ்க்கையில் உண்டான சமாதானக் குறைவினால் கவலையும் மிகுந்த கசப்பும் உண்டாகிறது. மெய்யான சந்தோஷமும் இல்லை. உள்ளத்தில் ஏன் இந்த வாழ்க்கை என்ற எண்ணமும், உணர்வும் உண்டாகி, வாழ்க்கையைக் கசப்படையச் செய்கிறது. என் சமாதானத்தை வைத்து போகிறேன் என்று சொன்ன இயேசுவே, எனக்கு இரங்கும். என் தவறை உணர்ந்து உம்மிடம் தாழ்த்தினேன். ஆனாலும் இன்னும் குடும்பத்தில் ஐக்கியம் உண்டாகவில்லை. இயேசு கிறிஸ்துவே எனக்கும், என் குடும்பத்துக்கும் இரங்கும். நீரே சமாதானப் பிரபு. மற்றக் குறைவுகளைப் பார்க்கிலும் இந்த சமாதானக் குறைவினால் இரவிலும் தூங்க முடியாதபடி தவிக்கிறேன். இந்தக் குறைவு எப்பொழுது முடியும் என்று ஆவலுடன் எதிர்ப்பார்த்து கண்ணீர் சிந்துகிறேன். இயேசு கிறிஸ்துவே எனக்கு இரங்கும். என் குடும்பத்தில் மெய்யான சமாதானமும், சந்தோஷமும் பெருகக் கட்டளையிடும். அன்பின் ஐக்கியம் உண்டாகச் செய்யும். ஒருவரையொருவர் குற்றப்படுத்தும் செயலை முற்றிலும் நீக்கிவிடும். ஒருவரையொருவர் தாங்கச் செய்யும். குறைவுகளினால் கசப்பான வார்த்தைகள் சொல்லப்படாது காத்தருளும். ஆவியின் கனிகளினால் நிறைந்தவர்களாக என் குடும்பத்தை ஆசீர்வதியும். வீண் வார்த்தைகள் சொல்லப்படாதபடிக்கு என் நாவைக் கர்த்தருளும். என்று, எப்பொழுது,  சமாதானமும், ஐக்கியமும் உண்டாகும் என்று ஏக்கத்துடன் இருக்கிறேன். இயேசு கிறிஸ்துவே, எனக்கும் என் குடும்பத்துக்கும் இரங்குவீராக. ஆதியிலே என் குடும்பத்திலே இருந்த சமாதானமும், சந்தோஷமும் பெருகச் செய்யும். நானும், என் குடும்பமும், இந்த சமாதானத்தையும், சந்தோஷத்தையும் ஐக்கியத்தையும் பெற்று, பெருகச் செய்து ஆசீர்வதியும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் வேண்டுகிறேன். நல்ல பிதாவே. ஆமென்.


E- STORE